அன்பு தியோ.
எனக்கு தியோவைப் பிடிக்கும். அவன் ஒவியர் வான்கோவின் தம்பி. நான்கு வயது இளையவன். தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலில் வரும் மிஷ்கின் நிஜவாழ்வில் இருந்தால் எப்படியிருந்திருப்பான் என்பதற்கு தியோவை உதாரணமாகச் சொல்லலாம். தஸ்தாயெவ்ஸ்கியின் மிஷ்கின் எளிய மனிதன். ஆனால் அன்பும் கருணையும் உருவானவன். அறிந்த அறியாத மனிதர்களுக்காக தன்னிடமிருப்பதை முழுமையாக பகிர்ந்து கொள்பவன். அடுத்தவரின் துயரங்களுக்காக மனம் வருந்துபவன். அவனிடம் வாழ்க்கை குறித்த புகார்கள் எதுவுமில்லை. அதே நேரம் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்பவர்களுக்காக அவன் கைகொடுத்து உதவுகிறான். …