நெரூதா

நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூதா குறித்து சிறார்களுக்கான அறிமுகநூலை எழுதியிருக்கிறார் மோனிகா பிரௌன். அழகான வண்ணப்படங்களுடன் வெளியாகியுள்ளது.

சிறார்களுக்காக எழுதப்பட்டபோதும் மிகுந்த கவித்துவமான சொற்களால் எழுதியிருக்கிறார் மோனிகா

நெரூதாவின் உண்மைப்பெயர் NEFTALÍ RICARDO REYES BASOALTO

1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெரூதா  பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே அம்மா இறந்துவிடவே தந்தை, டோனா  ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை மறுமணம்‌ செய்து கொண்டார். மாற்றாந்தாயின் அன்பில் நெரூதா வளர்க்கப்பட்டார்.

தன்னைச் சுற்றிலும் ஒரு ஆறு போல வார்த்தைகள் ஒடிக் கொண்டிருப்பதாகச் சிறுவன் நெப்தாலி உணர்ந்தான் என்று ஒரு வரி எழுதியிருக்கிறார். கவிஞனைப் பற்றிய நூல் இப்படித்தான் எழுதப்பட வேண்டும்.

நெப்தாலியின் தந்தை ஒரு ரயில் ஒட்டுனர். ஆகவே அவனை அடிக்கடி ரயிலில் அழைத்துப் போயிருக்கிறார். கேப்ரியலா மிஸ்ட்ரல் என்ற எழுத்தாளர் உதவியோடு புத்தகங்கள் படிக்கத் துவங்கினான் நெப்தாலி. 1920 ஆம் ஆண்டு கவிதை எழுத துவங்கியதும் தன் பெயரை பாப்லோ நெரூதா என மாற்றிக் கொண்டான். அதற்கு ஒரு காரணமிருந்தது.

செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெரூதாவின் படைப்புகளால் உந்தப்பட்டு, தன் பெயரையும் பாப்லோ நெரூதா என மாற்றிக் கொண்டார்.

பின்பு சக  எழுத்தாளர்கள் கவிஞர்களைச் சந்திப்பதற்காகச் சாண்டியாகோ சென்றான் பாப்லோ.

தான் விரும்பிய எல்லாப் பொருட்களையும் பற்றிப் பாப்லோ கவிதைகள் எழுதத் துவங்கினான். பாப்லோ கடலை மிகவும் விரும்பினான். கடல் அலைகளைப் பற்றியும் கடற்கரை பற்றியும் கடற்கரையில் விளையாடும் சிறார்களைப் பற்றியும் நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறான். மக்கள் போராட்டங்களைப் பற்றி எழுத துவங்கிய பாப்லோ மக்கள் கவிஞனாகக் கொண்டாடப்பட்டான் என அழகான அறிமுகத்தை இந்த நூல் வழங்குகிறது

மழை தான் நெரூதாவை எழுத வைத்தது. மழைநாளில் தான் அவர் தனது முதற்கவிதையைப் பள்ளிகூட நோட்டு ஒன்றில் எழுதினார்.

நவீன தமிழ் கவிஞர்களை அறிமுகப்படுத்தி இது போலச் சிறிய வண்ண நூற்கள் கொண்டுவரலாம். அது தான் இளையோருக்கு இலக்கியம் அறிமுகமாகச் சரியான வழி

சிறார்களுக்கான அறிமுக நூல் மட்டுமின்றிப் பெரியவர்களுக்காகப் பாப்லோ நெரூதாவின் வாழ்க்கை வரலாறு சார்ந்த நிறையப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.

சமீபத்தில் பாப்லோ நெரூதாவின் வாழ்க்கை வரலாறு NERUDA: THE POET’S CALLING வெளியாகியுள்ளது.

மார்க் ஈஸ்னரின் இந்த நூல் நெரூதா கவிஞராக உருவான விதத்தை மட்டுமல்ல, அவரது இடதுசாரி அரசியல் பார்வைகளையும் பிரதிபலிக்கிறது. நெரூதாவின் வாழ்க்கை சிலி நாட்டின் அரசியல் வரலாற்றுடன் நெருக்கமாக இணைந்தது. அதை ஈஸ்னர் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். தாயற்ற நெரூதா வளர்க்கபட்ட விதம் மற்றும் சகோதரி லாராவுடன் அவருக்கு இருந்த நேசம் மற்றும் நெரூதாவின் இளமைப்பருவ அனுபவங்கள். காதல் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள். போராட்டக்களத்தில் துணை நின்றது, சர்வாதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்தது  என நெரூதாவின் ஆளுமையை  ஈஸ்னர் முழுமையாக அடையாளம் காட்டுகிறார்

••

0Shares
0