நிதானத்தின் பிரபஞ்சம்

கவிஞர் மணி சண்முகம் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர்

ஹைக்கூவின் நால்வராக அறியப்படும் பாஷோ, பூசான், கோபயாஷி இஸ்ஸா, மசோகா ஷிகி ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

ஜப்பானிய ஹைக்கூ வரிசை என எட்டு நூல்களாக விஜயா பதிப்பகம் அழகிய வடிவில் வெளியிட்டுள்ளார்கள்.

ஹைக்கூ கவிதைகள் கூழாங்கற்கள் போன்றவை. அவற்றின் அழகும் தனித்துவமும் முழுமையும் வியப்பூட்டக்கூடியது, எளிய கவிதைகளைப் போலத் தோற்றம் தந்தாலும் இவற்றை மொழியாக்கம் செய்வது சவாலானது. மணி சண்முகம் சிறப்பாக, ஜப்பானியக் கவிதையின் கவித்துவம் மாறாமல் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

அத்தோடு ஹைக்கூ கவிதையின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து விரிவான முன்னுரையும் எழுதியிருக்கிறார்.

அவசர உலகிலிருந்து மீட்டு நிதானத்தின் பிரபஞ்சத்திற்கு உங்களைக் கொண்டு வருவதே ஹைக்கூவின் பயன்பாடு என்கிறார் மணி சண்முகம். இது மிகச்சரியான புரிதல்.

இயற்கையில் ஒரு அவசரமும் இல்லை. ஒரு புல் தான் வளர்வதற்கு எவ்வளவு காலம் தேவையோ அதையே எடுத்துக் கொள்கிறது. தன்னியல்பில் அது காற்றுடன் கைகோர்த்து நடனமிடுகிறது. புல்லின் நிமிர்வு தனித்துவமானது.

இயற்கையின் முடிவற்ற இயக்கம் மற்றும் இசைவு வியப்பூட்டக்கூடியது. ஹைக்கூ கவிஞர்கள் சொற்களை வண்ணங்களாக்கி இயற்கையின் சலனங்களை பதிவு செய்கிறார்கள். மின்னல்வெட்டு போல ஒரு பளிச்சிடல். ஒரு அதிர்வு அக்கவிதைகளில் வெளிப்படுகிறது.

மழையின் ஒரு துளி வாழை இலையில் பட்டு உருளும் போது ஏற்படும் அதிர்வு போலக் கவிதை நுண்மையை உணர வைக்கிறது. தண்ணீருக்குள் இறங்குவது போல எளிதாக, குளிர்ச்சியாக இந்தக் கவிதைகளுக்குள் நாம் பிரவேசிக்கிறோம். நீந்துகிறோம். ஆம். கவிதை வாசித்தல் என்பது ஒருவகை நீச்சலே.

இயற்கையை நாம் பயனுள்ளது, பயனற்றது, பெரியது, சிறியது எனப் பிரித்து வைத்திருக்கிறோம். ஹைக்கூ கவிதைகள் இந்த வேறுபாட்டினை அழிக்கின்றன. மாறிக் கொண்டேயிருக்கும் இயற்கையின் மாறாத தன்மைகளை, நிரந்தர வசீகரத்தை அடையாளம் காட்டுகின்றன.

குளிர்கால முதல்மழை

குரங்குக்கும் தேவைப்படுகிறது

வைக்கோல் அங்கியொன்று.

-பாஷோ

••

தாடைகளில்

செம்மலர்களை அடக்கிக் கொண்டு

பாடுகிறது வெட்டுக்கிளி

-இஸ்ஸா

••

எங்கும் நிறையும்

தவளையின் ஒசை

தன்னியல்பு பிறழாத நிலவு

-ஷகி

••

அறுவடைக்கால நிலவு

அங்கும் ஒரு பறவை இருக்கிறது

இருளைத் தேடிக் கொண்டு

-சியோ நி

••

வெற்றி பீரங்கி

ஒரு கமேலியா பூ விழுகிறது

அதனுள்

-ஷகி

••

இந்தக் கவிதைகளில் நாம் முன்பே அறிந்து வைத்துள்ள இயற்கை காட்சிகள் அறியாத கோணத்தில் அறியாத பார்வையுடன்  வெளிப்படுகின்றன. பீரங்கியினுள் விழும் பூ மறக்க முடியாத காட்சிப்படிமம்.

ஹைக்கூ கவிதைகள் இயற்கையை உணர்வதற்கும் அதன் மாறாத அழகை, உண்மையை, ஒழுங்கை, ஒழுங்கின்மையைப் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றன. அதே நேரம் நம்முடைய அகம் இயற்கையோடு இணையும் புள்ளியை, நமது இருப்பின் எடையை, எடையின்மையைப் புரிய வைக்கின்றன. அசைவின்மை குறித்தும் அசைவு குறித்தும் இந்தக் கவிதைகளின் வழியே ஆழமாகப் புரிந்து கொள்கிறோம்.

ஹைக்கூ கவிதைகள் மின்மினியின் மென்னொளியைப் போல வசீகரிக்கின்றன. இதம் தருகின்றன.

ஹைக்கூ கவிதைகளின் மீது மணிசண்முகம் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாட்டிற்கும் அவரது சிறப்பான மொழியாக்கத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

0Shares
0