க்யூகோவின் மகள்

காதலுக்காகத் தன்னை அழித்துக் கொண்ட தேவதாஸைத் தான் நமக்குத் தெரியும், தான் காதலித்தவனை அடைவதற்காக தன் அழகினைச் சிதைத்துக் கொண்டு, காதலன் செல்லும் ஊர் ஊராக மறைந்திருந்து பின்தொடர்ந்து, அவமானங்களுக்கு உள்ளாகி காதலில் தோற்றுப்போய், மனச்சிதைவு ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும்  மனநலக்காப்பாகத்தில் வாழ்ந்து மடிந்த அடேலைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது,

அடேல், பிரெஞ்சு இலக்கியத்தின் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர் விக்டர் க்யூகோவின் மகள், இவளின் காதல் துயரம் க்யூகோவின் எல்லா புனைவுகளையும் விட விசித்திரமானது, அடேலின் காதலைப்பற்றி செய்திகள், நாட்குறிப்புகள், கடிதங்கள் வழியாக வெளியாகி உள்ளது, The Story of Adele H., என இவளைப்பற்றி த்ரூபா ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்,

அடேலைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு விக்டர் க்யூகோவிற்கு இருந்த புகழையும் பெயரையும் தெரிந்து கொள்ள வேண்டும், க்யூகோவின் லே மிசரபிள்ஸ் நாவல்  (Les Miserables) தமிழில் ஏழை படும்பாடு என்ற பெயரில் நாகையா நடித்து ராம்நாத் இயக்கி வெளியாகியிருக்கிறது. இந்தியில் குந்தன் என்ற பெயரில் சேராப் மோடி இயக்கியிருக்கிறார். தமிழிலே இந்த நாவலை தழுவி ஞான ஒளி என்ற பெயரில் சிவாஜி நடித்த படமும் வெளியாகியுள்ளது. தமிழில் இந்த நாவலை ச.து.சு யோகியார் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

கியூகோ தான் வாழும் காலத்திலே மிகுந்த புகழும் பெயரும் பெற்றவர். அவரது லே மிசரபிள்ஸ் நாவலை வெளியிடுவதற்காக பதிப்பகங்களுக்குள் பலத்த போட்டி நடைபெற்றது. முடிவில் மூன்று லட்சம் பிராங்குகள் கொடுத்து அதன் உரிமையை பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு பதிப்பகம் விலைக்கு வாங்கியது

கியூகோவின் புத்தகங்களை வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நின்று காத்திருந்து சண்டையிட்டு புத்தகங்களைப் பெற்றனர் . 1862ல் லே மிசரபிள்ஸ் நாவல் வெளியாக போகிறதென்று ஆறுமாதங்களுக்கு முன்பாகவே பாரீஸ் நகர தெருக்கள் எங்கும் பெரிய பெரிய விளம்பரங்கள் வைக்கபட்டிருந்தன. அந்த நாவலின் ஒரு அத்தியாயம் மட்டும் முன்பிரசுரமாக வெளியாகியது. அதை வாங்கிப் படித்து நாவல் வெளியாவதற்கு முன்பாகவே மக்கள் அதைப்பற்றி காரசாரமாக விவாதிக்க துவங்கினார்கள்.

நாவல் 1862ம் வருடம் வெளியானது. வெளியான தினத்திலே நாற்பதாயிரம் பிரதிகள் விற்று தீர்ந்தன. 5 பாகங்களாகவும் 1200 பக்கங்களும் கொண்ட அந்த நாவல் பற்றி ஒரு வருடகாலம் பாரீஸ் நகரம் முழுவதும் மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்

நாவலின் பிரதிகள் கிடைக்காமல் புத்தக கடைகளில் மக்கள் அலைமோதினார்கள். இவ்வளவிற்கும் கியூகோ அப்போது அரசியல் காரணங்களுக்காக பாரீசை விட்டு வெளியேறி புருசெல்சில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

அந்த நாவல் பிரெஞ்சு தேசம் எங்கும் எழுப்பிய அலையின் வேகம் மிக வலிமையானது. லே மிசரபிளின் முக்கியக் கதாபாத்திரங்களான ஜீன்வால் ஜீனும், பிஷப் மைரிலும் காவல்துறை அதிகாரியான ஜாவெர்த்தும் வாசகர்களிடம் மிகுந்த புகழ் பெற்றார்கள்.

கியூகோ கலந்து கொள்ளும் விருந்தில் கலந்து கொள்வதற்காக இரண்டு லட்சம் வரை செலவு செய்வதற்கு பணக்கார பிரபுக்கள் தயாராகயிருந்தனர். அதேவேளையில் இந்த நாவல் சாத்தனின் தூண்டுதலில் எழுதப்பட்டது  அதைத் தடை செய்ய வேண்டும்  என்று மதவாதிகள் கூச்சலிட்டனர். பிரான்சின் ஆட்சியதிகாரத்தை விமர்சனம் செய்கிறது என்றும் நாவல் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது.

கியூகோ ஒரு எழுத்தாளராக சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்  இதற்காகவே ஒரு பத்திரிக்கையை துவங்கி நடத்தினார். மரணதண்டனைக்கு எதிராக தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டார்,  இந்த இயக்கத்தை முன்னெடுத்த கியூகோவின் மகன் சார்லஸை போலீஸ் கைது செய்து அடித்து துன்புறுத்தி வீதி வழியாக இழுத்து சென்றனர்.

அவனுக்காக கோர்டில் வாதிட்ட கியூகோ, அவன் செய்த குற்றம் தனது மகன் என்பதே. சார்லஸிடம் வெளிப்படும் ஆவேசம் தான் சிறுவயதில் இருந்து ஊட்டி வளர்ந்தது, ஆகவே தண்டிப்பதாக இருந்தால் தன்னை தான் தண்டிக்க வேண்டும் அப்படி தண்டிப்பதாக இருந்தால் கூட தான் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன். பாரீசில் இன்றுள்ள சிறைச்சாலைகள் நரகத்தை விடவும் மிகக் கொடுமையானவை. முதலில் சிறைகளை சீர்திருத்தம் செய்யுங்கள்  கற்றங்களுக்கான தண்டனைகளை வரையறை செய்யுங்கள் அதன் பிறகு என் மகனை தண்டியுங்கள் என்று ஆவேசமாக உரையாற்றினார்,

இப்படி சமூகச் சீர்திருந்தங்களுக்காக போராடிய விக்டர் க்யூகோ, பெண்கல்வி, மதஅதிகாரத்திற்கு எதிரான போராட்டம் போன்றவற்றை முன்னெடுத்து தொடர்ந்து எழுதி வந்தார், தனது வீட்டில் தனது ஐந்து பிள்ளைகளையும் கட்டுபாடுகள் அற்றவர்களாக, சுதந்திர சிந்தனையோடு வளர்த்தார், அடேலும் அப்படி உருவானர் தான்,

பிரான்சின் சக்கரவர்த்தியாக லூயி நெப்போலியன் பதவியேற்றவுடன் தனது காத்திரமான அரசியல் கருத்துகளுக்காக தன்னை தண்டிக்க கூடும் என்று கருதிய விக்டர் க்யூகோ பாரீசை விட்டு வெளியேறி பெல்ஜியத்தில் தஞ்சம் புகுந்து சில காலம் அங்கே வாழ்ந்தார்.

1870ல் க்யூகோ பாரீஸ் திரும்பிய போது பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடி வரவேற்று விருந்து கொடுத்தனர். அதன் பிறகு பாரீஸின் முக்கிய பிரமுகராக கொண்டாடப்பட்ட கியூகோ தனது  83 வயதில்  இறந்த போது மூன்று லட்சம் பேர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

க்யூகோவின் இளையமகள் அடேல், அடர்ந்த கூந்தலை கொண்டிருந்த அழகி, இவளின் அழகை கண்டு ஒவியர்கள் பலர் அவளை மாடலாக கொண்டு ஒவியம் வரைந்திருக்கிறார்கள், நடனவிருந்துகளில் அடேலுடன் இணைந்து நடனமாடுவதற்கு இளைஞர்களிடம் பலத்த போட்டி நடைபெற்றது,

கயூகோவின் குடும்பம் ஜெர்சித் தீவில் வசித்துக் கொண்டிருந்த போது ஒரு விருந்தில் அடேல் பிரிட்டீஷ் ராணுவத்தினை சேர்ந்த ஆல்பெர்ட் ஆன்ட்ரூ பின்சன் என்ற இளைஞனை சந்தித்தாள், பின்சனுக்குப் பார்த்தமாத்திரத்தில் அடேலை பிடித்துப் போய்விட்டது, அவள் மீது காதலுற்று, அவளைச் சந்திப்பதற்காகவே க்யூகோ வீட்டிற்கு போய்வரத்துவங்கினான் , நாலைந்து சந்திப்புகளின் பின்பு அடேலைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பின்சன் தெரிவித்தான், அவன் ஒரு குடிகாரன், பெண்பித்தன் என அறிந்த, அடேல் அதை ஏற்றுக் கொள்ளவில்லை,

பின்சன், லெப்டினெட் ஆக பதவி உயர்வு பெற்று ஜெர்சி தீவை விட்டு வெளியேறி சென்றான், அவன் சென்றபிறகே அடேலுக்கு அவன் மீது காதல் உருவாகத்துவங்கியது, அவனைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்க துவங்கினாள், அவனுக்குக் காதல் கடிதங்கள் எழுதினாள், ஆனால் பின்சன் அவளை கண்டுகொள்ளவேயில்லை, இதனால் ஆத்திரமான அடேல் அவனை நேரில் சந்தித்து தனது காதலை சொல்ல வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினாள்

கனடாவின் நோவாஸ்கோடா பகுதியில் இருந்த ஹாலிபேக்ஸில் பின்சன் பணியாற்றிக் கொண்டிருந்தான், கப்பலில் ஹாலிபேக்ஸ் போய் இறங்கிய அடேல், அங்கே மிஸ் லிவ்லி என்ற பொய் பெயரில் ஒரு அறை எடுத்துக் கொண்டு பின்சன் எங்கேயிருக்கிறான் என தேடத்துவங்கினாள்,

இடைவிடாத குடி, வேசைகளுடன் இரவைக் கழித்தல் என அலைந்து கொண்டிருந்த பின்சன், ஒரு புத்தகக் கடைக்கு அடிக்கடி வருகிறான் என்பதைத் தெரிந்து கொண்டு அந்த புத்தக கடைக்காரருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டாள் அடேல்,

அவன் வழியாக பென்சனின் தோழி ஒருத்தியின் அறிமுகம் கிடைத்தது, தனது காதலின் வேதனையை ஒரு கடிதமாக எழுதி அவள் மூலம் பென்சனுக்கு கொடுத்து அனுப்பினாள் அடேல், அவன் அதைப் படித்து கிழித்து எறிந்துவிட்டு அவளை தான் சந்திக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டான்

ஆனால் அடேல் அவனை விட்டுவிடவில்லை, அவன் செல்லுமிடங்களுக்கு எல்லாம் தானும் பயணம் செய்ய ஆரம்பித்தாள், அவள் மீதான காதலைப்பற்றி பக்கம் பக்கமாக நாட்குறிப்புகள் எழுதினாள், தனது தோழிகளுக்கு கடிதம் எழுதினாள், காதலின் மிதமிஞ்சிய ஏக்கத்தில் இறந்து போன தனது சகோதரி தன்னுடன் பேசுவதாகவும், அவளது ஆவி தனது காதலுக்கு உதவுகிறது என்றும் கடிதம் எழுதியிருக்கிறாள், இதற்கிடையில் வீட்டைவிட்டு போன அடேலை க்யூகோவின் குடும்பம் தேடிக் கொண்டிருந்த்து,

சூதாடி கடனாளியாக இருந்த பென்சனைச் சந்தித்த அடேல் அவனது கடனை மொத்தமாக அடைத்துவிடுவதாக வாக்குறுதி அளித்தாள், ஆனால் பென்சன் அதை ஏற்கவில்லை, அவன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகச் சொன்னான், அதைத் தடுத்து நிறுத்த அந்த பெண்ணின் தந்தையைத் தேடிச்சென்ற அடேல் தனது வயிற்றில் ஆல்பெர்டின் பிள்ளை வளர்க்கிறது, தான் கர்ப்பிணி என்று பொய் சொல்லி அத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினாள்

அத்துடன் தனக்கும் ஆல்பெர்ட்டுக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது, அதை வீட்டோர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கடிதம் அனுப்பினாள், இதை அறிந்த விக்டர் க்யூகோ தனது மகளுக்கு கல்யாணம் ஆன செய்தியை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார், அது எல்லா நாளிதழ்களிலும் வெளியானது, இதைப் படித்த ஆல்பெர்ட் அது பொய்யான செய்தி, தான் அடேலை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று மறுத்து செய்தி வெளியிட்டான்,

காதலை மறந்து வீடு திரும்பும்படியாக அடேலுக்குக் க்யூகோ கடிதம் எழுதினார், அவளோ தான் ஆல்பெர்ட்டின் மனைவி என்பதால் அவனை விட்டு எங்கும் வரமுடியாது என்று பதில் கடிதம் அனுப்பினாள், ஆல்பெர்ட் தன்னைப் பின்தொடரும் அடேலிடம் இருந்து தப்பிக்க ஒளிந்து வாழ்ந்தான்,

அவன் வேசைகளுடன் பழகுகிறான் என்பதை அறிந்த அடேல், தானே ஒரு வேசையை ஏற்பாடு செய்து தனது திருமணப்பரிசாக அவளை அனுபவித்துக் கொள் என்று அனுப்பி வைத்தாள்,

அடேல் ஒரு ஆவி போலத் தன்னைத் தொடர்ந்து விரட்டித் துன்புறுத்துகிறாள் என்று  ஆத்திரப்பட்ட பென்சன் ஹாலிபேக்ஸில் இருந்து வெளியேறி பர்படோஸ் தீவிற்கு சென்றான், அவனைப் பின்தொடர்ந்து அடேலும் பர்படோஸ் சென்றாள்,

வீட்டில் இருந்து அவள் கொண்டு போன பணம் தீர்ந்து போகவே, உடைகள், நகைகளை விற்றுச் செலவழித்தாள், பர்படோஸ் தீவில் பென்சன் எங்கேயிருக்கிறான் எனத் தெரியாமல் தேடி அலைந்தாள், தனது தலைமயிரை வெட்டிக் கொண்டு ஆண் உடை அணிந்தபடியே குடித்துவிட்டு சேற்றில் விழுந்துகிடந்தாள், அவள் மீது பரிதாபம் கொண்ட கிறிஸ்துவ மிஷனரியை சேர்ந்த மேடம் செலின் மா என்பவள் அவளுக்கு அடைக்கலம் தந்து தங்க வைத்தாள்,

அங்கே தங்கிய அடேல், ஒரு விழாவில் பென்சனைக் கண்டுபிடித்து அவனை மறுபடி துரத்த ஆரம்பித்தாள், அவள் மீது தனக்குக் காதலே இல்லை, தன்னை விட்டுவிடு என்று பென்சன் கெஞ்சினான், அப்படியானால் தன்னை கொன்றுவிடு என்று அவனிடம் தனது கத்தியைக் கொடுத்தாள் அடேல், அவள் ஒரு பைத்தியக்காரி, பித்து பிடித்து அலைகிறாள் என்று அவன் காவலர்களிடம் புகார் அளித்தான்,

அடேலின் தீவிரத்தைக் கட்டுபடுத்த முடியாத மேடம் மா அவளை மனநலசிகிட்சை பெற அழைத்துப் போனாள், ஆனால் சிகிட்சையை ஏற்க மறுத்து தான் காதலின் துயரத்தை அனுபவிக்கவே விரும்புகிறேன் என அடேல் தப்பி ஒடிவிட்டாள், பர்படோஸ் தீவில் பிச்சைகாரியைப் போல வாழ்ந்த அவளைப் பற்றிய செய்தி நாளிதழ் ஒன்றில் வெளியானது, இதை அறிந்த விக்டர் க்யூகோ தனது மகளை ஆதரித்த மேடம் மாவிற்கான செலவுத் தொகை மொத்த்தையும் திருப்பி அனுப்பி மகளை தனது வீட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்

பாரீஸின் புறநகரிலிருந்த மனநல காப்பகம் ஒன்றில் சிகிட்சைக்காக அனுமதிக்கபட்டாள் அடேல், விக்டர் க்யூகோ இறந்த நாளில் அவள் கண்ணீர் ஒழுக தனது காதலை தந்தை நிறைவேற்றவேயில்லை என்று கதறினாள், தனது காதலன் தவிர வேறு யாருடனும் தான் பேசமாட்டேன் என்று சில வருஷங்கள் அவள் யாருடனும் பேசாமல் இருந்தாள்,

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மனநலக்காப்பகம் ஒன்றிலே வாழ்ந்து திருமணமே செய்து கொள்ளாமல், தான் ஆல்பெர்டின் மனைவி என்று சொல்லிக் கொண்டு தனிமையில் இறந்து போனாள் அடேல்

அடேல் கொண்டிருந்த காதலின் சாட்சியாக அவள் எழுதிய நாட்குறிப்புகள், கடிதங்கள் கண்டுபிடிக்கபட்டன, அதில் காதலுக்காக அவள் எப்படி எல்லாம் தன்னை அழித்துக் கொண்டாள் என்ற விபரங்கள் நம்மை நெகிழ்வூட்டுகின்றன,

அடேல் மனநோயாளியில்லை, ஆனால் சமூகத்தால் மனநோயாளியாக கருதப்பட்டிருக்கிறாள், ஒரு பெண் தனது காதலுக்காக எவ்வளவு போராட்டங்களை சந்திப்பாள் என்பதற்கு அடேலின் கதை ஒரு உதாரணம்  என்கிறார் அவளது வாழ்க்கை வரலாற்றை எழுதிய எலிசபெத் கால்ட்பீல்டு,

அடேலிற்கு ஏற்பட்டது schizophrenia எனும் மனச்சிதைவு நோய், அவள் தன்னை ஆல்பெர்டின் மனைவியாக கருதிக் கொண்டு நடக்க ஆரம்பித்திருக்கிறாள், துர்சொப்பனங்கள், தன்னை தானே துன்புறுத்திக் கொள்ளுதல், தனது காதலிற்கு இடையூறாக நினைப்பவற்றை குரூரமாக அழிப்பது என அவளது மூர்க்கத்திற்கு காரணம் மனச்சிதைவே என்கிறார் மனநலமருத்துவர் கேதி குயின்,

க்யூகோவின் குடும்பம் அடேலின் காதலை நிறைவேற்ற எத்தனையோ முறை முயற்சி செய்திருக்கிறது, ஆனால் பென்சன் அதை ஏற்றுக் கொள்ளவேயில்லை, அதே நேரம் தெருவில் குடித்துவிட்டு பிச்சைகாரி போல தனது மகள் அலைவதை க்யூகோவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, மனம் உடைந்து போனார், மகளை வீட்டிற்கு அழைத்துவர  தொடர்ந்த முயற்சிகளை மேற்கொண்டார், ஆனால் அடேல் தான் க்யூகோவின் மகளில்லை, ஆல்பெர்ட் பென்சனின் மனைவி, ஆகவே அவர்கள் தன்னை அழைத்துப் போவதை விரும்பவில்லை என்று மறுத்துவிட்டாள்

அடேலின் துயரக்காதலை உணர்ச்சிபூர்வமாக த்ரூபா படமாக்கியிருக்கிறார், அவசியம் பார்க்க வேண்டிய படமிது,

க்யூகோவின் பிள்ளைகள் மூவர் அற்ப ஆயுளில் உயிரிழந்தார்கள், குடும்பம் சிதைவுற்றது, க்யூகோ இறந்தபிறகு அவரது மொத்த சொத்திற்கு உரிமையாளராக அடேல் நியமிக்கபட்டார், மனநலமற்ற அவருக்கு வருடம் முப்பதாயிரம் பிராங்குகள் புத்தக ராயல்டி கிடைத்து வந்தது, ஆனால் அவளுக்கு தான் க்யூகோவின் மகள் என்பதே மறந்து போய்விட்டது, தன் வாழ்நாளின் கடைசிவரை அவள் பின்சென் என்ற ஒரெயொருவரை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாள், பின்சன் அவளது காதலை புரிந்து கொள்ளவுமில்லை, அவளை மனநலக்காப்பகத்தில் வந்து சந்திக்கவுமில்லை.

அடேல் காதலுக்காகத் தன்னை அழித்துக் கொண்டுவிட்டாள், காதலின் தீவிரம் ஒருவரை எந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பது ஒரு புதிர், காலம் காலமாகவே அது புரிந்து கொள்ளபடமுடியாமலேதானிருக்கிறது

•••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: