பிரெஞ்சு ஓவியரான ரோசா பான்ஹர் விலங்குகளை வரைவதில் தேர்ச்சிபெற்றவர். குறிப்பாகக் குதிரைகளையும் சிங்கங்களையும் ஆட்டு மந்தையினையும் மிக அழகான ஓவியங்களாக வரைந்திருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான பெண் ஓவியராகக் கொண்டாட்டப்பட்ட. இவரது இருநூறாவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நேற்று கூகிள் தனது முகப்பில் இவரது உருவத்தை வைத்திருந்தது. இவரது புகழ்பெற்ற குதிரை சந்தை என்ற ஓவியத்தை நான் நியூயார்க்கில் நேரில் பார்த்திருக்கிறேன். வியப்பூட்டும் ஒவியமது.
ரோசா பான்ஹரின் தந்தை ஒரு ஒவியர் என்பதால் சிறுவயதிலே ஓவியம் கற்றுக் கொள்ளத் துவங்கினார். கற்றல் குறைபாடு கொண்ட குழந்தையாக இருந்தவர் என்பதால் பேசக் கற்றுக்கொள்வதற்கு முன்பு பென்சில் மற்றும் பேப்பரைக் கொண்டு மணிக்கணக்கில் ஓவியம் வரைந்திருக்கிறார். பள்ளியில் சேர்த்து அவரைப் படிக்க வைப்பது சிரமமாக இருந்தது. ஆகவே வீட்டிலே பாடம் நடத்தியிருக்கிறார்கள்.
தனது தாய் அரிச்சுவடி கற்றுத்தரும் போது ஒவ்வொரு எழுத்திற்கும் அருகிலே ஒரு விலங்கின் உருவத்தை வரைவதற்குப் பயிற்சி கொடுத்தார். இதனால் எழுத்து மனதில் ஆழமாகப் பதிந்து போனதுடன் விலங்குகளின் உருவத்தினை வரைவதிலும் தனித்த ஈடுபாடு உருவாகியது என்கிறார் ரோசா.
தந்தையின் வழி காட்டுதலில் ஒவியம் பயின்ற ரோசா அவரது ஆலோசனைப் படி தினமும் லூவர் ம்யூசியத்திற்குச் சென்று ஓவியம் பயின்றிருக்கிறார். பின்பு தந்தை நடத்திய ஒவியப்பள்ளியில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
இருநூறு வருஷங்களுக்கு முன்பு ஓவிய உலகில் பெண்கள் தனித்துப் புகழ்பெறுவது பெரும் சவாலாக இருந்தது. அதை வெற்றிகரமாக முறியடித்தவர் ரோசா.
புகழ்பெற்ற ஒவியராக இருந்த போதும் சமகால ஒவியர்களுடன் இணைந்து அவர் செயல்படவில்லை. தனித்து வாழ்ந்த அவர் லெஸ்பியன் உறவில் வாழ்ந்திருக்கிறார். இது அந்த நாளில் சர்ச்சைக்குரியதாக விளங்கியது. தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை என்ற ரோசா தனது தோழி நதாலி மைக்காஸுடன் நாற்பது ஆண்டுகள் இணைந்து வாழ்ந்திருக்கிறார்
ரோசாவின் தந்தை ஆஸ்கார்-ரேமண்ட் இயற்கை மற்றும் உருவப்படம் வரைவதில் தேர்ந்தவர். ஆகவே மகளின் ஒவியத்திறமையை வளர்த்தெடுக்க விரும்பினார். எல்லா உயிர்களுக்கும் ஆன்மா இருக்கிறது. அவற்றை நாம் நேசிக்க வேண்டும் என்ற தந்தையின் அறிவுரையே தன்னை விலங்குகளை நேசிக்கவும் ஒவியம் வரையவும் செய்தது என்கிறார் ரோசா
சிற்பம் ஓவியம் மற்றும் பல்வேறு வகைக் கலைச்செயல்பாடுகளை ஆழ்ந்து கற்றுக் கொண்ட ரோசா குதிரைகள் செம்மறி ஆடுகள் முயல்களை ஆசையாக வரைந்திருக்கிறார்.
குதிரை சந்தையை நேரில் பார்வையிட வேண்டும் என்பதற்காக ஆணைப்போல உடை அணிந்து கொண்டு தலைமுடியை வெட்டிக் கொண்டு போலீஸ் அனுமதியோடு குதிரை சந்தையில் வலம் வந்திருக்கிறார். இது போலவே இறைச்சிக்கூடங்களைப் பார்வையிட்டு விலங்கின் கண்கள் மற்றும் அதன் உடலமைப்பு. ரோமங்கள். கால் குளம்புகளை அவதானித்ததாகவும் ரோசா கூறுகிறார்
பாரீஸில் நடைபெறும் குதிரை சந்தை மிகவும் புகழ்பெற்றது. அந்தச் சந்தையில் பல்வேறு ரகக் குதிரைகளை நேரில் கண்டறிந்து குறிப்புகளை உருவாக்கிக் கொண்டதுடன் குதிரை வியாபாரிகள். பிரபுக்கள். குதிரை வைத்தியர்கள், சந்தையிலுள்ள உணவகம். கூலியாட்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்களையும் அவர் அவதானித்து ஓவியம் வரைந்திருக்கிறார்
பொதுவெளியில் ஆண் உடையை அணிந்து நடமாடவே ரோசா விரும்பினார். அவரது ஒவியங்களைக் காணும் எவரும் அது ஒரு பெண்ணால் வரையப்பட்டது என நினைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என்கிறார்கள். ஆண்களுக்குக் கிடைக்கும் அதிகாரம் மற்றும் சுதந்திரத்துடன் தான் வாழ விரும்பியதாகவும் ரோசா கூறுகிறார்.
ஒரு பெண் இப்படி ஆண் உடைந்து அணிந்து நடமாடுவது அந்நாளில் குற்றமாகக் கருதப்பட்டது.ஆகவே அவர் காவல்துறையில் விண்ணப்பித்து இதற்காகச் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறார்
Ploughing in the Nivernais என்ற அவரது புகழ்பெற்ற ஓவியம் காளைகள் நிலத்தை உழுவதைச் சித்தரிக்கிறது. இலையுதிர் கால நிலத்தின் இயல்பும் காளைகளின் கடிமனான உழைப்பும் நிலப்பரப்பின் அழகினையும் ஓவியம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது. காளைகளின் வால்களைப் பாருங்கள்.சீரற்ற ரோமங்களுடன் அவை காற்றில் அசைந்தாடுகின்றன. மாட்டின் வாயிலிருந்து நீர் ஒழுகுகிறது. கால்களை மடக்கி முன்னேறும் அதன் விசையும் கண்களில் வெளிப்படும் பாவமும் மிக நேர்த்தியாக உள்ளன. நிலத்தினை உழுபவர் அணிந்துள்ள தொப்பி மற்றும் உடைகள் சூரிய ஒளியில் மாட்டின் நிழல் விழும் விதம் யாவும் மிக நுணுக்கமாக வரையப்பட்டுள்ளன.
ஓவியத்தில் மனிதர்களை விடவும் காளைகளே பிரதானமாக வரையப்பட்டுள்ளன. உழவு செய்யப்பட்ட நிலம் ஒரு குறியீடு போலவே தோற்றமளிக்கிறது. ஓவியத்தின் தெளிவும் வெளிச்சமும் டச்சு ஓவிய பாணியில் உருவானது போலிருக்கிறது.
The Horse Fair என்ற அவரது புகழ்பெற்ற ஓவியம் 1853 இல் முதன்முதலில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
8 அடி உயரமும் ஹ 16.5 அடி நீளமும், கொண்ட பிரம்மாண்டமான ஓவியம் குதிரை சந்தையில் வியாபாரிகள் குதிரைகளை விற்பனை செய்வதை ஓவியம் சித்தரிக்கிறது. சல்பெட்ரியரின் பிரபல மருத்துவமனையைப் பின்புலத்தில் காணமுடிகிறது..
1850 கோடையிலிருந்து 1851 இன் இறுதி வரை ஒன்றரை ஆண்டுகள் வாரம் இரண்டு முறை குதிரை சந்தையில் ரோசா கலந்து கொண்டார். அந்த அவதானிப்பு தான் இந்த ஓவியத்தை உயிருள்ளதாக மாற்றியிருக்கிறது.
கட்டுப்பாடில்லாத குதிரைகளின் இயக்கம் மற்றும் கம்பீரம், குதிரையோட்டிகளின் லாவகம். குதிரைகளைச் சுற்றியுள்ள ஒளியின் இயக்கம்.. குதிரைகளின் துள்ளல் அதன் கண்களில் வெளிப்படும் உணர்ச்சி, குதிரை ரகங்களின் தனித்துவம் என இந்த ஓவியத்தினை மிகவும் நுணுக்கமாக வரைந்திருக்கிறார்.
வெள்ளைக் குதிரையின் திமிறல் அதைப் பிடித்து அடக்குபவரின் திறன். கறுப்புக்குதிரையில் அமர்ந்துள்ள நபரின் வேகம். வால்கட்டப்பட்ட குதிரையின் புட்டத்தின் புள்ளிகள். குதிரைகளின் நிழல் விழும் அழகு. வேகமும் திமிறலும் உற்சாகமும் கொண்ட அந்தக் காட்சியினை ஆழ்ந்து காணக் காண நமக்கு அதன் ஓசைகள் கேட்கத் துவங்குகின்றன. குதிரைகளின் கனைப்பு ஒலியை நாம் கேட்க முடியும்.
1850 களில் ஆங்கிலம் மற்றும் ஸ்காட்டிஷ் கிராமப்புறங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பை பெற்ற ரோசா அங்கே தனது எதிர்கால ஓவியங்களுக்குத் தேவையான பாடங்களாகப் பிரிட்டிஷ் விலங்குகளின் பல்வேறு இனங்களைப் பற்றி ஆய்வு செய்தார். பைரனீஸ் பயணத்திலிருந்து திரும்பும் போது நீர் நாரையை அவர் கொண்டு வந்திருந்தார். தனக்காக அவர் உருவாக்கிக் கொண்ட கலைக்கூடம் இயற்கை காப்பகம் போலவே அமைந்திருந்தது
“Sheep by the Sea” என்ற ஓவியம் 1855 கோடையில் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ் வழியாக மேற்கொண்ட பயணத்தின் சாட்சியாக வரையப்பட்டிருக்கிறது. கடலின் நிறமும் ஆடுகளின் வண்ணமும் அபாரமாக வரையப்பட்டிருக்கின்றன. ஆட்டுக்குட்டியின் முகபாவம் எத்தனை மிருதுவாக, சாந்தமாக வரையப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். சீற்றமில்லாத கடலும் சாந்தமான ஆடுகளும் கனவுலகின் காட்சியினைப் போலவே தோன்றுகின்றன ரோசா பான்ஹரின் பாணி இயற்கை, கலை மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் கொண்டது. , நேர்த்தியான மென்மையுடன் வரையப்பட்ட அவரது ஓவியங்கள் விலங்குகளைப் பற்றிய ஓவிய வகைமையில் தனித்து அறியப்படுகின்றன.
1870களில் இருந்து, சிங்கங்களை ஆராயவும் அதன் இயக்கம் மற்றும் பண்புகளை அவதானிக்கவும் துவங்கிய ரோசா சிங்கங்களின் குடும்பத் தொகுப்புகளை வரைந்திருக்கிறார். தானே ஒரு பெண் சிங்கத்தை வளர்த்து வந்தார் ரோசா. பொதுவெளியில் சிங்கம் அதிகாரத்தின் அடையாளமாக முன்வைக்கப்படும் போது ரோசா அவற்றைத் தனித்துவமிக்கக் குடும்பத்தின் அடையாளமாக மாற்றிக் காட்டுகிறார். இதற்குச் சிறந்த உதாரணம் அவர் வரைந்த .The Lion at Home
தனது ஓவியங்களின் வழியாகக் கிடைத்த பெரும் செல்வத்தைக் கொண்டு வசதியான வாழ்க்கையை மேற்கொண்டார் ரோசா.
அவரது காலத்திலிருந்த மற்ற பெண் ஓவியர்களை விடவும் ஆழ்ந்த கலைத்திறனும் தனித்த பார்வையும் கொண்டிருந்த ரோசா விலங்குகளைத் துல்லியமாக உரிய உயரம் மற்றும் அளவுகளுடன் நேர்த்தியாக வரைந்திருக்கிறார்
Genius has no sex என்பதன் அடையாளமாக இன்று ரோசா பான்ஹர் உலகெங்கும் கொண்டாடப்படுகிறார்.