அலமாரியில் உறங்குகிறவன்.

போலந்து எழுத்தாளர் ஸ்லாவோமிர் மிரோசெக் (Slawomir Mrozek) கதை ஒன்றில் ஒருவன் தனது அறையில் உள்ள படுக்கை, பீரோ, மேஜை மூன்றும் நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருப்பதை நினைத்துச் சலிப்படைகிறான்.

அறையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பி அலமாரியை நகர்த்தி வேறு பக்கம் வைக்கிறான். படுக்கையை அந்தப் பக்கம் திருப்புகிறான். மேஜையை ஒரமாக நகர்த்திவிடுகிறான். இந்த மாற்றம் பிடித்திருக்கிறது. ஆனால் சில நாட்களில் மீண்டும் அறையின் தோற்றம் சலிப்பை உருவாக்குகிறது.

இந்த முறை அறையின் நடுவில் அலமாரியை வைத்துவிட்டுப் படுக்கை மற்றும் மேஜையை இடம் மாற்றுகிறான். இதனால் அறையில் நடப்பதற்குச் சிரமமாக உள்ளது. ஆனால் மாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்கிறான். இதுவும் சில நாட்களில் பழகிப்போகிறது.

இந்த முறை ஏதாவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்து படுக்கைக்குப் பதிலாக அலமாரியில் உறங்குவது என முடிவு செய்கிறான். அது சௌகரிய குறைவு. எந்த அலமாரியும் மனிதனை உறங்க விடாது. அதற்குள் கால்களை மடக்கி உறங்குவது சிரமம் எனப் பல்வேறு யோசனைகள் வந்தாலும் புதிய மாற்றத்தை அனுபவிக்க வேண்டும் என அவன் அலமாரியினுள் உறங்க ஆரம்பிக்கிறான்.

கால்களில் வீக்கம் மற்றும் முதுகுவலி உருவாகிறது. ஆனால் அதைத் தாங்கிக் கொண்டு குறிப்பிட்ட காலம் வரை அலமாரியினுள் உறங்குகிறான். ஆனால் அதுவும் சலித்துப் போகிறது.

பழையபடி அலமாரியை இடம் மாற்றுகிறான். படுக்கையைச் சுவரை ஒட்டி போடுகிறான். அருகில் மேஜையை வைக்கிறான். முன்பு இருந்த நிலைக்கு அறை திரும்பிவிடுகிறது. எப்போதாவது திரும்பச் சலிப்பு வரும் போது தான் அலமாரியின் உறங்கிய அந்தப் புதுமையை நினைத்துப் பார்த்து மகிழ்ந்து கொள்கிறான்.

இது மிரோஜெக்கின் கதையில் வரும் நிகழ்வு மட்டுமில்லை. நமது அறை அல்லது வீடு இதே சலிப்பை ஏற்படுத்துகிறது. நாமும் இப்படிப் பொருட்களை இடம் மாற்றி வைத்துக் கொண்டேயிருக்கிறோம். உண்மையில் மாற வேண்டியது பொருட்களில்லை. நாம் தான்.

நமது வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புதிய விஷயங்கள் எதுவுமில்லை. சிலந்தியைப் போல வாழப் பழகிவிட்டிருக்கிறோம். பொருட்களின் இடமும் இருப்பும் அதை நினைவுபடுத்துகின்றன. ஆணியில் தொங்கவிடப்பட்ட மஞ்சள் பையை போலாகிவிட்டிருக்கிறது நமது அன்றாட வாழ்க்கை. தேவையின் போது மஞ்சள் பை யார் கையிலாவது கொஞ்ச நேரம் இருக்கிறது. பயன்படுத்தப்படுகிறது பின்பு அதே ஆணி. அதே அசையாத இருப்பு.

பொருட்களை இடம் மாற்றியவுடன் வீட்டில் புதிய மாற்றம் வந்துவிட்டது போலத் தற்காலிக சந்தோஷம் கொள்கிறோம். உண்மையான மாற்றம் வருவதுமில்லை. அதை நோக்கி நாம் நகர்வதுமில்லை.

மிரோஜெக்கின் இக்கதை அரசியல் நையாண்டி கொண்டது. போலந்தில் நடந்த மாற்றங்கள் யாவும் அலமாரியில் உறங்கியவனின் கதை தான் என்கிறார். மிரோஜெக்கின் கதைகளில் வெளிப்படும் நகைச்சுவை அபாரமானது. இக்கதையில் வருபவனின் வயதோ, வேலையோ எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால் அவனது சலிப்பு உண்மையானது. அந்த மாற்றம் நாம் விரும்புவது.

How To Make Millions Before Grandma Dies என்ற தாய்லாந்து திரைப்படத்தில் பாட்டி வீட்டிற்கு வரும் பேரன் அறையைச் சுத்தம் செய்யும் போது சாமி படம் ஒன்றை சற்று நகர்த்தி வைத்துவிடுகிறான். இதற்கா பாட்டி கோவித்துக் கொள்கிறாள். சாமி எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒன்று தானே என்கிறான் பேரன். அப்படியில்லை. சாமியின் இடத்தை மாற்றக்கூடாது. அதனதன் இடம் என்பது ஒரு அடையாளம். உறுதிப்பாடு. சாமியும் இடம் மாறினால் கோவித்துக் கொள்ளும் என்கிறாள் பாட்டி..

பொருட்கள் இடம் மாறியவுடன் ஏற்படும் வெற்றிடம் நமக்கு எதையோ சொல்கிறது. வீட்டுச் சுவரில் மாட்டப்பட்ட எல்லாப் புகைப்படங்களையும் ஒவியங்களையும் அகற்றியபின்பு வெற்றுசுவராக மாறும் போது விசித்திரமான தோற்றம் உருவாகிறது. சுவர்களின் மௌனத்தை மறைப்பதற்குத் தான் இத்தனை புகைப்படங்களை, ஒவியங்களை மாற்றிவைத்திருக்கிறோமோ என்றும் தோன்றுகிறது

மிரோஜெக்கின் கதையைப் போலவே பீட்டர் பிக்ஃசெல் (Peter Bichsel) எழுதிய மேஜை என்றால் மேஜை  சிறுகதையில் தனது வீட்டிலுள்ள பொருட்களின் பெயர்களை மாற்றிவிடுகிறார் ஒரு கிழவர். அதே பொருள் வேறு பெயரில் அழைக்கபடும் போது புதியதாகிறது. அவர் தனக்கென ஒரு சொந்தமொழியை உருவாக்கிக் கொள்கிறார். அந்த மொழிக்குள்ளாக வாழ ஆரம்பிக்கிறார்.

உண்மையில் ஒவ்வொருவருக்கும் ஒருவகை சொந்த மௌனம் இருக்கிறது. எந்த இருவரின் மௌனமும் ஒன்று போலிருப்பதில்லை. அவரவர் மௌனத்திற்குள் ஆழ்ந்து போயிருக்கிறார்கள். நீருக்குள்ளிருந்த மீன் மேற்பரப்பிற்கு வருவது போல எப்போதாவது மொழியின் தளத்திற்கு வருகிறார்கள். உரையாடுகிறார்கள். ஆனால் மனதின் ஆழத்தில் உள்ள மௌனம் அப்படியே இருக்கிறது.

மிரோஜெக்கின் இன்னொரு கதையில் சிறுவர்கள் ஒன்று கூடி பனிமனிதனை செய்கிறார்கள். பனிமனிதனுக்கு மூக்கு செய்வதற்காகக் கேரட்டை வைத்துவிடுகிறார்கள். அன்றிரவு அந்தச் சிறுவர்களின் பெற்றோர்களைத் தேடிவரும் அதிகாரி அந்த மூக்குத் தன்னைக் குறிப்பதாகச் சொல்லி கோவித்துக் கொள்கிறார். அந்தப் பனிமனிதன் கூட்டுறவு சங்க முறைகேட்டினை அடையாளம் காட்டுவதாக இன்னொருவர் கோபம் கொள்கிறார். பனிமனிதன் சட்டையில் உள்ள பொத்தான்கள் உயரதிகாரியை குறிக்கிறது. ஆகவே உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் எனப் பெற்றோர்களை எச்சரிக்கை செய்கிறார்கள்.

சிறுவர்களோ தங்களுக்கு அப்படி எந்த எண்ணமும் கிடையாது என்று மறுக்கிறார்கள். அதிகாரத்தின் மிரட்டலுக்குப் பயந்து பெற்றோர்கள் சிறுவர்களை தண்டிக்கிறார்கள். மறுநாள் அது போலவே பனியில் விளையாடச் சிறுவர்கள் செல்கிறார்கள். இந்த முறை அவர்கள் தங்களை மிரட்டியவர்களின் உருவத்திலே பனிச்சிற்பம் செய்ய முடிவு செய்கிறார்கள். அது அவர்களுக்கு மிகுந்த வேடிக்கையான விஷயமாகிறது.

மிரோஜெக் ஒரு நாடகாசிரியர் என்பதால் அவரால் கதைக்குள்ளும் சிறிய நாடகத் தருணத்தை உருவாக்க முடிகிறது. அது இரண்டு கதைகளிலும் அழகாக வெளிப்படுகிறது. இந்தக் கதைகளை அப்படியே ஒருவரால் நாடகமாக்கிவிட முடியும் என்பதே இதன் சிறப்பு

0Shares
0