எழுத்தரின் சிற்பம்

பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் கி.மு. நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்த எழுத்தர் சிற்பம் ஒன்றுள்ளது. இது சுண்ணாம்புக்கல்லால் ஆனது.

எகிப்தில் உள்ள சக்காராவில் பிரெஞ்சு அகழ்வாய்வாளர் அகஸ்டே மரியட் டால் இந்தச் சிற்பம் கண்டறியப்பட்டது.

“சீட்டட் ஸ்க்ரைப்” என்று அழைக்கப்படும் இந்த எகிப்திய வண்ணச்சிற்பம் கல்வியறிவு மற்றும் எழுத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது

இந்த எழுத்தரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. இந்தச் சிலையை உருவாக்கிய கலைஞரின் பெயரும் தெரியவில்லை

பெரும்பாலான எகிப்திய சிற்பங்கள் நிற்கும் நிலையில் சித்தரிக்கபடுவதே வழக்கம். ஆனால் இந்த எழுத்தரின் சிலை அமர்ந்த நிலையில் காணப்படுகிறது.

எழுத்தர்கள் கோவில்கள் மற்றும் அரண்மனையில் பணிபுரிந்தனர். எகிப்தின் கதைகள் மற்றும் வாய்வழி மரபுகளைப் பாதுகாத்ததில் எழுத்தர்களுக்கு முக்கியப் பங்கிருக்கிறது.

எகிப்திய கலையின் தலைசிறந்த படைப்பாக இச்சிற்பத்தைக் கொண்டாடுகிறார்கள்.

அவரது தோற்றத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள், நேரில் நம் முன்னே ஒரு மனிதர் அமர்ந்திருப்பது போல உயிரோட்டத்துடன் காணப்படுகிறார். இரண்டாயிரம் வருஷங்களுக்கு முந்தைய மனிதர் என்று சொல்லவே முடியாது. இன்று நாம் காணும் முகம் போலவேயிருக்கிறது.

அவரது கைகள், விரல்கள் மற்றும் விரல் நகங்கள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. அவரது தாடையும் காதுகளும் அவ்வளவு அழகாக உருவாக்கபட்டிருக்கின்றன. அவர் ஏன் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறார். அது தான் எழுத்தர்களின் உடையோ என்னவோ.

அவரது கண்கள் நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கின்றன. அதில் ஒடும் நரம்புகள் கூடத் துல்லியமாகத் தெரிகின்றன. ஒட்டிய உதடுகள். எதையோ சொல்ல முற்படுவது போன்ற அவரது முகபாவனை. கால்களை மடித்து அமர்ந்துள்ள விதம். ஆடையின் நளினம் எனப் பேரழகுடன் சிற்பம் உருவாக்கபட்டிருக்கிறது. இந்தச் சிலையின் முதுகுப்பகுதியைப் பார்த்தால் அவர் நமது ஊரைச் சேர்ந்த மனிதரைப் போலத் தோன்றுகிறார்.

எகிப்தின் வரலாறு எழுத்தர்களால் எழுதப்பட்டது. அவர்கள் மன்னரின் விருப்பபடியே வரலாற்றை எழுதினார்கள். உண்மையைத் திரித்துக் கூறத் தயங்கியதில்லை. நாட்டில் விதிக்கபட்ட வரி மற்றும் தானியங்களின் விளைச்சல் கணக்குகள், பண்ணைகள் மற்றும் நிலங்களை நிர்வகித்தல் அரசனின் உத்தரவுகள். ஒப்பந்தங்கள் யாவும் இது போன்ற எழுத்தரால் தான் எழுதப்பட்டன.

எழுத்தர் தனது இடது கையில் பாப்பிரஸ் சுருளை வைத்திருக்கிறார். அவரது வலது கை எழுதுவதற்கான கோலைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அதைக் காணவில்லை. அவர் மன்னரின் கட்டளையின் படி எழுதுவதற்காகக் காத்திருக்கிறார்.

எகிப்தில் பெண் எழுத்தர்களும் இருந்தார்கள் என்கிறார்கள்.

பண்டைய கடவுள்கள் மற்றும் போர்வீர்ர்களின் சிற்பத்தை விடவும் எழுத்தரின் இந்தச் சிற்பம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு தேசத்தின் நிர்வாகம் மற்றும் பண்பாட்டினை எழுத்து தீர்மானிக்கிறது என்பதன் சாட்சியமிது.

0Shares
0