World Literature Today என்ற இதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சமகால உலக இலக்கியப்போக்குகளை அறிந்து கொள்ளவும் சிறந்த மொழியாக்கங்களை வாசிக்கவும் உதவும் பத்திரிக்கை. இந்தியாவிற்கான இதன் ஆண்டுச் சந்தா 150 டாலர். இதன் பழைய இதழில் ஃபக்ரி காவர்(Fakhri Kawar) என்ற ஜோர்டான் எழுத்தாளரின் A Bird in My House என்ற கதையை வாசித்தேன். அற்புதம். மிக வித்தியாசமான கதை. இக்கதையை வாசித்தபிறகு ஃபக்ரி காவரின் புத்தகங்களைத் தேட ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் ஒன்றிரண்டே வாசிக்கக் கிடைக்கின்றன.
ஃபக்ரி காவர் ஜோர்டான் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் , அரபு எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். அத்தோடு ஜோர்டானிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்
ஏராளமான சிறுகதைத் தொகுப்புகள், குழந்தைகளுக்கான கதைகள் மற்றும் பல்வேறு இலக்கிய, அரசியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். Why Did Suzy Cry So Much? (1973), Chess Playing Is Prohibited (1976), I am the Patriarch (1981), The Barrel and Other Stories (1982), The Palestinian Job (1989), and The Dream of a Night Watchman (1993). போன்றவை அவரது முக்கியப் படைப்புகள்
Modern Arabic Fiction தொகுப்பில் இவரது இரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
ஃபக்ரி காவர் தனது 16 வயதில் எழுத் துவங்கியிருக்கிறார். அவரது முதற்கதை வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது. பெய்ரூட் பல்கலைக்கழகத்தில் அரபு மொழி மற்றும் இலக்கியம் பயின்ற ஃபக்ரி காவர் அரபு மொழி மற்றும் இலக்கியத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
A Bird in My House கதை அளவில் மிகச்சிறியது
ஒரு நாள் இரவில், மிகவும் தாமதமான நேரத்தில் யாரோ ஒருவர் கதவைத் தட்டுவதைக் கேட்கிறார் கதை சொல்லி. உடனே எழுந்து கதவைத் திறந்த போது, வெளியே சோர்ந்த முகத்துடன் நோயாளி போன்ற ஒரு மனிதன் குடிக்க ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குமா எனக்கேட்கிறார். உள்ளே வாருங்கள் என அவரை அனுமதிக்கிறார் கதை சொல்லி. இரவு அங்கே தங்கிக் கொள்ள முடியுமா என அந்த ஆள் கேட்கிறார். அதற்கும் கதை சொல்லி சம்மதிக்கிறார். அதன்படி நோயாளியாக உள்ள அந்த மனிதர் அந்த வீட்டிலே உண்டு உறங்கி எழுகிறார்
மறுநாள் அவரிடம் நீங்கள் யார் எனக்கேட்கிறார் கதைசொல்லி.
அவரோ நான் ஒரு பறவை என்று சொல்கிறார்.
வியப்போடும் குழப்பத்துடன் பறவையா.. உங்களிடம் ரெக்கைகள் இல்லையே எனக்கேட்கிறார் கதை சொல்லி.
அது ஒன்றும் முக்கியமானதில்லை என்கிறார் பறவை மனிதன்.
அத்தோடு காபி குடித்தபடியே நான் வானில் பறந்து கொண்டிருந்த போது நோயுற்றதால் வீழ்ந்துவிட்டேன் என்கிறார்.
இது நிஜமா பொய்யா எனக் கதைசொல்லிக்கு குழப்பமாகிறது.
அந்தபறவை மனிதன் இந்த வீடு மிகவும் பிடித்துள்ளது. ஊரிலிருந்து என் மனைவி பிள்ளைகளை கடிதம் போட்டு வரவைக்கப்போகிறேன் என்கிறான். அவர்களுக்கு இங்கே என்ன வேலையிருக்கிறது எனக் கதை சொல்லி கேட்க, அதான் சொன்னேனே இந்த வீடு மிகவும் வசதியாகவுள்ளது என அதிகாரமான குரலில் பேசுகிறான் பறவை மனிதன்.
பறவை மனிதன் எப்படி அந்த வீட்டினை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்கிறான் என்பதைக் கதை மிகவும் அழுத்தமாகச் சொல்கிறது.
உண்மையில் இக்கதை பறவை மனிதனைப் பற்றியதல்ல. எதிர்பாராமல் உங்கள் வீட்டிற்குள் நுழையும் ஒரு அந்நியனைப் பற்றியது. அதிகாரத்தைப் பற்றியது. சிறிய வேண்டுகோளின் வழியே அதிகாரம் எப்படி உங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது என்பதையே ஃபக்ரி காவர் பேசுகிறார்.
உங்கள் நிலம், வீடு ,சொத்து யாரோ ஒருவரால் பறித்துக் கொள்ளப்படும் அபாயத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கதை அழகாக வெளிப்படுத்துகிறது.
சமகால அரபுச் சிறுகதைகள் தொகுப்புகளில் இது போன்ற அபாரமான கதைகள் இடம்பெற்றுள்ளன.
