புதிய குறுங்கதை.
இரண்டு கிழவர்களும் தினமும் பூங்காவில் சந்தித்துக் கொள்வார்கள். ஒருவர் கையில் சிவப்பு பிடி கொண்ட குடை வைத்திருப்பார். மற்றவர் பச்சை நிற கைப்பிடி கொண்ட குடை. ஒருவர் அடர்ந்து நரைத்த தாடியுடன் இருப்பார். மற்றவர் தினசரி முகச்சவரம் செய்து மீசையில்லாமல் இருப்பார். இருவரும் சரியாக மாலை நான்கு முப்பதுக்குப் பூங்காவிற்குள் நுழைவார்கள். அவர்களுக்கான அதே சிமெண்ட் இருக்கையில் அமர்வார்கள்

மீசையில்லாதவர் கொண்டு வந்த பிளாஸ்கில் இருந்து காபி ஊற்றி இருவரும் குடிப்பார்கள். பின்பு ஆளுக்கு ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டு படிப்பார்கள். பகல் வெளிச்சம் குறைந்து மின்விளக்குகள் எரிய ஆரம்பிக்கும் வரை படிப்பார்கள். பின்பு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொள்வார்கள். குடும்ப விவகாரங்களைப் பற்றி மெல்லிய குரலில் பேசிக் கொள்வார்கள். செல்போன் பேசியபடியே நடைப்பயிற்சி செய்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். பின்பு மரம் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஒருவரையொருவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
வீடு திரும்பப் புறப்படும் போது சிறிய விளையாட்டினை மேற்கொள்வார்கள். அதாவது மீசையில்லாத தாத்தா தான் வைத்திருந்த பச்சை குடையினைத் தாடி வைத்த தாத்தாவிடம் கொடுத்து அவரது குடையை வாங்கிக் கொள்வார். தாத்தாக்களின் குடை என்பது வெறும் பொருளில்லை. அது ஒரு ஆறுதல். உலகம் தராத பாதுகாப்பைக் குடை தந்துவிடும் என்ற நம்பிக்கை. நண்பனின் குடையோடு நடக்கத் துவங்கும் போது இரண்டு தாத்தாக்களும் சிறுவர்களாகி விடுவார்கள். நண்பனின் குடையை வீட்டிற்குக் கொண்டு செல்வது என்பது நண்பனை வீட்டிற்கு அழைத்துச் செல்வது போன்றது தானே.
மறுநாள் அவர்கள் அதே பூங்காவில் சந்தித்து அவரவர் குடையைப் பெற்றுக் கொள்வார்கள். அன்று பூங்காவிலிருந்து கிளம்பும் போது தாடி வைத்த தாத்தா தனது பர்ஸிலிருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை மீசையில்லாத தாத்தாவிடம் கொடுத்து அவரிடமிருந்த ஐந்து ரூபாய் நாண‘யத்தை வாங்கிக் கொள்வார். இதுவும் ஒரு விளையாட்டே.
இப்படியாக அவர்கள் ஒவ்வொரு நாளும் சின்னஞ்சிறியதாகத் தங்களுக்கான விளையாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். அதில் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
திருப்பித் தருவதற்கு ஏதாவது ஒன்றிருக்கும் வரை தான் வாழ்க்கையின் மீது விருப்பம் இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
பெரிய உலகில் இது போன்ற சிறிய நிகழ்வுகள் தன் போக்கில் ஆனந்தமாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
••