கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் 103வது பிறந்தநாள் விழா இன்று அவரது சொந்த ஊரான நெய்யாடுபாக்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் அவரது பெயரில் வழங்கப்படும் நெ.து.சு.விருது எனக்கு அளிக்கபட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது நெய்யாடுபாக்கம். செய்யாற்றின் கரையிலுள்ள சிறிய கிராமம். அங்கே நெ.து.சுவால் உருவாக்கபட்ட துரைசாமி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இவ்விழா நடைபெற்றது.
கிராமத்துப் பொதுமக்கள், மாணவர்கள் முன்னிலையில் டாக்டர் ஏ.எம், சுவாமிநாதன் IAS. (Retd) இந்த விருதை எனக்கு வழங்கினார்.
நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் தமிழ் நாடு அரசின் கல்வித்துறை இயக்குநராகச் சிறப்பாகப் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரு முறை பொறுப்பு வகித்திருக்கிறார்
தமிழகத்தில் இலவசக்கல்வி, இலவசச் சீருடைத்திட்டம், இலவச மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தபடுவதற்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளார்
நெ.து.சு. பொது நூலக இயக்குநராக இருந்த போது தமிழகம் முழுவதும் நானூறுக்கும் மேற்பட்ட கிளை நூலகங்களை ஏற்படுத்தினார். மாவட்ட நூலகங்களுக்குக் கட்டிடங்கள் கட்டித்தந்துள்ளார்
சுந்தரவடிவேலனார் சமத்துவச் சமுதாய அறக்கட்டளை சார்பில் கவிஞர் லெனின். பாலசுப்ரமணியன் இவ்விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்.
***