கம்பளிபூச்சியின் மனைவி

நான்காவது முறையாக நேற்றிரவு CATERPILLAR என்ற ஜப்பானிய படத்தைப் பார்த்தேன், சமீபத்தில் ஒரு திரைப்படம் என்னை இவ்வளவு உலுக்கியதில்லை,

சென்னை திரைப்பட விழாவில் இடம்பெற்ற முக்கியமான படம் என்று சொல்லி ஒரு நண்பர் அதன் டிவிடியை தந்திருந்தார், கடந்த ஒரு மாத காலத்தில் இதை நான்காவது முறையாகப் பார்த்துவிட்டேன்

1930களில் நடைபெற்ற ஜப்பான் சீன யுத்தத்தில் கலந்து கொண்ட குரோகவா என்ற ஜப்பானிய ராணுவ வீரன் பெண்களைத் தாக்கி வன்புணர்ச்சி செய்து கொல்கிறான், ரத்தவெறி அவனைப் பிடித்தாட்டுகிறது, இறுதியில் போரில் கைகால்கள் வெட்டப்பட்டு முண்டமாகத் தனது சொந்த கிராமம் திரும்புகிறான். ராணுவம் அவனை அணிவகுப்பாக ஊருக்குக் கொண்டுவந்து சேர்ப்பதில் தான் படம் துவங்குகிறது

அவனது மனைவி தஷாஷி அந்தக் கைகால்கள் அற்ற முண்டத்தை தனது கணவன் என ஏற்றுக் கொள்ள மறுத்து அதிர்ச்சியோடு வீட்டிலிருந்து கதறியபடியே வெளியே ஒடுகிறாள், அவளை ஆறுதல்படுத்துவதற்காக பின்னாடியே ஒடிவருகிறான் கணவனின் தம்பி, அவளால் அந்த உருவத்தை தனது கணவன் என ஒத்துக் கொள்ள முடியவில்லை, சேற்றில் விழுந்து அழுகிறாள்

ஆனால் ஒட்டுமொத்த கிராமமும் குரோகவா ராணுவ சேவையில் கைகால் போனதால் அவன் பெருமைக்குரிய யுத்தகடவுள் ஆகிவிட்டான் என்று கொண்டாடுகிறார்கள், ஆகவே அவனை இனி ஆயுளிற்கும் வைத்துப் பராமரிக்க வேண்டிய புனிதப்பணி குரோகவா மனைவியின் மீது விழுகிறது, அவள் அந்த உடலை என்ன செய்வது என்று பயத்துடன் நெருங்கி வந்து பார்க்கிறாள்,

குரோகவாவின் தொண்டை அறுபட்ட காரணத்தால் அவனால் பேசமுடியாது, லேசாக ஒலி எழுப்பமுடியும், கண்கள் மட்டுமே செயல்படுகிறது, மலமூத்திரம் பெய்வதற்குக் கூட ஆள் உதவி தேவை, அவன் படுக்கையில் கிடந்தபடியே பெருமிதமாக தான் பெற்றுவந்த பதக்கங்களை வெறித்து பார்த்தபடியே இருக்கிறான், நாளிதழில் அவனது ராணுவ சாகசங்கள் படத்துடன் வெளியாகி இருப்பதை மனைவியும் பார்க்கிறாள், இப்படி ஒருவன் ஏன் உயிரோடு திரும்பிவந்தான் என அவனது அப்பாவும் வருத்தபடுகிறார்

எப்படி இனிமேலுள்ள மிச்ச வாழ்வை இவனோடு கழிப்பது என்று குழம்பிப் போகிறாள் தஷாஷி,  வயலில் அவள் வேலை செய்ய போகையில் அவனை ஒரு தள்ளுவண்டியில் வைத்து பொம்மை போல அழைத்துப் போகிறாள், அவனுக்கு பசிக்கும் போது  உணவைப் புகட்டிவிடுகிறாள், அவனுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் பசிக்கிறது, அந்த தீராதப்பசியை எப்படி தணிப்பது என்று அவளுக்குப் புரியவில்லை, இத்துடன் அவனது நினைவில் யுத்தமுனையில் வன்புணர்ச்சி செய்த பெண்களின் உருவம் தோன்றி மறைந்து அவனுக்குள் பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது, அருகில் வரும் மனைவியின் நாடாவை  பிடித்து இழுக்கிறான், அவளுக்கு அவனது பாலியல் வேட்கை புரிகிறது, அதையும் உணவு தருவது போல அவளே மேற்கொள்கிறாள்,

பசி, காமம் இந்த இரண்டும் தான் அவன் உயிருள்ளவன் என்பதற்கான அத்தாட்சி, இரண்டும் அவனை வாட்டி எடுக்கின்றன, அவனுக்கு மனைவியின் தேவை என்பதே இந்த இரண்டையும் பூர்த்தி செய்வதற்கு மட்டும் தான், மற்றநேரங்களில் அவளை அவன் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை, ஆனால் இந்த வேட்கை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே போய் செக்ஸ் இல்லாமல் தன்னால் உயிர்வாழ முடியாது என்பது போல வெறிக் கொண்டுவிடுகிறான்,

கைகால்கள் இல்லாத போதும் அவனது பாலியல் இச்சைக்கு தன்னை ஒப்புக் கொடுப்பதை அசூயையாக உணர்ந்தாலும் அதைத்தவிர வேறுவழியில்லை என்று அவள் புலம்புகிறாள்.

முந்தைய நாட்களில் அவளுக்கு குழந்தையில்லை என்று பலமுறை அவன் அடித்து நொறுக்கியிருக்கிறான், இப்போதும் அவள் பாலியல் வேட்கைக்கு ஒத்துழைக்க மறுக்கையில் அவனது கோபம் பொங்குகிறது, உன்னால் அடிக்க முடிந்தால் அடி, என்னை அடிக்க வேண்டும் என்று உள்ளுற ஆசைப்படுகிறாய் இல்லையா என்று அவன் முன்னே கத்துகிறாள் தஷாஷி,

யுத்தக் கடவுள் என்று பெருமையாக சொல்லப்படும் அவன் வெறும் சதைப்பொம்மை போன்று உலகிற்குக் காட்டுவதற்காக அவனை அடிக்கடி வெளியே தள்ளுவண்டியில் அழைத்துப் போகிறாள், குரோகவா அது தன்னை அவமானப்படுத்துவதாக உணர்ந்து வெளியே வர மறுக்கிறான், அவனை கட்டாயமாகத் தூக்கி ராணுவ உடைகளை அணிவித்து வண்டியில் தள்ளிக் கொண்டு போகிறாள், இது அவனைப் பழிவாங்குவது போன்ற உணர்வை அவளுக்குள் தருகிறது

வெறியும் கோபமும் இயலாமையும் ஒன்று சேர்ந்து அவன் மனதில் வன்புணர்ச்சி செய்த பெண்களின் ஒலமாகக் கேட்க துவங்குகிறது, அவனால் இயல்பாக மனைவியோடு பாலுறவு கொள்ள முடியவில்லை, தனது வீரப்பதக்கங்கள் தனக்கு தரப்பட்ட தண்டனையின் சான்று போல இருப்பதை உணர்கிறான்

யுத்தஎதிர்ப்பு படமாக இருந்த போதும் படம் முழுவதும் மனிதனின் ஆதார உணர்ச்சிகளே  ஆராய்ந்து பார்க்கப் படுகிறது, உடல் உறுப்புகள் இழந்த நிலையில் ஒரு மனிதன் பசி காம்ம் என்ற இரண்டு முனைகளுக்குள் எவ்வாறு ஊசாலடுகிறான் என்ற சிக்கல் நுட்பமாக காட்சிபடுத்த பட்டிருக்கிறது

படத்தை பார்கையில்  புராண கால பத்தினியான நளாயினி அவள் கணவனை ஒரு கூடையில் வைத்து வேசி வீட்டிற்கு தூக்கிப் போன சம்பவம் நினைவிற்கு வந்து போகிறது, தேசம், காலம் மாறியிருக்கிறதேயின்றி பெண்மீதான வன்கொடுமை  அப்படியே இருப்பதை உணர முடிகிறது,

Edugawa Rampo என்ற ஜப்பானிய எழுத்தாளரின் தடைசெய்யப்பட்ட சிறுகதையொன்றினை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது, படத்தில் மிகக் குறைவான கதாபாத்திரங்களே இடம்பெற்றுள்ளனர்,

காமமும் பசியும் பிணி என்று மணிமேகலை குறிப்பிடுவது நினைவில் ஒடியபடியே இருக்கிறது, மணிமேகலை விவாதிப்பதும் காமத்தையும் பசியையும்  பெண்கள் எப்படி எதிர்கொள்வது என்பதையே, இரண்டுமே இரண்டு படிமங்களாக மணிமேகலையில் மையம் கொள்கின்றன,

இந்தப்படத்தில் வரும் பெண்ணை பௌத்த துறவியின் மனப்பாங்கு கொண்டவளை போலவே உணர்கிறேன், அவள் அந்தக் கம்பளிபூச்சியை ஏற்றுக் கொண்டு அது உயிர்வாழ்வதற்காக தன்னால் இயன்றதைத் தந்தபடியே இருக்கிறாள், அவளது உடல் கம்பளிபூச்சி ஊர்ந்து செல்வதற்கான சிறுகிளை போலவே இருக்கிறது,

கேட்டர்பில்லர் படத்தின் இயக்குநர் ‘கோஜி வாக்கமட்சு’, இவரின் பெரும்பாலான படங்கள் வன்முறை மற்றும் பாலியல் நெருக்கடி சார்ந்தவையே, அதனால் இவை கடுமையான விவாத்திற்கு உட்படுகின்றன, கேட்டர்பில்லரிலும் ஒளிவுமறைவற்ற பாலியல் காட்சிகள் இடம் பெறுகின்றன, அவை பார்வையாளனுக்கு கேளிக்கை தருவதற்குப் பதிலாக அவனை அதிர்ச்சியடைய செய்கின்றன, ஒவ்வொரு பாலுறவு காட்சியின் போதும் பார்வையாளன் பதற்றமடைகிறான், அது தான் இயக்குனரின் வெற்றி

படத்தில் கோமாளி போல ஒருவன் எக்காளம் ஊதிக் கொண்டு ஊரின் அபத்தங்களை கேலி செய்தபடியே சுற்றிக் கொண்டிருக்கிறான், அவன் கிராமத்தின் மனசாட்சி போல சித்தரிக்கபடுகிறான், அவனுக்கு இந்த போர்கடவுள் பற்றிய பெருமைகள்  யாவும் கேலிக்குரியதாகவே இருக்கின்றன

குரோகவாவின் செய்கைகள் யாவும் பாலுறவு சார்ந்தே இருக்கின்றன என்று உணர்ந்து ஒரு முறை தஷாஷி தன் உடைகளை கழட்டும் போது அவன் தான் மூத்திரம் பெய்வதற்காகவே அவளது உதவியை நாடுகிறேன் என குத்தலாக  தனது உள்ளாடையில் மூத்திரம் போய்விடுகிறான், அப்போது அவளுக்குள் கோபம் பொங்கி எழுகிறது, தன்னை மீறி கத்துகிறாள், அக்காட்சியில் அவனுக்குள் இன்னும் தன்னைச் சித்ரவதை செய்து பார்க்கும் குரூரம் இருப்பதை  அவளால் நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது

யுத்தகடவுளின் மனைவி என்பதால் அவளுக்கு கிராமத்தவரின் பரிசுப் பொருள்கள் கிடைக்கின்றன, முக்கிய மரியாதை கிடைக்கிறது, ஆனால் உண்மையில் இவன் போர்கடவுள் இல்லை போர் குற்றவாளி என்றே அவள் உணர்கிறாள்,

கடந்தகால கொடுஞ்செயல்கள் நினைவில் மோதி மோதி குரோகவாவை சித்ரவதை செய்கின்றன, கடுமையான மனவேதனையில் மனைவி வயலிற்கு போயிருக்கும் சமயத்தில் தானே தவழ்ந்து வெளியே வந்து வீட்டை ஒட்டினாற்போல் உள்ள குட்டையில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறான், அவனது மிதக்கும் உடல், ஒரு புழு செத்து மிதப்பது போன்றே இருக்கிறது

போர் முடிந்தது என்னும் சிரிப்போடு கோமாளி போன்றவன் ஊரில் எக்காளமிட்டபடியே போவதோடு படம் நிறைவு பெறுகிறது

ஹிரோஷிமா..நாகசாகி போரில் இறந்து போன மனிதர்களைப் பற்றிய புள்ளி விவரங்கள் திரையில் ஒடுகின்றன,

அந்தக் கம்பளிப்பூச்சி திரையில் இருந்து இடம் மாறி நம் நினைவில் ஊர்ந்து செல்ல துவங்குகிறது, ஒரு இலையைத் தின்பது போல மெதுவாக நமக்குள் இருந்த பசி காம்ம் குறித்த எண்ணங்களைக் கம்பளிபூச்சித் தின்னத்துவங்குகிறது, உடல் குறித்த விழிப்புணர்விற்கு மெல்ல உட்படத் துவங்கி, உடலென்பது வெறும் கருவி, மனது அதை முழுமையாக தனது கட்டிற்குள் வைத்து இயக்குகிறது, நினைவுகள் தான் அதை இயக்கும் விசை என்பதை அறிந்து கொள்கிறோம்,

இன்னொரு புறம் யுத்தம் என்பது அதிகாரத்திற்கான கோரப்பசி, அது மனிதர்களை உணவாக கொள்கிறது, எந்த யுத்தமாக இருந்தாலும் அது போர்முனையில் உள்ள வீரர்களை விடவும் அப்பாவிப் பெண்களையே அதிகமாக வன்முறைக்கு உட்படுத்தி சிதைத்து அழிக்கிறது என்பதை படம் வலிமையாகச் சொல்கிறது

படம் முடிந்த பிறகும் கம்பளிப்பூச்சியின் மனைவி என்ற படிமம் மனதை நிம்மதியற்று அலைக்கழிக்க வைக்கிறது.

•••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: