மலை தோன்றுகிறது

மாபெரும் மலையின் முன்னால் அமர்ந்திருக்கிறேன். நான் தங்கியுள்ள வீடு அரைவட்டமாக மலைசூழ உள்ளது. இது ஒரு பண்ணை வீடு. பொதிகை மலையின் இடுப்பில் அமர்ந்திருப்பது போன்றிருக்கிறது.மேகங்கள் புகை செல்வது போல நிதானமாக அதிக வேகமின்றி கடந்து சென்றபடியே இருக்கின்றன. நீர்தாரை வடிவது போலதானிருக்கிறது. மேகங்களின் ஊற்று எங்கோ தொலைவில் இருக்கிறது போலும். வடிந்து ஒடி மேகங்கள் மலைகளின் மீது வழிந்தபடியே இருக்கின்றன.



மலையின் மிக உயரத்தில் உள்ள மரம் ஒன்று எங்கோ இருக்கும் மரம் ஒன்றின் நிழல் போல இருக்கிறது. வெகுதொலைவில்  தெரியும் மரங்கள் எப்போதுமே மயக்கம் தருகின்றன. உண்மையில் அவை மரங்கள் தானா இல்லை. மனம் தான் அப்படி மயக்கம் கொள்கிறதா? ஒரு நேரம் அது மரம் போலிருக்கிறது. இன்னொரு நேரம் அது யாரோ  வரைந்து சென்ற ஒவியத்தில் உள்ளது போன்ற அசைவற்ற காட்சிப்பொருளாக இருக்கிறது.


தொலைவில் உள்ள மரங்கள் நம் கடந்தகாலத்தின் கண்களா என்றும் தோன்றுகிறது. மலையின் நெருக்கத்தில் இருக்கும் போது மனம் எப்போதுமே இவ்வளவு நிசப்தமாக என்றே உணர்கிறது. மலை என்பது மாபெரும் நிசப்தம். அது மலர்ந்திருக்கிறது. நிசப்தம் மலரும் தருணம் அற்புதமானது.


காலைவெளிச்சத்தின் ஊடாக மலையின் முன்பாக அமர்ந்திருக்கிறேன். இந்த வெளிச்சம் உலகின் முதல்ஒளி. அது தரும் வியப்பும் நிறஜாலமும் அலாதியானது.


உலகினை ஒளியின் கைகள் தினமும் தூய்மைபடுத்துகின்றன. குழந்தையை விழிக்க வைப்பது போன்று ஒளி மலையை எழுப்புகிறது.  விழித்து கொண்டபடியே அம்மா எழுப்புவதற்காக காத்துகிடக்கு குழந்தைபோன்று தான் மலையிருக்கிறது. அது பின்னிரவிலே விழித்து கொண்டுவிடுகிறது என்பதை கண்டேன். ஆனாலும் அது காலை வெளிச்சத்திற்காக காத்துகிடக்கே செய்கிறது. காலை வெளிச்சம் அதன் மெல்விரல்களால் மலையைதொடும் போது மரங்கள் அடர்ந்த மலை செல்லமாக விழிக்கிறது.


மலையின் விழிப்பை பார்த்தபடியே இருக்கிறேன். அதன் பல்லாயிரம் மரங்களும் ஒரு நேர விழித்து கொண்டிருக்கின்றன பாறைகள்  கூட கண்விழிக்கின்றன.  பல்லாயிரம் வயதை கொண்ட புராதான பாறைகள் விழிப்பதில்லை.  ஆனால் அவை தன் உடலை சாவகாசமாக கொள்கின்றன. ஒரு பாறையின் முதுகு தெரிகிறது. அந்த முதுகின் மீது ஏதோ ஊர்ந்து கொண்டிருக்கிறது. அது ஒரு விலங்கா அல்லது நிழலா. அல்லது அதுவும் தோற்றமயக்கம் தானா?


அந்த முதுகில் மச்சம் போன்று பெருங்கல் ஒன்று காணப்படுகிறது. மலையின் நிசப்தம் மெல்ல கரைகிறது. வெளிச்சம் மலையை பேச செய்கிறது. பகலில் காணும் மலை நம்மை உற்றுநோக்குகின்றன. அதன் பார்வையில் இருந்து எதுவும் தப்புவதேயில்லை.  ஆனால் அதிகாலையில் மலை சிணுங்குகிறது. காட்டருவி ஒன்று வடிந்து போயிருக்கிறது. அதிக நீர்வரத்து இல்லை. ஆனால் உடையில் இருந்து பிரிந்து தொங்கும் ஒற்றை நூலை போல மலையினுள் ஒடும் நீர் தனித்து வழிகிறது.


அதுவும் நிசப்தமே. மலையின் மௌனம் உலகின் களிப்பூட்டும் வாசனை. அது இதயத்தின் வெகு ஆழம் வரை பரவி நரம்புகளில் ஏறுகிறது. வாசனையின் குமிழ்கள் தோன்றி பறக்கின்றன.  அவை உலகின் மீதான பரவசத்தை அதிகமாக்குகின்றது.  வெளிச்சம் அடர்த்தியாகிறது. இன்னமும் சூரியன் வெளிப்படவில்லை. எங்கோ மேகத்தின் உள்ளிருந்து உலகை பார்த்து கொண்டிருக்கிறது சூரியன். கண்முன்னே தெரியும் மலையின் முன்னால் கண்ணால் காணமுடியாத எத்தனையோ காட்சிகள் இருக்கின்றன. கண் நிறைய நேரங்களில் ஏமாற்றத்தையே தருகிறது. அதனால் மலையை விழுங்க முடியவில்லை.


மலையை தின்பதற்கு மனம் ஆசைப்படுகிறது. ஆனால் கண்கள் அதை வெறுமனே பார்க்க மட்டுமே செய்கிறது.  மலையின் அடிவாரத்தில் ஒரு தென்னை மரமிருக்கிறது. இந்த மரம் தானே மிக உயரமானவன் என்பது போன்று மலையை பார்த்தபடியே நிற்கிறது. தனது உயரத்தையும் பிரம்மாண்டத்தையும் மறந்து மலை அந்த தென்னை மரத்தை நீ தான் உயரம் என்று வியக்கிறது. தென்னையில் அதிக அசைவில்லை.


மாறாக அது மலையை பார்த்தபடியே இருக்கிறது. வாதாமரத்தின் இலைகள் உதிர்கின்றன. காலை அதன்மீது அமர்ந்திருக்கிறது. உலகம் காலையை எதிர்கொள்ளும் விதம் அற்புதமானது. ஒரு எறும்பு கூட விழித்து கொள்கிறது. பரபரப்பாக ஒடுகிறது. என் காலடியில் ஒடும் ஒரு எறும்பு இத்தனை வேகமாக எங்கே போகிறது. அதுவும் மலையின் அடிவாரத்தில் தான் வாழ்கிறது. ஆனால் அது மலையை பொருட்படுத்துவதேயில்லை. அதன் கண்களில் மலை பிரம்மாண்டமில்லை. அது வெறும் இருப்பு.


எறும்பு மலைபாறை ஒன்றை நோக்கி சென்றபடியே இருக்கிறது. எறும்புகளால் மலையை என்ன செய்துவிட முடியும். ஆனால் அவை மலையை தின்கின்றன. எறும்பு மண்ணில் எதையோ தேடுகிறது. தலையை சிலுப்பி எதையோ காண்கிறது. பின்பு அது முன் நகர்ந்து போகிறது. இதோ ஒரு வண்ணத்துபூச்சி அதுவும் விழித்து கொண்டிருக்கிறது. பறக்க எத்தனிக்கிறது. சோம்பல் உற்று அது பாறையின் மீது உட்காருகிறது. பசியற்ற வண்ணத்துபூச்சியது. இப்போது அது உலகின் நடனம் மட்டுமே. வண்ணத்துபூச்சிகளின் நடனம் போல வியப்பூட்டுவது வேறு இருக்கிறதா என்ன? அந்த நடனத்தை இங்கே அமர்ந்து பார்க்கையில் மிகவும் களிப்புறுகிறேன். 


என் முன்னே ஒரு சிறுசெடி. அந்த செடியில் இரண்டே பூக்கள். அவையும் கடுகளவே இருக்கின்றன. ஆனால் அந்த மஞ்சள் அற்புதமாகயிருக்கிறது. அதன் நேர்த்தியும் அடுக்கு எத்தனை ஒழுங்கு என்று வியப்புற செய்கிறது. அந்த பூக்கள் உலகை காண்கின்றன. உலகம் அந்த பூக்களை என்ன செய்யும்.  பரபரப்புடன் பெரிய எறும்பு ஒன்று பாறையிலிருந்து இறங்கி கிழே போகிறது. க்யுட் டியூட் என்று ஒரு பறவை விட்டுவிட்டு குரல் தருகிறது.  காற்று தணிந்திருக்கிறது. காற்று தான் மலையின் ஒரே தோழன்.  இரண்டும் ஒன்று சேரும் போது களியாட்டம் துவங்கிவிடுகிறது. அதோ ஒரு மரத்தின் இலைகள் அசைகின்றன. காற்று தரையிறங்க போகிறது போலும். மரங்களின் இலைகளில் பாதி பழுத்தும் பாதி பச்சையாகவுமிருக்கின்றன. 


நேற்று  மலையின் முன்பாக வந்து அமர்ந்தபோது மாலைவெளிச்சம் வடிந்து கொண்டிருந்தது. மலை கண்முன்னே மறைய துவங்கியது. இருள் பீறிட்டதும் மலை கண்ணில் இருந்து மறைந்தது. ஆனாலும் மலையின் இருப்பு மறையவேயில்லை. இயற்கையாக உள்ள வெளிச்சம் ஒன்று மலையில் இருந்து கசிந்து கொண்டிருக்கிறது. அது எதன் வெளிச்சம். ஆனால் அந்த வெளிச்சம் இருளுக்குள்ளும் அதை உணர செய்கிறது. இருள் அதிகமாகிறது. விளக்கு வெளிச்சம் வேண்டாம் என்றே தோன்றுகிறது.


மலை தொலைவில் அடங்கியிருக்கிறது. அந்த ஒடுக்கம் நம்மால் புரிந்து கொள்ள முடியாதது.


பின்னிரவில் எழுந்து வந்து  அதே மலையை பார்த்தேன். ஆஹா . எத்தனை நட்சத்திரங்கள் வானில். மலையிடம் அசைவில்லை. பாறைகள் நெகிழ்ந்து கொண்டிருக்கின்றன. அருவிகளில் நீர்வரத்து இல்லை. ஆனாலும் எங்கோ ஒசை ஒன்று வழிந்து கொண்டிருக்கிறது. பின்னிரவில் மலை என் வீட்டின்  வாசல் வந்துவிட்டதோ என்றும் தோன்றியது. பகலில் தெரியும் விலகல் இல்லை. இடைவெளியை மனம் இப்போது உணர்வதில்லை.


விடிகாலைக்காக மனது ஏங்க துவங்கியது. மலையை கண் இமைக்காமல் பார்த்து கொண்டேயிருக்கிறேன். மலையின் முன்னால் நம் வயது கரைந்து போய்விடுகிறது. அது மனிதர்களை தன் மீது செல்லும் எறும்பு போல தான் நினைக்குமா? எரிந்து கொண்டிருக்கும் சுடரை போல உள்ளே புகமுடியாத ஆனால் தித்திக்கும் ஒளியை போன்ற ஏதோவொரு ஒளியாடலை மலையும் கொண்டிருக்கிறது போலும்.


தொலை தூர மரங்களில் எவரது கையும் படாத காய்களும் கனிகளும் பூக்களும் இருக்க கூடும். அவை மனிதர்களுக்கானதில்லை. அவை தன் விருப்பத்திற்காக உருவாகி அழிந்துவிடுகின்றன. மலை பாதைகள் அற்றது. அல்லது எல்லா பக்கமும் அதற்கு வழிகளே. அதன்மீதான யாரோ நடந்து போக துவங்குகிறார்கள். பகல் வெளிச்சம் நீள்கிறது. மலையும் இயக்கம் கொள்கிறது.காற்று அதிகமாகிறது. மழை வரப்போகிறதோ என்றும் தோன்றுகிறது.


ஒரு மணிநேரத்தின் முன்பாக கண்ட அதே வண்ணத்துபூச்சி இப்போது வேகம் கொண்டுவிட்டது. தலைகிறுகிறுக்க அது பறக்கிறது. இலக்கில்லாமல் அலைகிறது. பகல் அதை துரத்திக் கொண்டிருக்கிறது. என்னையும் பகல் அழைக்கிறது. நானும் எழுந்து செல்ல வேண்டும். மலையின் பருத்த புராதனமாக கண்கள் என்னை பார்த்து கேலி செய்கின்றன. நான் எழுந்து செல்ல துவங்குகிறேன்.
**

0Shares
0