தனிமை கொண்டவர்கள் 1 செகாவின் வக்கீல்

இன்றைய ஊரடங்கு சூழலுக்குப் பொருத்தமான கதையை ஆன்டன் செகாவ் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதியிருக்கிறார்.  அந்தக்     கதையின் பெயர் பந்தயம் (The bet).

வீட்டிற்குள் தனிமைச்சிறையில் 15 ஆண்டுகள் வசிக்க முடியும் எனப் பந்தயம் கட்டிய ஒரு வழக்கறிஞரைப் பற்றிய கதையது. அக்கதையில் செகாவ் நாமாக வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் போது ஏற்படும் நெருக்கடியை, பல்வேறு விதமான நிலைகளை மிக அழகாக எழுதியிருக்கிறார். இதை அனுபவப் பூர்வமாகப் பலரும் இப்போது உணர்ந்து வருகிறார்கள் என்பதே நிஜம்

முதல்நிலை.

வீட்டிற்குள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட மனிதர் ஆரம்ப நாட்களில் தனிமையிலும் வெறுப்பிலும் நிறையவும் அவதிப்பட்டிருக்கிறார். இரவும் பகலும் அவரிடமிருந்து பியானோவின் இசை வந்த வண்ணமிருந்தது

ஒயினும் புகையும் தமக்கு வேண்டாமென்று ஒதுக்கிவிட்டார். ‘ஒயின் ஆசைகளைக் கிளறிவிடும். ஆசைகளே தனிமையில் வசிப்பவரின் பிரதான எதிரிகள். அதோடு நல்ல ஒயினைத் தனியாகச் சாப்பிடுவதை விடப் பெரிய வேதனை வேறொன்றுமில்லை என நினைத்தார் வக்கீல்

அந்த நாட்களில் அவர் எளிய கதைகளை விரும்பி வாசித்தார். அதாவது சிக்கலான காதல் விவகாரங்களுள்ள நாவல்கள், கொலை, கொள்ளைக் கதைகள், வேடிக்கைக் கதைகள், நகைச்சுவைக் கதைகள் முதலியவற்றை வாசித்தார்.

இரண்டாம் நிலை

இந்த நிலையில் வக்கீலின் கவனம் இலக்கியம் பக்கம் திரும்பியது. தீவிரமாக இலக்கியம் படித்தார். நிறைய வாசித்துத் தள்ளினார். பின்பு திடீரென மனச்சோர்வு கொண்டு எதையும் படிக்கவில்லை. தனக்கு விருப்பமானதை எழுத ஆரம்பித்தார். எழுதியதை தனக்குத் திருப்தியில்லை என்பது போலக் கிழித்துப் போட்டார். எழுதுவது அவருக்கு மன ஆறுதல் தருவதாக இருந்தது.

மூன்றாம் நிலை

இப்போது அவர் பிறமொழிகள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். சரித்திரம் மற்றும் தத்துவ நூல்களை ஆசையாகப் படித்தார். புதிய பாஷையை வேகமாகக் கற்றுக் கொண்டார். ஆறு மொழிகளில் எழுத முயன்றார். அதில் வெற்றியும் கண்டார்.

நான்காம் நிலை

இப்போது அவரது கவனம் ஆன்மீக விஷயத்தில் திரும்பியது. நாள் முழுவதும் பைபிள் படித்துக் கொண்டேயிருந்தார். பைபிளின் ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்து பயின்றார்.

ஐந்தாம் நிலை

இப்போது அதிலிருந்தும் விடுபட்டு அறிவியல் பற்றிய நூல்களை வாசித்தார். ஷேக்ஸ்பியர் பைரன் கவிதைகளை விருப்பத்துடன் வாசித்தார். உடைந்த பலகைகளோடு கடலில் நீந்துபவரைப் போல அவர் தீவிரமாகப் படித்தார்.

இப்படி மாறிவரும் மனநிலைகளைச் செகாவ் அழகாகக் கதையில் பதிவு செய்திருக்கிறார்.

கதையின் முடிவு நாம் எதிர்பாராத திருப்பம். கதை வழியாக நாம் அடையும் உணர்வென்பது மனித மனம் தனித்திருக்கையில் எப்படி இயங்கும் என்பதைப் பற்றிய எழுத்தாளரின் அவதானிப்புகளாகும். அதுவும் ஆன்டன் செகாவ் ஒரு டாக்டர் என்பதால்  மிகத்துல்லியமாக மனதின் செயல்பாடுகளை அறிந்து எழுத முடிந்திருக்கிறது.

உலகின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாக கொண்டாடப்படும் இக்கதை இந்த சூழலில் வாசிக்க வேண்டியது.

••

கதையை வாசிக்க

https://www.sramakrishnan.com/?p=4667

0Shares
0