பிரெஞ்சு ஓவியர் ஹென்றி ஷெல்சிங்கரின் Girl with dead bird ஓவியத்தில் ஒரு இளம்பெண் தனது மடியில் இறந்து போன பறவை ஒன்றை வைத்திருக்கிறாள். சோகமான அவளது முகம். பிரார்த்தனை செய்வது போலக் கைவிரல்களைக் கோர்த்துள்ள விதம். உதிர்ந்த இலை ஒன்றைப் போல மடியில் கிடக்கும் பறவை. அதுவும் தலைகீழாக உள்ள அதன் தோற்றம். பெண்ணின் சாய்ந்த கழுத்து. பறவையை நோக்கும் கண்கள். சிறிய பறவைக்கூண்டு ஒன்றும் ஓவியத்தில் காணப்படுகிறது
இறந்த பறவை என்பது காதலின் பிரிவைத்தான் குறிக்கிறதா. இல்லை மரணத்தின் முன்பு செய்வதறியாத அவளது உணர்ச்சிகளை அடையாளப்படுத்துகிறதா
ஹென்றி-குயாம் ஷெல்சிங்கரை (Henry Guillaume Schlesinger) ஓவிய உலகின் கவிஞன் என்கிறார்கள். அது பொருத்தமான புகழுரை என்பது போல இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. கவிதையைப் போல இந்த ஓவியமும் ஒரு காட்சியை மட்டுமே முன்வைக்கிறது. உணர்ச்சிகளைத் துல்லியமாகச் சித்தரிக்கிறது. அந்த மௌனத்தை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
எளிய தினசரிக் காட்சி போலத் தோற்றம் தந்தாலும் இது அரியதொரு நிகழ்வின் அடையாளமே. இறந்த பறவை ஒன்றை மடியில் வைத்துக் கொண்டிருப்பது அவளது பரிவுணர்வின் வெளிப்பாடு தானா. வலி மிகவும் ஆழமானது என்பதைத் தான் இந்த ஓவியம் புரிய வைக்கிறதா.
சாலையில் இறந்துகிடக்கும் காகங்களைக் காணும் போது இந்தப் பெண்ணின் உணர்வை நானும் அடைந்திருக்கிறேன். சாலையில் கிடக்கும் போது இறந்த பறவையின் உடல் விநோதமான பொருளாக மாறிவிடுகிறது. இறந்த பறவை எப்போதும் எதையோ நினைவுபடுத்துகிறது. நிமிஷ நேரம் நம்மைக் குற்றவுணர்வு கொள்ளவும் வைக்கிறது.
பறவைகளைச் சுதந்திரத்தின், காதலின் அடையாளமாகக் கருதுவது மனிதர்கள் தான், பறவைகளின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை. பசியும் தீராத அலைதலும் கொண்டது. பறவையின் பாடலும் பறத்தலும் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியை, விடுதலை உணர்வை பறவைக்கும் அளிக்குமா என்று தெரியவில்லை.
இந்த ஓவியத்தைப் புரிந்து கொள்வதற்கு இன்னொரு ஓவியத்தின் துணை தேவைப்படுகிறது. அதுவும் ஹென்றி குயாம் ஷெல்சிங்கர் வரைந்ததே. அந்த ஓவியத்தில் ஒரு இளம் பெண். காதல்பறவைகளுடன் இருக்கிறாள்
அவளது விரலில் பறவை அமர்ந்துள்ள விதம். அதன் ஜோடியின் சிறகடிப்பு. விளையாட்டுக்காட்ட முனைவது போன்ற அவளது விரலசைவு. சாய்ந்த வசீகரமான கழுத்து. அழகான உடை. சிகை அலங்காரம். அவள் அமர்ந்துள்ள நாற்காலியின் அழகிய கைப்பிடி. காதல் தரும் மகிழ்ச்சியை இந்த ஓவியம் பிரதிபலிக்கிறது என்றால் காதலின் பிரிவு தரும் துயரை இறந்தபறவையை ஏந்திய பெண்ணின் ஓவியம் சித்தரிக்கிறது.
பிரஷியாவில் பிறந்த ஹென்றி குயாம் ஷெல்சிங்கர் வியன்னாவின் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியில் படித்தவர், பின்னர்ப் பாரிஸில் தனது கலைக் கல்வியைத் தொடர்ந்திருக்கிறார்.. 1870 இல் பிரெஞ்சு குடியுரிமையைப் பெற்று அங்கேயே தனது கலைப்பணியை ஆற்றியிருக்கிறார்.
சுல்தான் மஹ்மூத் II ஆட்சியின் போது இஸ்தான்புல்லிற்கு அழைக்கபட்ட ஹென்றி அஙகே சுல்தானின் குதிரையேற்ற ஓவியம் உட்படப் பல்வேறு சுய உருவப்படங்களை வரைந்து கொடுத்திருக்கிறார். அவை இன்று இஸ்தான்புல்லிலுள்ள டோப்காபி அரண்மனை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன
பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல், சுவைத்தல், உள்ளிட்ட ஐந்து உணர்புலன்களை ஐந்து ஓவியங்களாக வரைந்திருக்கிறார். “தி ஃபைவ் சென்ஸ்” என்ற அவரது ஓவியம் 1865 ஆம் ஆண்டுச் சலோனில் பேரரசி யூஜெனியால் வாங்கப்பட்டிருக்கிறது
இளம் பெண்களின் உணர்ச்சிகரமான சித்தரிப்புகளுக்காகக் கொண்டாடப்பட்டவர் ஹென்றி. ஆகவே இந்த வரிசையின் தொடர்ச்சி போலவே மகிழ்ச்சி. துயரம் எனப் பறவை ஒவியங்களை வரைந்திருக்கக் கூடுமோ என்று தோன்றுகிறது.
இதே கருப்பொருளை கொண்ட இன்னொரு ஓவியத்தைப் பார்த்திருக்கிறேன். அது 1766 ல் Jean-Baptiste Greuze வரைந்த Young Girl Crying Over Her Dead Bird என்ற ஓவியம். இறந்த பறவையை நினைத்து அழும் இளம்பெண் ஓவியம் , ஹென்றி ஷெல்சிங்கருக்கு உத்வேகம் அளித்திருக்ககூடும்.
இரண்டு ஓவியங்களிலும் பறவை தலைகீழாகவே உள்ளது. Jean-Baptiste Greuze வரைந்துள்ள பெண் ஒரு கையால் முகத்தை மூடி தனது சோகத்தையும் ஏக்கத்தையும் நேரடியாக வெளிப்படுத்துகிறாள். துயருற்ற நிலையிலும் அவள் பார்வையாளரைக் கவர்ந்திழுக்கின்றன. அந்த முகபாவனையின் பின்னணியில் உள்ள ரகசியத்தை நாம் அறிய விரும்புகிறோம்.
பெண்ணின் முகத்தைச் சுற்றியுள்ள ஒளி சோகத்துடன் வெளிப்படுகிறது பெண் வெள்ளை உடை அணிந்துள்ளார். நீலப் பூக்களால் சூழப்பட்டதாக இறந்த பறவை காணப்படுகிறது. இந்த ஓவியத்தினை இளம்பெண்ணின் கைவிடப்பட்ட, இழந்த நம்பிக்கைகளின் அடையாளமாகச் சொல்கிறார்கள்.
இந்தச் சோகத்தின் உண்மையான அர்த்தம் என்ன, அவள் ஒரு பறவையின் இறப்பிற்காகத் தான் வருந்துகிறாளா. அல்லது பறவை என்பது அவளது மகிழ்ச்சியான காதலின், கடந்த காலத்தின். அப்பாவித்தனத்தின் அடையாளமா,
அவள் நேரடியாக அழவில்லை, ஆனால் ஆழமாகக் காயமடைந்திருக்கிறாள்.
பறவையின் மரணம் அவளுக்குச் சில உண்மைகளைப் புரிய வைத்திருக்கிறது. நேசத்திற்குரியவற்றை நாம் இழக்கும் போது என்னவாகிறோம் என பார்வையாளனை யோசிக்க வைக்கிறது.
நம்மால் சரிசெய்ய முடியாத நிகழ்வுகளின் போது நாம் செயலற்றுவிடுகிறோம். மகிழ்ச்சியாகப் பறவையைக் கையில் ஏந்திய பெண்ணும் கைகளைப் பிணைத்துக் கொண்ட பெண்ணும் இருவேறு உணர்ச்சிநிலைகளின் அடையாளங்கள் தான். தோற்றம் வேறாக இருந்தாலும் அவர்கள் காதலின் இருநிலைகளைத் தான் வெளிப்படுத்துகிறார்கள்
உயிருள்ள பறவை மட்டுமே பாடுகிறது என மக்கள் பொதுவாக நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இறந்த பறவையும் பாடுகிறது. அந்தப் பாடலைக் கவிஞர்கள் மட்டுமே கேட்கிறார்கள் என்றொரு கவிதையை அஞ்சன்தேவ் ராய் எழுதியிருக்கிறார். அவர் சொல்வது உண்மையே
நாம் இந்த ஓவியத்தில் இறந்த பறவையின் பாடலையே கேட்கிறோம். ஹென்றி ஷெல்சிங்கர் அதையே வரைந்திருக்கிறார்.
••