சிரிப்பதற்காக அல்ல


பாலஸ்தீனிய கேலிசித்திரக்காரரான நஜி அல் அலியின்(Naji Al-Ali ) கார்டுன்களில் ஒன்றை இரண்டு மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக ஒரு இணையதளத்தில் கண்டேன். அதிலிருந்து அவரை பற்றி தேடி படித்து வந்தேன். சமீபத்தில் அவரது கார்டூன் புத்தகம் ஒன்று கையில் கிடைத்தது. (A Child in Palestine The Cartoons of Naji al-Ali)  அதை புரட்டியதும் மனதில் தோன்றிய வாசகம் இவை சிரிப்பதற்கான கார்டுன் இல்லை என்பதே.பொதுவாக கேலிச் சித்திரங்கள் பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்க கூடியவை. கூடுதலாக அதன் விமர்சனத் தொனி தனித்துவமானதாக இருக்கும். அதிலும் அரசியல் கேலி சித்திரங்களுக்கு உலகெங்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. பாரதியார் தனது இந்தியா இதழில் அரசியல் கேலி சித்திரங்கள் வரைந்திருக்கிறார். அவை தொகுக்கபட்டு தனி நூலாக வெளிவந்திருக்கின்றன. சமகால அரசியல் மற்றவடிவங்களை விட கேலி சித்திரங்களில் தான் உண்மையான விமர்சனத்திற்கு உட்படுகிறது.


நஜிஅல் அலியின் கேலி சித்திரங்கள் பாலஸ்தீன மக்கள் அடைந்த துயரங்களையும் ஒடுக்குமுறையையும், இஸ்ரேலிய ராணுவ ஆக்ரமிப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்கான படுகொலைகள் என்று தீவிரமான அரசியல் பிரக்ஞையோடு உருவானவை. கேலிச்சித்திரம் வரைவதே தனது அரசியல் செயல்பாடு எனும் நஜிஅல்அலி முப்பதாயிரத்திற்கும் அதிகமான கேலி சித்திரங்களை வரைந்திருக்கிறார். தொடர்ந்த அச்சுறுத்தல்கள். கடுமையான தணிக்கை, சிறை தண்டனை என்று அதிகாரம் அவரை முடக்கிய போதும் அவரது செயல்பாடுகள் முடங்கவில்லை. முப்பது ஆண்டுகாலம் புகழ்பெற்ற கேலி சித்திரக்காரராக செயல்பட்டிருக்கிறார்.


1987 ம் ஆண்டு லண்டனில் ஒரு சாலையை கடந்துசெல்லும் போது அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார் நஜிஅல்அலி. ஆனால் இன்றும் அவரது கேலி சித்திரங்கள் தொடர்ந்துமறுபிரசுரம் செய்யப்பட்டு வருகின்றன. உலக அரங்கில் அவரது குரல் இப்போதும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.


ஆர்.கே. லட்சுமண் கேலிசித்திரங்களில் வரும் திருவாளர் பொதுஜனம் போல நஜியின் கேலிசித்திரங்களில் ஒரு சிறுவன் முக்கிய கதாபாத்திரமாக இடம் பெறுகிறான். அவனது பெயர் ஹன்டாலா. அவன் எப்போதும் முதுகை காட்டிக் கொண்டு கையை பின்னால் மடித்தபடியே தான் நிற்பான். அவன் முகம் யாருக்கும் தெரியாது. ஹன்டாலா அழகற்றவன். பத்துவயது தோற்றம்.


ஹன்சாலா தன்னை பற்றிய எழுதிய குறிப்பு ஒன்று சுவாரஸ்யமானது. 


என் பெயர் ஹன்டாலா. (Handala). நான் ஒரு கற்பனை உருவம். என்னை உருவாக்கியவர்  என் அப்பா. அவரது பெயர் நஜி அல் அலி . நான் அவரது சொந்த பிள்ளையில்லை. தத்துபிள்ளை. என் அப்பா எல்லா பாலஸ்தீனியர்களையும் போல சிறுவயதில் வீடு இழுந்து துரத்தபட்டு அகதி முகாமில் வளர்ந்தவர். அவரது அம்மா அகதி முகாமில் இருந்த போதும் மகன் படிக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவராக இருந்தார்.நஜிக்கு சித்திரம் வரைவதில் மிகுந்த ஆர்வம். அவர் அகதி முகாமில் வசித்தபடியே நாள் முழுவதும் சித்திரங்களை வரைந்து கொண்டிருந்தார். ஒவியக்கல்லூரியில் சேர்ந்து அவரை படிக்க வைக்க பெற்றோர்களிடம் வசதியில்லை. ஆகவே அவராக ஒவியம் கற்றுக் கொண்டார். ஒருமுறை அகதி முகாமை பார்வையிட வந்த பாலஸ்தீன கவிஞரான ஹசான் எல் ஹனமானி இவரது கேலிசித்திரங்களை கண்டு பாராட்டி அதை வெளியிடுவதற்கு உதவி செய்தார். அப்படி தான் அவரது படங்கள் வெளியாக துவங்கின.


ஆனால் கண்முன்னே நடக்கும் அவலங்களையும் படுகொலைகளையும் பார்த்துக் கொண்டு அவரால் கேலியான சித்திரங்களை வரைய முடியவில்லை. தனது அரசியல் நிலைப்பாட்டினை அவர் ஒவியமாக வரைந்தார். அதற்காக சிறைக்கு அனுப்பபட்டார். சிறைச்சாலை சுவர் முழுவதும் ஒவியங்களாக வரைந்தார். அப்படி தான் நான் பிறந்தேன்.


என் முகம் எப்படியிருக்கும் என்று தெரிந்த கொள்ள பார்வையாளர்கள் அத்தனை பேருக்கும் ஆர்வமிருக்கிறது. ஆனால் நாட்டில் நடக்கும் வன்முறைகள், வன்கொடுமைகள், மனித அவமதிப்புகள் போன்றவற்றை காண சகிக்காமல் தான் நான் முகத்தை காட்டுவதில்லை. அத்தோடு இன்றுள்ள எந்த நடைமுறை சமரங்களுடன் எனக்கு உடன்பாடில்லை என்பதற்காகவே நான் கைகளை பின்னால் கட்டிக் கொண்டிருக்கிறேன்.


என்னை எவருக்கும் பிடிக்காது. நான் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவேன். நான் செருப்பு அணியாதவன். நடைபாதைகளில் அலையும் கைவிடப்பட்ட சிறுவனை போன்றவன். என்னை எவரும் தனது பிள்ளையாக ஒருபோதும் கருதமாட்டார்கள். நான் பயமற்றவன். என் நாக்கை அதிகாரமோ, அமைப்போ எதுவும் கட்டிப்போட முடியாது. எனக்கு நிறைய எதிரிகள் உண்டு. என்னை கண்டு கோபம் கொள்பவர்கள் அதிகம். என்னை நேசிப்பவர்கள் எளிய மக்கள். அவர்களுக்காகவே நான் குரல்கொடுக்கிறேன் என்று ஹன்டாலா கூறுகிறான்


ஹன்டாலா சொன்னது போல நஜி சிறுவயதில் இருந்தே அகதிமுகாமில் வளர்ககபட்டவர். இளமையில் சில காலம் குவைத்தில் ஒவிய ஆசிரியராக வேலை செய்திருக்கிறார். ஒரு சில வருசங்கள் நாளேடு ஒன்றில் பணியாற்றினார். பின்பு பெய்ரூட் திரும்பி அங்குள்ள அல் சபார் என்ற நாளேட்டில் கேலி சித்திரக்கராராக பணியாற்றினார். அது தான் அவரது வாழ்வின் சாதனைகள் நிறைந்த பகுதி. தணிக்கையும் அச்சுறுத்தலும் மீறி அவர் தன்னை சுற்றிய அரசியல் நெருக்கடிகளை மிக நேர்மையாக ஒவியம் வரைந்தார். ஆனால் இஸ்ரேலிய ஆக்ரமிப்பு காரணமாக அந்தவேலையை தொடர்ந்து செய்யமுடியவில்லை. லண்டனில் உள்ள அல் குபாஸ் என்ற நாளேட்டில் பணியாற்ற சென்றார். அங்கும் அவரது உயிர் அபாயம் தொடர்ந்தது.


தனது பணியை முடித்துவிட்டு சாலையை கடந்து வரும்போது அவர் கொல்லபட்டார். கற்பனை உருவமான ஹன்டாலா இன்று வரை அவரை கொன்றவர்கள் யார் என்று தனக்கு தெரியாது. உலகிற்கும் தெரிவிக்கபடவில்லை என்று குற்றவுணர்ச்சியோடு கூறுகிறான். அத்துடன் நஜியை கொல்லமுடியும். ஹன்டாலாவை ஒரு போதும் எவராலும் அழிக்க முடியாது. அவன் சுதந்திரத்திற்காக தன் குரலை ஒலித்துக் கொண்டேயிருப்பான் என்கிறான் ஹன்டாலா.


எதிர்ப்புணர்ச்சியும் சகமனிதன் மீதான அக்கறையுமே தனது ஒவியங்களின் அடிப்படை என்று சொல்லிய நஜி கடைசிவரை போராளியாகவே வாழ்ந்திருக்கிறார். இன்று அகதி முகாம்களில் வசிக்கும் சிறுவர்கள் தங்களது பனியன்களில் ஹன்டாலாவின் உருவத்தை தங்களதுஅடையாளமாக பொறித்திருக்கிறார்கள். ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் தருபவனாக ஹன்டாலா அடையாளம் காணப்படுகிறான்.


உண்மையை மட்டுமே சுட்டிக்காட்டக்கூடிய காந்தமுள் நஜியின் ஒவியங்கள் என்று புகழ்ந்து சொல்கிறார் அராபிய கவிஞர் அஹமது மதார்.


நான் அந்த கேலிசித்திரங்களை பலமுறை திரும்ப திரும்ப புரட்டி படித்தேன். பார்த்தேன். சில நேரங்களில் ஹன்டாலா குட்டி இளவரசன் நாவலில் வரும் குட்டி இளவரசன் கதாபாத்திரம் போன்று தோன்றுகிறான்.  வன்முறையின் முன்பு அவன் தலைகுனிந்து நிற்பது நம்மை குற்றவுணர்ச்சி கொள்ள செய்கிறது.  ஹன்டாலா அதிகம்பேசுவதில்லை. மாறாக யாராலும் எதிர்க்க முடியாது என்று நம்பும் அரசியல் நிகழ்வுகளை அவன் எதிர்க்கிறான். இருட்டடிப்புகளை அவன் வெளிச்சமிட்டு காட்டுகிறான்.  முல்லாவின் புத்திசாலி தனமும், சூபி ஞானிகளின் கருணையும் அவனிடம் காணப்படுகிறது.


நஜியின் கேலிசித்திரங்களை தமிழில் தனிநூலாக எவராவது கொண்டுவரலாம். அது சமகால அரசியல் பிரக்ஞையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றே தோன்றுகிறது.


இணையதளங்கள்.


https://www.najialali.com/


https://www.handala.org/


***

0Shares
0