ஜப்பானிய சினிமாவின் கிளாசிக் வரிசையில் கொண்டாடப்படும் திரைப்படம் The Ballad of Narayama. ஷோஹெய் இமாமுரா இயக்கிய இந்தத் திரைப்படம் ஒரு மானுடவியல் ஆவணமாகக் கருதப்படுகிறது.
1986ல் இந்தப் படத்தை முதன்முறையாகப் பார்த்தேன். விருதுநகரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ஞாயிறு தோறும் காலைக்காட்சியாக ஆங்கிலப்படம் திரையிடுவார்கள். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தின் மிதமிஞ்சிய பாலியல் காட்சிகள் காரணமாக இதை ஆங்கிலப்படம் என நினைத்து விநியோகம் செய்திருக்கக் கூடும். படத்தில் சப்டைட்டில் இல்லை. ஆனால் உரையாடல்கள் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருந்தன. பாதிப் புரிந்தும் பாதிப் புரியாமலும் இப்படத்தைப் பார்த்தேன்.
பின்பு இப்படத்தைச் சென்னையில் திரைப்படச் சங்க திரையிடல் வழியாக மறுமுறை பார்த்தேன். கடந்த முப்பது ஆண்டிற்குள் இந்தப் படத்தை இருபது தடவைகளுக்கும் மேலாகப் பார்த்திருப்பேன். எப்போதும் அதன் வசீகரம் குறையவேயில்லை.
ஒவ்வொரு முறையும் இப்படத்தில் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த முறை உப்பு வணிகர்களைப் பற்றிய செய்திகளை அறிந்தேன்.
சீனா மற்றும் ஜப்பானில் உப்பு வணிகர்கள் பற்றி நிறையக் கதைகளும் பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் உமணர்களும் உமணத்திகளும் மாட்டு வண்டியில் உப்பு ஏற்றிக் கொண்டு வணிகம் செய்த நிகழ்வுகளைக் காணமுடிகிறது. இதே போன்ற வணிகமுறை தான் சீனாவிலும் ஜப்பானிலும் இருந்திருக்கிறது
இந்தத் திரைப்படத்தில் உப்பு விற்பவன் பற்றிய அபூர்வமான சில தகவல்கள் காணப்படுகின்றன.
நாராயமா மலையை ஒட்டிய பனிப்பிரதேச கிராமத்தில் கதை நிகழுகிறது. படத்தின் துவக்கக் காட்சியிலே உப்பு வணிகன் வீடு திரும்புவதைப் பற்றிய ஒரு பாடலை ஒருவன் பாடுகிறான். அந்தப் பாடல் மரபாகப் பாடப்படக்கூடியது என்பது அவன் பாடும் முறையிலே தெரிகிறது
பனிப்பிரதேசங்களில் உப்பு அரிய பொருள். வெளியிலிருந்து உப்பு கொண்டுவரப்பட வேண்டும். உப்பு வணிகர்கள் ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்து வருவது வழக்கம். அவர்கள் உப்பு வணிகம் செய்வதோடு ஒரு ஊரின் செய்திகளை மற்ற ஊருக்குக் கொண்டு செல்லும் பண்பாட்டுத் தூதுவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் உப்பு வணிகன் பக்கத்துக் கிராமத்தில் உள்ள விதவையான பெண் ஓரின் மகனுக்கு ஏற்ற வரன் என்று பெண் பார்க்க உதவி செய்கிறான். இப்படி உப்பு வணிகர்கள் நடந்து கொண்டிருக்கக் கூடும். அந்தப் பெண்ணின் குடும்பம் திருமணப்பேச்சை நடத்துவதற்காக உப்பைப் பரிசாக அளிக்கிறார்கள்.
படத்தின் இன்னொரு உரையாடலில் பஞ்சகாலத்தில் உப்பு வணிகனிடம் ஒரு சிறுமியை விற்கப்பட்ட செய்தியைச் சுட்டிக்காட்டப்படுகிறது.
கடல் உப்பு தான் ஜப்பானில் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. உப்பை ஷியோ என அழைக்கிறார்கள். ஜப்பானியர்கள். உப்பை நல் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள்.
ஜப்பானியக் கடற்கரையோரங்களில் உப்பு தயாரிக்கும் அளங்கள் அதிகமிருந்தன. கடலின் உப்பு நீரைச் சிறிய களிமண் தொட்டிகளில் சேகரித்துக் கொதிக்க வைப்பதன் மூலம் உப்பு படிகங்களாக மாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் . மோஷியோ என்று அழைக்கப்படும் இந்த உப்பு ஆரோக்கியமான தாதுகள் மற்றும் கடற்பாசியிலிருந்து பெறப்பட்ட சுவையான உமாமிகளால் தயாரிக்கப்பட்டது.
எடோ காலத்தைச் சார்ந்த ஜப்பானிய உப்பு வணிகர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிய உப்பு வணிகரான எனோமோட்டோ யாசெமோனின் சுயசரிதை மதிப்புமிக்க ஆவணமாகக் கருதப்படுகிறது. ஷியோயா என்றால் உப்பு வணிகர் என்று பொருள்.
உப்பு, உப்பு உற்பத்தி மற்றும் உப்பு வரி ஆகியவை ஜப்பானிய வரலாற்றில் அரசின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவுகளில் முக்கியப் பங்கு வகித்தன. உப்பு வரி அரசாங்க வருவாயின் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக இருந்தது.. ஆரம்பக் காலங்களில், உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை நேரடியாக நிர்வகிப்பதன் மூலம் அரசாங்கங்கள் உப்பு வருவாயைச் சேகரித்தன. 8 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தனிநபர்கள் உப்பு வணிகத்தில் அதிகம் ஈடுபட ஆரம்பித்தார்கள். இதனால் உப்பின் விலை மிக அதிகமானது. இதைத் தொடர்ந்த உப்பு கடத்தல் மற்றும் உப்புக் கொள்ளை துவங்கியது.உப்பு வணிகர்களின் உலகை இப்படம் மிகச்சரியாக அடையாளப்படுத்துகிறது.
Ballad of Narayama படத்தின் கதை ஜப்பானிலிருந்த உபாசூட் என்ற வழக்கத்தைப் பற்றியது. அதாவது பழங்கால ஜப்பானில் உபாசூட் ஒரு வழக்கம் இருந்தது. பஞ்சத்தில் மக்கள் உணவு பற்றாக்குறையைத் தீர்க்க வயதானவர்களை மலையில் கொண்டு விட்டுவிடுவார்கள். அங்கே அவர்களுக்கு உணவோ குடிநீரோ கிடைக்காது. அவர்கள் மரணத்துடன் தனித்துப் போராடி இறந்து போவார்கள்.
இந்த முடிவால் வீட்டில் தங்களுக்குக் கிடைத்த உணவு பட்டினியால் வாடும் குழந்தைகளுக்குப் பகிர்ந்து தரப்படும் என்று பெரியவர்கள் நம்பினார்கள். இப்படிக் குடும்ப நலனுக்காக முதியவர்களை மலையில் கொண்டு போய் விடும் வழக்கமே உபாசூட்
பஞ்ச காலத்தில் தோன்றிய இந்தப் பழக்கம் பின்னாளில் மரபாக உருமாறியது. இதை ஏற்றுக் கொண்ட முதியவர்கள் தங்களின் பிள்ளைகளின் நலனுக்காக மரணத்தை எதிர்கொள்ள நாராயமா மலையை நோக்கிப் பயணித்தார்கள். இந்த நிகழ்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலை 1958ல் Keisuke Kinoshita திரைப்படமாக்கினார். அது கபூகி நாடகவடிவில் உருவாக்கபட்டது. 1983ல் இந்த நாவலை ஷோஹெய் இமாமுரா மறுபடி திரைப்படமாக உருவாக்கினார்
இப்படம் கான்ஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றதோடு பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.
படம் ஓரின் என்ற முதியவளைப் பற்றியது. அவளுக்கு எழுபது வயது துவங்குகிறது. அவளை உபாசூட் வழக்கத்தின் படியே நாராயமா மலைக்குக் கொண்டு போய் விடப்போகிறார்கள். ஓரினுக்கு மரணத்தைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் தான் இல்லாமல் தனது மகனும் அவனது குடும்பமும் எப்படி வாழப்போகிறார்கள் என்றே கவலை கொள்கிறாள். மனைவியை இழந்த மூத்த மகனுக்குத் துணையாக ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்கிறாள். தனது கணவன் அவரது தாயை மலையில் கொண்டு போய்விட மனதின்றி வீட்டை விட்டு ஓடிப்போனதை மகனுக்கு ஓரின் நினைவுபடுத்துகிறாள்.
படம் ஓரின் வாழ்க்கையை மட்டுமில்லை. பனிப்பிரதேச கிராமப்புற வாழ்க்கை மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக அங்குள்ள பாம்புகள், பறவைகள் விலங்குகள் பூச்சிகள் புழுக்கள் கூடப் படத்தில் கவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. முயலை துரத்தி வேட்டையாடும் காட்சியில் ஒருவன் துப்பாக்கியால் முயலை சுட்டு வீழ்த்துகிறான். ஆனால் பருந்து ஒன்று அதைப் பறந்து வந்து சுடப்பட்ட முயலைத் தூக்கிச் சென்றுவிடுகிறது. இந்தப் போராட்டம் தான் அவர்களின் வாழ்க்கை.
அந்தக் கிராமத்தில் உருளைக்கிழங்கு திருட்டில் ஈடுபட்டுப் பிடிபடும் குடும்பமும் அதையொட்டி நடக்கும் நிகழ்வுகளும் அதிர்ச்சிகரமானவை. ஒளிப்பதிவாளர் டோச்சிசாவா மசாவ் பனிப்பிரதேச வாழ்க்கையை மிக நேர்த்தியாக, கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஓரினை நாராயமா மலைக்குச் சுமந்து கொண்டு போகும் முன்பாக அந்த ஊரிலிருக்கும் பெரியவர்கள் சில கட்டளைகளைத் தெரிவிக்கிறார்கள். பயண வழியில் ஓரின் பேசக்கூடாது. மலையில் அவளைக் கொண்டு போய் விட்டுத் திரும்பி வரும் போது அவளது மகன் திரும்பிப் பார்க்கக் கூடாது. கடினமான மலையேற்றத்தைத் தாண்டிப் போகையில் அங்குள்ள நீர்நிலைகளை வணங்கிப் போக வேண்டும். மலையின் கடவுள் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பார் என்கிறார்கள். ஓரின் அதை ஏற்றுக் கொள்கிறாள்
அவர்களின் நாராயமா பயணம் மறக்கமுடியாதது. ஒரின் பயணம் முழுவதும் கண்களாலே பேசிக் கொள்கிறாள். அந்த மௌனத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. நீண்ட மலைத் தொடரில் கடினமான பாதையில் ஒரு குழந்தையைப் போல ஓரினை முதுகில் சுமந்துகொண்டு மகன் செல்கிறான்.
தன்னைத் தனியே மரணத்தின் பிடியில் விட்டுப் போகிறானே என்பதை மறந்து ஓரின் தனது மகன் திரும்பி பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்துவிடுவானா என்ற கவலையில் பிரார்த்தனை செய்கிறாள். தாயிற்கும் மகனுக்குமான அந்தக் கடைசி நிமிடங்கள் கண்ணீர் கசியச் செய்பவை. .
படம் இரண்டு புள்ளிகளை மையம் கொண்டு இயங்குகிறது. ஒன்று மரணம் இன்னொன்று காமம். படம் முழுவதும் உடல் இச்சையும் அதற்கான விழைவும் முதன்மையாகப் பேசப்படுகிறது. குறிப்பாக முட்டாளாகத் திரியும் ரிசூக்கின் உடலில் துர்நாற்றம் வீசுவதால் எந்தப் பெண்ணும் அவனைத் தொட விடுவதில்லை. அவனோ உடல் இன்பத்திற்காகப் பைத்தியமாக அலைகிறான். புலம்புகிறான். அவனுக்காகத் தன் மனைவியிடம் ஒரு இரவு ரிசூக்குடன் உறவு கொள் என ஓரினின் மூத்தமகன் யாசிக்கிறான். படத்தில் சாவிற்கும் காமத்திற்கும் இடையில் ஊஞ்சலாடுவதே வாழ்க்கை என்பதாக இமாமுரா சித்தரிக்கிறார். ரிசூக் வில்லியம் பாக்னரின் The Sound and the Fury நாவலில் வரும் Benjy கதாபாத்திரத்தை நினைவுபடுத்தியபடியே இருக்கிறான்.
ஓரின் மீன் பிடிப்பதில் வேறு எவரையும் விடச் சிறந்தவள். அதை அவள் தனது புதிய மருமகளுக்குக் கற்றுத்தருகிறாள். இருட்டில் அவர்கள் மீன்பிடிக்கும் காட்சி மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மருமகள் முதன்முறையாக அவர்கள் வீடு தேடி வரும் போது சோறும் மீனும் கொடுத்து ஓரின் உபசரிக்கும் போது அவள் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி அற்புதமானது
ரிசூக் படத்தின் துவக்காட்சியில் வயலில் புதிதாகப் பிறந்த குழந்தையின் இறந்த உடலைக் கவனிப்பான் . அவனது பார்வையில் அதிர்ச்சியிருக்காது. யாரோ ஒருவர் “தூக்கி எறிந்துவிட்டார்” அது ஒரு “ குப்பை ” என்றே கருதுவான். இந்தக் காட்சி அவர்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையின் அடையாளம் போலாகிவிடுகிறது
நாரயாமா மலையில் கொண்டு போய் விடும் வழக்கத்திற்கு இணையானது தான் முதியோர் இல்லங்களில் பெற்றோர்களைக் கொண்டுபோய் விட்டு வருவதும். தனிமையில், துயரில். வேதனையில் வயதானவர்கள் மரணத்தைச் சந்திக்கும் துயரம் கொடூரமானது. நம் காலத்தில் உபாசூட்டின் வடிவம் மாறியிருக்கிறது அவ்வளவு தான்.
படத்தின் இறுதிக்காட்சியில் நாராயமா மலையில் தனியே மரணத்தைச் சந்திக்க இயலாது என முரண்டு பிடித்துக் கதறும் முதியவரை பன்றியைக் கால்களைக் கட்டிக் கொண்டு போவது போலவே ஒருவன் கொண்டு செல்கிறான். அந்த மனிதரின் ஓலம் மறக்கமுடியாதது. அது காலத்தின் குரல். கைவிடப்பட்ட வயதானவர்கள் உலகெங்கும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். தன் படத்தின் வழியாக இமாமுரா நினைவுபடுத்த விரும்புவதும் அதுவே.
**
30.1.2020
Thursday
