கோடைகாலப் பறவை

புதிய சிறுகதை

ரங்கநாத் கையில் செம்மஞ்சள் நிறத்தில் கறுப்பு புள்ளிகளிட்ட சிறகொன்றை வைத்திருந்தான். நீளமான அச்சிறகு வசீகரமாகயிருந்தது

“அது என்ன பறவையின் சிறகு“ என்று கேட்டாள் லூசி.

“பெயர் தெரியவில்லை. ஆனால் இப்படியான சிறகை இப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்“ என்றான் ரங்கநாத்

கோத்தகிரியிலுள்ள உறைவிடப் பள்ளி ஒன்றின் முதல்வராகப் பணியாற்றினாள் லூசி. தங்கபிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கூர்மையான நாசி, ஐந்தரை அடிக்கும் மேலான உயரம். ஒடிசலான உடல்வாகு. அரக்கு வண்ண காட்டன் புடவை கட்டியிருந்தாள். அதற்கு மேல் பச்சை நிறத்தில் ஒரு ஸ்வெட்டர். காலில் ரப்பர் செருப்புகள்.

அவளது வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் நிறைய மரங்கள் இருந்தன. அதனடியில் தான் இந்தச் சிறகு கிடந்திருக்கிறது.

லூசி பள்ளி வளாகத்திற்குள்ளாகவே இருபது வருஷமாக வசித்து வந்தாள். சொந்த ஊரை மறந்து பல காலமாகிவிட்டது. கோடைவிடுமுறையில் மாணவர்கள் எல்லோரும் போய்விட்ட பிறகும் அவள் பள்ளி வளாகத்தில் தானிருப்பாள். அவளது உலகம் அந்தப் பள்ளி மட்டும் தான்.

அவளது அக்கா ஜெசிந்தாவின் வீடு தூத்துக்குடியை ஒட்டிய கடற்கரை கிராமம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அக்கா அவசரத் தேவை என்று ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு போனாள். அதைத் திரும்பிக் கொடுக்கவேயில்லை. அவளும் கேட்கவில்லை. ஆனால் அக்கா வீட்டிற்குப் போனால் அக் குற்றவுணர்வு அக்காவிடம் பீறிடும் என்பதால் ஊருக்குப் போவதைத் தவிர்த்து வந்தாள். அக்காவின் கணவர் உப்பளத்தில் வேலை செய்து வந்தார். மூன்று குழந்தைகள். சொற்ப வருமானத்தில் அக்காவால் குடும்பத்தை ஒட்ட முடியவில்லை. அவளும் உப்பளத்தில் வேலை செய்தாள்.

அக்கா தான் ஆசிரியராக விரும்பியவள். ஆனால் அப்பா இறந்தவுடன் அவளது படிப்பைப் பாதியிலே மாமா நிறுத்திவிட்டார். உறவிலே அவளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். பாவம் அக்கா உழைத்துச் சலித்து ஆளே உருச்சிதைந்து போயிருந்தாள்.

தன்னிடம் அக்காவின் போட்டோ ஒன்று கூடக் கிடையாது என ஏனோ இந்தக் காலையில் லூசிக்குத் தோன்றியது.

லூசிக்கு இப்போது நாற்பத்தியாறு வயது நடந்து கொண்டிருந்தது. மாணவர்களோடு பழகுவதால் எப்போதும் இளமையாக இருப்பது போலவே தோன்றும். இனி எத்தனை வயதானால் என்ன. யார் கவலைப்பட இருக்கிறார்கள். தனிமையில் வாழும் பெண்ணிற்கு உலகம் மிகச்சிறியது தானே.

நூறு வருஷப்பழமையான பள்ளியது. இங்கிலாந்திலிருந்து வந்த ரெனீஸ் பாதிரி துவங்கியிருக்கிறார். ஒரு காலத்தில் அங்கே வேலை பார்த்த ஆசிரியர்கள் அத்தனை பேரும் வெள்ளைக்கார்கள். பணக்கார பிள்ளைகள் மட்டுமே அங்கே தங்கிப் படித்தார்கள். கால மாற்றத்தில் அந்தப் பள்ளி நிர்வாகம் மாறிவிட்டது. புதிய கட்டிடங்கள். வசதிகள் உருவாகியிருந்தன. நடுத்தரவர்க்க பிள்ளைகளே இப்போது அதிகம் படித்தார்கள்.

அந்தப் பள்ளியின் இசைக்குழு மிகவும் புகழ்பெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை பெரிய இசை நிகழ்ச்சியை மாணவர்களே நடத்துவார்கள். அந்தப் பள்ளி வளாகத்தினுள் பெரிய மலர் வனமே இருந்தது. பள்ளி மாணவர்களுக்கென்றே நடத்தப்படும் பேக்கரி ஒன்றும் செயல்பட்டது. பள்ளிக்குச் சொந்தமாக ஆறு குதிரைகள் இருந்தன. துப்பாக்கி சுடுவதற்குக் கூடப் பயிற்சி கொடுத்தார்கள்.

அந்தக் கேம்பஸில் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டின் பெயர் லிட்டில் ஹெவன். அப்படி ஒரு பெயரை வைத்தவர் ரெனீஸ் பாதிரி என்பார்கள். அந்த வீடு இங்கிலாந்தின் பண்ணை வீடு போல அமைந்திருந்தது. கோடையிலும் உள்ளே முழுமையான வெளிச்சம் வராது. கணப்பு அடுப்பும் நிலவறையும் கொண்ட வீடது. பெரிய வரவேற்பறை. நான்கு படுக்கை அறைகள். சுற்றிலும் தோட்டம். அதில் நிறையப் பூச்செடிகள். பழமரங்கள்.

அவளது வீட்டைத் தாண்டி வலது பக்கம் திரும்பினால் ஆசிரியர்களுக்கான குடியிருப்பு. நாற்பது ஆசிரியர்கள் குடும்பத்துடன் அங்கே தங்கியிருந்தார்கள். அவர்களும் கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போய்விட்டதால் அந்த வீடுகள் பூட்டிக்கிடந்தன. தற்போது அவளைத் தவிர நான்கு காவலாளிகளும் இரண்டு தோட்டக்காரர்களும், அன்றாட வந்து செல்லும் சில பணியாளர்களும் மட்டுமே அந்த வளாகத்தினுள் இருந்தார்கள்.

கோடைக்கென்றே விசேசமான காற்றிருக்கிறது. சருகுகளில் யாரோ நடப்பது போன்ற காற்றின் ஓசை நாள் முழுவதும் கேட்டபடியே இருக்கும். சில நேரம் முயலோ, காட்டுக்கோழிகளோ ஓடுவதைக் கண்டிருக்கிறாள். கோடை விடுமுறையில் பள்ளியின் இயல்பு முற்றிலும் மாறிவிடுகிறது. ஏதோ ஒரு மடாலயத்திலிருப்பது போலவே அவள் உணர்ந்தாள்.

நிறையத் தைலமரங்கள் அடர்ந்த வளாகமது. சிவப்பு நிற கட்டிடங்கள். அழகான படிக்கட்டுகள். பெரிய தூண்கள் கொண்ட பிரம்மாண்டமான நூலகம். இரண்டு விளையாட்டு மைதானங்கள். நீச்சல் குளம், நான்கு விடுதிகள். ஐநூறு பேர் அமர்ந்து சாப்பிடும் உணவுக்கூடம், பிரார்த்தனைக் கூடம் என்று நூற்றுமுப்பது ஏக்கருக்கும் மேலிருந்தது அந்தப் பள்ளி.

தபால்காரரைத் தவிர வெளியாட்கள் எவரும் இப்போது வருவதில்லை. லூசிக்கு இப்படி முழுத்தனிமையில் இருப்பது பிடித்தேயிருந்தது

அவளது கணவர் மார்டின் அதே பள்ளியில் தான் வேலை செய்தார். சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல்நிலை மோசமாகி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அதன்பிறகு அவள் ஒருத்தியாகவே அந்த வீட்டில் வாழ்ந்தாள்.

இசைத்தட்டுகள் தான் அவளது ஒரே துணை. வீட்டிலிருக்கும் நேரங்களில் அவள் இசைகேட்டபடியே இருப்பாள். அதுவும் பழைய ஆங்கிலப் பாடல்களின் இசைத்தட்டுகளை ரிக்கார்ட் பிளேயரில் சுழலவிட்டுக் கேட்பது அவளுக்குப் பிடிக்கும். இசைத்தட்டிலிருந்து வரும் கம்பீரமான குரலின் வழியே அந்தப் பாடகர் அறைக்குள் நடனமாடுவது போலவே தோன்றும்

அவளுக்குப் பால் ராப்சனின் பாடல்களை மிகவும் பிடிக்கும். வசீகரமான குரலது. சில பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்பாள். ஜாஸ் இசைக்கலைஞர்களின் சங்கீதத்தைக் கேட்பது அவளுக்கு விருப்பமானது. நிறைய இசைத்தட்டுகளைச் சேகரித்து வைத்திருக்கிறாள். அதில் பாதிக்கும் மேலாகப் பார்க்கர் மாஸ்டர் கொடுத்தது.

அவர் திருமணமே செய்து கொள்ளாதவர். இசை தான் அவரது காதலி என்று சொல்லுவார். அவர் தான் பால் ராப்சனை அறிமுகம் செய்து வைத்தார். ஜாஸ் சங்கீதத்தை எப்படிக் கேட்பது என்று கற்றுத்தந்தார். தொடர்ந்து இசை கேட்கும் போது கடவுள் எவ்வளவோ இனிமைகளை மனிதனுக்காகத் தந்திருக்கிறார் என்று அவளுக்குத் தோன்றும். அதை நினைத்து கர்த்தருக்கு நன்றி சொல்லிக் கொள்வாள்

அவளது வீட்டில் ஒரு மீன் தொட்டியிருந்தது. அதில் மூன்று தங்கமீன்கள் இருந்தன. அந்த மீன்கள் கூட இசைகேட்டு பழகி அதற்கு ஏற்ப நடனமாடின. உலகமே ஒரு பெரிய இசைக்கூடம் தானே.

••

ரங்கநாத் அந்தப் பறவையின் சிறகை அவளிடமே கொடுத்துச் சொன்னான்

“நம்ம தோட்டத்துக்கு அந்தப் பறவை திரும்பவும் வரும் மேடம் “

“அதிர்ஷ்டமிருந்தால் அதை நான் காண்பேன்“ என்றாள் லூசி

“புகைப்படம் எடுக்க முடிந்தால் எடுத்துவிடுங்கள். பள்ளி ஆல்பத்தில் ஒட்டி வைக்கலாம்“ என்றான் ரங்கநாத்

“அதுவும் நல்ல யோசனை தான். முயன்று பார்க்கிறேன்“ என்று தலையாட்டினாள்

அவர்கள் பள்ளி வளாகத்தினுள் காணப்படும் பறவைகளைப் புகைப்படம் எடுத்து ஆல்பம் ஒன்றை மாணவர்களே உருவாக்கியிருந்தார்கள். ஆகவே புதிதாகப் பறவைகளைக் கண்டால் அதைப் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.

ரங்கநாத் படியில் இறங்கியபடியே அவளிடம் கேட்டான்.

“மல்லிகாவை அழைத்துக் கொண்டு டவுனுக்குப் போய்வர இருக்கிறேன். ஏதாவது வேணும் என்றால் வாங்கி வருவேன்“

“ஸ்வீட் பிரெட்டும், சால்ட் பிஸ்கட்டுகளும் வேண்டும் கூடவே ஒரு பாட்டில் தேன் “

ரங்கநாத் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனது குடியிருப்பினை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். மரங்களுக்கு இடையே வெயில் சரிந்து கொண்டிருந்தது

••

ரங்கநாத் அந்தப் பள்ளியின் காவலாளிகளில் ஒருவன். அவனும் அந்த வளாகத்தில் தான் தங்கியிருந்தாள். அவனது மனைவி மல்லிகா தான் லூசியின் வீட்டினை தூய்மை செய்வது, துணி துவைத்து தருவது, பாத்திரம் கழுவி வைப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்தாள். அவளது சம்பளத்தையும் ரங்கநாத்தே வாங்கிக் கொள்வான்

மல்லிகா கிராமத்துப் பெண். அதுவும் மைசூர் பக்கமுள்ள சிறிய கிராமம். தமிழ் பேசும் குடும்பம் தான். அவளது தாத்தா காலத்தில் அந்த ஊருக்குப் போய்த் தங்கிவிட்டார்கள். மல்லிகாவின் அப்பா அங்கே தான் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை அவள் படித்திருக்கிறாள். மாணவர்களுக்குத் திறந்தவெளியில் சினிமா திரையிடும் அன்று மல்லிகா ஆசையாக முன்வரிசையில் போய் உட்கார்ந்து கொள்வாள். டிவியில் போடும் திரைப்படங்கள் ஒன்றை விட மாட்டாள்.

லூசி வீட்டில் டிவி இருந்தது. ஆனால் அணைத்தே வைக்கப்பட்டிருக்கும். சில நாட்கள் அதைத் துடைக்கும் போது மல்லிகா கேட்பாள்

“நீங்க சினிமாவே பார்க்க மாட்டீர்களா“

“சினிமா பிடிக்காது“

“சின்ன வயசில கூடச் சினிமா பார்த்தது இல்லையா“

“சினிமா பார்க்க யாரு காசு தருவா. இதுவரைக்கும் மொத்தமே நாலு படம் பார்த்திருப்பேன். அதுவும் ஏசுநாதரைப் பற்றிய படம், “

“எனக்கெல்லாம் தினம் சினிமா பாக்கணும். சோறு இல்லாட்டி கூடக் கவலைப்பட மாட்டேன்“ என்று மெலிதாகச் சிரித்தாள்

“சினிமாவில அப்படி என்ன இருக்கு“

“அது ஒரு கனவும்மா. பாக்க பாக்க சொகமாக இருக்கும். அதைச் சொன்னாப்புரியுதும்மா “என்று சொல்லி சிரித்தாள் மல்லிகா

லூசிக்கு அது புரிந்தேயிருந்தது. அவள் நியூஸ் பேப்பரை படித்தபடியே மல்லிகாவிடம் கேட்டாள்

“லீவுக்கு ஊருக்குப் போகலையா“

“போகணும். ஆனா அவரு வேலை இருக்குனு சொல்லிட்டே இருக்கார். “

“நீங்களும் போயிட்டா நான் தனியா இருக்கணும்“

“உங்களுக்குத் தான் பயமே கிடையாதே.. இந்த ஸ்கூல்ல உங்களைப் பார்த்துத் தான் எல்லோரும் பயப்படுகிறார்கள்“

“அதெல்லாம் வெறும் நடிப்பு. உண்மையில் என்னை யாருக்கும் பிடிக்காது. அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை“

மல்லிகா கழுவி வைத்த டீக்கோப்பைகளைக் கிச்சன் அலமாரியினுள் அடுக்கி வைத்துவிட்டுக் கிளம்பும் போது சொன்னாள்

“குழந்தைகள் இருந்திருந்தால் உங்களுக்கும் ஊருக்குப் போகத் தோணியிருக்கும் “

அவள் சொன்னது உண்மை. அதைக் கேட்காதவள் போலவே லூசி நின்றிருந்தாள். மல்லிகா சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு சிறிய பிளாஸ்டிக் கூடையினைக் கையில் எடுத்தபடியே வெளியேறிப் போனாள்

••

குழந்தைகள் இல்லாமல் போனது வருத்தமானதே. ஒருவேளை அவள் சொன்னது போலப் பையனோ, பெண்ணோ இருந்திருந்தால் வாழ்க்கை வேறுவிதமாகியிருக்கும். அந்த வேதனையை மறப்பதற்காக மீண்டும் ஒரு இசைத்தட்டினை சுழலவிட்டாள். சாக்சபோன் இசை மனதை ஆற்றுப்படுத்துவதாக இருந்தது

••

பள்ளி வளாகத்திற்குள் சிறிய ஏரி ஒன்றிருந்தது. அதை ஒட்டிய காட்டிற்குள் காலை நேரம் நடைப்பயிற்சி செய்வது லூசிக்குப் பிடித்தமானது. குன்று போல உயர்ந்த பாறையின் மீது நின்றபடியே சில நாட்கள் மேகங்களைக் கடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருப்பாள். எவ்வளவு நேரம் பார்த்தாலும் மேகங்கள் சலிப்பதேயில்லை.

அந்தப்பள்ளியின் முன்வாசல் முன்பு வடக்கு நோக்கி இருந்தது. அதைத் தற்போது மூடியிருந்தார்கள். அந்த வாசலில் அமைக்கப்பட்ட காவல் கோபுரம் சிதைந்த நிலையில் நின்றிருந்தது. சில நாட்கள் அதையும் தேடிப்போய்ப் பார்த்து வருவாள்.

காலத்தில் பழசாகிப் போன எல்லாப் பொருட்களும் கதைகள் கொண்டதாகி விடுகின்றன. இந்தக் கோபுரத்திற்கும் நிறையப் பேய்க் கதைகள் இருப்பதை அறிவாள். கோபுரம் பற்றி மட்டுமில்லை. அந்தப் பள்ளியில் இறந்து போன மாணவி ஒருத்தி பற்றியும் கதைகள் உலவுகின்றன. இருக்கட்டும் கதைகள் தானே ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியம்.

••

ஒவ்வொரு நாளும் முதல்வர் அறைக்குள் நுழைந்தவுடன் லூசியின் முகம் இறுக்கமாகிவிடும். அது ஒரு பழக்கம். கோபத்தில் அவள் குரல் உயரும் போது எதிரே நிற்பவர்கள் பயந்து போய்விடுவார்கள். அவளிடம் தயவோ, கருணையோ எதிர்ப்பார்க்க முடியாது. அவள் மிகவும் கண்டிப்பானவள். பொய் சொல்கிறவர்களின் குரலை வைத்தே அவளால் கண்டுபிடித்துவிட முடியும். குரலில் பொய் கலந்தவுடன் அது மாறிவிடுகிறது. போலியான பணிவு. இரக்கம். வெளிப்படுகிறது.

உண்மையில் அந்தக் கோபம் அவளுக்குக் கவசம் போலப் பயன்பட்டது. தேவையற்ற கவனத்தை, ஈர்ப்பை உருவாக்காமல் அவளைப் பாதுகாத்தது. வராந்தாவில் நடக்கும் போது வேண்டுமென்றே அவள் வேகமாக நடப்பாள். ஆசிரியர்களிடம் பேசும் போது அவர்கள் கண்களைப் பார்த்தே பேசுவாள். அவளது நுனி நாக்கு ஆங்கிலம் எவரையும் மயக்கக்கூடியது.

யோசித்துப் பார்த்தால் தன் வாழ்க்கை ஒரு நடிப்பு. அந்த நாடகத்தைப் பல ஆண்டுகளாகச் சிறப்பாக நடித்து வருகிறோம் என்றே லூசிக்கு தோன்றும். இதை மாற்றிக் கொள்ள முடியாது.

அந்தப் பள்ளியில் நண்பர் என்று சொல்லிக் கொள்ள அவளுக்கு இருந்த ஒரே நபர் பார்க்கர் மாஸ்டர். பள்ளியின் பியானோ ஆசிரியர். மிகச்சிறந்த இசை கலைஞர். அவரது இசைத்திறமையை உலகம் அறியவேயில்லை.

அவர் ஞாயிறு தோறும் அவள் வீட்டிற்கு வருவார். இருவரும் ஒன்றாக இசை கேட்பார்கள். மதியம் அவளுடன் சாப்பிடுவார். பின்பு ஆளுக்கு ஒரு புத்தகம் கையில் எடுத்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே படிப்பார்கள். மாலை மீண்டும் கையில் காபியுடன் இசை கேட்பார்கள்.

அவருக்குச் சூடாகக் காபி குடிப்பது பிடிக்கும். ஆவி பறக்கும் காபியைக் கையில் வைத்தபடியே அவர் இசைத்தட்டிலிருந்து எழும் பால் ராப்சனை ரசித்துக் கொண்டிருப்பார். சில நேரம் அவரது முகத்தில் வெளிப்படும் சந்தோஷம் அபூர்வமானது

அவர் ஒருவர் தான் அவளைப் பெயர் சொல்லி அழைப்பார். அவளை விடவும் வயதில் மூத்தவர் என்பதோடு நல்ல நண்பர் என்பதும் ஒரு காரணம்.

அவர் விடைபெற்றுப் போகும் போது மறக்காமல் ஒரு ஆரஞ்சு பழத்தைக் கொடுத்துவிடுவாள். எவ்வளவு நல்ல மனிதர். எதையும் அவளிடம் எதிர்பார்க்கவில்லை. சொல்லாமலே அவள் மனத்துயரை அவர் புரிந்து கொண்டிருந்தார். பார்க்கர் மாஸ்டர் திடீரென இறந்து போனது அவளது துரதிருஷ்டம். இப்போது சில இசைத்தட்டுகளைக் கேட்கும் போது அவர் நினைவு மேலிடக் கண்ணீர் கசிய நேரிடுகிறது

••

ரங்கநாத் கொடுத்த பறவையின் இறகை தன் மேஜையில் கொண்டுவந்து போட்டபடி லூசி படிப்பதற்காக ஏதாவது ஒரு புத்தகத்தை எடுக்கத் தேடினாள். அவளுக்கு மேரி ஆலிவரின் கவிதைகளைப் பிடிக்கும். சில நேரம் அந்தக் கவிதைகளை மனப்பாடம் செய்து கொள்வதும் உண்டு. மேரி ஆலிவர் எவ்வளவு நன்றாக எழுதுகிறாள். நாமும் இப்படிக் கவிஞராகியிருக்கலாம் என்று நினைத்துக் கொள்வாள்

கவிதைப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிய போது மனதில் புதிதாக வந்த பறவை எப்படியிருக்கும் என்ற எண்ணமே மேலோங்க ஆரம்பித்தது

பறவைகளுக்குப் புதிய இடம் பற்றிய பயம் கிடையாது. இவ்வளவு பெரிய வளாகத்தில் அது ஏன் தன் வீட்டுத் தோட்டத்தைத் தேடி வந்திருக்கிறது. உலகம் பெரியது என்பதை அந்தப் பறவையின் வருகை நினைவூட்டுகிறதா.

அதைப்பற்றி நினைக்க நினைக்க மறுநாள் அந்தப் பறவையை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் உருவானது.

அலமாரியிலிருந்த கேமிராவை எடுத்துத் துடைத்துச் சரி செய்து வைத்துக் கொண்டாள். ஏதாவது ஒரு விருப்பமான விஷயத்தை இப்படி மனதில் போட்டுக் கொண்டால் மனது உற்சாகமாகிவிடுகிறது. இல்லாவிட்டால் சலிப்பு தான். என்ன செய்தாலும் சில நாட்களில் சலிப்பைப் போக்கிக் கொள்ள முடியாது.

••

லூசி தந்தையை அறியாதவள். அவளுக்கு இரண்டு வயதாகும் போது அவளது தந்தை இறந்துவிட்டார். அம்மா தான் அவளையும் அக்காவையும் வளர்த்தாள். அவர்கள் மாமா வீட்டில் வசித்தார்கள். அக்காவின் படிப்பை நிறுத்திய மாமா தான் அவளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

மாமா வீட்டில் நேரத்திற்குச் சாப்பாடு கிடைக்காது. அம்மா ஒரு வேலைக்காரி போலப் பகலிரவாக வீட்டு வேலைகள் செய்து வந்தாள். மாமா இல்லாத நேரத்தில் அத்தை அம்மாவைக் கண்டபடி திட்டுவாள். அவளது கோபம் லூசியின் மீதும் திரும்பும். லூசிக்கு மாமா வீட்டில் இருக்கப் பிடிக்கவேயில்லை.

ஒரு நாள் அம்மா லூசியிடம் சொன்னாள்

“உன்னை சிஸ்டர் மேரியோடு அனுப்பி வைக்கப் போகிறேன். இனிமேல் அவள் உன்னைப் படிப்பைக் கவனித்துக் கொள்வாள். படிப்பை தவிர உனக்கு வேறு நினைப்பே இருக்கக் கூடாது“

அம்மா சொன்னது போலவே திருநெல்வேலியில் சிஸ்டர் மேரி உதவியால் படித்தாள். விடுமுறை நாட்களில் அவள் மட்டுமே ஹாஸ்டலில் இருப்பாள். அம்மா அவள் படிப்பு முடியும் வரை அவளைத் தேடி வந்ததேயில்லை. கல்லூரி படிக்கப் பெங்களூர் போவதற்கு முன்பு அம்மாவைத் தேடிப் போய்ப் பார்த்து வந்தாள். அம்மா அவளை ஆசீர்வாதம் செய்தபடியே சொன்னாள்

“லூசி உன் எதிர்காலம் உன் கையில் தானிருக்கிறது“

எதற்காக அப்படிச் சொன்னாள் என்று தெரியவில்லை. ஆனால் அவள் கல்லூரி படிப்பு முடிவதற்குள் அம்மாவும் இறந்து போனாள்.

இருபது வயதிற்குள் வாழ்க்கையில் தனக்கு யாருமேயில்லை என்று அவள் நன்றாக உணர்ந்திருந்தாள். வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பித்த போது அந்த ஏக்கம் ஆழமாக அவளை வாட்டியது. அப்போது தான் இமானுவேலைச் சந்தித்துப் பழகி அவரையே திருமணம் செய்து கொண்டாள். இருவருமாகத் தான் அந்த உறைவிடப் பள்ளிக்கு விண்ணப்பித்தார்கள்.. இருவருக்கும் வேலை கிடைத்தது.

••

ஏன் இதை எல்லாம் இந்த இரவில் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தபடியே அவள் இரவு விளக்கின் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் பெயரறியாத பறவையின் நினைவு வந்து போனது

காலையில் அவள் தோட்டத்தில் தேடிய போதும் அந்தப் பறவையைக் காண முடியவில்லை. ஏரிவரை நடந்து போய்த் தேடிவந்தாள். அந்தப் பறவையைக் காணமுடியவில்லை

அன்று மாலை ரங்கநாத்தின் மனைவி அந்தப் பறவையைத் தன் வீட்டில் முன்னுள்ள மரத்தில் பார்த்ததாகச் சொன்னாள்

“எது மாதிரி இருந்துச்சி அந்தப் பறவை“

“வால் நீண்ட குருவி மாதிரி. ஆனா குருவியில்லை“

“நிறம்“

“சரியா சொல்லத்தெரியலை. ஆனால் மஞ்சளும் சிவப்பும்னு நினைக்கிறேன்“

“அதோட குரல் எப்படியிருந்தது“

“சின்ன பிள்ளைங்க குரல் மாதிரி இருந்துச்சி“

“நிஜமாவா“ எனக்கேட்டாள்

“ஆமா.. அந்தக் குரலை கேட்டால் ஏதோ சொல்ல வர்றது மாதிரியே இருந்துச்சிம்மா “

“எனக்கு அதைப் பாக்கணும்னு ஆசையா இருக்கு“

“நாம ஆசைப்பட்டா பறவை வராது. அதுவா வரணும்“

“அந்த பறவை எந்தப்பக்கம் போனது“

“கிழக்கே போனது. நாளைக்குத் திரும்ப வரும்னு நினைக்கிறேன்“

“அது வந்தா என்னைக் கூப்பிடு“ என்றாள் லூசி

“போட்டோ எடுக்கப் போறீங்களா“ எனக்கேட்டாள் மல்லிகா

“எடுக்கணும்“ என்றாள் லூசி

மல்லிகா ஆசையோடு கேட்டாள்

“என்னையும் ஒரு போட்டோ எடுத்து தருவீங்களா“

“உனக்கு எதுக்குப் போட்டோ“

“ஊர்ல எங்க அப்பாவுக்கு குடுக்க “ எனச் சந்தோஷத்துடன் சொன்னாள்.

ஆசைப்படும் தன் கண்ணில் படாமல் ஏன் அந்தப் பறவை ஒளிந்து விளையாட்டுக் காட்டுகிறது என லூசிக்கு எரிச்சலாக வந்தது.

அவளுக்கு அப்பறவையை உடனே காண வேண்டும் என்ற ஆசை அதிகமானது.  கிழக்கு நோக்கி நடந்து போக ஆரம்பித்தாள். இருட்டும் வரை ஒவ்வொரு மரமாகத் தேடியலைந்தாள். வேறு சில பறவைகளைக் கண்டாள். ஆனால் தேடும் பறவையைக் காண முடியவில்லை

அன்றிரவு வீடு திரும்பிய போது மனதில் காரணமில்லாமல் வருத்தமும் வெறுமையும் கூடியது போலிருந்தது. பறவையைப் பார்க்கமுடியாமல் போனால் என்ன. அதற்காக இப்படி வருத்தப்பட வேண்டுமா. பறவை தானே, அதற்கு எதற்காகக் கவலைப்பட வேண்டும்

திடீரென அது வெறும் பறவையில்லை. அவள் விரும்பிய சிறு விஷயம் கூட அவளுக்குக் கிடைக்கவில்லை என்பதன் அடையாளம் போலத் தோன்றியது. அப்படி நினைப்பு வந்தவுடன் கடந்தகாலத்தின் துயர நாட்கள் மனதை அழுத்தத் துவங்கின. அம்மா கண்ணீர் விடும் காட்சி மனதில் வந்து போனது. ஹாஸ்டல் அறையில் அழுதபடியே இருந்த நினைவுகள் பீறிட்டன. அதிலிருந்து விடுபடுவதற்காக அவளாக ஒரு காகிதத்தில் பறவை ஒன்றை வரைய ஆரம்பித்தாள்

மேஜையில் கிடந்த சிறகை வைத்துக் கொண்டு பறவை இப்படித்தானிருக்கும் என அவள் கற்பனையில் ஒரு பறவையை வரைந்தாள். அது சரியாக வரவில்லை. ஏன் இவ்வளவு பதற்றம் அடைகிறோம் என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

மறுநாள் ரங்கநாத் அவளைத் தேடி வந்த போது சொன்னான்

“ஒரு பறவையில்லை மேடம். ஜோடியா வந்துருக்கு. பார்த்தா வெளிநாட்டுப் பறவை மாதிரி தெரியுது. கடல் கடந்து வந்துருக்கு“

“என் கண்ணிலே படவேயில்லை“

“எவ்வளவு அழகான ஜோடி. ஒரே காதல் விளையாட்டு தான். மனுசங்க போலப் பறவைகளைப் பார்த்தவுடனே வயசைக் கண்டுபிடிக்க முடியாதுல்ல“

அவன் அப்படிக் கேட்டது அவளுக்குப் பிடித்திருந்தது

“நீ எங்கே பார்த்தே “என்று கேட்டாள்

“சைக்கிள் ஸ்டாண்டை ஒட்டின மரத்தில்“.

“இப்போ போனா இருக்குமா“

“நான் காலையில் பார்த்தேன். எங்க போகப்போகுது. நம்ம தோட்டத்துக்கு வரத்தான் செய்யும்“

அவன் அப்படிச் சொன்னபோதும் அவளால் சமாதானம் செய்து கொள்ளமுடியவில்லை. ஆசையை அடக்க முடியாமல் கேட்டாள்

“எப்படியும் நம்ம ஸ்கூல் கேம்பஸ்க்குள்ளே தானே இருக்கும். வா. தேடிப் பார்த்துட்டு வருவோம்“

“போகலாம் மேடம்“

ரங்கநாத்துடன் பள்ளி வளாகத்தை முழுமையாகச் சுற்றி வந்த போதும் அந்தப் பறவைகள் அவள் கண்ணில் படவில்லை. அவள் சலித்துப் போனவளாகச் சொன்னாள்

“எங்கேயாவது போய்த் தொலையட்டும். இனி அந்தப் பறவையை நான் பார்க்கவே மாட்டேன்“

ரங்கநாத் அவளது கோபத்தைக் கண்டு சிரித்தான்

வீடு திரும்பி லூசி அந்தப் பறவையை மறக்க முயன்றாள். ஆனால் மனதில் அது சிறகடித்துப் பறப்பது போலவே இருந்தது. இசைத்தட்டுகளைச் சுழலவிட்ட போதும் மனது அந்த ஏமாற்றத்தையே சுற்றிவந்தது

பலருக்கும் எளிதாக நடந்துவிடுகிற சிறிய விஷயங்கள் கூடத் தனக்குக் கிடைப்பதில்லை என்ற வருத்தம் அவளை ஆழமாகப் பாதித்தது. அன்றிரவு அவள் பிரார்த்தனை செய்யும் போது ஏனோ கண்ணீர் விட்டாள்

மறுநாள் காலை அவள் தோட்டத்தில் பறவையின் விநோதமான குரல் கேட்டது. அதே பறவைகள் தான். தான் தேடிக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பறவைகள் தன் தோட்டத்திற்கே வந்து நிற்கிறது

அவளுக்கு வெளியே போய் அதைக் காண ஆசையிருந்த போதும் அதை அடக்கிக் கொண்டு வீட்டின் கண்ணாடி ஜன்னல்களைச் சாத்தி வைத்தாள். ஒருமுறை பறவையை நேரில் பார்த்தால் என்னவென்று தோன்றியது. ஆனால் அதை அனுமதிக்க மறுத்தவள் போல வேண்டுமென்றே தன் அறைக்குள் போய்க் கதவை தாழிட்டுக் கொண்டாள்.

மதியம் ரங்கநாத் வந்து வாசற்கதவைத் தட்டிய போது தான் வெளியே வந்தாள்

“தோட்டத்துல பறவைகள் இருதுச்சே.. பாத்தீங்களா “

“தூங்கிட்டேன். வெளியே எதையும் கவனிக்கவேயில்லை“. என்றாள்

அவள் சொல்வது பொய் என்தை ரங்கநாத் அறிந்து கொண்டவன் போல அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்

மழை வரும்போல ஒரே மேகமா இருக்கு என்றாள் லூசி

பேச்சை மாற்றுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவனாகச் சொன்னான்.

“மேடம்.. நாளைக்கு மல்லிகாவை கூட்டிட்டு  ஊருக்குப் போறேன். வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும்மா“

“உன் வேலைய யாரு பாக்குறது “எனக் கோபமாகக் கேட்டாள்

“கிட்ணன் தம்பி வந்துருக்கான். அவனைப் பாக்க சொல்லியிருக்கிறேன்“

“போயிட்டு வா.. நானும் ஊருக்குப் போகப்போகிறேன். திரும்பி வர ஒரு வாரமாகும்“ என்றாள், ஏன் அப்படிச் சொன்னாள் என்று அவளுக்கே புரியவில்லை.

அவள் சொன்னதை நம்பமுடியாமல் திகைத்தபடியே ரங்கநாத்  படியிறங்கி நடந்தவன் கிழக்கே தெரிந்த மேகங்களைப் பார்த்தபடிய சொன்னான்

“மேடம்,, மழை வருது.. அங்கே பாருங்க.. “

அவன் சொல்லிமுடிப்பதற்கு மழையின் முதல் துளி தரையில் இறங்கியிருந்தது

••

0Shares
0