நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் நூற்றாண்டு விழா இந்த வருடம் ஏப்ரலில் துவங்குகிறது. இதற்காகச் சென்றவாரம் கோவில்பட்டி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். சொந்தவேலையின் காரணமாக அதில் கலந்து கொள்ள இயலவில்லை

ஆனால் 25ஆண்டுகளுக்கு முன்பாகக் கோவில்பட்டியில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்கு ஒரு விழா நடைபெற்றது. அது எழுத்தாளர் கௌரிசங்கர் இயக்கிய காருகுறிச்சியார் பற்றிய ஆவணப்படத்தின் திரையிடல். அதில் நான் கலந்து கொண்டு பேசினேன்.
எழுத்தாளர் கௌரிசங்கருக்கு சினிமாவின் மீது ஈடுபாடு அதிகம். சுந்தர ராமசாமியின் ஜே,ஜே.சில குறிப்புகளை சினிமாவாக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்து சுற்றியலைந்தார். ஆனால் அவரால் படமாக்க இயலவில்லை. ஆனால் சினிமா உலகின் நிஜத்தை நன்றாக அறிந்து கொண்டிருந்தார். சென்னையில் சுற்றிய நாட்களில் அறிமுகமான திரைப்பட இயக்கம், மாற்றுசினிமா என அவர் மனது உலகச் சினிமாவின் தீவிர ஈடுபாடு கொள்ள வைத்திருந்தது

கேவில்பட்டியில் வசித்து வந்த கௌரிசங்கர் சிறந்த கவிஞர், சிறுகதை ஆசிரியர். இவரது மழை வரும்வரை கவிதைத்தொகுப்பும். முந்நூறு யானைகள் சிறுகதைத் தொகுப்பும் மிக முக்கியமானது. கோவில்பட்டியில் தாசில்தாராகப் பணியாற்றியவர். மிகச்சிறந்த இலக்கிய வாசகர்.
கோவில்பட்டியிலிருந்து உருவான எழுத்தாளர்களுக்குக் கௌரி சங்கரின் வழிகாட்டுதல் முக்கியமானது. நானும் கோணங்கியும் அவரை நிறைய முறை சந்தித்துப் பேசியிருக்கிறோம். தேவதச்சன் வீட்டின் அருகில் குடியிருந்தார் என்பதால் தேவதச்சனைக் காணச்செல்லும் போதெல்லாம் அவரையும் பார்ப்பேன். உரையாடுவேன்.
அவருக்கு இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஒரு நாள் தான் நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாச்சலம் குறித்த ஒரு டாகுமெண்டரி படத்தை எடுக்க இருப்பதாகச் சொன்னார். எப்படி எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டவுடன் தனது கனவினை விவரிக்க ஆரம்பித்தார்.

காருகுறிச்சியோடு தொடர்புடைய கலைஞர்கள். அவரது குடும்பம், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் வீடு. நட்பு. விளாத்திகுளம் சாமிகள். குறுமலை லட்சுமி, பற்றிய விஷயங்கள். காருகுறிச்சி மேற்கொண்ட இலங்கைப் பயணம். அவரது ரேடியோ கச்சேரிகள் திரைப்படப் பங்களிப்பு. அவருடன் நெருக்கமாகப் பழகிய ஜெமினி கணேசன். சிவாஜி கணேசனின் நேர்காணல். ஏபி நாகராஜனின் நட்பு. அவரது வாரிசுகளாகக் கருதப்படும் இசைக்கலைஞர்களின் நேர்காணல்கள் என்று சொல்லிக் கொண்டே போனார்.
இதற்குப் பெரிய பொருட்செலவு தேவைப்படுமே என்று கேட்டவுடன் அதைப் பற்றி இனிமே தான் யோசிக்கணும். யாரும் இதுக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்று விரக்தியாகச் சொன்னார். அது உண்மை, கோவில்பட்டியில் உட்கார்ந்து கொண்டு இவ்வளவு பெரிய டாகுமெண்டரியை எப்படி உருவாக்கப்போகிறார் என்று யோசித்தேன்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் எனக்குப் போன் செய்து பேசினார். டாகுமெண்டரி படங்களுக்குத் திரைக்கதை எழுத வேண்டுமா என்று விசாரித்தார். பின்பு NFDC இதற்கு நிதி உதவி அளிக்குமா என்று கேட்டார். நான் அறிந்தவரை அவர்கள் டாகுமெண்டரி தயாரிக்க நிதி உதவி அளிப்பதில்லை என்றேன்.

அவராக உள்ளூர் வீடியோகிராபர் ஒருவர் துணையோடு காருகுறிச்சியாரோடு தொடர்பான இடங்கள். கலைஞர்கள், குடும்பத்தவர் எனப் பலரையும் படம்பிடித்தார். காருகுறிச்சியின் பழைய புகைப்படங்கள். செய்தித் தாளில் வெளியான தகவல்கள் என யாவையும் சேகரித்து வைத்திருந்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாளிரவு கோவில்பட்டியிலிருந்த ஒரு வீடியோ எடிட்டிங் ரூமிற்கு அழைத்துக் கொண்டு போனார். சின்னஞ்சிறிய அறை. கல்யாண வீடியோ ஒன்றை ஒரு இளைஞர் எடிட் செய்து கொண்டிருந்தார். அந்த வேலையை நிறுத்திவிட்டு காருகுறிச்சியார் டாகுமெண்டரியை எடுக்கச் சொன்னார். காருகுறிச்சி பற்றி அவர்கள் எடுத்திருந்த காட்சிகளை ஓடவிட்டுக் காட்டினார். இன்னமும் முழுமையாக எடிட் பண்ணவில்லை. இன்னும் நிறையப் படப்பிடிப்பு இருக்கிறது என்றார். அவரது கைப்பணத்தில் தான் அதை உருவாக்கியிருக்கிறார் என்பது தெரிந்தது
அதன்பிறகு அவரைச் சந்தித்த போது காருகுறிச்சியார் டாகுமெண்டரி அப்படியே நிற்பதைப் பற்றிச் சொல்லுவார். சில சமயம் இதற்கு சினிமா நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதற்காகச் சென்னைக்குக் கிளம்பிப் போய்வந்தார். அவர் நினைத்தது போல டாகுமெண்டரியை எடுக்கப் பொருளாதார உதவி கிடைக்கவில்லை.
ஆகவே எடுத்த வரை எடிட் செய்து அதைத் திரையிடும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்

கவிஞர் தேவதச்சனின் அப்பா கோவில்பட்டியில் மிகப்பெரிய நகை வணிகர். சேது முதலாளி என்று தான் அவரை அழைப்பார்கள். சிறந்த பண்பாளர். அவருக்குக் காருகுறிச்சியாருடன் நல்ல நட்பு இருந்த்து. ஆகவே அவரை அழைத்துத் தனது டாகுமெண்டரிப் படத்தை வெளியிடச் செய்தார். வ.உ.சி.பூங்காவை ஒட்டிய ஒரு கல்யாண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றைக்குக் கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் கோவிலில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கௌரிசங்கர் விழாவில் தேவதச்சனின் அப்பா காருகுறிச்சியார் பற்றி மிக நன்றாகப் பேசினார். கோவில்பட்டியில் வசித்த காருகுறிச்சியார் பற்றிய நினைவுகள் பலரது மனதிலும் பசுமையாகத் தங்கியுள்ளது. எனது தாத்தா காருகுறிச்சியாரை நெருக்கமாக அறிந்தவர். காருகுறிச்சியார் புது வீடு கட்டித் திறப்பு விழா செய்த போது அதில் என் தாத்தா குடும்பத்துடன் கலந்து கொண்டிருக்கிறார். ஆச்சி அந்த நினைவுகளைப் பலமுறை எங்களிடம் சொல்லியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சி முடிந்த இரவில் கௌரிசங்கர் மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தார்.
“காருகுறிச்சி எப்பேர்பட்ட கலைஞன். அவனுக்கு நம்மாலே முடிஞ்ச சின்னக் காணிக்கை“ என்று சொன்னார். உண்மையில் அவர் நினைத்தது போலப் படத்தை எடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவரிடமிருந்தது.
அந்தப் படத்தை டிசம்பர் ம்யூசிக் சீசன் போது சென்னையில் திரையிட வேண்டும் என்று முனைந்தார். இதற்காக இரண்டு முறை சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்தார்
நாங்கள் ம்யூசிக் அகாதமிக்குச் சென்று விசாரித்தோம். ஒருவரும் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஏதாவது தொலைக்காட்சியில் அதை ஒளிபரப்புச் செய்ய இயலுமா என விசாரித்து அலைந்தார். ஒளிபரப்பு அளவிற்கான தரமில்லை என மறுத்துவிட்டார்கள் என்றார்.
இரண்டு ஆண்டுகள் அந்த வீடியோவை கையில் வைத்துக் கொண்டு பலரையும் சந்தித்து வந்தார். பத்திரிக்கையில் செய்தி வெளியாக உதவும் படி கேட்டுக் கொண்டார். எதுவும் நடக்கவில்லை.
பின்பு அந்தப் படத்தை ஒரு இலக்கிய முகாமில் திரையிடும்படி ஏற்பாடு செய்து அவரிடம் கேட்டேன். அவர் கடைசி வரை அதன்பிரதியை அனுப்பி வைக்கவில்லை.
அதன் பிறகு அவர் தனது டாகுமெண்டரி பற்றிப் பேசுவதையே விட்டுவிட்டார். பல சந்தர்ப்பங்களில் வேறு வேறுவிஷயங்கள் பேசிய போதும் அவர் தனது ஆவணப்படத்தைப் பற்றி எதுவும் பேசமாட்டார். அதை என்ன செய்தார் என்றும் தெரியவில்லை. ஒருவேளை அவரது குடும்பத்தினரிடம் அதன் பிரதி ஏதாவது இருக்கக் கூடும்.
கௌரி சங்கர் ரஷ்ய இலக்கியங்களின் காதலர். அதிலும் குறிப்பாக இவான் துர்கனேவின் தீவிர வாசகர். மூன்று காதல்கதைகளைப் பற்றி அவர் பேசும் போது அவரது கண்களில் ஒளி மின்னும். துர்கனேவை அப்படி யாரும் பேசமுடியாது. அவ்வளவு ஆழ்ந்து படித்திருந்தார். இந்திய நாவல்கள். சர்வதேச நாவல்கள் எனத் தீவிரமாகப் படித்தவர். அதிலும் படித்த விஷயங்களை ஆராய்ந்து சொல்வதில் தேர்ந்தவர். எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமியோடு நல்ல நட்பு கொண்டிருந்தார்.
கோவில்பட்டியிலிருந்து யார் புதிதாக எழுதத் துவங்கினாலும் கௌரி சங்கரிடம் கொடுத்து அபிப்ராயம் கேட்பது வழக்கம். தயவு தாட்சண்யமின்றி விமர்சனம் செய்வார். அதே நேரம் நல்ல கவிதை, நல்ல கதையாக இருந்தால் குளிரக் குளிரப் பாராட்டுவார். சிற்றிதழ்கள் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பி வைக்கும்படி சொல்வார். கோவில்பட்டியின் துர்கனேவ் என்று அவரைக் கேலி செய்வேன். அதை அவர் ரசித்தார்.
கோவில்பட்டியில் காருகுறிச்சியாருக்கு ஒரு சிலையிருக்கிறது. அவருக்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும். காருகுறிச்சியார் நூற்றாண்டினை அரசே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுத்தாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எழுப்பியிருக்கிறார்கள். அவசியம் செய்ய வேண்டிய காரியமது

எனது சஞ்சாரம் நாவலுக்குச் சாகித்ய அகாதமி விருது கிடைத்த போது காருகுறிச்சியாரின் குடும்பத்தினர் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் திருநெல்வேலியில் பெரிய பாராட்டு விழா நடத்தினார்கள். அதில் காருகுறிச்சியாரின் மனைவி எனக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி கொடுத்தார். அதை மிகப் பெரிய பேறு அன்று நாதஸ்வரக் கலைஞர்கள் என்னைக் கௌரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். இது தான் எழுத்தில் எனக்குக் கிடைத்த பெரிய கௌரவம்.
ஒரு வேளை கௌரி சங்கர் நம்மோடு இருந்திருந்தால் காருகுறிச்சியார் நூற்றாண்டு விழாவை பெரியதாக நடத்த முன் நின்றிருப்பார்.
இசைமேதை காருகுறிச்சி அருணாசலம் பற்றிய அவரது டாகுமெண்டரி முழுமையாக எடுக்கப்படவில்லை. பாதியில் முடிந்த கனவது. ஆனால் கனவுகள் தான் ஒருவனை உயிர்த்துடிப்புடன் செயல்பட வைக்கிறது. கௌரிசங்கர் அப்படிக் கனவுகளின் ஊடாகவே வாழ்ந்து மறைத்துவிட்டார்.
கோவில்பட்டியின் அழியா நினைவில் காருகுறிச்சியாரோடு கௌரிசங்கரும் கலந்தேயிருக்கிறார்.
••