சிறிய உண்மைகள்-1

அபுவின் சந்தோஷம்.

சத்யஜித்ரேயின் அபூர் சன்சார் படத்தில எழுத்தாளராக ஆக விரும்பும் அபு தன் நண்பனிடம் தனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் பெயரைச் சொல்கிறான். அது மூலத்தில் விபூதி பூஷன் எழுதியதா என்று தெரியவில்லை. ஆனால் சத்யஜித் ரேயிற்குத் தஸ்தாயெவ்ஸ்கியைப் பிடிக்கும் என்பதை அவரது நேர்காணலில் தெரிந்து கொள்ள முடிகிறது. புகழ்பெற்ற சினிமா இயக்குநர்கள் பலரும் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகர்களே.

அகிரா குரசேவா நேர்காணல் ஒன்றில் இடியட் நாவலைப் படமாக்கும் போது ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடித்த நடிகை தான் எவ்வாறு அந்தக் காட்சியில் சிரிக்க வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்குத் தனக்கு விடை தெரியாமல் உடனே நாவலைப் புரட்டிப் படித்தபோது அந்த இடத்தில் எது போன்ற சிரிப்பு வெளிப்பட்டது எனத் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருப்பதாகவும் சொல்கிறார். நாவலின் நுட்பமான விஷயங்களைச் சினிமா எவ்வளவு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு அது ஒரு உதாரணம் என்கிறார் குரசேவா. அவரும் தஸ்தாயெவ்ஸ்கியின் தீவிர ரசிகரே. அவர் இலக்கியத்திலிருந்தே நல்ல சினிமா உருவாக முடியும் என்கிறார்.

தஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் பொருந்தாத திருமணங்களைப் பற்றியே அதிகம் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக அப்படியான திருமண உறவில் பெண் சந்திக்கும் பிரச்சனைகளைத் தான் எழுதுகிறார்கள். அவள் புதிய காதலுக்கு உட்படுவதும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் விவரிக்கிறார்கள். அல்லது திருமணம் செய்யாமல் ஏமாற்றப்பட்ட பெண்ணை, திருமணமே செய்து கொள்ளாமல் வாழ விரும்பும் பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் ஒருவர் விவாகரத்து பெற வேண்டும் என்றால் மனைவியோ, கணவனோ கள்ளக்காதலில் ஈடுபட்டதற்கான சான்றாகக் கடிதங்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டும். இப்படியான சாட்சியம் இல்லாமல் விவாகரத்து கிடைக்காது. கள்ளக்காதல் இல்லாமல் பிரிந்து போக மணமான பெண்ணோ, ஆணோ நினைத்தால் வாய்ப்பே கிடையாது. அன்னாகரீனினா நாவலில் இது பற்றி விவாதிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் மன்னர் குடும்பம் முதல் குதிரைவண்டி ஒட்டுகிறவன் குடும்பம் வரை திருமணம் தான் முக்கியப்பிரச்சனை. அது ரஷ்ய இலக்கியத்தில் தீவிரமாக வெளிப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான குடும்பத்தைப் பற்றி எழுத என்ன இருக்கிறது என்பதால் சிக்கலான, குழப்பமும் பிரச்சனைகளும் நிறைந்த குடும்பத்தின் கதைகளை இருவரும் எழுதியிருக்கிறார்கள். நிராகரிப்பும் மன்னிப்பும் தான் இவர்களின் மையப்புள்ளி. ஆனால் இந்தக் கதைக்கருவை அவர்கள் கையாண்ட விதமும் அதற்கு ஏற்படுத்திய ஆழமும் முக்கியமானது.

டால்ஸ்டாய் இரண்டு வயதிலே அன்னையை இழந்தவர். தஸ்தாயெவ்ஸ்கியின் தந்தை படுகொலை செய்யப்பட்டவர். இப்படி இளமையில் தாயைத் தந்தையை இழந்தவர்களின் வெளிப்படாத நேசமும் ஏக்கமும் கலையில் புதிய வெளிச்சமாக, ஆழமான தரிசனமாக வெளிப்படுகிறது.

அபூர் சன்சார் படத்தில் நண்பனின் தங்கை திருமணத்திற்காக வங்காள கிராமம் ஒன்றுக்குப் படகில் செல்கிறான் அபு. அவர்கள் படகில் செல்லும் காட்சி மிக அழகானது. முதன்முறையாக நண்பனின் வீட்டிற்குச் செல்லும் போது நண்பனின் அம்மா அபுவை பார்த்த மாத்திரம் அவனை இதற்கு முன்பு பார்த்தது போலவும் ஏதோ இனம் புரியாத நெருக்கம் இருப்பதாகவும் கூறுகிறார். அது அபுவிற்கே புரியவில்லை. அன்னையின் ஆசியைப் பெறுகிறான்.

அபர்ணா என்ற அந்த மணப்பெண்ணிற்கு ஏற்பாடு செய்திருந்த மாப்பிள்ளை மனநலமற்றவன் எனத் தெரிந்து திருமணம் தடையாகும் போது நண்பன் அபுவை தனது தங்கையைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டுகிறான். அபு தயங்குகிறான்.

அபுவின் உலகில் பெண்களே இல்லை. அவன் அறிந்த இரண்டே பெண்கள் அவனது துர்கா மற்றும் அவனது அம்மா.

துர்காவின் இறப்பு அவனை ஆழமாகப் பாதித்திருக்கிறது. அவன் அபர்ணாவை நண்பனுக்காகவே திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்கிறன. அந்தக் காட்சியில் குடும்பமே அவன் பதிலுக்காகக் காத்துகிடக்கிறது. சம்மதம் தெரிவிக்கும் அபு தான் சவரம் செய்துகொள்ளவில்லை. புதிய ஆடைகள் இலலையே என்கிறான். நண்பன் ஏற்பாடு செய்கிறான் திருமணம் நடக்கிறது. அந்தத் திருமணக்காட்சி நூற்றாண்டின் முந்தைய பண்பாட்டு அடையாளம். இந்தக் காட்சியின் முடிவில் அந்த வீட்டு மனிதனாகி விடுகிறான் அபு.

அபுவை முதன்முறையாகப் பார்க்கும் போது நண்பனின் அம்மா சொன்னது உண்மையாகிவிடுகிறது. இது போன்று சிலரது வீட்டிற்குப் போகையில் பார்த்தவுடனே நெருக்கம் ஏற்படுகிறது. நீண்டகாலம் பழகியது போல உணர்வு ஏற்படுகிறது. அவர்களும் இதை உணருகிறார்கள். இது ஏன் என்று காரணம் புரியவில்லை. ஏதோ ஒரு விடுபட்ட பந்தம் மீண்டும் ஏற்படுவது போன்ற உணர்வது. ஒன்று சேர வேண்டிய மனிதர்கள் எப்படியாவது ஒரு புள்ளியில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். காலம் அதற்கான சூழலை வழிகளை உருவாக்கும் என்பார்கள். அது உண்மை என்றே தோன்றுகிறது.

நீண்டகாலத்தின் முன்பு ஒரு ஆப்ரிக்கக் கதையை வாசித்த நினைவு. அதில் ஒரு பெண் சாலையில் ஒருவரைச் சந்திக்கிறாள். அந்த ஆளின் சிரிப்பு அவளுக்குப் பிடித்திருக்கிறது. அச் சிரிப்பு அலாதியானது. ஒரு மலர் விரிவது போல வசீகரமானது. அந்தச் சிரிப்பை அவளால் மறக்க முடியவேயில்லை. வாழ்க்கையின் பல்வேறு கஷ்டமான சூழலின் போது அந்தச் சிரிப்பை நினைத்துக் கொள்கிறாள். அது ஆறுதல் தருகிறது. அது பேன்ற ஒரு ஆணின் சிரிப்பை அதன் பிறகு வாழ்நாளில் அவள் பார்க்கவேயில்லை. அபூர்வமான சிரிப்பு. அவளது முதுமை வரை அந்தச் சிரிப்பு அவள் கூடவே வருகிறது. கடைசிவரை அவளுக்கு அந்த மனிதன் யாரெனத் தெரியாது. ஆனால் அவனது சிரிப்பு ஒரு வெளிச்சம் போல வழிகாட்டுகிறது

இப்படிச் சிலரது சிரிப்பும் முகங்களும் பார்வையும் காலம் கடந்தும் நம்மோடு கூடவே வருகின்றன. பழைய திரைப்படங்களைக் காணும் போது அதில் வரும் கதாபாத்திரங்களில் யாரோ ஒருவர் நம் குடும்பத்தில், அல்லது உறவில் உள்ள ஒருவரை நினைவுபடுத்துவார். அப்படி நான் அதிகம் உணர்ந்திருக்கிறேன். சிலரது ஜாடை நமக்கு யாரையோ நினைவுபடுத்தும்.

அபு ஏன் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணை நேரில் பார்க்க வேண்டும் என்றோ பேச வேண்டும் என்றோ சொல்லவேயில்லை. அவன் நண்பனை முழுமையாக நம்புகிறான். அந்தப் பெண்ணை அவன் திருமண மேடையில் தான் முதன்முறையாகச் சந்திக்கிறான்.

அபுவிடம் கேட்டது போல அபர்ணாவிடம் யாராவது அண்ணனின் நண்பனைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டிருப்பார்களா. அவளது முடிவைப் பற்றி யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.

1769 வியன்னாவில், ஆஸ்திரியாவின் பேரரசி மரியா தெரேசா தனது மகள் மரியா அன்டோனியாவிடம் அவளுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. மணமகன் பிரான்சின் இளவரசன் லூயிஸ்-ஆகஸ்டே என்கிறார். மரியா இதைக் கேட்டுச் சந்தோஷம் அடைகிறாள். வருங்காலப் பிரான்சின் ராணியாக ஆகப்போவதைப் பற்றிக் கனவு காணுகிறாள்

திருமண நாளின் போது தான் மாப்பிள்ளை லூயி மனவளர்ச்சியில்லாதவர் என்பது தெரியவருகிறது. ராஜ்ஜிய உறவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்பதை அறிந்து கொள்கிறாள். தனக்கு விருப்பமில்லாத போதும் அவள் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறாள்.

அபர்ணாவின் கதையும் அதுவேதான். ஆனால் இளவரசியைப் போலின்றி அபர்ணா திருமணம் நின்று போய்விடுகிறது. அபு மணமகன் ஆகிறான்.

பதேர்பாஞ்சாலி நாவல் விபூதி பூஷணின் சொந்த வாழ்க்கை. அவரது மனைவி கௌரி தேவியும் இது போலவே பிரசவத்தில் இறந்து போய்விட்டார். மனைவியை இழந்த விபூதி பூஷண் அடைந்த துயரம் தான் நாவலிலும் வெளிப்படுகிறது

பதேர்பாஞ்சாலி விபூதி பூஷணின் முதல் நாவல். அதிலே எத்தனை நுட்பமாக, ஆழமாக, தனது நினைவுகளையும் வாழ்க்கையினையும் பதிவு செய்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது.

அபு திருமணம் செய்து கொண்டு இம்மனைவியைக் கல்கத்தாவிலுள்ள தனது அறைக்கு அழைத்துக் கொண்டு வரும் காட்சி அற்புதமானது. அதில் அபர்ணாவின் தயக்கம். கூச்சம். மெல்லிய பயம் யாவும் அழகாக வெளிப்படுகிறது. அவர்கள் படியேறிப் போகும் போது யாரும் பார்த்துவிடக் கூடாது என்று அபு நினைக்கிறான். அவனுக்குத் திருமணம் நடந்த விஷயம் யாருக்கும் தெரியாது. முடிவில் அந்தக் குடியிருப்பே ஒன்று சேர்ந்து புதுப்பெண்ணைக் காணுகிறார்கள். வியக்கிறார்கள்.

அபர்ணா அபுவின் அறையை வீடாக மாற்றுகிறாள். அதற்கு அவள் செய்யும் முதல் வேலை கிழிந்த ஜன்னல் திரைச்சீலையை மாற்றுவது. அறையை வீடாக மாற்றுவது பெண்களால் மட்டுமே இயலும். அவளது வருகை அந்த அறையை ஒளிரச் செய்கிறது. மிகக் குறைவான காட்சிகளில் அவர்களின் நெருக்கமும் காதலும் சீண்டலும் சிறப்பாகச் சித்தரிக்கப்படுகிறது.

அபு மிகச் சந்தோஷமாக இருந்த நாட்கள் அது மட்டுமே. பால்யத்தின் விளையாட்டுத் தனம் துர்கா இறந்த பிறகு அவனிடம் மாறிவிடுகிறது. குடையோடு அவன் வெளியேறி நடக்கிறான். அந்த வளர்ந்த மனிதன் இந்தத் திருமணத்தின் பிறகே தனது உண்மையான சந்தோஷத்தை மீட்டு எடுக்கிறான்.

அபர்ணவும் அபுவும் முதன்முறையாகத் திருமண இரவில் சந்தித்துக் கொள்ளும் போது அபர்ணா முழுமையாக அவனைப் புரிந்து கொண்டிருக்கிறாள். அதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறாள். அவர்களுக்குள் இடைவெளி உருவாகவேயில்லை.

அபு ரயிலை முதன்முறையாகக் காணுவது போலவே அபர்ணாவும் ரயிலைக் காணுகிறாள். கடந்து செல்லும் உலகின் சாட்சியமாக ரயில் இடம்பெறுகிறது. ரயில்வே டிராக்கில் அபு நடந்து வருவதும். வீட்டிலிருந்தபடியே கடந்து செல்லும் ரயிலைக் காணுவதும் மிக அழகான காட்சிகள்.

அபர்ணாவும் துர்காவும் ஒரே நாணயத்தின் இருவேறு பக்கங்கள். இருவரிடம் நிறைய ஒற்றுமைகளைக் காண முடிகிறது. துர்கா காட்டிய அன்பினை அபர்ணாவிடமும் உணருகிறான். ஏன் அபுவின் சந்தோஷம் நிலைக்கவில்லை.

ஒவ்வொரு உறவை இழக்கும் போதும் அபு தன்னளவில் பெரிய மாற்றம் கொள்கிறான். உலகம் அவனிடம் கருணையாக நடந்து கொள்ளவில்லை. அபு காணும் கனவுகள் யாவும் கலைந்த மேகங்களாகி விடுகின்றன.

பதேர்பாஞ்சாலி நாவல் தமிழில் வெளியாகியுள்ளது. எத்தனை பேர் அதை வாசித்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான நாவல். படத்தில் ரே காட்டியது அந்தப் பெரும் உலகின் முக்கியக் காட்சிகளை மட்டுமே. ஆனால் உண்மையாக, நேர்மையாக அதைச் சித்தரித்திருக்கிறார்.

பதேர்பாஞ்சாலியை முதல் நாவலாக விபூதி பூஷண் எழுதியது போலவே ரேயும் தன் முதல் படமாக அதை உருவாக்கத் தேர்வு செய்திருக்கிறார். ஒரு சுடரைக் கொண்டு இன்னொரு சுடரை ஏற்றியது போன்ற பணியது.

அபூர் சன்சாரைத் தேனை ருசிப்பது போலத் துளித்துளியாக ருசிக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் இப்படத்தின் இனிமை குறைவதேயில்லை

•••

0Shares
0