குற்றமுகங்கள் 16 மண்டே ராணி

மண்டே ராணியை உங்களுக்குத் தெரிந்திருக்காது. அவள் பந்தயக்குதிரை ஒட்டியள். . அவளது குதிரையின் பெயர் மண்டே. ஆண்கள் மட்டுமே குதிரைப்பந்தய ஜாக்கியாக இருந்த காலத்தில் இங்கிலாந்தின் முதல் பெண் ஜாக்கியாக அறியப்பட்டடாள்.

பிரிட்டனின் குதிரைப்பந்தய விதிகளின் படி பெண்கள் ஜாக்கியாகப் பணியாற்ற இயலாது, இருப்பினும் 1804 ஆம் ஆண்டிலேயே பெண்கள் ஆண்களைப் போல மாறுவேடமிட்டு சவாரி செய்ததாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. ஜான் போவெல் என்ற ஆண் அடையாளத்துடன் ஒரு பெண் ஜாக்கியாகப் பணியாற்றினாள் என்கிறார்கள். ஆனால் அந்த உண்மை நிரூபிக்கபடவில்லை.

மண்டே ராணி மதராஸில் தான் பிறந்தாள். அவளது அம்மா ருக்மணி மேஜர் வைட்டின் வீட்டில் ஆயாவாக வேலை செய்தாள். அந்தக் குடும்பம் இங்கிலாந்து புறப்பட்ட போது ருக்மணி தனது மகளுடன் இங்கிலாந்து சென்றாள். மேஜர் வைட்டின் மனைவி கிளாராவிற்குப் பணிவிடைகள் செய்ததோடு அவளின் ஆறு குழந்தைகளுக்கும் தாதியாக இருந்திருக்கிறாள்.

ஜாக்கிகளுக்கு உயர வரம்பு இல்லை என்றாலும், எடை வரம்புகள் காரணமாக அவர்கள் குள்ளமான தோற்றத்திலே இருந்தார்கள். மண்டே ராணி ஐந்தடி உயரம் கொண்டிருந்தாள். ஒடுங்கிய முகம். சற்றே பெரிய காதுகள். மூன்று முறை குதிரைப்பந்தயத்தில் கிழே விழுந்து காலையும் இடுப்பையும் உடைத்துக் கொண்டாள் என்றாலும் அவளது நடை வேகமாகவே இருந்தது. ஆண்களைப் போன்ற உடை. ஆண்கள் அணிவது போன்ற தொப்பி. ஆண்களைப் போலவே குடி, மற்றும் மடக்கு கத்தி வைத்திருந்தாள்.

1859ம் ஆண்டு எப்சம் டெர்பி போட்டி மைதானத்தில் இளவரசருக்குச் சொந்தமான மிடில்டன் குதிரையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாள் என்பதற்காகவும், போட்டியைக் காண வந்திருந்த மேஜர் வைட் மற்றும் அவரது மனைவி கிளாராவைக் கொன்றாள் என்பதற்காகவும் மண்டே ராணி கைது செய்யப்பட்டாள்.

அவளைத் தூக்கிலிடுவதற்காக அழைத்து வரப்பட்ட போது ஜாக்கிகள் அணியும் உடையை அணிந்திருந்தாள் என்றார்கள்.

1851 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி இங்கிலாந்தின் லிவர்பூலுக்கு அருகிலுள்ள நடைபெற்ற கிராண்ட் நேஷனல் குதிரைப் பந்தயத்தில் மண்டே ராணியின் குதிரை வெற்றிபெற்றது. அதனைப் பாராட்டும் விதமாகக் குதிரையின் உரிமையாளரான ஹாமில்டன் மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்ததோடு குதிரையோடு அவள் நிற்கும் சிலை ஒன்றையும் செய்து வைக்கும்படி உத்தரவிட்டார். இங்கிலாந்தின் எந்த ஜாக்கிக்கும் கிடைக்காத பெருமையது.

மண்டே ராணியின் உண்மையான பெயர் பவானி. மண்டே ராணியின் அம்மா திடீரென ஒரு நாள் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு ஹைகேட் சிறையில் அடைக்கப்பட்டாள். இந்த நிகழ்வின் காரணமாகப் பத்து வயதான பவானி மேஜர் வைட் வீட்டிலிருந்து துரத்தப்பட்டாள்

அதன் பிந்திய நாட்களில் வீதி தான் அவளை வளர்ந்தது. அவள் பசிக்காகத் திருடினாள். சாரட் வண்டி ஒட்டுகிறவர்களுக்கு உதவி செய்தாள். தேவாலயத்தின் வெளியே பிச்சை எடுத்தாள். ஒரு கால் உடைந்தவனும் குடிகாரனும் குதிரைப்பந்தய வீரனுமான கிறிஸ் கிரீன் அவளைத் தன்னோடு வசிக்க அழைத்துச் சென்றான்

பந்தயக்குதிரைகளைச் செலுத்துவதற்கு அவனே பயிற்சி கொடுத்தான். மிக மோசமான வசைகளும் பிரம்பு அடியுமாக அந்தப் பயிற்சியை அளித்தான். குதிரையின் மீது ஒரு ஈ அமர்ந்து கொள்வது போலத் தான் நீ அமர்ந்திருக்க வேண்டும் என்று எப்போதும் சப்தமிட்டான்.

குதிரைப்பந்தயம் என்பது வெறும் விளையாட்டில்லை. அது ஒரு அதிகாரப் போட்டி. அதற்குள் அரசியல் இருக்கிறது. பந்தயத்தில் மோசடிகள், குற்றங்கள் மறைந்திருக்கின்றன என்பதைப் பவானி அறிந்து கொண்டாள்.

அந்த நாட்களில் எப்சம் டெர்பி மிகப்பெரிய குதிரைப்பந்தயமாகக் கருதப்பட்டது. இதில் அரச குடும்பத்தின் குதிரைகளும் பங்கேற்றன. அந்தப் போட்டியில் டார்லி என்ற அரச குடும்பத்தைச் சார்ந்த குதிரை தொடர்வெற்றியை பெற்றது. அந்தக் குதிரையை ஒட்டியவர் வில்லியம் எட்வால்.

குதிரைப்பந்தய உலகில் மனிதர்களை விடவும் குதிரைகள் விசித்திரமான கதைகள் கொண்டிருந்தன. அதன் இனத்தூய்மை முதன்மையாகக் கருதப்பட்டது. குதிரையின் வெற்றி அதன் உரிமையாளருக்கு மிகப்பெரிய கௌரவத்தையும் பெருமையினையும் உருவாக்கியது. ஆனால் குதிரையோட்டிகள் அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டார்கள். பந்தய மைதானத்திலே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

பவானிக்குக் குதிரைபந்தயம் தனது இருப்பையும் அடையாளத்தையும் காட்டிக் கொள்வதற்கான சவாலாக இருந்தது. ஆறு முறை அவள் பெண் என்பதற்காகப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கபட்டாள். ஹாமில்டன் பிரபு அவளைத் தனது குதிரையின் ஜாக்கியாக நியமித்த பிறகே பந்தயத்தில் கலந்து கொண்டாள். மண்டே என்ற அவளது குதிரை 52 தொடர்வெற்றிகளைப் பெற்றது. எந்த வெற்றியிலும் அவள் சிரிக்கவில்லை. மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. பகிர்ந்து கொள்ள முடியாத வேதனை அவளது கண்களில் படர்ந்திருந்தது.

மண்டே ராணி. இளவரசரின் குதிரையை ஐந்து முறை தொடர்ந்து தோற்கடித்தாள். அந்த ஆத்திரம் காரணமாக அவளது குதிரையை அடையாளம் தெரியாத நபர் பந்தய மைதானத்தில் வைத்து நெற்றியில் சுட்டார். மண்டே சுடப்பட்டதை ராணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மைதானத்திலே இறந்துவிடும் என அனைவரும் கருதிய குதிரை பிழைத்துக் கொண்டது. ஆனால் அதன் இடது கண் பார்வை பறிபோனது. அந்தக் குதிரை இனி பந்தயத்தில் ஜெயிக்காது என ஹாமில்டனும் நினைத்தார். ஆனால் அதே டெர்பியில் மண்டே மீண்டும் வெற்றிப் பெற்றது.

அந்த வெற்றி செல்லாது என அறிவித்ததோடு குதிரைக்குப் பாம்பின் நஞ்சை புகட்டி பந்தயத்தில் கலந்து கொள்ளச் செய்தாள் என மண்டே ராணி கைது செய்யப்பட்டாள். விசாரணையின் முடிவில் அவள் ஜாக்கியாகச் செயல்பட முடியாத தடை உருவானது.

மண்டே ராணியின் சிலையை ஹாமில்டன் பிரபு அகற்றியதோடு அதை உடைத்துப் போடவும் உத்தரவிட்டார். மண்டே ராணியின் தலையை மட்டும் உடைத்துவிட்டார்கள். மண்ணில் விழுந்து கிடந்த அந்தக் குதிரைச்சிலையின் மீது பெய்யும் மழை உலகம் மறந்துவிட்ட மண்டே ராணியை நினைவுபடுத்துவது போலிருந்தது.

••

0Shares
0