சிஹாபுதினின் கதைகள்

சமகால மலையாளச் சிறுகதை இலக்கியத்தில் புதியதொரு எழுத்துவகையை உருவாக்கியவர் சிஹாபுதின் பொய்த்தும்கடவு. நாவலாசிரியர், கவிஞர், பத்திரிக்கையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இயக்குனர் எனப் பன்முகப்பட்ட ஆளுமை. இவரது பனிரெண்டு சிறுகதைகளின் தொகுப்பாக யாருக்கும் வேண்டாத கண் வெளியாகியுள்ளது.

தினசரி வாழ்க்கையைக் கவிதைகள் கையாளுவது போல உருவகத்தளத்திலோ, அரூபமாக்கியோ, பன்முகப்படுத்தியோ சிறுகதைகளாக உருவாக்குகிறார் சிஹாபுதின். இது ஒருவகை மாய யதார்த்த எழுத்து. ஆனால் கேப்ரியல் கார்சியா மார்க்குவெஸ் வகையிலிருந்து மாறுபட்டது. கவித்துவமான, இந்திய புராணீக மரபிலிருந்து உருவாகி வந்த நீட்சி போன்ற மாயமது.

சிஹாபுதின் எழுதிய தலை என்றொரு சிறுகதையிருக்கிறது. பார்வையற்றவர்களின் திருமண வீட்டில் நடக்கும் விருந்திற்கு உடல் மட்டும் தனியே சென்றுவிடத் தனித்துவிடப்பட்ட தலை தனக்குத் தானே பேசிக் கொள்வது போல எழுதப்பட்டிருக்கிறது.

பார்வையற்றோர் திருமணத்தில் தலைக்கு ஒரு வேலையுமில்லை என உடல் அதைத் தனித்துவிட்டுப் போகிறது. துண்டிக்கபட்ட தலை, தன்னிருப்பு குறித்து ஆராயத் துவங்குகிறது.

மூளை தான் உலகை மாற்றியதா, அல்லது உடல் உழைப்பு மாற்றியதா என முன்னதாகத் தலையும் உடலும் ஒருமுறை சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.இதில் உடல் தன்னைத் தலை அவமானப்படுத்தி விட்டதாகக் கருதுகிறது

எங்கே இந்தக் கோபத்தில உடல் தன்னைக் கைவிட்டுவிடுமோ எனத் தலை பயப்படுகிறது. அதே நேரம் தனது உதவியில்லாமல் உடல் தனித்து வாழ முடியாது எனவும் அதற்குப் புரிகிறது,

உடல் எப்போதும் விளம்பரங்களால் எளிதாக மயங்கிவிடக்கூடியது எனத் தலை குற்றம் சாட்டுகிறது. உடலும் தலையும் சேர்ந்திருப்பது எதன் அடிப்படையில் என்ற கேள்வி இதில் தத்துவார்த்த தளத்திலிருந்து நடப்பியல் தளத்திற்கு இடம் மாறுகிறது.

உடலும் தலையும் தனியே தான் இயங்குகின்றன.ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது அவசியம் கருதி மட்டுமே. இரண்டு அதனதன் தனிமையை  உணர்க்கின்றன. முடிவில் தன்னிடம் திரும்பி வந்துவிடும் படியாக உடலை அழைக்கிறது தலை.

உருவகக்கதை போன்ற தோற்றம் கொண்ட போதும் தலைகுறித்த நமது புரிதலையும் உடல் குறித்த விழிப்புணர்வையும் கேள்விக்குள்ளாக்கி புதிய அனுபவத்தை தருகிறது இக்கதை.

ஒருமுறை உடல் உறுப்புகளுக்குள் யார் பெரியவர் எனச் சண்டை வந்தது, இதனை முடிவு செய்ய ஒவ்வொரு உறுப்பும் வேலை செய்ய மறுத்து ஒடுங்கிக் கொண்டன . இதனால் உடல் மயங்கி விழுந்தது. முடிவில் ஒன்று சேர்ந்து இயங்குவதே உடலின் இயற்கை என அறிந்து கொண்டன எனச் சின்னவயதில் ஒரு கதையைப் படித்திருக்கிறேன்.

அக்கதையில் நாக்கு, மூக்கு, காது, வயிறு என உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பேசியது விசித்திரமாக இருந்தது. அந்தக் குரலை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நவீன சிறுகதையில் மறுபடி கேட்கிறேன்.

விலாஸ் சரங் இது போன்ற ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அதில் ஒரு பெண்ணின் உடல் இடுப்பிற்குக் கிழே ஒரு பகுதியாகவும் இடுப்பிற்கு மேலே ஒரு பகுதியாகவும் இரண்டாகத் துண்டிக்கபட்டு ஆணின் தேவைக்கு ஏற்ப துணையாக அனுப்பி வைக்கபடுவாள். இந்தத் துண்டித்தல் போகத்திற்காகப் பெண்கள் பயன்படுத்தபடுவதும் அறிவு சார்ந்த பெண்களின் இருப்பும் குறித்துப் பேசுகிறது.

தாமஸ் மான் எழுதிய மாறிய தலைகள்( The Transposed Heads ) குறுநாவல் தத்துவம் படித்த ஒருவனின் தலையும் கடின வேலைகள் செய்யும் உழைப்பாளி ஒருவனின் தலையும் இடம் மாறிவிடுவதைப் பற்றிப் பேசுகிறது. இதில்  தலையே உடலை ஆள்கிறது. சமூகம் தலைக்கு தரும் மரியாதையை உடலுக்கு தருவதில்லை என்பதை தாமஸ் மான் நுட்பமாக விவரிக்கிறார்.

இப்படியாக  இலக்கிய வரலாற்றில்  துண்டிக்கபட்ட உடல்களும்  தலைகளும் நிறைய இருக்கின்றன

சிஹாபுதினின் சிறுகதையில் தலையின் துண்டிக்கபட்ட நிலை நமக்கு அதிர்ச்சியளிப்பதில்லை, மாறாக அது பொம்மை ஒன்றின் துண்டிக்கபட்ட தலையைப் போலவே வேடிக்கையாகத் தோன்றுகிறது. ருசியும் மணமும், ஒசைகளும் மட்டுமே தனக்கானது, உணவு உடலுக்கானது எனத் தலை சொல்கிறது. இதன் வழியே உடலும் தலையும் இருவேறு பரிமாணங்களில் இயங்குகின்றன என்பது  தெளிவாக உணர்த்தப்படுகிறது

சிஹாபுதின் தலையைத் துண்டிப்பதன் வழியே உடலின் இயக்கத்தைத் தனித்துப் பேச முடியும் என்பதை அடையாளம் காட்டுகிறார்.

இன்றைய சிறுகதை இது போன்ற ஒரு சவாலை முன்வைத்தே தன் வெற்றியை சாதிக்கிறது. குறிப்பாகக் கதை சொல்லும் முறையிலும். கதைக்கருவாகத் தேர்வு செய்யப்படும் பொருளிலும் சிஹாபுதீன் காட்டும் தனித்துவம பாராட்டிற்குரியது

இன்னொரு கதை டிராகுலா இதில் வரும் சையத் அலி எப்போதும் வம்பு பேச்சில் ஈடுபவர், ஏதாவது வதந்திகளை உருவாக்கி கொண்டேயிருப்பவர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உயிருக்குப் போராடிய நிலையிலிருக்கிறார் எனக் காணச் செல்கிறார்கள், அப்போதும் அவர் தனது படுக்கையின் எதிரில் உள்ள அறைக்குள் நர்ஸ் டாக்டருடன் போய்விட்டாள், அவர்கள் நீண்ட நேரமாக உள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றொரு வம்பு பேச்சை பேசுகிறார்.

எதிரிலிருப்பது மார்ச்சுவரி என்கிறார்கள்,

அதற்கு அவர், மார்ச்சுவரின்னா என்ன எனக் கேட்டபடியே இறந்து போய்விடுகிறார். கதை அத்தோடு முடிந்துவிடவில்லை, பிணவறையைத் திறந்து பார்க்கலாமா என ஒருவன் கேட்பதுடன் தான் கதை முடிகிறது

மனிதமனம் விசித்திரமானது, அது பலநேரம் சொற்களின் வழியே அடையும் சுகத்திற்கு இணையாக வேறு எதையும் நாடுவதில்லை. அதுவும் இது போன்ற வம்பு பேச்சுகளும் வதந்திகளும் உருவாக்கும் கிளர்ச்சி ஒரு மனிதனுக்கு அவனது சாவிற்கு முந்திய நிமிஷம் வரை தேவைப்படுகிறது. உண்மையில் நாம் அனைவரும் ரகசியமாக அடுத்தவர் அந்தரங்த்தில் எட்டிப்பார்க்கவும் அது குறித்துக் கேலியாக வம்பு பேசவும் விரும்புகிறோம், அதன் ஒட்டு மொத்த உருவமே சையத்அலி. இன்னொரு விதத்தில் தனது இயலாமையிலிருந்தே அவரது வம்புகள் உருவாகின்றன.

சிஹாபுதீனின் யாருக்கும் வேண்டாத கண் கதையில் சாலையில் விழுந்து கிடந்த கண் ஒன்றை ஒருவன் கண்டெடுக்கிறான். அது உயிருள்ள கண், ஆகவே துடிக்கிறது. யாருடைய கண் எனத் தெரியாமல் விளம்பரம் தருகிறான், கண்ணிடம் உனக்கு உரியவரை தேடி ஒப்படைப்பேன் எனப் பேசுகிறான். யாரும் தேடி வராத காரணத்தால் அதைக் கண்வங்கியில் ஒப்படைக்கக் கொண்டு போகிறான். வங்கியோ உரியவரின் அனுமதியின்றி அதை வாங்கிக் கொள்ள முடியாது என மறுக்கிறது.

யாருக்கும் வேண்டாத அந்தக் கண் முடிவில் தானே மூடிக் கொணடுவிடுகிறது. இக்கதையிலும் கண் ஒரு குறியீடாகவே அடையாளப்படுத்தபடுகிறது

மனிதர்கள் தனது கண்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். உதிர்ந்த கண்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன, யாருக்கும் அந்தக் கண்கள் வேண்டியதில்லை. ஆனால் யாரோ ஒருவன் உதிர்ந்த கண்களுக்காக வருத்தபடுகிறான். அவன் உரியவரிடம் ஒப்படைக்க முயலுகிறான். ஆனால் அதை எப்படிச் சேர்ப்பது எனத் தெரியவில்லை. ஒரு வகையில் இன்றைய வாழ்வின் அபத்தம் அந்தக் கண்ணாக உருவெடுக்கிறது.

ஹிமாயூன் என்றொரு சிறுகதையில் வரும் ஹிமாயூன் நம் காலத்தின் பிரதிநிதி. நெருக்கடியின் காரணமாக அவன் பயமற்றுப் போகிறான். எந்த சவாலையும் எதிர்கொண்டு அவமானப்பட்டு ஜெயித்துக் காட்டுகிறான், ஆனால் அவனாலும் நிலையான ஒரு வேலையை தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை. முடிவில் யார் பெயரிலோ அவன் அமெரிக்கா போக காத்திருக்கிறான். ஹிமாயூன் போன்றவர்கள் இன்று நிறைய உருவாகியிருக்கிறார்கள். இவர்களின் மனதில் சொல்லமுடியாத வலியும் தவிப்புமிருக்கிறது, ஆனால் பிழைப்பிற்காக எதையும் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

வீட்டிலிருந்து வெளியேறுவது என்பது எளிய நிகழ்வில்லை அதே நேரம் வீடு தரும் இதம் என்பதும் ஆறுதலானதில்லை என இரட்டை நிலைகளின் துயரத்தையும் இக்கதை பேசுகிறது

சிஹாபுதீனின் கதைகளில் பெண்கள் இயல்பான நிலையில் இடம் பெறுகிறார்கள். பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள், விடுபடுகிறார்கள். ஆண்களுக்குத் தான் திடுக்கிடலும் திகைப்பும் மாயமும் தேவைப்படுகிறது.

சிஹாபுதீன் செய்யும் மாயம் நாட்டார் கதையில் வரும் மாயத்திற்கு நெருக்கமானது. ஒரு இளவரசி தவளை ஆவது போல எளிமையானது. அதே நேரம் தவளை உடலைக் கொண்டு இளவரசியின் இருப்பு எப்படி உலகை எதிர் கொள்கிறது என்பதையே கதையாக்குகிறது

சிஹாபுதீன் கதைகளில் அதிகம் உரையாடல்களில்லை. அவர் கவிதையைப் போலவே சிறுகதையினையும் கவித்துவமான வரிகளால் எழுதிப் போகிறார். கதை சொல்லும் முறையிலும் அதிக அடுக்குகள், உட்தளங்கள் அதிகமில்லை. ஆனால் யதார்த்தம், மாயம் என்ற இரண்டு தளங்களை மிக எளிமையாக ஒன்று சேர்த்துவிடுகிறார்.

நவீன மலையாளப் படைப்பிலக்கியத்திலிருந்து பத்திற்கும் மேற்பட்ட சிறந்த எழுத்தாளர்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ள கே.வி.ஷைலஜா இந்தத் தொகுப்பினையும் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். முகப்பு அட்டை ஒவியத்தை ஒவியர் சீனிவாசன் மிக நேர்த்தியாக வரைந்திருக்கிறார். வம்சி புத்தகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

***

யாருக்கும் வேண்டாத கண் / சிஹாபுதின் பொய்த்தும்கடவு

தமிழில் கே.வி.ஷைலஜா

வம்சி பதிப்பகம். திருவண்ணாமலை.

0Shares
0