பார்க்க வந்த இலை
என்னைப்பார்க்க ஒரு வாசகர் வந்திருந்தார். அவர் கையில் எங்கோ வழியில் பறித்த ஒரு இலையிருந்தது. பச்சை நிறத்தில் அகலமான இலை. அவர் சுவாரஸ்யமாக இலக்கியத் தகவல்களை பேசிக் கொண்டேயிருந்தார். எனக்கோ அந்த இலையிடமிருந்து கவனத்தை அகற்ற முடியவில்லை. எவ்வளவு பசுமை. எவ்வளவு அழகு. அந்த இலை ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறது. இந்த நிமிசம் முன்பு வரை எங்கிருந்தது அந்த இலை. எந்த செடியின் இலையது. நான் அதை இதுவரை கண்டதேயில்லையே. எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறது. …