சிறிய உண்மைகள் 3 நட்சத்திரத்தின் நிழல்

தொலைவிலிருந்து பார்க்கும் போது தான் நட்சத்திரங்கள் அழகாக தெரிகின்றன. அவை தரையிறங்கி வந்துவிட்டால் அதன் மதிப்பு போய்விடும். நட்சத்திரத்திற்கும் நமக்குமான இடைவெளி தான் அதன் அழகை வியக்க வைக்கிறது.

சத்யஜித்ரேயின் நாயக் திரைப்படத்தில் புகழ்பெற்ற நடிகர் அரிந்தம் முகர்ஜி (உத்தம்குமார்) டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது வாங்குவதற்காக கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்கிறார்.

அந்த ரயில் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள். மற்றும் அரிந்தம் முகர்ஜியின் கடந்தகால நினைவுகளின் வழியே சுவாரஸ்யமான கதையைச் சொல்கிறார் சத்யஜித்ரே.

இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஒன்று நிகரற்ற பெயரும் புகழும் பணமும் இருந்த போதும் அரிந்தமிற்கு உறக்கம் வருவதில்லை. அவர் தூக்க மாத்திரையைப் போட்டுக் கொண்டு தான் உறங்குகிறார்.

இவரைப் போலத் திரையுலகில் புகழ்பெற்ற சிலர் உறக்கமில்லாமல் அவதிப்படுவதை நான் அறிவேன். எவ்வளவு குடித்தாலும் அவர்களால் உறங்க முடியாது. தூக்க மாத்திரையைப் போட்டுக் கொண்டு அரைமணி நேரமோ ஒரு மணிநேரமோ தூங்கமுடியும். பிறகு பின்னிரவில் விழித்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் திண்டாடுவார்கள். அதுவும் வெளியூர் படப்பிடிப்பாக இருந்தால் விடுதியின் வராந்தாவில் நடந்து கொண்டேயிருப்பார்கள். சிலர் இதற்காகக் காரை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் போய்வருவதுண்டு. போதுமான உறக்கமின்றித் தொடர்ந்து இருப்பதால் சிடுசிடுப்பும் கோபமும் அதிகமாகி திடீரென வன்முறையில் இறங்கி விடுவார்கள்.

அரிந்தம் ரயில் பயணத்தில் குடிக்கிறார். துர்கனவிலிருந்து எழுந்து கொள்கிறார். போதையில் அவர் தன்னிஷ்டம் போல நடந்து கொள்கிறார். உத்தரவு போடுகிறார். இந்தத் தத்தளிப்பு அழகாகப் படத்தில் இடம் பெற்றிருக்கிறது

அரிந்தம் முகர்ஜியின் இன்னொரு பிரச்சனை கடந்த கால நினைவுகள். அதுவும் நாடகமேடையிலிருந்து சினிமாவிற்குச் செல்வதை அவரது குரு சங்கர்தா அனுமதிக்காத போது அவர் சினிமாவில் கிடைக்கும் பணம் மற்றும் புகழுக்காக நாடகமேடையை விட்டு விலகி வருகிறார். அந்தக் குற்றவுணர்வு அவரை வதைக்கிறது.

அந்தக் கனவை ரே மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார். சர்ரியலிசக் காட்சியது. பணக்குவியலில் சிக்கிப் புதைந்து போகிறான் அரிந்தம். தன்னை மீட்கும்படி குருவைக் கெஞ்சுகிறான். அவர் உதவி செய்வதில்லை. முடிவில் பணத்திற்குள்ளாகவே புதைந்து போகிறான். இப்படியான குற்றவுணர்வு கொண்டவர்கள் வெகு குறைவே.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாடகத்திலிருந்து திரைப்படவுலகிற்கு நடிகர் நடிகைகள் நுழைந்த போது இந்த விவாதம் பெரிதாக இருந்த்து. இன்று சினிமாவில் நுழையும் பலரும் நாடகத்தில் நடிப்பதை ஆரம்பப் பயிற்சியாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் அப்படியான குற்றவுணர்வுகளைக் காண முடிவதில்லை. மனசாட்சியுள்ளவர்களே குற்றவுணர்வு கொள்வார்கள் என்று ரே குறிப்பிடுகிறார்.

ஆனால தேசிய நாடகப்பள்ளியை பற்றிய ஒரு ஆவணப்படத்தில் அதன் இயக்குநர் சொன்னது நினைவிற்கு வருகிறது.

தனது நாடகப்பள்ளியின் மிகச்சிறந்த நடிகர்களைச் சினிமா உலகம் விழுங்கிவிட்டது. அவர்கள் மேடையை விட்டுப் போனது பெரும் இழப்பு. சொந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நிறையப் பணமும் பெயரும் கிடைத்திருக்கலாம். ஆனால் அவர்களைச் சிறந்த மேடை நடிகர்களாகக் கொண்டுவந்த நாடகப்பள்ளிக்கு அது பெரிய இழப்பே என்கிறார். அது உண்மையே.

இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர்கள் ஒரு காலத்தில் நாடகமேடையில் சிறந்த நடிகர்களாக ஒளிர்ந்தார்கள். இன்றும் சிலர் நாடகம் செய்கிறார்கள் என்ற போதும் அவர்கள் கவனம் சினிமாவின் மீது தான் குவிந்துள்ளது.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் எலியா கசன் நாடகமேடையில் நடிகராக இருந்தவர். சிறந்த பிராட்வே நாடகங்களை இயக்கியவர். அவரது கண்டுபிடிப்பு தான் மார்லன் பிராண்டோ. அவரை மேடையில் அறிமுகம் செய்து புகழ்பெற வைத்த எலியா கசன் பின்பு சினிமாவிலும் தனித்துவமிக்க நடிகராக உருவாக்கினார்.

ஒரு நேர்காணலில் பிராண்டே தனது நாடகப்பயிற்சிகளே சினிமாவில் சிறப்பாகத் தன்னை வெளிப்படுத்தக் காரணமாக இருந்த்து என்கிறார்

ரேயின் நாயக் படத்தில் ஒரு காலத்தில் புகழ்பெற்றிருந்த நடிகர் முகுந்தா லாஹிர் தற்போது வறுமையில் வாடுவதுடன் வாய்ப்பு கேட்டு அரிந்தமைத் தேடி வருகிறார். அவருக்கு ஒரு கிளாஸ் மதுவைத் தருகிறான் அரிந்தம். அதை ரசித்துக் குடித்தபடியே ஏதாவது சிறு வேஷம் கொடுத்தால் கூடப் போதும். தான் மிகவும் வறுமையான சூழலில் இருக்கிறேன் என்று கிழவர் மன்றாடுகிறார். அவர் தான் அரிந்தமின் ஆரம்பக் காலத்தில் அவனை அவமானப்படுத்தியவர். நடிப்பில் புலி என்று பெயர் பெற்றவர். அவர் தற்போது பூனை போல ஒடுங்கி நிற்பதை அரிந்தம் காணுகிறான். காலமாற்றத்தில் இப்படியான வீழ்ச்சியற்றவர்கள் பரிதாபமான நிலையில் காத்திருப்பது மறக்கமுடியாத காட்சி. இந்த நிலை இன்றும் தொடரவே செய்கிறது.

ரயிலில் அரிந்தமை சந்திக்கும் அதிதி பெண்கள் பத்திரிக்கைக்காக அவரைப் பேட்டி காண முயல்கிறாள். ஒரு ரயில்நிலையத்தில் வெளியே கூட்டம் அரிந்தமைக் காண தள்ளுமுள்ளு செய்து கொண்டிருக்கும் போது அவர் கண்ணாடி ஜன்னலின் வழியே அதை ரசித்துக் கொண்டிருப்பதைக் காணுகிறாள். அப்போது தன்னை மறைத்துக் கொள்ள முயல்கிறாள். அரிந்தம் அவள் மீது ஈர்ப்பு கொள்கிறார். அவருடன் பேச விரும்பாத அதிதி மெல்ல அவரது சொந்த வாழ்க்கையைத் தெரிந்து கொள்கிறாள். ஆனால் அதைத் தனது பத்திரிக்கையில் எழுத விரும்பவில்லை.

புகழ் மற்றும் பணம் இருந்த போதும் அரிந்தம் மிகவும் தனிமையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறாள். உலகின் கண்களுக்கு அரிந்தம் எப்போதும் ஒரு நட்சத்திரம் மட்டுமே. அவரே நினைத்தாலும் அதை மாற்றிக் கொள்ள இயலாது.

பதேர்பாஞ்சாலியில் ரயிலைக் காணுவதற்காக அபுவும் துர்காவும் ஓடுகிறார்கள். புகையோடு செல்லும் ரயில் அதிசயமாகத் தோன்றுகிறது. அந்த ரயிலிலிருந்து நாயக்கில் வரும் ரயிலும் ரயில் பயணத்தையும் கணக்கில் கொண்டால் அந்த அதிசயம் கலைந்து போய் ரயிலைவிடவும் அதில் பயணம் செய்யும் மனிதர்களே வியப்பானவர்கள் என்று தோன்றுகிறது. ரயிலில் ஆளுக்கு ஒரு ஆசை. தந்திரமாக அதை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறார்கள்.

வெற்றி தான் நடிகரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. வசூலில் அவர் அடையும் வெற்றியும் சொந்த வாழ்வில் அவர் அடையும் வெற்றியும் ஒன்று போல இருப்பதில்லை. இந்தச் சமநிலையற்ற தன்மையே நட்சத்திரங்களின் விதி. அதைத் தான் ரே சுட்டிக்காட்டுகிறார். அதை அதிதி சரியாகப் புரிந்து கொள்கிறாள்.

நம் வாழ்வில் சிலரிடம் உண்மையாக இருக்கவும் நடந்து கலந்து கொள்ளவும் ஆசைப்படுவோம். அரிந்தம் நடந்து கொள்வதும் அது போன்றதே.

0Shares
0