இன்மையின் உருவம்

Jean-Baptiste-Siméon Chardin. வரைந்த Soap Bubbles ஓவியத்தில் முதலில் நம்மைக் கவர்வது சோப்புக் குமிழே. மிக அழகாக அக் குமிழ் வரையப்பட்டிருக்கிறது. சோப்புக்குமிழின் வசீகரம் அது உருவாகும் நிறஜாலம். எடையற்றுப் பறக்கும் விதம். கண்ணாடி போன்ற மினுமினுப்பு.

Jean-Baptiste-Siméon Chardin

இந்த ஓவியத்தில் சோப்புக் குமிழை ஊதுகிறவன் பதின்வயது பையன். அவனருகே ஒரு கண்ணாடி டம்ளரில் சோப்புத் தண்ணீர் காணப்படுகிறது. அவன் சோப்புத்தண்ணீரை ஊதி ஒரு குமிழியை உருவாக்குகிறான், குமிழி இன்னும் தனித்துப் பறக்கவில்லை. அது ஊது குழலின் முனையில் கோளம் போல உருக்கொண்டிருக்கிறது.

அவன் பின்னாலிருந்து ஒரு சிறுவன் எக்கி நின்று பார்க்கிறான். அச்சிறுவனின் கண்களில் வெளிப்படும் ஆசை. அவனது தொப்பி மற்றும் சோப்பு நுரையை ஊதுகிறவனின் சிகை அலங்காரம். மற்றும் கிழிந்த உடை. படர்ந்திருக்கும் இலைகளின் அழகு. என அந்தக் காட்சி நம்மைப் பால்யத்தின் சறுக்கு பலகையில் சறுக்கிக் கொண்டு போகச் செய்கிறது . செவ்வக கற்சன்னலில் அந்தப் பையன் கையூன்றி நிற்கும்விதம் ஒரு முக்கோணம் போலக் காட்சியளிக்கிறது. இந்த ஓவியம் நிலையற்றவையின் அழகினைப் பேசுகிறது

பதினெட்டாம் நூற்றாண்டில் வரையப்பட்ட சார்டினின் இந்த ஓவியம் இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களால் கைப்பற்றப்பட்டது. உலகப்போரின் பின்பு இதனை மீட்டிருக்கிறார்கள்.

டச்சு ஓவியங்களில் சோப்புக்குமிழ் ஊதுவது முக்கியமான கருப்பொருளாக விளங்கியது. இந்தக் காட்சியை நிறைய டச்சு ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டு பார்வையாளர்களுக்கு, சோப்புக் குமிழ்கள் என்பது இன்பத்தின் நிலையற்ற தன்மையை அடையாளப்படுத்தியிருக்கிறது.

பதினேழாம் நூற்றாண்டின் டச்சுக் கலாச்சாரத்தில் சோப்பு நுரையை ஊதி விளையாடுவது, குழந்தைகளின் முக்கிய விளையாட்டாக இருந்தது

1574 ஆம் ஆண்டில், டச்சு ஓவியர் கார்னெலிஸ் கெட்டெல், ஒரு மேகமூட்டமான வானத்திற்கு எதிராகப் புல் படுக்கையில் படுத்தபடி ஒருவன் சோப்புக், குமிழிகளை ஊதுவதை வரைந்திருக்கிறார்.

கரேல் டுஜார்டின் 1663 ஆம் ஆண்டு வரைந்த ஓவியத்தில் ஒரு சிறுவன் தான் உருவாக்கிய குமிழிகளை மகிழ்ச்சியோடு ரசிக்கிறான்.

இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க எழுத்தாளர் சமோசாட்டாவின் லூசியன் பார்வையில் மனிதனே ஒரு குமிழி தான்.

மனித வாழ்வின் பலவீனம் மற்றும் நிலையற்ற தன்மையின் அடையாளமே சோப்புக்குமிழி. இந்தக் குமிழி உடனடியாக உடைந்து மறைந்துவிடும். மனிதனின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது என்கிறார் லூசியன்.

ஒரு சோப்புக் குமிழியை உருவாக்கி அதைக் ஆழ்ந்து கவனியுங்கள்; நீங்கள் ஒரு முழு வாழ்க்கையையும் அதற்காகவே செலவிடலாம், என்கிறார் கணிதவியலாளர் வில்லியம் தாம்சன்

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில், விஞ்ஞானிகள் சோப்புக் குமிழிகள் பற்றிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். அறிவியல்பூர்வமான விளக்கங்களை வெளியிட்டார்கள்.

ஒரு குமிழியை இரண்டாக வெட்டுவது, இரண்டு குமிழிகளை ஒன்றாக்குவது, புகை நிரம்பிய ஒரு குமிழியுடன் பறப்பது போன்ற வேடிக்கை நிகழ்ச்சிகள் ஐரோப்பாவின் பல நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன.

சார்டின் ஓவியத்தில் காணப்படும் பழுப்பு நிறம் மற்றும் பதின்வயது பையனின் முகத்தில் வெளிப்படும் தீவிரம். அவனை நம்பாமல் எக்கி நின்று பார்க்கும் சிறுவனின் ஏக்கம் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது,

குமிழியை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவன், குமிழியின் அளவே இருக்கிறான்

பால்யம் என்பதும் இது போன்ற சோப்புக்குமிழ்களின் உலகமே. அது தானே உருக்கொண்டு இலக்கின்றி மிதந்து, பின்பு உடைந்தும் போய்விடுகிறது.

ஓவியத்தில் குமிழியை ஊதுகிறவனின் சட்டையில் கிழிந்துள்ள பகுதி வழியாக உள்ளே அணிந்திருக்கும் வெண்ணிற ஆடை வெளிப்படுகிறது. அந்தப் பையன் தலையில் கருப்பு, ரிப்பன் கட்டியிருக்கிறான். அவனது நெற்றியில் மிகவும் அடர்த்தியாக வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. சோப்பு குமிழியின் மீது ஒளியின் நுட்பமான பிரதிபலிப்புகளைக் காணலாம்.

சார்டின் குழந்தைகள் விளையாடுவதை அதிகம் வரைந்திருக்கிறார். அந்த வரிசையில் தான் இதனையும் சேர்க்கிறார்கள்.

நாம் சோப்புக் குமிழியை ஊதாத போதும் அக்குமிழி நம்மை நோக்கிப் பறந்து வருவதையோ, கைகளில் படுவதையோ விரும்புகிறோம். நீர்க்குமிழி கையில் படும் போது விநோதமான தொடுதலை உணருகிறோம். எப்போதெல்லாம் குமிழியால் தொடப்படுகிறோமோ அப்போதெல்லாம் நாம் சிறுவனாகி விடுகிறோம். இன்மையின் உருவம் தான் குமிழியா.

நான், எனது என்பதும் இது போலக் குமிழி தானா. உண்மையில் நமது வாழ்க்கை எனும் குமிழியை நாம் உருவாக்குகிறோம். மிதக்கவிடுகிறோம்

குமிழி உடையும் போது சிறார்கள் வருந்துவதில்லை. அதுவும் விளையாட்டின் பகுதியே. ஆனால் பெரியவர்களாகிய நாம் அன்றாட வாழ்க்கையில் துன்பங்களின் குமிழியை உருவாக்குகிறோம். அது வெடிக்கும் போது வருந்துகிறோம்.

The earth hath bubbles as the water has என்று மெக்பெத் நாடகத்தில் மூன்று சூனியக்காரிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.

நீர் குமிழியைப் போலப் பூமியின் குமிழி என்பது எவ்வளவு அழகான கற்பனை.

சோப்புக் குமிழ்களை அப்பாவித்தனம், லேசான தன்மை மற்றும் சுதந்திரத்துடன் ஜென் தொடர்புபடுத்துகிறது. சார்டின் ஓவியத்தைக் காணும் போது நாமும் அதனையே உணருகிறோம்

••

0Shares
0