அவர் எப்போது பொதுநூலகத்திற்கு வரும்போதும் கையில் அஞ்சல் அட்டைகளுடன் தான் வருவார். எழுபது வயதிருக்கும். நடிகர் எஸ்.வி.சுப்பையாவின் சாயல் கொண்டவர். உயரமும் அவரைப் போலவே இருக்கும். உடைந்த மூக்குக்கண்ணாடியை நூல் கொண்டு கட்டியிருப்பார். ரப்பர் செருப்புகள். பெட்ரோல் பங்க் ஒன்றில் கணக்குவழக்கு பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்துப் பி.ஏ.. கதர் வேஷ்டி சட்டை தான் எப்போதும் அணிந்திருப்பார்.

நாளிதழ்கள் பகுதியைத் தவிர வேறு எங்கும் போக மாட்டார். தமிழ் ஆங்கில நாளிதழ்கள் அத்தனையும் உட்கார்ந்து படிப்பார். படித்து முடித்தபிறகு செய்தித் தாளில் வெளியான விஷயங்களில் உள்ள பிழைகள். தகவல் தவறுகள். அல்லது மாற்றுக்கருத்துகளை உட்கார்ந்து எழுதுவார். பின்பு அவற்றைத் தபால் அலுவலகத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பார். இது அவரது தினசரி பழக்கம்
ஆங்கில நாளிதழ்களில் அவரது கடிதங்கள் லெட்டர்ஸ் டு எடிட்டர் பகுதியில் வெளியாகியிருக்கின்றன. தமிழ் நாளிதழ்கள் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. அவருக்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது.
நியூஸ் பேப்பருக்குப் பொறுப்புணர்வு வேண்டும். தன்னைப் போல அதன் தவறுகளைக் கண்டுபிடித்துச் சுட்டிக்காட்டும் ஒருவன் இருக்கிறான் என்ற பயம் தேவை. இல்லாவிட்டால் அவர்கள் தொடர்ந்து தவறு செய்தபடியே இருப்பார்கள் என்பார்
நாளிதழ்களில் எப்படி அவர் இத்தனை தவறுகளைக் கண்டறிகிறார். எப்படி இவ்வளவு வேகமாக. கோபமாகப் பதில் எழுதிப் போடுகிறார் என்று வியப்பாக இருக்கும். ஆங்கில நாளிதழில் வெளியான அவரது கடிதங்களைச் சில நேரம் நூலகரிடம் காட்டுவதுண்டு.
“நம்ம லைப்ரரி பற்றி நல்லதா ஏதாவது எழுதுங்கள்“ என்பார் நூலகர்
அவரிடம் அதைக் கேட்டுக் கொண்டதாகப் பாவனைக் கூட இருக்காது. ஒருமுறை நாளிதழில் பாபு ஜகஜீவன் ராம் புகைப்படத்திற்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம் அச்சாகியிருந்தது. அதைக் கதர் வேஷ்டி அணிந்தவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சப்தமாக இடியட் என்று கத்தினார்

அதைக்கேட்ட வாசகர்கள் சிலர் திரும்பிப் பார்த்தார்கள். அந்த நியூஸ் பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு நூலகரிடம் வந்து யாரு பாபு ஜெகஜீவன்ராம்னு கூடத் தெரியாதவன் எதுக்கு நியூஸ் போடுகிறான் என்று கோபமாகப் பொறிந்து தள்ளினார்.
நூலகரும் தலையைத் தலையை ஆட்டி கேட்டுக் கொண்டிருந்தார். மறுநாள் அவரது கடிதம் பேப்பரில் வெளியாகியிருந்தது. கூடவே பத்திரிக்கை தவறுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தது.
ஏன் ஒருவர் நாளிதழ்களின் மனசாட்சி போல நடந்து கொள்கிறார் என்று எவருக்கும் புரியவில்லை. அவரோ அது தன் கடமை என்பது போல நடந்து கொண்டார். ஒருமுறை கூட அவரது புகைப்படம் எந்த நியூஸ் பேப்பரிலும் வெளியானதில்லை. ஆகவே அவர் தான் கடிதங்கள் எழுதுகிறார் என்று எவருக்கும் தெரியாது.
பத்திரிக்கை செய்திகளுக்குக் கொதித்துப் போகிற நபர் உள்ளூர் நிகழ்வுகள் எதையும் கண்டு கொள்ளமாட்டார். நூலகத்திற்கு வரும் சாலை மோசமாக இருப்பது பற்றியோ, நகரில் அதிகமாகி வரும் தண்ணீர் தட்டுபாடு பற்றியே ஒரு முறை கூட அவர் புகார் சொன்னதில்லை. அவரது உலகம் அச்சிடப்பட்ட செய்திகள். அதன் தவறுகள் மறுப்புகள் மட்டுமே.
தினசரி இதற்காகக் காசு செலவு செய்து தபால் போடுகிறாரே என்று நூலகர் கேட்டதற்கு “அது பேப்பர் படிக்கிற நம்ம கடமை. நியூஸ் பேப்பரை எல்லோரும் புரட்டத்தான் செய்றாங்க. நான் ஒருத்தன் தான் முழுசா படிக்கிறேன். எனக்குப் புத்தகம் படிக்கிறதில் ஆர்வம் கிடையாது. நியூஸ் படிக்கிறதில் தான் ஆர்வம். என்கிட்ட பணமிருந்தால் இந்தியாவில் வெளியாகிற எல்லா இங்கிலீஷ் பேப்பரையும் வாங்கிப் படிப்பேன்“ என்றார். அவர் சொல்லும் வரை அப்படியான இங்கிலீஷ் பேப்பர்கள் வெளியாகிறது என்று கூட எவருக்கும் தெரியாது.
ஒரு நாள் சர்வே எடுப்பதற்காகத் தமிழ் நாளிதழைச் சார்ந்த சிலர் நூலகத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் நூலகர் கதர்வேஷ்டிகாரரைப் பற்றிச் சொல்லி அவர் கீழே படித்துக் கொண்டிருப்பார். அவரிடம் பேசுங்கள் என்று அனுப்பினார். அவரைத் தேடி வந்து சர்வே எடுப்பவர்கள் தங்கள் பத்திரிக்கை பற்றிக் கேட்டார்கள்
“உங்க பத்திரிக்கை ஒரு குப்பை. அதுல வர்ற நியூஸ்ல பாதித் தப்பு. சொன்னா கோவிச்சிகிட கூடாது. உங்க பேப்பரை பஜ்ஜி சாப்பிடத் தான் யூஸ் பண்ணமுடியும்
அவர்கள் முகம் வெளிறிப்போய்விட்டது. இப்படி ஒருவர் பதில் சொல்லுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
சர்வே எடுப்பவர்களில் ஒருவர் கோபத்தைக் காட்டிக் கொள்ளாமல் “எங்க பத்திரிக்கையில் என்ன மாற்றம் கொண்டுவரணும்னு நினைக்குறீங்க“ எனக்கேட்டார்
அவ்வளவு தான் மறுநிமிடம் ஆங்கிலச் செய்தித்தாளை எடுத்து வைத்துக் கொண்டு அதில் செய்தி எப்படித் தலைப்பிடப்பட்டிருக்கிறது. எந்தச் செய்தியை எப்படி வெளியிடுகிறார்கள். எவ்வளவு சுருக்கமாக, தெளிவாக எழுதியிருக்கிறார்கள் என்று விரிவாகப் பாடம் எடுப்பது போல விளக்க ஆரம்பித்துவிட்டார்
அவர்கள் உறைந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தார்கள். செய்திகளை வெளியிடும் முறையைப் பற்றிச் சொன்னதுடன் ஆங்கிலச் செய்தித்தாளில் எந்த வாக்கியத்தில் என்ன தவறு உள்ளது. அதற்கு மாற்றாக எப்படி எழுதியிருக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சர்வே எடுக்க வந்தவர்கள் பேயறைந்தது போல வெளியேறிப் போனார்கள். நூலகரிடம் வந்து சொன்னார்
“நல்லா நாக்கை பிடுங்கிகிடுற மாதிரி கேட்டு அனுப்பி வச்சேன். பேப்பர் படிக்கிறவன் என்ன முட்டாளா“
“தமிழ் பேப்பர்ல ஏன் உங்க லெட்டர்ஸ் எதையும் போடுறதுல்ல“ என்று கேட்டார் நூலகர்
“தப்பு சொன்னா யாரு கேட்டுகிடுவா. நிறைய நாள் போன் பண்ணிக் கூடச் சொல்லியிருக்கிறேன். ஒருத்தனும் கேட்டுகிடலை. தலைவர்களோட பெயர்களைச் சுருக்கி வெளியிடுறது அவமானம். வெளிநாட்டுப் பிரதமர், ஜனாதிபதி பேரைத் தப்பு தப்பான உச்சரிப்பில் வேற எழுதி வைக்கிறான். அதை என்னாலே சகிக்க முடியலை. “
அதைக்கேட்டு நூலகர் சிரித்தார்.
ஆற்றாமையோடு கதர் வேஷ்டி அணிந்தவர் சொன்னார்
“ஐம்பது வருஷமாகப் பேப்பர் படிச்சிட்டு இருக்கேன். வர வர பேப்பர்ல போட்டிருக்கிற செய்தியை நம்ப முடியலை. முன்னாடி எல்லாம் பேப்பர்ல செய்தி வந்துட்டா அது தான் நிஜம். கோட்டுக்குக் கொண்டு போய் அதைச் சாட்சியாகக் காட்டலாம். இப்போ எந்த நியூஸையும் நம்ப முடியலை. நேத்து நம்ம ஊர்ல ஒரு கட்சிக்கூட்டம் நடத்துச்சி. ஐம்பது பேர் வந்திருந்தாங்க. அதைப் பேப்பர்ல அலை கடல் எனக் கூட்டம்னு போடுறான். வெளியூர்ல படிக்கிறவன் நம்பத்தானே செய்வான். கட்சி பேப்பர்ல போட்டா கூட அவன் பேப்பர் போடுறானு விட்ருவேன். ஆனா பொதுவான பேப்பர்காரன் போடுறான். அதை நான் ஏத்துகிட மாட்டேன். பேப்பர்ல வெளியிடுறானோ, இல்லையோ என் கோபத்தை ஒரு லெட்டரா எழுதி போட்டுக்கிட்டு தான் இருப்பேன்“.
“இத்தனை வருஷம் லெட்டர் போட்டு இருக்கீங்க. எப்போதாவது இதைப் பாராட்டி பத்திரிக்கை உங்களுக்கு லெட்டர் போட்டு இருக்கா“
“ஒரு பயலும் அப்படிப் போடலை. தேடிவந்து உதைக்காமல் விட்டு வைத்திருக்கிறானே. அதை நினைத்து சந்தோஷப்பட்டுகிட வேண்டியது தான்“
அதைக் கேட்டு நூலகர் சப்தமாகச் சிரித்தார். தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது வாசகரின் பொறுப்புணர்வு வெளிப்படுகிறது என்று ஏன் ஒருவருக்கும் தெரிவதில்லை . தன் பொறுப்பற்ற செயலை ஒருவர் கண்டிக்கிறார் என்ற புரிதல் கூடவா இல்லாமல் போய்விடும்.
இன்றுள்ளது போல அன்று இத்தனை தொலைக்காட்சி சேனல்கள் கிடையாது. செய்திகளின் பேராறு ஓடவில்லை. முக்கியச் செய்திகள் வெளியாவதற்கே ஒரு நாள் தேவைப்பட்டது. செய்தித் தாளில் ஒருவரின் படம் இடம்பெற்றுவிட்டால் அது பெரிய விஷயமாகக் கருதப்பட்டது. கதர் வேஷ்டி அணிந்த மனிதர் போல மனசாட்சியின் குரலை ஒலிப்பவர்கள் ஊருக்கு ஒருசிலர் இருந்தார்கள்.
ஆனால் இன்று எது நிஜம் எது பொய் எனப் பிரித்து அறியமுடியாதபடி செய்திகள் பெருகிவிட்டன.
ஒரு காலத்தில் புகைப்படம் பொய் சொல்லாது என்றார்கள் ,நம் காலத்திலோ புகைப்படமும் பொய் சொல்லும் வீடியோவும் பொய் சொல்லும் என நிரூபிக்கபட்டுவிட்டது.
இப்போது நாம் செய்திகளை நம்புவது ஊசலாட்டத்தில் இருக்கிறது. சந்தேகத்துடன் தான் செய்திகளைக் கேட்கிறோம். பின்தொடருகிறோம். செய்திகளால் உருவான அச்சம் நம்மை நிம்மதியற்றுச் செய்துவிடுகிறது.
என்றோ நூலகத்திற்கு அஞ்சல் அட்டையுடன் வந்த அந்த மனிதரைப் பற்றி இன்றைக்கு நினைக்கையில் வியப்பானவராகத் தோன்றுகிறார்.
நம் காலத்தில் உண்மையின் குரலை ஒலிக்கும் மனிதர்கள் குறைந்து கொண்டேவருகிறார்கள்.
கண்களை அகலத் திறக்கச் சொல்லிவிட்டு நாக்கை ஒடுக்கிவிட்டது நம் காலம்.
அது தான் பெருந்துயரம்.
••