கொரோனா காலத்தில் உலகெங்கும் மூன்று புத்தகங்கள் விரும்பி வாசிக்கப்பட்டன. ஒன்று Albert Camus எழுதிய The Plague நாவல் மற்றொன்று Daniel Defoe எழுதிய A Journal of the Plague Year மூன்றாவது jose saramago எழுதிய blindness நாவல்.



பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் ஏன் இதை வாசிக்க விரும்பினார்கள் என்பது குறித்து இப்போது நிறையக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளியாகி வருகின்றன.
நெருக்கடியான காலத்தில் மக்கள் என்ன புத்தகத்தை வாசிக்கத் தேர்வு செய்கிறார்கள் என்பது முக்கியமானது.
கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த பலரும் சினிமா, பாடல் என்று கேளிக்கையிலே நேரத்தைக் கழித்தனர். ஆனால் அது ஒரு புள்ளியில் சலிப்பை உருவாக்கியது. மனதின் அடியாழத்தில் தோன்றும் அச்சத்தை அது போக்கவில்லை. ஆகவே அவசரமாகப் புத்தகங்களை நோக்கி நகர்ந்தார்கள். வீட்டில் வைத்திருந்த புத்தகங்களை மறுவாசிப்புச் செய்தார்கள். இணையத்தில் தேடி தரவிறக்கம் செய்தார்கள்.
சிலரால் ஒரு பக்கம் கூடப் படிக்க முடியவில்லை. சிலர் ஆசையாக விரும்பிய புத்தகங்களை வாசித்தார்கள். அப்படி வாசித்தவர்களில் பெரும்பான்மையினர் இயல்பு வாழ்க்கை திரும்பியதும் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டார்கள்.
கொரோனா காலத்தில் தமிழில் எந்தப் புத்தகம் அதிகம் வாசிக்கப்பட்டது என்ற புள்ளிவிபரம் நமக்குக் தெரியவில்லை.
நான் அதிகமும் கவிதையும் சரித்திர நூல்களையும் கிரேக்க நாடகங்களையும் வாசித்தேன். செவ்வியல் நாவல்களை மறுவாசிப்புச் செய்தேன். கிரேக்க நாடகங்கள் எழுப்பிய கேள்விகளும் அது கவனப்படுத்திய விஷயங்களும் மனதை உற்சாகம் கொள்ள வைத்தன.
தொலைக்காட்சியும் சமூக ஊடகங்களும் கவனப்படுத்திய இந்த மூன்று நாவல்களை மறுவாசிப்பு செய்யலாம் என்ற விருப்பம் உருவாகவேயில்லை.
உண்மையில் அந்த மூன்று நாவல்களும் சராசரி வாசகருக்கு ஏமாற்றமே அளித்திருக்க கூடும். காரணம் அவை குறியீட்டுத் தன்மை கொண்டவை. நோயை பற்றி பேசுவதன் வழியே சமூகத்தை ஆராய்கின்றன.
கொரோனாவிற்கு முன்பு வரை இந்த நாவல்கள் இலக்கிய வாசகரால் மட்டுமே வாசிக்கப்பட்டன. இவ்வளவு பெரிய கவனத்தைப் பெறவில்லை. ஆனால் திடீரென இந்த நாவல்கள் பரபரப்பான விற்பனை பொருளாகின.
மூன்று நாவல்களும் வேறுவேறு காலங்களில் வெளியானவை. வேறு பண்பாட்டுத் தளங்களைக் கொண்டவை. டேனியல் டீபோவின் நாவல் மார்ச் 1722 இல் வெளியானது
இந்த நாவல் 1665 ஆம் ஆண்டில் லண்டனில் ஏற்பட்ட பிளேக் பாதிப்பு பற்றியது.

லண்டனை பிளேக் தாக்கிய போது டீபோவிற்கு ஐந்து வயது மட்டுமே. அவர் பின்னாளில் பிளேக் பற்றிய செய்திகளைச் சேகரித்துத் துல்லியமாக நாவலில் எழுதியிருக்கிறார். வரலாற்று உண்மைகளைப் புனைவாக மாற்றுவதில் முன்னோடி நாவலது.

1665 மற்றும் 1666 ஆம் ஆண்டுகளில் லண்டன் பிளேக் பாதிப்பிற்கு உள்ளானது. 18 மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் பாதிப்பில் ஒரு லட்சம் பேர் இறந்து போனார்கள். அன்றைய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியது
லண்டனின் சுற்றுப்புறங்களில் பிளேக் பரவிய விதம், அதை எதிர்த்துப் போராட எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இறந்த உடல்களை அப்புறப்படுத்த ஆள் இல்லாமல் கிடந்த சூழல். சடலங்கள் ஏற்றப்பட்ட வண்டிகளின் பயணம் போன்றவற்றை நாவல் துல்லியமாக விவரிக்கிறது. பத்திரிக்கை செய்திகள் மற்றும் நேரடி அனுபவ பகிர்வுகளை ஒன்றிணைத்து டீபோ இதனை எழுதியிருக்கிறார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மருத்துவம் மற்றும் அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும் நாவல் கவனப்படுத்துகிறது. குறிப்பாக தடுப்பூசியின் அறிமுகம் மற்றும் அதன் நம்பகத்தன்மை உழைக்கும் மக்களுக்கான மருத்துவம். நோய்த்தொற்றைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் போன்றவற்றை பேசுகிறது
அது போலவே ஆல்பெர் காம்யூவின் பிளேக் நாவல் 1849 ஆம் ஆண்டில் ஓரானின் மக்கள்தொகையில் பெரும் பகுதியைக் கொன்ற பிளேக் பற்றியது. நெருக்கடியான சூழ்நிலையில் மனிதன் எவ்வாறு நடந்துகொள்வான் என்பதையே காம்யூ பேசுகிறார். நோய் நம்மை நிகழ்காலத்தில் மட்டுமே வாழச்செய்கிறது. கடந்தகால நினைவுகளை மருந்து போலாக்கிவிடுகிறது. எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையை உருவாக்குகிறது. இருத்தலின் தீவிரத்தையே நாவல் கவனப்படுத்துகிறது.
உலக அளவில் பிளேக் நோயின் பாதிப்பு குறித்து நிறைய எழுதியிருக்கிறார்கள். இந்தியாவிலும் பிளேக் பாதிப்பு குறித்த இலக்கியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் பெரும்பான்மை அனுபவப் பதிவுகளாக மட்டுமே உள்ளன.
இந்த மூன்று நாவல்களுடன் ஒப்பிடும் போது பொக்காசியோ எழுதிய டெக்கமரான் கதைகள் நினைவிற்கு வருகின்றன. பிளேக் நோயிலிருந்து தப்பிக்க ஒரு குழு பயணம் செல்கிறார்கள். வழியில் பொழுது போவதற்காக ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கின்றனர். இவ்வாறு நூறு கதைகள் கொண்டதாக டெக்கமரான் எழுதப்பட்டுள்ளது.
கதை என்பது மீட்சியின் பாதையா அல்லது நினைவின் பரிமாற்றமா என்றால் இரண்டுமே என்கிறது டெக்கமரான். கதை சொல்வது என்பதே நினைவுகளைக் காப்பாற்றுவது தான். உயிர்த்திருப்பதன் அடையாளமாகக் கதை சொல்வதைக் காணுகிறார் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்.
பிளேக்கில் இறந்தவர்களின் நினைவுகளை டீபோ ஆவணப்படுத்துவது போலக் காம்யூ ஆவணப்படுத்தவில்லை. மாறாக நோயின் பின்னால் உள்ள திரைகளை ஆராய்கிறார்.
இந்த இரண்டு நாவலோடு சரமாகோ எழுதிய பார்வையின்மை நாவல் இணைந்து கொண்டது தான் ஆச்சரியம். அந்த நாவல் முற்றிலும் மாறுபட்ட கதைக்களன் கொண்டது. எழுத்துமுறையும் வேறுபட்டது. இந்த நாவல்
1995 ல் வெளியானது.. இதே பெயரில் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. பெயரிடப்படாத நகரத்தில் கிட்டத்தட்ட அனைவரையும் பாதிக்கும் பார்வையிழப்பினைப் பேசும் இந்நாவல் மக்களிடம் பரவும் பீதியையும் அரசின் அடக்குமுறை மற்றும் திறமையற்ற நடவடிக்கைகளையும் விவரிக்கிறது, பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தினால் நோயைக் கட்டுப்படுத்திவிடலாம் என அரசு நினைக்கிறது. ஆனால் அது சாத்தியமாகவில்லைஒழுக்கச் சீர்கேடு, மற்றும் சமூகச் சரிவுக்கான உருவகமாகவே பார்வையிழப்பினை சரமாகோ பயன்படுத்தியிருக்கிறார்.
கொரோனா காலத்திலே இந்த மூன்று நாவல்களின் புதிய பதிப்புகள் வெளியாகின. மூடப்பட்டிருந்த புத்தகக் கடைகளின் வெளியே இந்தப் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். முககவசம் அணிந்த வாசகர்கள் அதை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பெட்டியில் பணம் போட்டுச் சென்ற காட்சியை காணொளியில் பார்த்திருக்கிறேன்.
மூன்று நாவல்களில் அதன் எழுத்தாளர்கள் நேரடியாகக் கண்ட நிகழ்வை எழுதவில்லை. நோயை ஒரு குறியீடாகவே கருதினார்கள். நினைவுகளின் வழியே கதையை விவரிக்கவே முயலுகிறார்கள். மூவரும் இதை விடச்சிறந்த நாவலை எழுதியிருக்கிறார்கள். ஆனால் காலம் குறிப்பிட்ட சூழலில் இந்த மூன்று நாவல்களையும் உயர்த்திப்பிடித்திருக்கிறது. மறுவாசிப்புச் செய்ய வைத்திருக்கிறது.
உலகெங்கும் இன்று எழுதப்படும் நாவல்கள் இதிகாசம் போன்று பல்வேறு சரடுகளைப் பின்னிச் செல்லும் கதைசொல்லலைக் கொண்டிருக்கின்றன. வாழ்வின் விசித்திர நிகழ்வுகளை. அறியப்படாத, அல்லது அடையாளம் இழந்த மனிதனின் வாழ்வை முதன்மைப்படுத்துகின்றன. சர்வதேச விருதுகளைப் பெறும் நாவல்களே அதன் சாட்சி.
உண்மைக்கும் புனைவிற்குமான இடைவெளியை டீபோ கடந்து சென்றிருக்கிறார். அவரது நாவலில் எது உண்மை எது புனைவு என்று நாம் பிரித்து அறிய முடியாது. அது தான் நாவலாசிரியரின் முன்பாக இன்றுள்ள சவால். அந்த வகையில் சர்வதேச அளவில் இன்றைய நாவல்கள் புனைவின் சாத்தியங்களை விரிவுபடுத்திக் கொண்டே செல்கின்றன. தமிழ் நாவல்களும் அதை நோக்கியே நகர வேண்டும்.
••