புகையில்லாத தீச்சுடர்

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை ஒன்றை பி.கே. சிவகுமார் தமிழாக்கம் செய்து திண்ணை இதழில் வெளியிட்டிருக்கிறார். Commentaries on Living தொகுதியில் உள்ள சிறு கட்டுரையது. 2002ல் வெளியாகியுள்ளது

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரையை மிகச் சிறப்பாக, நுட்பமாகச் சிவக்குமார் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பும் புரிதலும் இல்லாமல் இது சாத்தியமில்லை. பி.கே.சிவக்குமாருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்

சிறப்பான மொழியாக்கத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியை வாசிப்பது மிக நெருக்கமான அனுபவத்தைத் தருகிறது.

பி.கே.சிவக்குமார் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து தனியே நூலாக வெளியிடவில்லை. ஒருவேளை அனுமதி கிடைக்கவில்லையே என்னவோ. இந்த மொழியாக்கத்தை ஜே கிருஷ்ணமூர்த்தி நிறுவனமே தனி நூலாக வெளியிடலாம்.

பொறாமையைப் பற்றி ஜே.கிருஷ்ணமூர்த்திச் சொல்லும் இந்தக் கட்டுரை அழகாகத் துவங்குகிறது.

எதிரேயிருந்த வெள்ளைச் சுவரின் மீது வெயில் விழுந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் கண் கூசுகிற வெளிச்சத்தில், அங்கே இருந்தவர்களின் முகங்கள் தெளிவற்றும் மங்கலாகவும் தெரிந்தன.

சிறந்த புனைகதையின் துவக்க வரியைப் போலிருக்கிறது.

வெள்ளைச்சுவரின் மீது படரும் வெயிலை அவர் எவ்வளவு அழகாக வாழ்க்கையின் போக்குடன் இணைத்துவிடுகிறார் என்பதைக் கட்டுரையை வாசித்து முடிக்கும் போது உணர முடிகிறது.

கிருஷ்ணமூர்த்தியின் ஒவ்வொரு வரியும் ஒரு காட்சியாக விரிகிறது.

தாயின் அனுமதியோ, வழிகாட்டலோ இல்லாமல், ஒரு சிறு பெண் குழந்தை என் அருகே வந்து அமர்ந்து கொண்டார். பின், அக்குழந்தை விரிந்த கண்களுடன், ‘இங்கே என்ன நடக்கிறது ‘ என்கிற வினா கலந்த ஆச்சரியத்துடனும் சுற்றுமுற்றும் பார்த்தார். அவர், புதிதாய் நீராடி, நல்லுடையுடுத்தி, சிகையில் மலர்கள் சூடி, மிகவும் அழகாய் இருந்தார்.

எல்லாக் குழந்தைகளையும் போலவே, சுற்றி நடப்பதையெல்லாம் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டும், ஆனால் எதையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளாமலும் இருந்தார்.

என்ற ஜேகேயின் வரியில் குழந்தையின் இயல்பு அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. உலகைக் கவனித்துக் கொண்டும் அதே நேரம் மனதில் பதிய வைத்துக் கொள்ளாமலும் இருப்பது தான் பால்யத்தின் சிறப்பு. அந்தச் சிறுமிக்கு உலகம் புதிதாகவும் குழப்பமானதாகவும் இருக்கிறது.  இப்போது தான் விரிந்த ஒரு மலர் சூரியனைக் காணுவது போல வியப்புடன் அவரைக் காணுகிறார். தண்ணீர் ஒரு குழந்தையை எதிர்கொள்வது போலவே அவரும் எதிர்கொள்கிறார்.

ஒளி படைத்த சிறுமியின் கண்கள் – அழுவதா, சிரிப்பதா, மகிழ்வுடனும் விளையாட்டுணர்வுடனும் குதிப்பதா என்று – என்ன செய்வது என்பதறியாமல் யோசித்தன. மாறாக, அவர் என் கையை எடுத்து, உள்ளங்கையையும் விரல்களையும் சுவாரஸ்யமான ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில், தன்னைச் சுற்றி இருந்தவர்களையும், தன்னையும் மறந்தவராய், ஓய்வாக என் மடியில் தலைவைத்துத் தூங்க ஆரம்பித்தார். அவர் சிரம் அழகான வடிவுடனும், நேர்த்தியாகவும் இருந்தது.

குறையேதும் இல்லாத தூய்மையும், அழகும் கொண்டவராய் இருந்தார் அப்பெண் குழந்தை. ஆனால், அந்த அறையிலிருந்த மற்றவர்களைப் போலவே, அக்குழந்தையின் எதிர்காலமும், குழப்பமானதாகவும், துன்பமயமானதாகவும் இருக்கும். அக்குழந்தைக்கு நேரப்போகும் முரண்பாடுகளும், துயர்களும் – எதிரே இருந்த சுவரின் மீது விழுந்து கொண்டிருந்த வெயில் போல – தவிர்க்க இயலாதவை.

எனக் கட்டுரை நீள்கிறது.

சுவரின் மீது வெயில் விழுவது என்பது வெறும் நிகழ்வில்லை. ஒரு வகை அனுபவம். ஒருவகை அடையாளம். தவிர்க்க முடியாதபடி நடக்கும் இயல்பான செயல். அதன் தாக்கத்தை நாம் உடனே கணித்துவிட முடியாது

அந்தச் சிறுமி பெறப்போகும் கல்வியும், அவரை ஆட்கொள்ளப் போகும் தாக்கங்களும் – வேதனையிலிருந்தும், வலியிலிருந்தும், துயர்களிலிருந்தும் விடுதலைப் பெறத் தேவையான நுண்ணறிவு அவருக்குக் கிடைக்காவண்ணம் தடுத்துவிடும் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி

நுண்ணறிவின் மூலம் துயர்களை, வலிகளைக் கடந்து போய்விட முடியும் என்ற கிருஷ்ணமூர்த்தியின் நிலைப்பாடு உறுதியாக இருக்கிறது.

நுண்ணறிவை எது உருவாக்குகிறது

எதன்வழியே ஒருவர் தனது நுண்ணறிவைப் பெற இயலும். மதிப்பெண்ணை மட்டுமே முதன்மையாகக் கொண்ட கல்வியால் இது சாத்தியமில்லை. வெறும் போதனைகளால் இதை சாத்தியப்படுத்த முடியாது.

புகையில்லாத தீயின் சுடர் போன்ற அன்பு இவ்வுலகில் மிகவும் அரிதானது.

அன்பு என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிற புகையே – நாம் மூச்சடைத்துத் திணறும்படி, சர்வசக்தியுடன் – எங்கும் கவலையையும், கண்ணீரையும் கொண்டுவருகிறது. அந்தப் புகையினூடே தீச்சுடர் தெரிவதில்லை.

எனச் சொல்லும் கிருஷ்ணமூர்த்திப் புகையில்லாத தீச்சுடர் போன்ற அன்பு என்ற அழகிய, கவித்துவமான படிமம் ஒன்றை முன்வைக்கிறார்.

அன்பு குறித்து உலகில் இதுவரை பேசப்பட்டதெல்லாம் வெறும் புகை தானா. புகையில்லாத சுடர் ஏன் சாத்தியமாகவில்லை. அன்பு என்பது கொடுக்கல் வாங்கல் செய்யும் ஒரு பொருளாக ஏன் மாறியது.

அன்பெனும் சுடரின்றி, வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை எனும் கிருஷ்ணமூர்த்திப் புகையும் சுடரும் இணைந்தும் பிணைந்தும் வாழ இயலாது. தெளிந்த தீச்சுடர் ஒளியுமிழ, புகை நிறுத்தப்பட வேண்டும். இப்படிச் சொல்கிற காரணத்தால், தீச்சுடரானது புகைக்கு எதிரி இல்லை. தீச்சுடருக்கு எதிரிகள் இல்லை. புகையானது தீச்சுடர் அல்ல; அங்கனமே, புகையானது சுடரின் இருப்பைச் சொல்கிற அடையாளமும் அல்ல. ஏனெனில், புகையிலிருந்து முற்றிலும் விடுபட்டதே சுடராகும்.

இதை வாசிக்கும் போது நாம் அறிந்து கொள்வது புகையைப் பற்றியோ, சுடரைப் பற்றியோ அல்ல, மாறாக அன்பின் தூய இயல்பைப் பற்றி அறியத் துவங்குகிறோம்.

இந்தக் கட்டுரையின் வழியே நாம் புகையில்லாத தீச்சுடரைப் பற்றி எண்ணத் துவங்குகிறோம். அதை அடையாளம் காணவும் வெளிப்படுத்தவும் முயலுகிறோம்.

இந்தக் கட்டுரையில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம் கிருஷ்ணமூர்த்தி மடியில் படுத்துறங்கும் முன்னறியாத அந்தச் சிறுமியின் நம்பிக்கை

அவள் ஒரு மரநிழலில் ஓய்வு கொள்வது போல அவரது இருப்பையும் இயற்கையின் அங்கமாக மாற்றிவிடுகிறாள்

மர நிழலுக்கு இளைப்பாறும் மனிதனைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லையே.

இதை ஜே கிருஷ்ணமூர்த்தி நன்றாகவே உணர்ந்திருக்கிறார். வழிகாட்டுதலும் வழிகாட்டுதல் இன்றியும் சிறுமி அவரை நோக்கி வருகிறாள். அப்படித் தான் ஜே.கிருஷ்ணமூர்த்தியை அணுக முடியும்.

அச்சிறுமி அவரது கைகளை விரித்து வியப்புடன் பார்க்கிறாள். ஒரு மலரைக் காணும் சந்தோஷம் போலவே அந்த விளையாட்டுச் சந்தோஷமளிக்கிறது. தண்ணீர் ஒரு சிறுமியை வரவேற்பது போலவே அவரும் வரவேற்கிறார். தன்னுள் அனுமதிக்கிறார். ஒய்வில் ஒரு முழுமையை காணுகிறார்.

சுவரில் படரும் வெயிலின் காட்சி மனதில் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது.

புகையில்லாத தீச்சுடரை இயற்கையிலும் கலைகளிலும் எளிதாகக் காண முடிகிறது. மனிதர்களிடம் வெளிப்படும் அன்பில் தான் புகை அதிகமாகிச் சுடர் தெரியாமல் போய்விடுகிறது. ஆனால் சிலரது அன்பில் நாம் காணுவது புகையில்லாத சுடரை. ஒரு மலர் நறுமணத்தை இயல்பாக தன்னிடமிருந்து வெளிப்படுத்துவது போல அவர்கள் அன்பின் சுடரை ஒளிரச்செய்கிறார்கள்

ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு கவிஞனின் குரலில் பேசுவதாகவே நான் உணர்கிறேன். கட்டுரையை வாசித்து முடித்தபிறகு அந்த வெயிலும் சிறுமியும் மனதில் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்

••

0Shares
0