தஸ்தாயெவ்ஸ்கி எனும் தந்தை

தஸ்தாயெவ்ஸ்கியின் இரண்டாவது மகள் லூபோவ் (Lyubov Dostoyevskaya )தனது தந்தை குறித்த நினைவுகளை FYODOR DOSTOYEVSKY- A STUDY என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு 1921ல் இந்நூல் வெளியாகியிருக்கிறது.

தந்தையைப் போலவே நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்பட்ட லூபோவ் சிகிட்சைக்காக இத்தாலி சென்றார். அங்கேயே தங்கி வாழத் துவங்கி தனது 56வது வயதில் அடையாளமற்ற பெண்ணாக இறந்து போனார்.

லூபோவ் இந்நூலை AiMEE DOSTOYEVSKY என்ற பெயரில் பிரெஞ்சில் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய The Emigrant என்ற நாவலும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது.

தஸ்தாயெவ்ஸ்கிக்கு Sofiya, Lyubov, Fyodor, Alexey என நான்கு குழந்தைகள். சோபியா பிறந்த சில மாதங்களிலே இறந்து போய்விட்டாள். இரண்டாவது பிறந்தவள் லூபோவ் தஸ்தாயெவ்ஸ்கி இறந்த போது அவளுக்கு வயது 11. ஆகவே தந்தை குறித்த நினைவுகள் அதிகமில்லை. தாயின் நினைவுகள் வழியாகவே அவர் தந்தையைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்.

தஸ்தாயெவ்ஸ்கி தனது எழுத்துப்பணிக்கு உதவியாளராக வந்த அன்னாவைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இது அவரது இரண்டாவது திருமணம்.

ரத்தசோகையால் பாதிக்கபட்ட லூபோவ் சிறுவயது முதலே நோயாளியாக வாழ்ந்திருக்கிறார். இருபது வயதில் தாயோடு கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டுவெளியேறிய லூபோவ் திருமணமே செய்து கொள்ளாமல் தனியே வாழ்ந்திருக்கிறார்

தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஜோசப் பிராங்க் 5 தொகுதிகளாக 2500 பக்கங்களில் எழுதியிருக்கிறார். அந்த ஐந்து தொகுதிகளையும் வாசித்திருக்கிறேன். அதற்கு இணையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூலே கிடையாது. ஒரே தொகுதியாக இதன் சுருக்கபட்ட பதிப்புத் தற்போது கிடைக்கிறது. (Dostoevsky: A Writer in His Time / Joseph Frank)

ஜோசப் பிராங் தஸ்தாயெவ்ஸ்கிக்காகவே வாழ்ந்தவர். ஒரு எழுத்தாளரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்பதற்கு ஜோசப் பிராங் ஒரு உதாரணம். அவரது நூலில் உள்ள தகவல்களே தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிய அதிகாரப்பூர்வமான உண்மைகள்.

லூபோவ்வின் புத்தகம் தந்தையைப் பற்றிய மகளின் கேட்டறிந்த நினைவுகளின் தொகுப்பாக உள்ளது. தனது தந்தை ஒரு உலக எழுத்தாளர். அவரது பெருமைகளை உலகம் அறிய வேண்டும். அந்த எண்ணத்திலே இந்நூலை எழுதியதாக லூபோவ் கூறுகிறார்.

எழுத்தாளரைப் பற்றி அவரது குடும்பத்தினர் எழுதும் நூல்களில் எப்போதும் உணர்ச்சிபூர்வமான விஷயங்களே பிரதானமாக இருக்கும். இதிலும் லூபோவ் தந்தையின் மீதான பல்வேறு குற்றசாட்டுகளுக்குப் பதில் அளித்திருக்கிறார்.

டால்ஸ்டாய் ஒன்றும் பெரிய பிரபு கிடையாது. அவரை விட நாங்கள் பராம்பரியம் மிக்கவர்கள் என்று பெருமையடித்திருக்கிறார். அதற்காக அவர்களின் வம்சாவழி வரலாற்றை விரிவாக மேற்கோள்காட்டுகிறார்.

அப்பாவின் மீது அதீதஅன்பு கொண்ட மகள் தந்தையை உயர்குடி வம்சத்தின் தொடர்ச்சியாக அடையாளப்படுத்த முயற்சிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த மகள் அப்பாவை விட்டுக் கொடுப்பாள் சொல்லுங்கள்.

தஸ்தாயெவ்ஸ்கி சிறுவனாக இருந்த நாட்களில் தினமும் அவரது அப்பா ரஷ்ய வரலாற்று நூலில் இருந்து முக்கியப் பகுதிகளை வாசித்துக் காட்டுவாராம். அத்துடன் வரலாற்றுச் சின்னங்களைக் காண்பதற்காக அழைத்தும் செல்வாராம். Karamzin’s History of Russia நூலை தஸ்தாயெவ்ஸ்கி முழுவதுமாக மனப்பாடம் செய்திருந்தார் எனக்குறிப்பிடுகிறார் லூபோவ்.

தந்தை படுகொலை செய்யப்பட்ட நாளில் தஸ்தாயெவ்ஸ்கி பீட்டர்ஸ்பெர்க்கில் படித்துக் கொண்டிருந்தார். மரணச் செய்தி கேள்விபட்டவுடன் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. குடிகார தந்தையின் மீது வெறுப்பும் கோபமும் கொண்டிருந்த போதும் அவரது மரணம் தஸ்தாயெவ்ஸ்கியை நிலைகுலையவே செய்தது.

தனது தந்தையின் சாயலில் தான் பின்னாளில் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் அப்பா கரமசோவை உருவாக்கினார். அதை உறுதிபடுத்துவது போலவே தனது பெயரை கொண்டே அவரை Fyodor Karamazov என உருவாக்கினார். இந் நாவலில் வரும் இவான் தஸ்தாயெவ்ஸ்கியின் சாயலை கொண்டவன் என்கிறார் லூபோவ்

தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கியக் கதாபாத்திரங்கள் பலரும் அவரது குடும்ப உறவுகளின் சாயலிலே உருவாக்கபட்டிருக்கிறார்கள் என்பதை லூபோவ் பல்வேறு சான்றுகளுடன் விவரிக்கிறார்.

தஸ்தாயெவ்ஸ்கிக்கு இசை கேட்பதில் மிகுந்த ஆர்வமிருந்தது. புதிய இசைக்கோர்வைகளைக் கேட்கும் போது அவர் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார். இசையில் தோய்ந்து தன்னை மறந்து அழுவதும் உண்டு என்கிறார் லூபோவ்.

தஸ்தாயெவ்ஸ்கியின் சமகால எழுத்தாளர்கள் அவருக்குக் கிடைத்த புகழை கண்டு வெறுப்படைந்தார்கள். இலக்கியக்கூட்டங்களில் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். விருந்து நிகழ்வுகளில் அவரை அவமானப்படுத்திப் பேசினார்கள். இதில் முக்கியமானவர் துர்கனேவ். அவர் வெளிப்படையாகத் தஸ்தாயெவ்ஸ்கியை இழிவாகப் பேசவும் எழுதவும் செய்தார். பிரபுக்களின் குடும்பத்தில் வந்த இவான் துர்கனேவிற்குத் தஸ்தாயெவ்ஸ்கியின் தோற்றமும் எழுத்தும் அருவெருப்பூட்டுவதாகவே இருந்தது.

தனது தந்தையின் முதல்நாவல் விக்டர் கியூகோ மற்றும் கோகலின் பாதிப்பில் உருவானது. The Double என்ற குறுநாவலில் இருந்தே புதிய தஸ்தாயெவ்ஸ்கி உருவாகத் துவங்கினார் எனக் குறிப்பிடுகிறார்.

சைபீரியச்சிறைக்குச் சென்று திரும்பும் வரை தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையில் காதலோ, பெண்தோழமையோ எதுவுமில்லை. ஆகவே அவரது ஆரம்ப காலப் படைப்புகளில் இடம் பெற்றுள்ள பெண்கள் தட்டையானவர்கள். சைபீரிய வாழ்க்கையே அவரை உருமாற்றியது. தாங்கமுடியாத தனிமையை. மனவேதனையைப் போக்கிக் கொள்ளக் கைதிகளின் மனைவியோடு பேசவும் பழகவும் செய்தார். அவரது முதற் காதல் அங்கே தான் துவங்கியது. திருமணமான மரியாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

மரியா மோசமான பெண். தனது தந்தையை ஏமாற்றியவள். அவளது குடும்ப வரலாற்றை மறைத்து தந்தையைத் திருமணம் செய்து கொண்டவள் என்று லூபோவ் நிறையக் குற்றசாட்டுகளை முன்வைக்கிறார். The Eternal Husband கதை தஸ்தாயெவ்ஸ்கியின் சொந்த வாழ்க்கையின் எதிரொலிப்பே

அன்னாவை தஸ்தாயெவ்ஸ்கி திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு வயது 45. அன்னாவின் வயது 19. தேனிலவிற்காக இருவரும் ஐரோப்பிய பயணத்தை மேற்கொண்டார்கள். அந்நாட்களைப் பற்றி அன்னா பசுமையான நினைவுகளைக் கொண்டிருந்தார்.

தஸ்தாயெவ்ஸ்கியின் மறைவிற்குப் பிறகு அதே இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்திருக்கிறார் அன்னா. அப்பாவிற்கும் உனக்கும் 26 வருஷ இடைவெளி இருந்ததை எப்படி ஏற்றுக் கொண்டாய் என அம்மாவிடம் கேட்டதற்கு அவர் என் கண்களுக்கு இளமையாகவே தெரிந்தார் என அன்னா பதில் அளித்திருக்கிறார்.

தஸ்தாயெவ்ஸ்கி இத்தாலியை மிகவும் நேசித்தார். அதைத் தனது இரண்டாவது தாய்நாடு என்று எழுதியிருக்கிறார். அங்குத் தான் அவரது புகழ்பெற்ற நாவலான இடியட்டை எழுதினார் என்கிறார் லூபோவ்

தான் பிறந்த போது தன்னைப் போலவே மகள் அழகாகப் பிறந்திருக்கிறாள் என நண்பரிடம் தஸ்தாயெவ்ஸ்கி சொன்னதாகவும் நீங்கள் ஒன்றும் அழகில்லையே என நண்பர் கேலி செய்யவே அப்பாவின் முகம் வாடிப்போனதாகவும் கூறுகிறார். அத்துடன் அப்பாவோ, நானோ அழகானவர்களில்லை. ஆனால் அப்பாவின் சாயலில் நானிருக்கிறேன் என்பதே எனது தனித்துவம் எனக் கூறுகிறார் லூபோவ்

Paul Issaieff என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் வளர்ப்பு மகன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து வாழ வந்தது அன்னாவிற்குப் பிடிக்கவில்லை. சொத்துகளில் தனக்கு உரிமை வேண்டும் என்று அவன் சண்டையிட்ட போது அன்னா நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தார். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி அதை அனுமதிக்கவில்லை. அன்னா தனது உரிமைகளை விட்டுக் கொடுத்தே வாழ்ந்தார்.

தஸ்தாயெவ்ஸ்கி இறந்தபிறகு அவரது நூல்களை முழுமையாகப் பதிப்பித்து அவரது படைப்புகளுக்கான ஆவணக்காப்பகம் ஒன்றை உருவாக்கியது அன்னாவே. இந்த உத்வேகமே டால்ஸ்டாயின் மனைவி சோபியாவை தன் கணவரின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடவும் அவருக்காக ம்யூசியம் ஒன்றை உருவாக்கவும் காரணமாகயிருந்தது. ரஷ்ய இலக்கிய வரலாற்றில் ஒரு பெண் தன் கணவரின் எழுத்துகளை முழுமையாக வாசித்துத் தொகுத்து செம்பதிப்புகளாகப் பதிப்பித்தது இதுவே முதல்முறை. அந்தப் பெருமை அன்னாவிற்கே சாரும்.

தஸ்தாயெவ்ஸ்கிக்கு நடைப்பயிற்சி பிடிக்கும். குறிப்பிட்ட வழியில் குறிபிட்ட நேரத்தில் நடக்கவே விரும்புவார். பாதையை மாற்றிக் கொள்வது பிடிக்காது. வழியில் தென்படும் பிச்சைக்காரர்களுக்குச் சில்லறைகள் தருவது வழக்கம். பிச்சைக்காரர்களைக் கண்டதும் அவர் கைகள் தானே கோட் பாக்கெட்டினுள் கைவிட்டுக் காசை எடுத்து போட்டுவிடும். ஒருநாள் முக்காடு அணிந்த பெண் ஒருத்தி தருமம் செய்யுங்கள். நானும் கணவரும் ஏழ்மையில் வாடுகிறோம் என யாசகம் கேட்டாள். தஸ்தாயெவ்ஸ்கி அவளுக்கு ஒரு நாணயத்தைத் தானமாகக் கொடுத்தார். அவள் சிரிப்பொலியோடு எழுந்து நன்றி சொன்னாள். அப்போது தான் அவள் தன்னுடைய மனைவி அன்னா, தன்னை வேடிக்கை செய்வதற்காக நடந்து கொண்டிருக்கிறாள் என்பது தஸ்தாயெவ்ஸ்கிக்குப் புரிந்தது.

தஸ்தாயெவ்ஸ்கி எப்போதும் நேர்த்தியான உடைகளை அணிந்து கொள்வதை விரும்புகிறவர். கையில் காசில்லாத போதும் கடன்வாங்கிச் சிறந்த டெய்லரிடமே உடைகளைத் தைத்துக் கொள்வார். ஒரு போதும் அவரது உடை கசங்கியிருந்ததில்லை. பொருத்தமற்ற உடையை அணிந்திருக்கவில்லை. உடையில் சிறிய கறை பட்டால் கூட உடனே அதை நீக்கும்படி செய்வார். உடைகளைத் தேர்வு செய்வதில் அவருக்குச் சிறந்த ரசனையிருந்தது.

எழுதுகிற நேரத்தில் அவர் அறைக்குள் குழந்தைகள் யாரும் நுழையக்கூடாது. எழுதும் போது அருகில் ஒரு தேநீர் கெட்டில் இருக்க வேண்டும். அடிக்கடி தேநீர் குடித்துக் கொள்வார். அவரது அறையில் அதிகப் பொருட்கள் கிடையாது. அவரைச் சந்திக்க வரும் நண்பர்கள் எவரேனும் நாற்காலிகளை இடம் மாற்றிவிட்டால் உடனே சரிசெய்து பழைய இடத்தில் போட்டுவிடுவார்.

எழுதும் மேஜையைச் சுத்தமாக வைத்துக் கொள்வார். புத்தகங்கள் அழகாக அடுக்கபட்டிருக்கும், கிழித்துப் போட்ட காகிதமோ. சிறிய குப்பையோ கிடந்தால் கூட அவரால் தாங்கமுடியாது. உடனே சுத்தம் செய்ய வேண்டும்.

அம்மா தினமும் அப்பாவின் மேஜையைத் துடைத்துச் சுத்தம் செய்து பென்சில்களை அடுக்கி பேப்பர்களை ஒழுங்குபடுத்தி வைப்பார். அப்பா சொல்லச் சொல்ல அம்மா தான் எழுதுவார். எழுதியதை திருத்தம் செய்து பிரதியெடுத்து அம்மா பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைப்பார். அம்மாவின் கையெழுத்து அச்சுப் போலிருக்கும். சில நேரங்களில் எழுதிக் கொண்டிருக்கும் போது அதைப் பற்றி அம்மாவிடம் அபிப்ராயம் கேட்பார். எழுதிய கதையை முழுவதும் மாற்றிவிடுவார். திருத்தங்கள் செய்து கொண்டேயிருப்பார்.

குழந்தைகள் ஏப்ரல் பூல் சொல்லி விளையாடுவது போல அப்பாவும் ஏப்ரல் முதல்நாள் அம்மாவை முட்டாளாக்கி வேடிக்கை செய்வார். அப்பாவிற்கு எல்லாமும் தரமாக இருக்க வேண்டும். திராட்சை வாங்குவதாக இருந்தால் கூட உயர் ரகத்தை மட்டுமே வாங்குவார். இரண்டாம் தரமான எதுவும் அவருக்குப் பிடிக்காது. இரவில் இரண்டு மெழுகுவர்த்திகளை எரிய விட்டு அதன் அருகில் அமர்ந்து எழுதுவார். வெளிநாடுகளுக்குப் போய்த் திரும்பும் போது நிறையப் பரிசுகள் கொண்டுவருவார். பண்டிகை நாட்களில் உறவினர்கள் அத்தனை பேரையும் வீட்டிற்கு அழைத்து விருந்து தருவார்.

ஏழு வயதில் ஒரு நாள் அப்பா என்னையும் தம்பியையும் அருகில் அழைத்து உட்கார வைத்து ஜெர்மனிய நாடகம் ஒன்றை படித்துக் காட்ட ஆரம்பித்தார். அப்பாவின் குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும். நாட்டுப்புறக்கதைகள். புஷ்கின் கதைகள். பாடல்கள். கிறிஸ்துவக் கதைகள், லெர்மன்தேவ், கோகலின் படைப்புகள் என நிறையப் படித்துக் காட்டியிருக்கிறார். சிறார் கதைகள் எதையும் அவர் வாசித்துக் காட்டியதில்லை என தனது நினைவுகளைப் பகிர்ந்து தருகிறார் லூபோவ்.

டால்ஸ்டாய் மீது அவருக்கு மிகப்பெரிய மதிப்பிருந்தது. அவரும் அப்பாவின் படைப்புகளை நேசித்தார். வியந்து பாராட்டி எழுதினார்.

தஸ்தாயெவ்ஸ்கி இறந்த போது சிறுமியான லூபோவ் பயந்து போய் அப்பாவின் அறைக்குள் தயக்கத்துடன் நுழைந்ததையும் அங்குக் கண்ட காட்சிகளையும் வேதனையுடன் விவரித்திருக்கிறார்.

தஸ்தாயெவ்ஸ்கியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற தன் அம்மாவை காவலாளி தடுத்து நிறுத்தியதாகவும் தான் தஸ்தாயெவ்ஸ்கியின் மனைவி என்று சொல்லியபோது இதுவரை ஆறுமனைவிகள் இப்படிச் சொல்லிஉள்ளே போய்விட்டார்கள் என கோவித்துக் கொண்டதாகவும்  எழுதியிருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் இறுதிநாளை பற்றிய லூபோவ்வின் பதிவு முக்கியமானது.

பளிச்சிடும் சில வரிகள் மனதில் நிற்கின்றன

Europe is merely a vast cemetery

Dostoyevsky wrote Russian badly because it was not his ancestral tongue

Dostoyevsky never cared for casual acquaintanceship which leads no further. When a man pleased him, he gave him his heart, and remained his friend for life, but he could not offer his friendship to every passer-by.

இந்நூலில் குடும்பப் பெருமைகளையே லூபோவ் அதிகம் முன்வைத்திருக்கிறார். அதில் பெரும்பான்மை அவர் கேட்டறிந்த தகவல்கள். உண்மையானவையில்லை. ஒரு தந்தையாகத் தஸ்தாயெவ்ஸ்கியை எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை அறிந்து கொள்வதற்காக இதை ஒருமுறை வாசிக்கலாம். மற்றபடி ஜோசப் பிராங்கிற்கு இணையாக இதில் எதுவுமில்லை

••

0Shares
0