குற்றமுகங்கள்- 2 தங்கப்பல் மோனி

தங்கப்பல் மோனியின் பூர்வீகம் எதுவெனத் தெரியவில்லை. ஆனால் அவன் சீனத்தகப்பனுக்கும் தெலுங்குப் பெண்ணிற்கும் பிறந்தவன் என்றார்கள். சப்பை மூக்கும் சீனப் புருவமும் கொண்டிருந்தான். தொங்கு மீசை வைத்துவிட்டால் சீனனே தான். மசூலிப்பட்டினத்தின் துறைமுகத்தில் மோனி வளர்ந்தான். அந்த நாட்களில் சுவரின் வெடிப்பில் வளரும் செடியைப் போலிருந்தான்.

யார் யாரோ வீசி எறிந்த எச்சில் உணவுகளைச் சாப்பிட்டான். ஒரு கப்பலை விழுங்கி விடுமளவிற்கு அவனுக்குப் பசியிருந்தது. உணவு கிடைக்காத இரவுகளில் நட்சத்திரங்களைப் பறித்து உண்ண முயற்சித்தான். கோபம் தான் அவனை வளர்ந்தது. மௌனத்தைச் சிறிய கத்தியைப் போல மாற்றி வைத்துக் கொண்டான். அலட்சியத்தைத் தொப்பியாக அணிந்து கொண்டான்.

தனது பதினாறாவது வயதில் கப்பல் மாலுமியான சார்லஸ் ஃப்ரையட் என்பவனோடு மோனி சண்டையிட்டு ஒரு விரலை இழந்துவிட்டான். அதுவும் மோதிர விரல். ஆகவே மோனியின் வலது கையில் நான்கு விரல்களே இருந்தன. அது தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது என்று மோனி நம்பினான்.

அவனைக் கப்பல் எலி என்று அழைத்தார்கள். திருடுவதில் உள்ள சாமர்த்தியம் தான் காரணம். துறைமுகத்திற்கு எந்தக் கப்பல் வந்து நின்றாலும் அதிலிருந்த பொருட்களில் ஒருபகுதி காணாமல் போய்விடும். யார் திருடுகிறார்கள். எப்படித் திருடுகிறார்கள். கடலில் அதை எப்படிக் கொண்டு போகிறார்கள் என்று கண்டறிய முடியாது. ஆனால் அதை மோனி செய்திருப்பான். கடலைக் கூட்டாளியாகக் கொள்ளாமல் திருட முடியாது என்பது அவனது நம்பிக்கை.

இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவிய காலத்தில் புறப்பட்ட இம்பீரியல் என்ற கப்பல் மசூலிப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்திருந்தது. அந்தக் கப்பலில் வந்த அனைவரும் இறந்துவிட்டார்கள் என்றும் அதில் ஏற்றப்பட்டிருந்த பொருட்களைத் துறைமுகத்தில் இறக்கி வைத்தால் அங்கும் பிளேக் வந்துவிடும் என்று வெள்ளைக்காரர்கள் பயந்தார்கள்.

துர்நாற்றம் வீசிய அந்தக் கப்பலை ஏறிட்டுப் பார்த்தால் கூடக் கொள்ளைநோய் வந்துவிடும் என நம்பினார்கள்.

கைவிடப்பட்ட அந்தக் கப்பலில் இருந்த சரக்குகளை மோனி தனது ஆட்களோடு திருடுவதற்காகச் சென்றான். இறந்த உடல்களின் விரல்களைக் கருமித் தின்னும் எலிகள் அவர்களின் காலடியோசை கேட்டு ஒடின. கப்பலில் இருந்த பொருட்களைத் தனதாக்கிக் கொண்டு இறந்த உடல்களுடன் கப்பலை தீவைத்து எரித்தான். அன்றிரவு முழுவதும் மோனி உற்சாகமாக நடனமாடினான்.

பிளேக் கப்பலில் கிடைத்த பொருட்களை விற்ற பணம் தான் மோனியை பணக்காரனாக்கியது. அதன்பின்பு மோனி எப்போதும் பட்டு அங்கி அணியத் துவங்கினான். வெள்ளியில் செய்த பல்குச்சியை வைத்துக் கொண்டான். பாரசீக மதுவை அருந்தினான். முயல்கறியை விரும்பி சாப்பிட்டான்.

தன்னைக் கௌரவமான ஆளாகக் காட்டிக் கொள்ளத் தனது முன்பற்களில் இரண்டை அவனே உடைத்துக் கொண்டு தங்கப்பல் கட்டிக் கொண்டான். அதன்பிறகே அவனைத் தங்கப்பல் மோனி என்று அழைக்கத் துவங்கினார்கள்.

மோனிக்கு மூன்று காதலிகள் இருந்தார்கள். ஆனால் அவர்களில் எவரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருடனாக இருந்தாலும் அவன் இரவில் தனியே செல்ல பயப்பட்டான். அவனுடன் எப்போதும் ஏழெட்டு பேர் உடனிருந்தார்கள். அவன் காதலியை அணைத்தபடி உறங்கும் போது கூடக் கட்டிலை ஒட்டி இரண்டு அடியாட்கள் தரையில் உறங்குவார்கள்.

கிணற்றடியில் குளிக்கும் போது கூடத் துண்டை வைத்துக் கொண்டு ஒருவன் திரும்பி நின்றபடி இருக்க வேண்டும்.

மோனியிடம் திருடுவதில் கைதேர்ந்த முப்பது பேருக்கும் மேலாக இருந்தார்கள். அவர்கள் வெட்டுக்கிளிகள் போல ஒன்றாகச் செல்வார்கள். திருடுவார்கள். மோனி கொடுப்பதைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள். திருடச் செல்லும் போது எல்லோரும் ஊமையாகிவிட வேண்டும். ஒரு வார்த்தை கூட உதட்டிலிருந்து வெளிப்பட்டுவிடக்கூடாது என்பது அவனது நம்பிக்கை.

மசூலிப்பட்டினத்திலிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளால் அவனை ஒடுக்க முடியவில்லை.

இந்நிலையில் மசூலிப்பட்டினத்தில் ஒரு செய்தி வேகமாகப் பரவியது. அதாவது தங்கப்பல் மோனி திருடனில்லை. அவன் முந்திய பிறவியில் பெரிய மகான். ஞானி. அவன் வணிகர்களிடமிருந்து எதைத் திருடிச் சென்றாலும் திருட்டுக் கொடுத்தவருக்கு அதிர்ஷ்டம் வந்துவிட்டதாக அர்த்தம். ஆகவே மோனி திருடியதற்காக எவரும் வருத்தமடைய வேண்டாம். அவன் திருடுவதற்கு அனுமதியுங்கள்.

யார் இதை உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் வணிகர்கள் இதை நம்பத் துவங்கினார்கள். கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் இதைக் கேட்டு கேலி செய்தார்கள்.

அதன்பிறகு மோனி கப்பலிலோ, துறைமுகத்திலோ எதைத் திருடிச் சென்றாலும் வணிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். அதிர்ஷ்டத்தின் கை தங்களைத் தொடுவதாக உணர்ந்தார்கள். இதனால் மோனிக்குத் திருடுவதில் ஒரு தடையும் ஏற்படவில்லை.

சில நேரம் வணிகர்கள் தங்கள் இடத்திற்கு வந்து திருடும்படியாக மோனிக்கு அழைப்பு விடுத்தார்கள். துறைமுகம் வந்து சேரும் சரக்குக் கப்பலில் ஒரு பங்கு மோனிக்கு எனத் தனியே பிரித்து அளிக்கபட்டது.

திருடுவதில் தடைகள் இல்லாத போது திருடன் நனைந்த பஞ்சைப் போலாகி விடுகிறான். தன்னால் எந்த அதிர்ஷ்டமும் கிடைக்காது என்று தங்கப்பல் மோனி கூச்சலிட்ட போதும் எவரும் அதை ஏற்கவில்லை.

ஒரு நாள் தங்கப்பல் மோனிக்கு ஒரு விசித்திர கனவு வந்தது. அதில் அவன் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மாட்டு வண்டியில் கொண்டு வரப்படுகிறான். சாலையில் வேடிக்கை பார்க்கும் ஆட்கள் அவனைக் கல்லால் எறிகிறார்கள். மோனியை தூக்கு மேடைக்கு அழைத்துப் போகிறார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு சிறுவன் தனக்கு மோனியின் தங்கப்பல் வேண்டும் என்று கேட்கிறான். தட்டி எடுத்துக் கொள் என ஒரு கல்லை கொடுத்து அனுப்புகிறார்கள். கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ள மோனியின் தலையைப் பிடித்துக் கொண்டு அந்தச் சிறுவன் ரத்தம் சொட்ட சொட்ட இரண்டு பற்களையும் தட்டி எடுக்கிறான். வலி தாங்க முடியாமல் மோனி அலறுகிறான். அந்தப் பையன் மகிழ்ச்சியோடு கைகளை உயர்த்திக் காட்டுகிறான். அதில் இரண்டு தங்கப் பற்கள். கூட்டம் ஆரவாரம் செய்கிறது.

என்ன கனவு இது. இப்படி நடக்கக் கூடுமா. மோனி குழம்பிப் போனான். மசூலிபட்டனத்திலிருந்து உடனே வெளியேறி போய்விட வேண்டும் என்று முடிவு செய்தான். அதை யாரிடமும் அறிவிக்காமல் நள்ளிரவில் சிறிய படகில் புறப்பட்டுச் சென்றான்.

அந்த இரவில் கடலில் வைத்து மோனி கொல்லப்பட்டான். யார் அவனைக் கொன்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கொன்றவன் மோனியின் இரண்டு தங்கப்பற்களைப் பிடுங்கிச் சென்றிருந்தான்.

0Shares
0