மூத்தோர் பாடல் 4

குருகிடம் தப்பிய இறால்.

Minuscule என்ற பிரெஞ்சு அனிமேஷன் தொடர்வரிசை பூச்சிகள் மற்றும் வண்டுகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் மிகச்சிறப்பான தொடராகும். அதில் ஒரு வெட்டுக்கிளி எப்படி இலையை உண்ணுகிறது. ஒரு வண்டு எவ்வாறு மரத்தைத் துளையிடுகிறது என்பதைப் போல நுண்ணுயிர்களின் வாழ்க்கையை அற்புதமாகச் சித்தரித்திருப்பார்கள். அந்தப் படங்களைப் பார்த்தபிறகு வண்டும் பூச்சிகளும் விநோத உலகில் வாழ்வதாக உணர்ந்திருக்கிறேன்.

இது போலவே நேஷனல் ஜியாகிரபி சேனலில் மீன்கொத்தி ஒன்று எப்படி மீனைக் கவ்விச் செல்கிறது என்பதைத் துல்லியமாகப் படம்பிடித்து காட்டினார்கள்.. கேமிரா தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலத்தில் இது போன்ற ஆவணப்படுத்துதல் நம்மை வியக்கவைக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் எதுவும் அறிமுகமாவதற்கு இரண்டாயிரம் ஆண்டின் முன்பாகவே சங்க கவிஞர்கள் வைல்ட் லைப் போட்டோகிராபர் போல இயற்கையை நுண்மையாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். சொற்கள் தான் அவர்களின் கேமிரா. கவிதையில் அவர்கள் காட்டும் காட்சியில் இன்று அதிநவீன தொழில்நுட்பத்தினால் நாம் காணும் காட்சிகளுக்கு நிகரானது.

அப்படி ஒரு வைல்ட் லைப் போட்டோகிராபர் போலச் செயல்பட்டவர் தான் கோட்டியூர் நல்லந்தையார் இவரது பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.

அபூர்வமான பாடலிது. காதலன் தன்னைத் திருமணம் செய்ய வரவிலையே என்ற தலைவியின் அச்சம் எப்படிபட்டது என்பதை நல்லந்தையார் அழகாக விளக்குகிறார்

காதலுற்றவர்களின் தவிப்பை, பயத்தை. குழப்பத்தைச் சங்க கவிஞர்கள் மிக நுட்பமாகப் பாடியிருக்கிறார்கள். காற்று தண்ணீரின் மீது கடந்து செல்லுகையில் ஏற்படும் சிற்றலை போல மனதின் சிறுசலனங்களைக் கூட அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

காதலுற்ற பெண்ணுக்கு எதிர்காலம் குறித்த குழப்பங்கள் எப்போதும் அதிகம். அவள் ஒரு பக்கம் காதலனுக்காகக் காத்துக் கொண்டிருப்பாள். மறுபக்கம் வீண்கற்பனையில், குழப்பத்தில் சிக்கிக் கொண்டிருப்பாள். உண்மையில் அவளது மனது ஊஞ்சலைப் போல முன்பின்னாகச் சென்றபடியே இருக்கும். நல்லபடி நடக்குமோ நடக்காதோ என்ற குழப்பத்தில் அவள் சிறு விஷயங்களுக்குக் கூடப் பயப்படுவாள்.

அப்படியான பயத்தைத் தான் நல்லந்தையார் தனது பாடலில் குறிப்பிடுகிறார்.ஒவியரிகள் கண்கள் போல நுட்பமான அவதானிப்பிலிருந்தே இந்தக் கவிதை உருவாகியிருக்கிறது.

கடற்புறத்திலுள்ள ஒரு பெண் காதலிக்கிறாள். தலைவன் அவள் வீட்டின் புறத்தே வந்து நிற்பது அறிந்தும் ஊர்பேசுமே என்று பயந்து வீட்டிற்குள்ளே இருக்கிறாள். வீட்டிலுள்ள அம்மாவைக் கண்டு கூடப் பயப்படுகிறாள். இந்த மனநிலையைச் சொல்ல வரும் தோழி அது எப்படியிருக்கிறது என்பதற்கு ஒரு உவமை சொல்கிறாள்

இவர் பாண்டி நாட்டிலுள்ள திருக்கோட்டியூரைச் சார்ந்தவர் நல்லந்தையார்.

யார்க்கு நொந்து உரைக்கோ யானே- ஊர் கடல்

ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,

கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த

கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய

முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, 5

எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்

துறு கடற் தலைய தோடு பொதி தாழை

வண்டு படு வான் போது வெரூஉம்

துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?

நற்றிணை -211

கடற்கரையின் உப்பங்கழியிடத்து இரையை விரும்பி ஒரு கரிய காலையுடைய குருகு வளைந்த முதுகும் உயர்ந்த வாயும் உடைய இறால் மீன் ஒன்றைக் குத்திக் கவ்வ முயல்கிறது. ஆனால் இந்த இறால் தப்பிவிடுகிறது. இப்படித் தப்பிய இறால் மணல் மேட்டில் வளர்ந்துள்ள தாழையின் பூவைப் பார்க்கிறது. இதழ் விரியாது மலர்ந்திருந்தது அந்த வெண்தாழைமலரை இதுவும் குருகு தான் என்று நினைத்து அஞ்சுகிறது. அது போலவே தான் தலைவியும் இருக்கிறாள் என்கிறார் நல்லந்தையார்

தாழம்பூ என இன்று அழைக்கப்படுவது தான் தாழைமலர். . தாழம்பூவின் மணம் அடர்த்தியானது. தாழைமடல்களைக் கொண்டு குடை செய்வார்கள். தாழங்குடை பிடித்து நடந்து போகிறவர்களை பழைய மலையாளப் படங்களில் காணமுடியும்.

தாழையில் உள்ள முள் கையைத் தைக்கும் என்பதால் இதைக் ‘கைதை’ என்றும் குறிப்பிடுகிறார்கள். தாழையூத்து, தாழையடி, தாழைக்காடு, தாழையூர் எனத் தாழையின் பெயரைக் கொண்ட நிறைய ஊர்கள் இருக்கின்றன. குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் தாழை சிறப்பித்துக் குறிப்பிடப்படுகிறது.

குருகு எனும் கொக்கு சங்கப்பாடல்களில் கருங்கால் வெண்குருகு என்றே குறிப்பிடப்படுகிறது. இதன் நிறம் தாமரை போலிருக்கும். அதன் உருவம் தாழம்பூ போல இருக்கும். குருகு சிறகை விரிக்கும்போது தாழம்பூ விரிவது போலவே தோன்றும் இதன். ஒலியைத் தமிழில் ‘நரலல்’ என்கிறார்கள். .துணையைப் பிரிந்த குருகு இரவில் குரல் எழுப்பும்.

குருகும் தாழம்பூவும் ஒன்று போலத் தோன்றியதால் அந்த இறால் மீன் பயந்து போய்விடுகிறது. எவ்வளவு நுட்பமான காட்சியது. பறவையும் பூவும் ஒரு நிமிஷத்தில் ஒன்றாகி விடுகின்றன. இறாலின் அச்சத்தைக் கூடக் கவிஞன் அறிவான் என்பது அவனது கவித்துவத்தின் உச்ச வெளிப்பாடாகவே கருதுவேன்.

குருகியிடம் தப்பிய இறால் என்பது உணர்வுநிலையின் அடையாளம்.. அந்தப் பயம் உடனே கலைந்துவிடக்கூடியதில்லை. காதல் இப்படி அறியாப்பயங்களை உருவாக்க கூடியது தானே.

காதலுற்ற பெண்ணிற்கு காட்சி மயக்கம் தோன்றுவது இயல்பு தான். அவள் ஒசையை தான் அதிகம் உணருவாள். மெல்லிய ஒசை கூட அவள் காதுகளில் பலமாக ஒலிக்கும். நினைவால் வழிநடத்தப்படும் அவளுக்கு ஒரு நாள் என்பது நீண்ட பொழுது.  தலைவின் உணர்ச்சிநிலைகளை தோழி அறிவாள்.

“அந்திக் கருக்கலில்

திசை தவறிய

பெண் பறவை

தன் கூட்டுக்காய்

தன் குஞ்சுக்காய்

அலைமோதிக் கரைகிறது

எனக்கதன் கூடும் தெரியும்

குஞ்சும் தெரியும்

இருந்தும் எனக்கதன்

பாஷை புரியவில்லை.”

என்ற கலாப்ரியாவின் கவிதையில் வருவது போல நம்மிடம் வெளிப்படுத்த மொழியில்லை. இறால் கண்டுபயப்படுவது தாழைமலர் தான். அது குருகில்லை என்று எப்படி இறாலிடம் தெரியப்படுத்த முடியும். அது தானே தெளிய வேண்டும். அந்த தெளிவு ஏற்படும் போது வரை அச்சம் விலகாது. காதலின் துயரை காதலர்களை தவிர பிறரால் போக்கிவிடவே முடியாது.

சங்க கவிஞர்களுக்குப் பறவைகள். தாவரங்கள். விலங்குகளின் இயல்புகள் துல்லியமாகத் தெரிந்திருந்தன. இயற்கையை முழுமையாக அறிந்து கொண்டிருந்தார்கள். ஜப்பானிய அனிமேஷன் இயக்குநர் மியாசாகி தனது நேர்காணல் ஒன்றில் ஒரு மண்புழுவின் நகர்வைப் படம் வரைவது எளிதானதில்லை. நாம் மண்புழு தன் உடலை எப்படி அசைத்து முன்னே செல்லும் என்று கூர்ந்து கவனித்துப் பார்த்ததில்லை. இன்று பெரிய பல்கலைக்கழகங்களில் ஓவியம் பயின்றுவரும் மாணவர்கள் மண்புழுவை நேரில் கண்டவர்களேயில்லை. அவர்களிடம் மண்புழுவின் இயக்கத்தைப் படம் வரையச் சொன்னால் உடனே கூகிளில் தேடுகிறார்கள். பூச்சிகள். வண்டுகள். மண்புழுக்கள் எனச் சிறிய உயிர்களின் இயக்கங்களை, நடனத்தை எவரால் ஆழ்ந்து பார்க்கவும் வரையவும் முடிகிறதோ அவரையே நல்ல கலைஞன் என்பேன் என்கிறார் மியாசகி.

சங்க கவிஞர்களும் இப்படி தானிருந்திருக்கிறார்கள். தலைவியின் பயம் எப்படிப்பட்டது என்று சொல்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் யாரும் கவனிக்காத. ஆனால் நுட்பமான இறாலின் அச்சத்தை உவமை கூறுகிறார் கவிஞர். அது தான் கவிஞனின் தனித்துவம். இந்தக் காட்சியின் வழியே காதலியின் மனது மட்டுமில்லை. இறாலின் அச்சமும் ஆழமாக நமக்குள் படிந்துவிடுகிறது.

உண்ணும் பொருளாக மட்டுமே நாம் அறிந்திருருந்த இறால்மீனை சட்டென வேறு நிலைக்கு இந்தக் கவிதை கொண்டு போய்விடுகிறது.

நல்லந்தையாரின் ஒரேயொரு பாடல் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. இத்தனை நுட்பமாக இயற்கையை அவதானிக்க முடிந்த அந்தக் கவிஞனின் மற்ற பாடல்கள் காற்றில் கரைந்து போய்விட்டன. நமக்குக் கிடைக்காமல் போன பொக்கிஷங்கள் எத்தனையோ.

ஒரே கவிதையின் வழியே அவர் தனது ஆளுமையை அடையாளம் காட்டிவிடுகிறார்.

பெரும்பாணாற்றுப்படை பாடலில் உருத்திரங்கண்ணனார் தூண்டிலிலிருந்த இரையைக் கவ்வித் தப்பிய வாளை மீன் நீரருகே வளர்ந்திருந்த பிரம்பச்செடியின் நிழல் நெளிவதைத் தூண்டிலோ என நினைத்துப் பயப்படுவதாக எழுதியிருக்கிறார். இது நல்லந்தையார் பாடலைப் போலவே மீனின் அச்சத்தைப் பாடும் இன்னொரு பாடலாகும்

சங்க காலம் துவங்கி இன்று வரை பெயர்களின் முன்னால் இளமையைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. இப்படி வேறு மொழிப் பெயர்கள் வழங்கப்படுகிறதா என்று தெரியவில்லை. இளங்கீரன், இள நாகன். பால சுப்ரமணியன். பாலச்சந்திரன். பாலசுந்தரம், இளநகை, இளஞ்சேரல், என்பது போல எத்தனையோ பெயர்களில் இளமை முன்னாக வருகிறது. இது போல முதுமையை முன்னொட்டாகக் கொண்ட சில பெயர்களையும் சங்க கவிஞர் வரிசையில் காணமுடிகிறது

••

நெல்லில் பதர் என்பது பொக்காகக் கருதப்படும். அதன் உள்ளே அரிசி இராது. இப்படி நாட்களிலும் பதடி உண்டு என்கிறது சங்க இலக்கியம். அதாவது வீணில் கழியும் நாட்களைப் பதடி என்கிறார்கள்.

இப்படித் தலைவியைக் காணாத நாட்களை வெறும் நாட்களாகக் கருதுகிறான் தலைவன். இதைப் பற்றிக் குறுந்தொகையில் ஒரு பாடலிருக்கிறது

எல்லாம் எவனோ பதடி வைகல்

பாணர் படுமலை பண்ணிய எழாலின்

வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப்

பெய்த புலத்துப் பூத்த முல்லைப்

பசுமுகைத் தாது நாறும் நறுநுதல் 5

அரிவை தோளிணைத் துஞ்சிக்

கழிந்த நாளிவண் வாழு நாளே.

– பதடி வைகலார்.

இந்தக் கவிஞரே பதடி வைகலார் என்றே அழைக்கப்படுகிறார். தலைவியைக் கண்டு அவளுடன் துஞ்சுதல் தான் இன்பமான நாட்கள். அதுவன்றி மற்ற பொழுதுகள் வெறும் பதர்களே

நாட்களும் அதைச் செலவிடும் முறையைக் கொண்டு தான் அளக்கப்படுகின்றன. மதிக்கப்படுகின்றன. நமது பெரும்பான்மை நாட்கள் வீணாகக் கழித்தவை. அதை நாம் உணருவதேயில்லை. இந்தக் கவிஞரின் வழியே தான் அவை பதடிகள் என்பதை நாம் உணருகிறோம்

பதடி வைகலாரின் இயற்பெயர் என்ன என்று தெரியவில்லை. ஆனால் கவிதையின் உவமையின் வழியாகவே அவர் அடையாளப்படுத்தபடுகிறார். கவிதையின் சொல்லாட்சியே அவரது பெயராக மாறியிருக்கிறது.

ஒரு நாளை பிளந்து பார்த்துச் சொல்லும் நுட்பமும் கவித்துவமும் சங்க கவிஞர்களிடம் இருந்திருக்கிறது. இனி நாமும் வெறும் நாட்களைப் பதடி என்றே அழைப்போம்

••

0Shares
0