வின்சென்ட் வான்கோ குறித்து Van Gogh: Painted with Words என்ற புதிய டாகுடிராமா வெளியாகியுள்ளது. பிபிசி தயாரிப்பில் உருவான இப் படத்தில் வான்கோவாக நடித்திருப்பவர் பெனடிக்ட் கம்பெர்பாட்ச்.
வான்கோ எழுதிய கடிதங்களில் உள்ள வரிகளைக் கொண்டே முழுப்படமும் உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.
வான்கோ எழுதிய 903 கடிதங்களில் 650 கடிதங்கள் அவரது சகோதரர் தியோவிற்கு எழுதப்பட்டதாகும். வான்கோவின் சகோதரிகள் , ஓவியர் பால் காகின் மற்றும் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் யாவும் முறையாகத் தொகுக்கப்பட்டு The Letters of Vincent van Gogh எனத் தன்நூலாக வெளியாகியுள்ளது. கடிதங்களில் அவர் வரைந்துள்ள கோட்டோவியங்களும் சிறப்பானவை.
வான்கோவின் மறைவிற்குப் பிறகு தியோவின் மனைவி ஜோஹன்னா இந்தக் கடிதங்களைத் தொகுக்கப் பல ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார், 1914 இல் அவை தொகுப்பாக வெளியிடப்பட்டன.
வான்கோ தனக்கு வந்த கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருக்கவில்லை. அவரிடம் எஞ்சிய கடிதங்களில் 39 தியோவிடமிருந்து வந்தவை
மனதில் பொங்கி வரும் அன்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தத்தளிப்பது என்பது எனக்குப் புது அனுபவமில்லை. காதல் என்ற ஒன்று எனக்கு அவசியம் வேண்டும். நான் தேடுவது நெருப்பின் பொறியை, அதையே காதல் என்று நினைக்கிறேன். காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது நீ மட்டும் தனியாக இல்லாமல் உனக்குப் பக்கத்தில் இன்னொரு உயிரும் இருக்கிறது என்ற உண்மை உனக்குத் தெரிய வரும்போது அதுவே உன்னை உலகத்தை மேலும் அதிகமான நட்புணர்வுடன் பார்க்குமாறு செய்யும் என்கிறார் வான்கோ.
உலகோடு இணைந்து வாழ விருப்பமின்றி. சமரசங்களுக்கு இடம் தராமல் கலையின் உன்மத்த நிலையில் வாழ்ந்து மறைந்தவர் வான்கோ. படைப்பின் பித்துநிலை அவரைத் துன்புறுத்தியது. வாழ்க்கை தனக்கு அளித்த கசப்புகளையும் அவமானங்களையும் தனது வண்ணங்களின் வழியே கடந்து போனார் வான்கோ. அடர் வண்ணங்கள் விடுதலையின் அடையாளமாக மாறின. சூரியகாந்திப்பூக்கள் மனசாட்சியின் கண்களாக உருமாறின.
வான்கோவின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் போது தான் அவரது படைப்பின் மேதமையைப் புரிந்து கொள்ள இயலும்.
செயிண்ட்-ரெமியில் உளவியல் சிகிச்சை பெற்ற நாட்களில் அவரது படைப்பாற்றல் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. வான்கோவின் மஞ்சள் அறையும் நாற்காலியும் நமக்கு நிராகரிக்கப்பட்ட கலைஞனின் அவஸ்தையை உணர்த்துகின்றன.
காட்சிகளைத் துல்லியமாகத் தனது கடிதத்தில் பதிவு செய்திருக்கிறார்
மெலிந்த தோற்றத்தைக் கொண்ட பெண் கறுப்பு நிறத்தில் உடையணிந்து கொண்டு கையை மார்பின் மீது வைத்தபடி சாம்பல் நிற சுவரோரமாக எவ்விதமான ஓசையும் இன்றி எதையோ திருடி வைத்துக் கொண்டு வருகிறாள். அவளின் சுருண்ட கூந்தல். சிறிய வட்டவடிவ முகம். அவளின் முகம் பிரௌன் நிறமா அல்லது ஆரஞ்சும் மஞ்சளும் கலந்ததா என்பதைப் பற்றி என்னால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.
ஆர்லஸில் வசித்த போது வான்கோ ஒரு மனநலமற்றவர். அவர் ஆர்லஸில் குடியிருக்கக் கூடாது என்று 80க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்துப் போட்டு மேயரிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.
ஒரு மனிதனுக்கு எதிராக ஒன்று சேரும் அளவுக்குக் கோழைத்தனமாக ஆட்களைக் கண்டது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் என்னைச் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்ற மனிதன் எனக் கருதினார்கள், இது ஒரு அவமானம் – அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை. என்கிறார் வான்கோ. பொதுமக்கள் அளித்த புகார் ஆவணப்படத்தில் காட்டப்படுகிறது..
இந்த ஆவணப்படத்தினைக் காணும் போது வான்கோவின் மூன்று தோல்விகள் பற்றிய எண்ணங்கள் மனதில் எழுந்தன
முதற்தோல்வி அவர் ஒரு மதபோதகராக முயன்றது. அதற்காகப் பைபிளை ஆழ்ந்து படித்து. தன்னைத்தானே வருத்திக்கொண்டு துறவு வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார். சில காலம் நிலக்கரி சுரங்க ஊழியர்களின் கிராமத்தில் மதபோதனையில் ஈடுபட்டார். ஆனால் அவரால் மதபோதகராக இயலவில்லை.
இரண்டாவது தோல்வி காதலித்த பெண்கள் எவரும் அவரைப் புரிந்து கொள்ளாமல் போனது. பொருளாதாரச் சிரமங்களால் அவரது காதல் கனவுகள் கலைந்து போனது
மூன்றாவது தோல்வி கலையுலகம் தன்னை அங்கீகரிக்கும். சக கலைஞர்களுடன் இணைந்து கலைப்படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆசை. அதற்காக முயற்சிகள் மற்றும் தோல்விகள்
இந்த மூன்று தோல்விகளும் ஒன்று சேர்ந்து அவரை மனப்பாதிப்புக்குள்ளாக்கின. அதிலிருந்து கடைசி வரை அவரால் மீளமுடியவில்லை.
வான்கோவின் உலகம் எளிய மனிதர்களால் ஆனது. ஏழை எளிய சுரங்க தொழிலாளர்கள். விவசாயிகள். தபால்காரர். குதிரைவண்டி ஒட்டுகிறவர். கிராமத்துப் பெண்கள். பாலியல் தொழிலாளிகள். நெசவு நெய்பவர்கள் இவர்களைத் தான் அதிகம் வரைந்திருக்கிறார்.
அவரது காலத்தில் அவரது ஓவியங்கள் குறித்து எவரும் மதிப்பீடு செய்யவில்லை. பாராட்டவில்லை. அவரது நண்பர் ஒருவர் The Potato Eaters ஓவியத்தைப் பார்த்துவிட்டுக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அது வான்கோவின் மனதைப் புண்படுத்தியிருக்கிறது.
லண்டனிலிருந்த நாட்களில் வான்கோ உற்சாகமாக இயங்கியிருக்கிறார். கீ என்ற இளம்பெண்ணைக் காதலித்திருக்கிறார். அந்தக் காதல் நிறைவேயில்லை. அன்றாடம் லண்டன் மியூசியத்திற்குச் சென்று புகழ்பெற்ற ஓவியங்களைப் பார்வையிட்டிருக்கிறார். பதிவேட்டில் அவரது பெயர் காணப்படுகிறது.
Giuseppe De Nittis என்ற இத்தாலிய ஓவியர் மழைநாளில் லண்டன் நகரம் எப்படியிருக்கும் என்பதை வரைந்திருக்கிறார். அந்த ஓவியத்தைப் பார்த்த போது லண்டன் நகரை நான் எந்த அளவு நேசித்திருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது என்று தனது கடிதம் ஒன்றில் வான்கோ குறிப்பிடுகிறார்.
பாரீஸில் ஓவியம் பயிலுவதற்காகச் சென்ற இடத்திலும் அவரால் இணைந்து கற்க இயலவில்லை. சலிப்பூட்டும் ஒரே விதமான பயிற்சிகளால் தனக்குப் பிரயோசனமில்லை என்று நினைத்து விலகிக் கொண்டார்
கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு ஒரு மனிதன் இருந்தால் பார்க்கும் யாவுமே அழகாக இருக்கும். ஆனால் அந்தக் கண்களில் ஒரு உயிர்ப்பு வேண்டும். தனித்துவம் கொண்டதாக இருக்க வேண்டும். அது இருந்தால் மட்டுமே கண்ணில் தெரியும் யாவும் அழகாக இருக்கும் என்கிறார் வான்கோ
.அறை வாடகை தருவதற்கும், ஓவியம் வரையத் தேவையான பொருட்களுக்கும் பணம் கேட்டு தியோவிற்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதியிருக்கிறார். தன்னால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் தியோ. சிலவேளைகளில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் தியோ வான்கோவை விலக்கவில்லை. கடைசிவரை உறுதுணையாகவே இருந்திருக்கிறார்
காதலனால் கைவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருத்தியை வான்கோ ஒரு நாள் தற்செயலாகக் காணுகிறார். அந்தப் பெண் மீது பரிவு கொண்டு அவளைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்து காப்பாற்றுகிறார். அந்தப் பெண் ஓவியம் வரைவதற்கான மாடலாக இருந்திருக்கிறார். பொருளாதாரச் சிரமங்களால் அப் பெண்ணைத் தொடர்ந்து காப்பாற்ற வான்கோவால் முடியவில்லை. அவள் மீண்டும் பாலியல் தொழிலுக்கே திரும்பிப் போகிறாள். வான்கோ ஏமாற்றத்துடன் தனது தனிமைக்குள் ஆழ்ந்து விடுகிறார்.
ஓவியர் பால்காகினோடு ஏற்பட்ட நட்பும் இருவரும் ஒன்றாக ஒரே இடத்தில் வசித்தபடியே ஓவியம் வரைந்த நாட்களும். அவர்களுக்குள் ஏற்பட்ட பிணக்கும் படத்தில் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வான்கோவின் வேகத்திற்குப் பால் காகினால் ஓவியம் வரைய இயலாமல் போவது. காகின் வரைந்த வான்கோ ஓவியம் காகினின் சாயலில் இருப்பதும் போன்றவை சிறப்பாக விளக்கப்படுகின்றன.
மனச்சிதைவு முற்றிய வான்கோ தனது காதை அறுத்துக் கொண்டது, செயிண்ட்-ரெமி மனநலக் காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்றது. அங்கிருந்தபடியே ஓவியம் வரைந்தது. அந்த ஓவியங்களில் அலைவுறும் சுடர்களைப் போல அடர்த்தியான வண்ணக்கோடுகள் வெளிப்பட்டதும் படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. புறக்கணிப்பிலிருந்து மீளுவதற்கான வழியாகவே ஓவியம் வரைந்திருக்கிறார்
கடந்த கால அனுபவங்கள் உருவாக்கிய பதற்றமும், எதிர்காலம் குறித்த தீவிரமான குழப்பங்களும் அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தன. தான் அங்கீகரிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், உன்னதமான கனவுகளுடன் நிகரற்ற படைப்பூக்கத்துடன் இயங்கியிருக்கிறார்
படத்தில் வான்கோவின் The Starry Night ஓவியம் வரையப்பட்டதன் பின்புலம் மற்றும் அதன் விசேசம் குறித்து அழகாக விளக்கியிருக்கிறார்கள்.
சாம்பல் நிற மேகங்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருக்கும் சூரியனைப் பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கிறது. அப்போது விழுந்த நிழல்களைப் பார்க்க வேண்டுமே. அத்தனை அழகு என்று ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
டிக்கன்ஸ் ஷேக்ஸ்பியர், மில்டன், எமிலி ஜோலா என நிறைய வாசித்திருக்கிறார் வான்கோ. அந்தி வெளிச்சம் தெரிகிறது. ஆசீர்வதிக்கப்பட்ட மாலை நேரம் என்கிறார் டிக்கன்ஸ் என்று கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார்
கலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நேர்மை மிகவும் முக்கியம். நான் உண்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். வியாபாரிகள் பின்னாலும் அரைகுறை அறிவு கொண்டவர்கள் பின்னாலும் நான் ஒரு காலத்திலும் ஒடமாட்டேன். தெலாக்ரூ,மிலே, ரூஸோ, துப்ரே, தாபினி ஆகியோரின் ஓவியங்களில் இருக்கும் நிரந்தர இளமையை நினைத்து வியக்கிறேன். அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரம், அமைதி, தனித்துவம் எல்லாவற்றையும் விட இதயத்தைப் பிழியும் தன்மை இவை என்னை வசீகரிக்கின்றன எனவும் ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்
1888ல் தெற்கு பிரான்சில், பச்சை அலையெனக் காற்றிலாடும் வயல்களையும் நீலவானையும் நட்சத்திரங்கள் நிறைந்த இரவையும் கண்டு வியந்து இங்கே 25 வயதில் வந்திருக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் எழுதியிருக்கிறார் வான்கோ
ஜப்பானிய ஓவியங்களில் மயங்கி அந்தப் பாணியில் தனது ஓவியங்களை வரைய முற்பட்டிருக்கிறார். அந்தப் பாதிப்பு எப்படி அவரது ஓவியத்தில் வெளிப்பட்டது என்பதைத் தெளிவான சான்றுகளுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஷேக்ஸ்பியரின் தனிமொழி போலவே வான்கோவின் கடிதங்கள் படத்தில் பேசப்படுகின்றன. அந்தக் காட்சிகள் மேடை நாடகம் காணுவது போன்ற அனுபவத்தைத் தருகின்றன
1890 ஜூலை 27-ஆம் நாள் தனது 37 ஆம் வயதில், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு வான்கோ இறந்த போது சூரியகாந்திப் பூக்கள் தலைகவிழ்ந்து கொண்டன. கோதுமை வயலில் பறந்த காகங்கள் தனது குரலை இழந்தன. இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள் மரணம் ஒருபோதும் முடிவில்லை தனக்குத் தானே புலம்பிக் கொண்டன. உலகம் மகத்தான கலைஞனை இழந்தது
கடைசிக்காட்சியில் வான்கோவின் கல்லறையினையும் அவரது சகோதரன் தியோவின் கல்லறையினையும் காட்டுகிறார்கள்.
வான்கோவாகப் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் அற்புதமாக நடித்திருக்கிறார். குறிப்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகபாவமும், உரையாடும் விதமும் அபாரம்.
நான் எப்போதும் தேடலில் ஈடுபட்டுக் கொண்டேயிருக்கிறேன். எதையாவது கண்டுபிடித்தேன் என்று கூறுவதை விடவும் தேடிக்கொண்டேயிருக்கிறேன் என்பதே சரியாக இருக்கும் என வான்கோ ஒரு கடிதத்தில் சொல்கிறார்
வான்கோவின் முடிவில்லாத பயணங்களையும் தீராத்தனிமை கொண்ட துயர வாழ்க்கையினையும் கலையின் வழியே தன்னை உயிர்ப்பித்துக் கொண்ட படைப்பாற்றலையும் ஆவணப்படம் சிறப்பாகவே அடையாளப்படுத்தியிருக்கிறது.
••