புதிய சிறுகதை ஜுலை 18 2026
நூற்றுப்பத்து வருஷங்களைக் கடந்த அவர்களின் வீடு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தது.
இது அவர்கள் வீட்டில் நடக்கும் பத்தாவது சினிமா படப்பிடிப்பு.

விடிகாலை நான்குமணிக்கெல்லாம் படப்பிடிப்பிற்கான முன்தயாரிப்பு பணிகளைத் துவங்கியிருந்தார்கள். வீட்டுச்சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் யாவும் அகற்றப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் நாற்காலிகளை அகற்றி பிரம்பு நாற்காலி போட்டிருந்தார்கள். கதாநாயகியின் வீடாகப் படத்தில் காட்டுகிறார்கள் என்பதை மட்டுமே சாம்பு தெரிந்து கொண்டிருந்தார்.
லோக்கல் மேனேஜர் வாசுதேவன் தான் அவரோடு தொடர்பில் இருந்தார். ஒரு நாளைக்குப் பதினைந்தாயிரம் வீதம் ஐந்து நாட்களுக்கு எழுபத்தைந்தாயிரம் பணம் தருவதாகச் சொல்லியிருந்தார்கள்.
வீடு இவ்வளவு சம்பாதித்துத் தரும் என அவர் கற்பனை கூடச் செய்ததில்லை. அதுவும் அந்த வீட்டில் எடுக்கப்பட்ட படங்கள் நன்றாக ஒடிய காரணத்தால் ராசியான வீடு என்ற பெயரும் உருவாகியிருந்தது. சென்னையிலிருந்து இதற்காகவே அந்த ஊருக்கு படப்பிடிப்பிற்கு வந்தார்கள்,
படப்பிடிப்பு குழுவினர் திருநெல்வேலியில் தங்கிக் கொண்டிருந்தார்கள். காலை ஆறுமணிக்கெல்லாம் படப்பிடிப்புத் துவங்கிவிடுகிறது என்பதால் முதல் நாள் மதியமே வீட்டை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது.
படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் சாம்புவும் அவரது மனைவியும் பக்கத்து வீதியில் இருந்த திருலோகம் வீட்டிற்குப் போய்த் தங்கிக் கொள்வார்கள். திருலோகம் வீட்டின் மாடி காலியாக இருந்தது.
சாம்பு மட்டும் வீடு நடிப்பதைக் காணுவதற்காகப் பகலில் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பார். படப்பிடிப்பில் தரும் தேநீரை குடித்துக் கொள்வார். சினிமாவில் பார்க்கும் போது அது அவர்கள் வீடு தானா என வியப்பாக இருக்கும்.

சாம்புவின் வீடு அவரது தாத்தா காலத்தில் கட்டியது. பெரிய தூண்கள் கொண்ட முகப்பு. இரண்டு பக்கமும் திண்ணைகள். பெரிய வாசற்கதவு. அகலமான ஜன்னல்கள். நான்கு கட்டாக நீளும் வீடு. வீட்டின் பின்பக்கம் கிணறு. நெல்லிமரங்கள். இரண்டு வாழைகள். பின்வாசல்கதவை திறந்து நடந்தால் தாமிரபரணி ஆறு ஒடுகிறது. கற்படிகள் கொண்ட படித்துறை. மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடும் சப்தம் வீடு முழுவதும் கேட்டபடியிருக்கும்.
அந்த வீதியில் அவர்களின் வீடு ஒன்று மட்டுமே அப்படியே பராமரிக்கபட்டு வந்தது. சாம்புவின் சித்தப்பா வீட்டில் பின்பக்கம் அப்படியே இருக்கிறது. முன்பக்கத்தை மாற்றி அமைத்துவிட்டார்கள். மற்றவீடுகள் அடையாளம் தெரியாமல் உருமாறியிருந்தன.
அவர் சிறுவயதில் ஒடிவிளையாடிய வீதியாக இப்போது இல்லை. வீதியில் வசித்த மனிதர்களும் ஊரைவிட்டு விலகி பெருநகரங்களுக்கோ வெளிநாட்டிற்கோ போய்விட்டார்கள். தெருமுனையில் நிற்கும் வேப்பமரமும் தானும் மட்டுமே அங்கிருந்து வெளியேறி போகாதவர்கள் எனச் சாம்பு நினைத்துக் கொள்வார்.
சாம்புவோடு பிறந்தவர்கள் ஆறு பேர். ஐந்து ஆண்கள் ஒரு பெண். அத்தை குடும்பமும் அவர்களுடன் வசித்தது. அத்தைக்கு இரண்டு பெண்கள். அத்தனை பேரும் அந்த வீட்டில் ஒன்றாக வசித்தார்கள். ஆகவே எப்போதும் ஆள் நடமாட்டமிருக்கும். வீட்டை பூட்டிக் கொண்டு போனதாக அவருக்கு நினைவேயில்லை.
ஆண்டிற்கு ஒருமுறை தைப்பொங்கலுக்கு முன்பாக வெள்ளை அடிப்பார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முறை புயல்மழை பெய்தபோது வீடு கடுமையாக ஒழுகியது. வடக்கு பக்க அறையின் ஜன்னல் கதவு பிய்ந்து போனது. அதனைச் சரி செய்யும் போது சமையலறையை மொத்தமாக இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டிவிடலாம் என்றார் சாம்பு. ஆனால் அவரது மனைவி தேவகி ஒத்துக் கொள்ளவில்லை. அப்படியே இருக்க வேண்டும் என்றதோடு சமையல் மாடத்தினை ஒட்டி அகல்விளக்கு வைப்பதற்கு ஒரு மரஸ்டேண்ட் மட்டும் அடிக்க வேண்டும் என்றாள். அவ்வளவு தான் அவர்கள் வீட்டின் நடந்த மாற்றம்.
சாம்புவின் அம்மா நன்றாகப் பாடுவாள். ஆகவே அவளிடம் பாட்டுக் கற்றுக் கொள்வதற்காகச் சிறுமிகள் வருவார்கள். அந்த வீட்டின் நினைவாக ஹார்மோனியம் இசைப்பதும் சிறுமிகள் பாடிப்பழகுவதும் அவரது நினைவில் பதிந்து போயிருந்தது.
சாம்புவின் தாத்தா அந்த வீட்டிற்குப் பெயர் வைக்கவில்லை. ஆனால் பாட்டு கமலா வீடு என்றே ஊர் அதனை அடையாளப்படுத்தியது. இன்றைக்கும் அது தான் அடையாளம். அம்மா இறந்து போய்விட்டபின்பு அங்கே பாடுவதற்கு யாருமில்லை. ஆனால் பாட்டு கமலாவின் வீடு என்ற பெயர் மாறவில்லை
சாம்புவின் மூத்தமகன் வெங்கட் நெய்வேலியில் என்ஜினியராக வேலைகிடைத்து டவுன்ஷிப்பில் குடியிருந்து வந்தான். அடுத்தவன் ஹரி திருமணம் செய்து கொள்ளாமல் ரிஷிகேசில் உள்ள ஒரு ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தான். கடைசிமகள் அமுதா சென்னையில் கல்லூரி பேராசிரியையாக இருந்தாள். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் கொண்டிருந்த அவள் அங்கேயே புதுவீடு கட்டிக் கொண்டுவிட்டாள்
ஆகவே சாம்புவும் அவரது மனைவி தேவகியும் மட்டுமே பூர்வீக வீட்டில் வசித்தார்கள். தபால்துறையில் வேலை செய்து ஒய்வு பெற்றவர் என்பதால் அவருக்கு ஒய்வூதியம் வந்தது. அதை வைத்துக் கொண்டு வாழ்வது கடினமாகவேயிருந்தது. எதிர்பாராத மருத்துவச் செலவு மற்றும் வீட்டு பராமரிப்பிற்குக் கடன் வாங்க வேண்டியிருந்தது.. தேவகி அடிக்கடி மகள் வீட்டிற்குப் போய்விடுகிறாள் என்பதால் அவர் மட்டுமே தனியே வசித்துவந்தார்.
சாம்புவிற்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். அவரது அம்மா எல்லோருக்கும் சமையல் கற்றுக் கொடுத்திருந்தாள். அம்மா இருக்கும் போதே விடுமுறை நாளில் “சாம்பு நீ வத்தக்குழம்பு பண்ணுடா“ என்பாள். அப்படி அம்மா கேட்பது அவருக்குப் பிடித்திருந்தது. ஆசையாகச் சமைப்பார். அவரது வீட்டில் சமையல் தெரியாதவர்களேயில்லை. விருந்தாளிகள் வந்துவிட்டால் ஆண்களும் சமையல் வேலையில் இறங்கிவிடுவார்கள்.
ஊரிலுள்ள வீட்டை விற்றுவிட்டு அப்பாவும் அம்மாவும் தன் வீட்டிற்குப் பக்கத்திலே ஒரு அபார்ட்மெண்டை விலைக்கு வாங்கிக் குடியிருக்க வேண்டும் என அமுதா சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த ஆசை தேவகிக்கும் இருந்தது. மீதமிருக்கும் முதுமையை நகரில் கழிக்கலாம் என விரும்பினாள்.
அவருக்கு ஊரைவிட்டு போக மனதில்லை. அதிலும் குறிப்பாகச் சென்னையின் வாகன நெருக்கடி. பரபரப்பு. அலைபோல ஒயாத ஜனநடமாட்டம். இட்லி சாப்பிடுவதற்குக் கூட அரைமணி நேரம் ஹோட்டல் வாசலில் காத்திருக்க வேண்டும் என்பதை நினைத்து வீட்டை விற்க மறுத்துவந்தார்.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் அந்த வீடு நிறையச் செலவு வைத்தது. அவ்வளவு பெரிய வீட்டில் ஒற்றை ஆளாக இருப்பது சிரமமாகவும் இருந்தது. வீட்டை சுத்தம் பண்ணுவது பெரிய வேலை. பின்பக்க வாசல் வழியாக வீட்டிற்குள் பூரானும் தவளையும் வந்துவிடும். ஒரு முறை பாம்பு வந்திருக்கிறது. அதனைச் சமாளிக்க வேண்டும். கோடையில் வெயிலே தெரியாது. நல்ல குளிர்ச்சியிருக்கும். பேரன் பேத்திகள் விடுமுறைக்காக வரும் நாட்களில் அந்த வீட்டிற்குள் செல்போன் எடுப்பதில்லை, வைபை இல்லை என்று கோவித்துக் கொள்வார்கள்.
உள்ளூர் கேபிள் டிவி இணைப்பு மட்டுமே கொடுத்திருந்தார். அதில் வரும் சேனல்களை மட்டுமே பார்ப்பது வழக்கம். அவருக்குச் செய்திகளைப் பார்க்க பிடிக்காது என்பதால் எந்த நியூஸ் சேனலையும் பார்க்க மாட்டார். பெரும்பாலும் ஏதாவது விளையாட்டு சேனலை பார்த்துக் கொண்டிருப்பார்.
தன் வாழ்நாளில் ஒரு நாளும் ஆடாத டென்னிஸ் மேட்சையும். கோல்ப் மேட்சையும், மலையேறும் சாகசங்களையும் ஆசையாகப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரது மனைவி பக்தி பாடல்களையும் கோவில் பற்றிய நிகழ்ச்சியும் விரும்பி பார்ப்பாள். இரவில் பழைய திரைப்படப் பாடல்களை இருவரும் பார்ப்பதுண்டு.
இருபது வருஷங்களுக்கு முன்பு வரை அந்த ஊரில் ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. ஆரம்பத்தில் அது டூரிங் தியேட்டராக இருந்தது. பின்பு அதைக் கட்டிடமாக மாற்றினார்கள். அதில் வாரம் வெள்ளிகிழமை மாலை தவறாமல் அவர்கள் படம் பார்ப்பார்கள். பெரும்பாலும் பழைய படங்கள். ஆனால் அந்தத் தியேட்டர் கூட்டம் குறைவாக வருகிறது என மூடப்பட்ட பின்பு அவர்கள் திருநெல்வேலி போய்ச் சினிமா பார்க்க வேண்டியதாகியது. ஆகவே தியேட்டருக்குப் போய்ச் சினிமா பார்ப்பதை குறைத்துக் கொண்டார்கள்.. . டிவியில் ஒளிபரப்பாகும் படங்களைப் பார்ப்பதோடு சரி.

ஒரு ஞாயிற்றுகிழமை பின்மதியத்தில் அவர் சாய்வுநாற்காலியில் சாய்ந்து கண் அயர்ந்திருந்த போது வாசலில் யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது. எழுந்து வந்த போது வாசலில் ஒரு ஆள் நின்றிருந்தார்.
நெற்றியில் சந்தன கீற்று, பூப்போட்ட மஞ்சள் நிறச் சட்டை, கறுப்புப் பேண்ட். கூலிங்கிளாஸ். இரண்டு கையிலுமாக நான்கு மோதிரங்கள். வெள்ளை நிற செருப்பு
“நான் சினிமா மேனேஜர் வாசுதேவன் .. ஷுட்டிங்கிற்காக வீடு தேடிகிட்டு இருக்கேன். உங்க வீட்டைப் பாக்கலாமா“
“ஷுட்டிங்க்கு எல்லாம் குடுக்க மாட்டோம். இங்கே நாங்க குடியிருக்கோம்“
“சும்மா பாக்குறேன் சார்.. நான் உங்க பிரண்ட் பேங்க் கணேசன் சொல்லி தான் வந்துருக்கேன்“.
ஸ்டேட் பேங்கில் வேலை செய்யும் கணேசனை அவருக்கு நீண்டகாலமாகத் தெரியும். அவர் சொல்லி வந்திருப்பதாகச் சொன்னதால் சாம்பு மறுக்கமுடியாமல் இருந்தார்
“உள்ளே பாக்கலாமா சார் “எனக்கேட்டார் வாசு
“தாராளமாப் பாக்கலாம். இந்த வீடு கட்டி 110 வருஷமாச்சி.. இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கு“
“அந்தக் காலத்து வீடுக எல்லாம் கடுக்காய் கருப்பட்டி பாகு எல்லாம் கலந்து கட்டியிருப்பாங்க சார். “ என்றபடியே வீட்டினுள் வாசுதேவன் ஒவ்வொன்றாகப் பார்வையிட்டார்
“போட்டோ எடுத்துகிடலாமா சார்“
“எடுத்துக்கோங்க. ஆனா நான் ஷுட்டிங்க்கு குடுக்க மாட்டேன்“
“அது உங்க விருப்பம் சார்“ என்றபடியே வாசு வியப்புடன் வீட்டைச் சுற்றிப் பார்த்தார். பின்வாசல் கதவைத் திறந்து ஆற்றின் கால்வாயில் தண்ணீர் ஒடுவதை ரசித்தபடியே “ரொம்பப் பிரமாதமான வீடு“ என்றார்.
“மழைக்காலத்துல தண்ணீர் இங்க வரைக்கும் வந்துரும் “ என்று படிகளைக் காட்டினார் சாம்பு
“வீட்ல நீங்களும் வொய்ப்பும் மட்டும் தான் இருக்கீங்களா“
“ஆமா.. பிள்ளைக எல்லாம் ஆளுக்கு ஒரு ஊர்ல இருக்காங்க. “
“இந்த மாதிரி வீடு தான் தேடிகிட்டு இருந்தோம். இது சூப்பர் வீடு“ என்றார் வாசுதேவன்
“குடியிருக்க வீட்டை கேட்டா எப்படிக் குடுக்க முடியும்“ என்றார் சாம்பு
“ஷுட்டிங் நாலே நாள் தான். உங்களுக்குத் தங்கிகிட வேற வீடு ஏற்பாடு பண்ண தர்றேன். கம்பெனில பேசி முப்பதாயிரம் வாங்கித் தர்றேன். “
“எனக்கு விருப்பமில்லை “என்று உறுதியான குரலில் சொன்னார். வாசு அதை ஏற்றுக் கொண்டது போல “பரவாயில்லை சார்“ என்றபடியே புறப்பட்டார். அன்றிரவு பேங்க் கணேசன் அவரது வீடு தேடி வந்து படப்பிடிப்பிற்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவரிடமும் தனது மறுப்பை உறுதியாகத் தெரிவித்தார் சாம்பு
அடுத்தநாள் சென்னையிலிருந்த மனைவியிடம் இதைப்பற்றிப் போனில் சொன்ன போது அவள் கேட்ட முதல் கேள்வி
“யாரு நடிக்கப் போறாங்க. என்ன படம். “
“அதைக் கேட்கலை. யாரா இருந்தா நமக்கென்ன…. நாம குடியிருக்க வீட்டை எப்படி ஷுட்டிங்க்கு குடுக்க முடியும்“
“நம்ம வீடு சினிமால நடிச்சா நமக்குப் பெருமை தானே“ என்றாள் தேவகி
வீட்டுக்கிச்சனை மாற்றக்கூடாது என்று சொன்ன மனைவி தான் இப்படிப் பேசுகிறாள் என்பது அவருக்கு வியப்பாக இருந்தது
“எனக்கு இஷ்டமில்லை“ என்றார்
“எவ்வளவு பணம் தர்றதா சொன்னாங்க“
“முப்பதாயிரம்.. “
“வர்ற பணத்தை ஏன் வேண்டாம்னு சொல்றீங்க“
“வீட்டை ஷுட்டிங்க்கு வாடகைக்கு விட்டுட்டு நான் எங்க போறது“
“திருலோகம் வீட்டு மாடி சும்மா தானே இருக்கு. அங்கே தங்கிகிடலாம். நான் பத்மா கிட்ட பேசுறேன்“
“அப்போ வீட்டை குடுக்கச் சொல்றயா“
“அது உங்க இஷ்டம். லட்சுமி வீடு தேடி வர்றா.. அதை ஞாபகம் வச்சிக்கோங்க “
அவரால் முடிவெடுக்க முடியவில்லை. மறுநாள் கணேசனை அழைத்துக் கொண்டு மேனேஜர் வாசுதேவன் வந்திருந்தார்
“உங்க வீடு டைரக்டருக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு.. எப்படி உங்க வீட்டை குடுக்குறீங்களே.. அதை மாதிரி நான் திரும்ப ஒப்படைச்சிருவேன். கரண்ட் பில்லுக்குத் தனியா பணம் குடுத்துறேன், முப்பதாயிரத்துக்குப் பதிலா நாற்பதாயிரம் தர்றேன்.. “
“அதுக்கில்லே.. ஷுட்டிங்க்கு வந்தா நான்வெஜ் சாப்பிடுவாங்க.. வீட்டுப் சாமான்களை எல்லாம் கவனமில்லாம உடைச்சிருவாங்க“
“வீ`ட்டுக்குள்ளே நான்வெஜ் சாப்பிட மாட்டாங்க. அதுக்கு நான் கேரண்டி. உங்க பொருளை எல்லாம் எடுத்து ஒரு ரூம்ல போட்டு பூட்டி சாவியை நீங்களே வச்சிக்கோங்க.வெறும் வீடா தந்தா போதும்“
“யோசிச்சி சொல்றேன்“
“அதுக்கெல்லாம் நேரமில்லை சார். இதைப்பிடிங்க“ என இருபதாயிரம் ரூபாயை அவரது கைகளில் கொடுத்தார் வாசுதேவன். அரைமனதோடு வீட்டை படப்பிடிப்பிற்குக் கொடுப்பதற்கு ஒத்துக் கொண்டார்
திருலோகம் வீட்டில் பேசி மாடியில் தங்கிக் கொள்வதற்கு அவரது மனைவி ஏற்பாடு செய்திருந்தாள்
அந்த ஊரில் அதற்கு முன்பு எந்தப் படப்பிடிப்பும் நடந்ததில்லை. ஆகவே ஊரே திரண்டு படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தது. லைட்மேன்கள். ஜெனரேட்டர் வேன். ஒப்பனைக்கலைஞர்கள். டீசர்ட் அணிந்த இளம் இயக்குநர். தாடி வைத்த கேமிராமேன். சவுண்ட் என்ஜினியர், காபி டீ தரும் உதவியாளர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்வதைச் சாம்பு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்

படப்பிடிப்பை காணுவதற்காகவே சென்னையிலிருந்து தேவகி வந்திருந்தாள். படத்தில் நடிகை அவர்கள் வீட்டுச் சமையலறையில் சமைப்பது போன்ற காட்சியில் தேவகி அருகிலிருந்து உதவி செய்தாள். தான் சமையலுக்குப் பயன்படுத்துகிற வெண்கலக் கரண்டி, பாத்திரங்களை அவர்களுக்காக எடுத்துக் கொடுத்தாள். படப்பிடிப்பு அவளை உற்சாகமாக்கியது. ஆனால் சாம்புவிற்கு ஒரே காட்சியை எதற்காகத் திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்று சலிப்பாக இருந்தது. சினிமா எடுப்பது எளிமையானதில்லை என்றும் புரிந்தது. பகலிரவாகப் படப்பிடிப்பு நடந்தது.
நான்கு நாட்களில் முடியாமல் ஆறு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. பேசியதை விடவும் அதிகம் பணம் கொடுத்ததோடு வீட்டை அவர்களே சுத்தம் செய்து கொடுத்தார்கள். படத்தின் இயக்குநர் சாம்புவிற்கும் அவரது மனைவிக்கு நன்றி தெரிவித்தார். நடிகர் நடிகையோடு அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்
படப்பிடிப்பு முடிந்து சாம்பு தனது வீட்டிற்குத் திரும்பி வந்த போது வீடு உடுத்திக் களைந்த ஆடையைப் போலிருந்தது. அது பழைய இயல்பிற்குத் திரும்பி வர மூன்று நாட்கள் ஆனது. அந்தத் திரைப்படம் எப்போது வரும் எனத் தேவகி ஆவலாகக் காத்திருந்தாள்
அந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. சென்னையிலுள்ள சாம்புவின் மகள் அமுதா குடும்பத்துடன் படம் பார்க்க போயிருந்தாள். தான் பிறந்து வளர்ந்த வீடு சினிமாவில் பார்க்க அத்தனை அழகாக இருப்பது அவளுக்கு வியப்பூட்டியது. தன்னோடு வேலை பார்க்கும் பலரிடமும் அந்தப் படத்தில் வருவது தனது வீடு எனச் சொல்லி மகிழ்ந்தாள்
திருநெல்வேலிக்கு சென்று சாம்புவும் அவரது மனைவியும் படம் பார்த்தார்கள். அவரால் நம்ப முடியவேயில்லை. எப்படி இவ்வளவு வெளிச்சம் நம் வீட்டிற்குள் வந்தது. வீட்டுத் தூண்கள் எவ்வளவு கம்பீரமாக இருக்கின்றன என வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்
அந்தப்படம் வெற்றி அடைந்த காரணத்தால் சாம்புவின் வீட்டை படப்பிடிப்பிற்காகக் கேட்டு பலரும் வரத் துவங்கினார்கள். ஆனால் வாசுதேவன் அதை யாருக்கும் கொடுக்க வேண்டாம். பெரிய படம் என்றால் நானே பேசி ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார்
அவர் தான் அடுத்தப் படப்பிடிப்பிற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்த முறை ஐம்பதாயிரம் பணம் வாங்கிக் கொடுத்தார். ஒரு படப்பிடிப்பை போல இன்னொரு படப்பிடிப்பு இல்லை. இந்த முறை படப்பிடிப்பிற்கு வந்த இயக்குநர் மிக மெதுவாகக் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார். படப்பிடிப்பு நடப்பது போன்ற உரத்த சப்தம் எதுவுமில்லை. தியானம் நடப்பது போல அமைதியாகப் படப்பிடிப்பு நடந்தது. இயக்குநர் ஆற்றின் படித்துறையில் ஒரு காட்சியைப் படமாக்கினார். அந்தக் காட்சியே படித்துறையைப் பார்த்த ஆசையால் உருவானது என்றார் வாசு.
மூன்று நான்கு படங்களில் வீடு நடித்தபிறகு அதன் பெயர் பாட்டு கமலா வீடு என்பதிலிருந்து மாறி ஷுட்டிங் ஹவுஸ் என்றானது. பஸ் நிற்கும் இடத்தின் அருகிலுள்ள டீக்கடையில் கேட்டால் போது ஷுட்டிங் ஹவுஸிற்கு வழி சொல்லிவிடுவார்கள். தான் ஒரு சிறந்த நடிகன் என நிரூபிப்பது போல ஒவ்வொரு படத்திலும் அந்த வீடு புதுப்புது தோற்றம் கொண்டிருந்தது. ஒரு படத்தில் அதை 1930களில் உள்ள வீடாகக் காட்டினார்கள். இன்னொரு படத்தில் அதை வக்கீல் வீடாகக் காட்டினார்கள்.
ஆரம்பத்தில் திருலோகம் வீட்டு மாடியில் இலவசமாகத் தங்கிக் கொண்ட சாம்பு பின்பு அதற்கு ஒரு வாடகை கொடுக்க ஆரம்பித்தார். அதைத் திருலோகம் வாங்க மறுத்த போது “உன் வீடும் சம்பாதிக்கட்டும்பா“ என்று வாங்க வைத்தார்.
ஒருமுறை மேனேஜர் வாசு சொன்னார்
“வடக்கு தெருவுல ஒரு வீடு விலைக்கு வருது சார். அதை வாங்கிட்டீங்கன்னா.. இதை ஷுட்டிங் ஹவுஸா மட்டும் வச்சிக்கிடலாம். ஒரு டிவி சீரியலுக்கு நூறு நாள் கேட்குறாங்க“
“அது சரியா வராது வாசு.. “
“அவங்க தர்ற பணத்துல புதுவீடு வாங்கிடலாம் சார். நானே முடிச்சி தர்றேன்“
“இதே ஊர்ல இன்னொரு வீட்ல என்னாலே இருக்க முடியாது. “
“காலம் மாறிப்போயிருச்சி சார். “
“பழைய வீட்டை அப்படியே வச்சிருந்ததாலே தானே நீங்க தேடி வந்தீங்க. நானும் மத்தவங்க மாறி வீட்டை இடிச்சி கட்டியிருந்தா.. என்ன ஆகியிருக்கும்“
வாசுதேவன் பதில் சொல்லவில்லை. அசட்டுச் சிரிப்பு மட்டும் சிரித்தார்.
இந்த முறை படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சாம்பு போகவில்லை. ஆனால் அவரைத் தேடி வாசு திருலோகம் வீட்டிற்கே வந்திருந்தார்
“உங்க வீட்ல இருந்த பழைய போட்டோ எல்லாம் வேணும் சார்“
“அதை என்ன செய்யப்போறீங்க“
“ஹீரோயினோட தாத்தா. பாட்டி.. போட்டோவா காட்டணும். கதைப்படி அந்தக் காலப் போட்டோ தேவைப்படுது“
“நான் எடுத்து தர்றேன். ஆனா எதையும் உடைச்சிரக் கூடாது“
“அதை நான் பாத்துகிடுறேன்“
சாம்பு அவரது வீட்டிற்குப் போய்ப் பூட்டிய அறையைத் திறந்து உள்ளேயிருந்த புகைப்படங்களை எடுத்து வந்து கொடுத்தார். ஆர்ட் அசிஸ்ட்டெண்ட் அதனைச் சுவரில் மாட்டினான். நடுவில் அவர்கள் வைத்திருந்த சில புகைப்படங்களையும் மாட்டினார்கள்.
அந்தப் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்றது. கார்கள் வருவதும் போவதுமாக இருந்தன. வீட்டின் உத்தரத்தில் ஒளிந்திருந்த பல்லி வெளியே வர பயந்து ஒடுங்கியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து வீட்டின் சாவியை அவரிடம் ஒப்படைக்கும் போது வாசு சொன்னார்
“அரைநாள் முன்னாடியே முடிச்சிட்டோம். டைரக்டர் படு ஸ்பீட். “
“நல்லா கிளீன் பண்ணீட்டீங்கள்ளே“
“நீங்க ஒரு தடவை பாத்துடுங்க. ஏதாவது விடுபட்டிருந்தா நாளைக்கு ஆள் அனுப்பிச் சரிபண்ணி குடுத்துறேன்“
அன்றிரவு சாம்பு அவரது வீட்டில் பொருட்களைப் பழைய இடத்தில் வைத்தபோது அவரது அம்மா வைத்திருந்த ஹார்மோனியத்தைக் காணவில்லை. அதையும் அறையில் தானே வைத்துப் பூட்டியிருந்தோம் என்ன ஆனது எனப்புரியாமல் திகைத்துப் போனார். வேறு எங்காவது வைத்துவிட்டோமா என நினைத்துத் தேடினார். எங்கேயும் காணவில்லை.

வாசுவிற்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார்
“நான் கேட்குறேன் சார். படத்துல ஒரு சீன்ல ஹார்மோனியம் யூஸ் பண்ணினதா நினைக்குறேன் “
“நான் எடுத்துக் குடுக்கலையே“
“விசாரிக்கிறேன் சார்“ என்றபடி போனை துண்டித்தார் வாசுதேவன்
மறுநாள் வாசுதேவன் அவரைக் காண நேரில் வந்திருந்தார்
“ஆர்ட் டிபார்ட்மெண்ட்ல ஒருத்தன் உங்க ரூம் கதவைத் திறந்து உள்ளே இருந்த ஹார்மோனியத்தை எடுத்துக் குடுத்திருக்கான். அது அவங்க வேன்ல மெட்ராஸ் போயிருச்சி“
“என் ரூமை எப்படித் திறந்தாங்க“
“அவங்களாலே திறக்க முடியும் சார். அது தப்பு தான். ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க“
“வேற என்ன பொருள் எடுத்தாங்க. உங்களை நம்பி வீட்டை விட்டா இப்படித் தான் செய்வீங்களா“
“யாரோ புதுபையன் சார். டைரக்டர் கோபப்படுறாரேனு திறந்திருக்கான். உங்க ஹார்மோனியத்தைக் கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு“
“அது எங்க அம்மாவோட ஹார்மோனியம். அவங்க நினைவா வச்சிருந்தேன்“
“சாரி சார். நான் ஹார்மோனியத்தை வாங்கித் தந்துடுறேன்“
சாம்பு ஆத்திரத்தை அடக்க முடியாமல் கடுமையாகத் திட்டினார். வாசு பதிலே சொல்லவில்லை. திருலோகம் வீட்டிற்குப் போய் மனைவியிடம் நடந்தவற்றைச் சொன்னார்.
“அந்த வாசு தான் பொறுப்பு ஏற்கணும். உடனே கொண்டுட்டு வரச்சொல்லுங்க“
“இனிமே நான் ஷுட்டிங்க்கு வீடு குடுக்க மாட்டேன்“
“அதை சொன்னா.. வாசு நம்மளை அம்போனு விட்டுட்டு போயிடுவார். ஹார்மோனியம் அவ்வளவு தான்“
வாசுதேவன் சென்னைக்கே போயிருந்தார். ஆனால் ஆர்ட் டிபார்ட்மெண்ட் வேனில் அந்த ஹார்மோனியம் கொண்டுவரப்படவில்லை. யார் எடுத்துக் கொண்டு போனார்கள் என்றும் தெரியவில்லை. வாசுதேவன் படத்தின் இயக்குநரிடம் நேரில் பேசினார்.
“ ஹார்மோனியத்தை எங்க போயி தேடுறது… ஏதாவது காசு குடுத்துவிடுங்க. “ என்றார் இயக்குநர்
“அவர் ஏத்துகிடமாட்டாரு சார். ரொம்பக் கோபப்படுறார் “என்றார் வாசு
“அப்போ அவரை நீங்களே டீல் பண்ணுங்க.. என்னாலே ஒண்ணும் செய்ய முடியாது“ என்றார் இயக்குநர்
வாசுதேவன் ஆர்ட் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர்களிடம் பேசி எப்படியாவது ஹார்மோனியத்தைக் கண்டுபிடித்துவிட முயன்றார். படப்பிடிப்பினை வேடிக்கை பார்க்க வந்தவர்களில் எவரேனும் திருடிப் போயிருக்கக் கூடும் என்றார்கள்.
வாசுதேவன் ஊர் திரும்பி சாம்புவை சந்தித்த போது பணிவான குரலில் சொன்னார்
“மெட்ராசுக்கே போயி நல்லா விசாரிச்சிட்டேன் சார். அவங்க யாரும் ஹார்மோனியத்தை எடுக்கவேயில்லையாம்“
“அப்போ யாரோ எடுத்ததா சொன்னீங்க“
“அது நிஜமில்லை சார். டைரக்டர் அப்படி ஒரு ஷாட்டே எடுக்கலைனு சொல்றாரு“
“அப்போ ஹார்மோனியம் எங்கே போச்சு“
“அது எனக்கு எப்படிச் சார் தெரியும். நீங்க ரூம்க்குள்ளே வச்சிருந்தேன்னு சொல்றீங்க. அதை நான் பாக்கலையே“
“அப்போ நான் பொய் சொல்றனா“
“அப்படியில்லை சார். உங்க பொருளை காணோம்னா.. நீங்க தான் தேடி கண்டுபிடிக்கணும்“
“உங்களுக்கு ஷுட்டிங்க்கு வீடு குடுத்தது என் தப்பு“
“சும்மா குடுக்கலை சார். சொளையா எழுபத்தைந்தாயிரம் வாங்கிட்டு தான் குடுத்தீங்க“.
“உங்களை நம்பி விட்டது என் முட்டாள்தனம்“
“இஷ்டம் இல்லேன்னா.. இனிமே குடுக்காதீங்க. பழைய ஹார்மோனியத்தை வச்சி என்ன செய்யப்போறீங்க. அதை வித்தா பத்தாயிரம் கிடைக்காது சார். “
“அதைபற்றி நீ பேச வேண்டாம். உனக்கு அதோட அருமை தெரியுமா“
“மரியாதை இல்லாம பேசினா..நானும் அப்படிப் பேச வேண்டியது வரும் பாத்துக்கோங்க“
“உனக்கு என்ன மரியாதை வேண்டிகிடக்கு.. நடந்த திருட்டுக்கு நீயும் தான் பொறுப்பு “
“திருட்டுனு சொல்லாதீங்க சார்“
“ஆயிரம் தடவை சொல்வேன். இது திருட்டு தான்“.
“சும்மா கிடந்த வீட்டுக்கு ஆயிரமாயிரமா கொண்டு வந்து குடுத்தவன் நான். என்மேலயே திருட்டுப் பட்டம் கட்டுறீங்க.. இனிமே எவன் தேடிவந்து குடுப்பானு பாக்கதானே போறேன்“
“ உங்களுக்கு இல்லே.. இனிமே யாருக்கும் வீட்டை குடுக்க மாட்டேன்“
“வச்சி வாழுங்க சார்“ என்றபடியே கோபத்துடன் தனது பைக்கை எடுத்துக் கொண்டு வாசுதேவன் கிளம்பினார்.
ஆத்திரம் அடங்குவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்பதைப் போலச் சாம்பு ஒரு வெள்ளைப் பேப்பரில் பாட்டுகமலா வீடு என ஸ்கெட்ச் பேனாவால் எழுதினார். அதை வீட்டுக்கதவில் பெவிகால் போட்டு ஒட்டினார்
பின்பு விலகி நின்று தானே அதனை வாசித்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு காகம் பறந்து வந்து அவர்கள் வீட்டுத்திண்ணையில் அமர்ந்தபடி அவரை அமைதியாகப் பார்த்தது. காகத்திடம் சொல்வதைப் போலச் சப்தமாகச் சொன்னார்
“இனிமே இது ஷுட்டிங் ஹவுஸ் இல்லே. பாட்டுகமலா வீடு“
அடர் பழுப்பு நிறக் கண்களுடன் காகம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.
இனி வீடு சம்பாதிக்காது. கிடைத்த வருமானம் போய்விட்டது. தான் கோவித்துக் கொண்டது தவறு தானோ என்று சாம்புவிற்குத் தோன்றியது. அதே நேரம் அம்மாவின் ஹார்மோனியம் இனி கிடைக்காது என்பது வருத்தமாகவும் இருந்தது.
அவரது குழப்பத்தைக் கேலி செய்வது போலக் காகம் சப்தமாகக் கரையத் துவங்கியது
••