சந்தோஷத்தின் தூதுவர்கள்

பல ஆண்டுகளாக மேற்கத்திய இசை மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை விரும்பிக் கேட்டு வருகிறேன். Beethoven, Mozart, Bach, Tchaikovsky, Joseph Haydn, Antonio Vivaldi. Georges Bizet, George Frideric Handel. Chopin, Franz Schubert ,Johannes Brahms, Niccolò Paganini இவர்களைத் தொடர்ந்து கேட்டிருக்கிறேன்.

ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் இசைவிழாக்களில் முக்கியக் கச்சேரிகளைக் கேட்பதும் வழக்கம்.

என்னை விடவும் எனது மனைவிக்கு இசையில் ஆர்வம் அதிகம். சமீபத்தில் நாங்கள் சஞ்சய் சுப்ரமணியன் கச்சேரிக்குப் போயிருந்தோம். சஞ்சயின் குரலைக் கேட்கும் போது வெள்ளையானை ஒன்று ஆகாயத்தில் பறந்து செல்வது போன்ற காட்சி மனதில் தோன்றியபடியே இருந்தது. வெயில் பட்டு மௌனமாகப் பனி உருகுவது போல அவரது மாயக் குரல் என்னை உருகிப் போகச் செய்தது. நிலவில் நடக்கும் மனிதன் எடையற்று மிதந்து வருவதை ஆவணப்படத்தில் கண்டிருக்கிறேன். அது போன்ற ஒரு நிலையில் தான் கச்சேரி முடிந்து வெளியே வந்தேன்.

லாக்டவுன் நாட்களில் நிறைய ஹிந்துஸ்தானி இசைகேட்டேன். குறிப்பாகப் பீம்சென் ஜோஷி, பிஸ்மில்லா கான், ரவிசங்கர், விலாயத் கான், டாகர் பிரதர்ஸ், படே குலாம் அலி, பன்னாலால் கோஷ் எனப் பகலிரவாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

விருப்பமான புத்தகத்தை அடிக்கடி எடுத்துப் படிப்பது போலச் சில ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களை விரும்பிய போதெல்லாம் கேட்பேன். எனக்கு ஒரு குறிப்பிட்ட இசைக்கலைஞரைக் கேட்கத் துவங்கினால் அவரை மட்டுமே தொடர்ந்து கேட்கும் பழக்கமிருக்கிறது.

சில நேரம் வாரக்கணக்கில் பிஸ்மல்லா கான் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அவரது இசையின் வழியே கங்கையில் பூக்கள் மிதந்து செல்வதைக் காணமுடியும். பனிக்காற்றின் ஊடே வாரணாசி வீதிகளில் அலைந்த அனுபவத்தை இசை நினைவுபடுத்தும். அவரைச் சந்தோஷத்தின் தூதுவன் என்றே குறிப்பிடுவேன். பிஸ்மில்லா கான் ஷெனாயை இசைக்கத் துவங்கியதும் சந்தோஷம் நம்மைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்லத் துவங்கிவிடும்.

பன்னாலால் கோஷின் புல்லாங்குழல் உண்மையில் தேவலோகத்திற்கு உரியதே. அவர் வேணுகானத்தைத் தருகிறார். நிலவிற்கு மட்டுமில்லை. இவரது இசைக்கும் பாலாகப் பொழியும் தன்மையிருக்கிறது. அதுவும் தனியே இரவில் கேட்டுப்பாருங்கள். மின்மினிப்பூச்சி போல இசை ஒளிர்ந்து அலையுறுவதை உணரமுடியும்.

நாவல் எழுதும் நாட்களில் இசைக்கலைஞர்களே எனது உறுதுணை. நாவலின் அகத்தை உருவாக்கும் போது சிறந்த இசைக் கலைஞர்களின் துணையில்லாமல் எழுத்து சாத்தியமாகாது என்றே நம்புகிறேன்.

இது போலவே மணிகௌல் இயக்கிய Dhrupad என்ற டாகுமெண்ட்ரியை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கேயில்லை. இசை பற்றிய ஆவணப்படங்களில் இதுவே சிறந்தது என்பேன்.

அவரது சித்தேஸ்வரியும் அபாரமான படம். இரண்டும் இணையத்தில் காணக்கிடைக்கிறது.

சமீபமாக American blues singer-songwriter Muddy Waters பாடல்களை அதிகம் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். நிகரில்லாத குரல்.  இரண்டு சுவை கொண்ட கனியைப் போல இந்த குரலில் துயரமும் ஆனந்தமும் மாறிமாறி ஒலிக்கிறது.

கோவையிலிருந்து சென்னை திரும்பி வரும்போது விமானப்பயணத்தில் படிப்பதற்காக ஒரு புத்தகத்தை வாங்கினேன். Master on Masters என்ற அந்தப் புத்தகத்தை எழுதியவர் சரோத் மேஸ்ட்ரோவான, உஸ்தாத் அம்ஜத் அலி கான்

இதில் தான் சந்தித்துப் பழகிய இந்தியாவின் முக்கிய இசைமேதைகள் 12 பேரை பற்றி எழுதியிருக்கிறார்.

அம்ஜத் அலிகான் இசை சென்னை ம்யூசிக் அகாதமியில் கேட்டிருக்கிறேன். அவரது முக்கியமான இசைத்தொகுப்புகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன். Fusion Music ல் அவர் இணைந்து இசைத்த தொகுப்புகள் அபாரமானவை.

நாம் அறியாத இசைக்கலைஞர்களின் குடும்பம். அவர்கள் இசைகற்றுக் கொண்ட விதம். அங்கீகாரம் பெற மேற்கொண்ட போராட்டங்கள். மற்றும் இசைக்கலைஞர்களுக்குள் உள்ள நட்பு, அவர்களின் பயணம், என இசையுலகின் மறுபக்கத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார்

இசைக்கலைஞர்கள் தங்களின் முன்னோடிகளை, சக கலைஞர்களை எவ்வளவு மதிக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள் என்பதன் சாட்சியமாக இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

இசைக்குடும்பத்திலிருந்து வரும் இசைக்கலைஞர் உருவாகும் விதமும் எந்தப் பின்புலமும் இல்லாமல் தானே இசைகற்று உருவாகி வரும் இசைக்கலைஞரின் திறமையும் ஒன்றில்லை. இரண்டிலும் இசைக்கலைஞரின் பயணம் என்பது எவ்வளவு தடைகளை, சிரமங்களைத் தாண்டி செல்ல வேண்டியது என்பதைப் பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

விமானநிலையத்திலிருந்து நேரடியாகக் கச்சேரி செய்யச் சென்றது. விடிய விடிய நடக்கும் இசைக்கச்சேரிகள். நிகரற்ற இசைமேதமைகளின் முன்னால் வாசித்த அனுபவம், இந்தியப் பாரம்பரிய இசையின் பெருமை, அவர்களின் குருமரபு. தலைமுறைகளைத் தாண்டி தொடரும் இசை என அம்ஜத் அலிகான் தனது நினைவுகளின் வழியே இந்திய இசையின் பெருமைகளை அழகாக விளக்கியிருக்கிறார்.

0Shares
0