தமிழ் பதிப்புத்துறை வரலாற்றில் வாசகர் வட்டத்திற்குத் தனியிடம் உண்டு. அது லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய பதிப்பகம். அவர் தியாகி சத்தியமூர்த்தியின் மகள். எம்.எல்.சி.யாக இருந்தவர்.
உலகத் தரம் வாய்ந்த புத்தகத் தயாரிப்பினை வாசகர்வட்டம் மேற்கொண்டிருக்கிறது. கலாஸாகரம் ராஜகோபால் வரைந்த ஒவியம் மற்றும் அட்டை வடிவமைப்பு. ஒரே அட்டை ஒவியம் தான் எல்லா நூல்களுக்கும். புத்தக விலை மிகவும் குறைவு. ஆனால் தரமான இந்தப் புத்தகங்கள் விற்காமல் போய் பெரிய நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி
என்னிடமுள்ள வாசகர் வட்ட வெளியீடுகளைக் கையில் எடுத்துப் பார்க்கும் போது லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் கனவு ஏன் தோற்றுப் போனது என்ற கேள்வி மனதில் எழுகிறது. உண்மையில் அவர் தோற்கவில்லை. சீரழிந்த பண்பாடு அவரைக் காவு வாங்கிவிட்டது.
வாசகர்வட்டம் ஒரு முன்னோடியான அமைப்பு. அதன் மூலம் தமிழ் இலக்கியத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு போகும் கனவு கண்டார் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி. ஆனால் அது நிறைவேறவில்லை. ஆயிரம் பேர் ஆதரவு கொடுத்திருந்தால் வாசகர் வட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கும். வெறும் நூறு, இருநூறு பேர் மட்டுமே ஆதரவு தந்தார்கள். நூலகங்களில் அடிமாட்டு விலைக்கு புத்தகங்கள் கேட்கிறார்கள் என்று லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தர மறுத்திருக்கிறார். வாசகர்களை நம்பி நேரடியாக விற்பனை செய்ய முயன்றார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. இரண்டாயிர வருஷப் பெருமை பேசும் தமிழ் இலக்கியச் சூழலில் இன்றும் ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்க கஷ்டப்படவே நேர்கிறது.
தி. ஜானகிராமன் ,கு. ப. ராஜகோபாலன், சிட்டி , நீல. பத்மநாபன் , கிருத்திகா , ஆ. மாதவன் , எம். வி. வெங்கட்ராம் , கி. ராஜநாராயணன் , விஸ்வநாத சாஸ்திரி , பி. கேசவதேவ் , சா.கந்தசாமி , லா.ச.ரா. , நரசைய்யா, சிதம்பர சுப்ரமணியன், மோகன் ராகேஷ் எனச் சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசகர்வட்டம் வெளியிட்டுள்ளது. இவர்கள் புத்தகங்களை வாங்க ஆயிரம் பேர் அன்று முன்வரவில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்.
வாசகர் வட்டம் சார்பில் வெளியிடப்படும் புத்தகங்கள் குறித்து அறிந்து கொள்ள வாசகர் மடல்” என்னும் செய்தி இதழையும் நடத்தியிருக்கிறார். அதுவும் முன்னோடியான முயற்சி..
வாசகர்வட்ட வெளியீடுகளில் பல நூல்கள் தற்போது மறுபதிப்பு செய்யப்படவில்லை. அவை முறையான உரிமை பெற்று மறுபதிப்பு செய்யப்படல் வேண்டும்.
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்திக் குறித்து ஒரு டாகுமெண்டரி படத்தை யாராவது உருவாக்க வேண்டும். அவர் தான் தமிழின் முதல் பெண் பதிப்பாளர். பதிப்புத்துறையில் சாதனைகளை செய்தவர். அவரது பெயரால் சிறந்த பதிப்புப் பணிக்கான விருது வழங்கப்பட வேண்டும்.
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியினைப் பற்றித் தென்றல் இதழில் சிறந்த கட்டுரை ஒன்றை பா.சு.ரமணன் எழுதியிருக்கிறார். அதனை மீள்பதிவு செய்கிறேன்
••
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி” – பா.சு.ரமணன்
“லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி” என்றால் தெரியாதவர்களுக்குக் கூட, “வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி” என்று சொன்னால் உடனே ஞாபகத்துக்கு வந்துவிடும். அந்த அளவுக்கு ‘வாசகர் வட்டம்’ என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன்மூலம் பல தரமான புத்தகங்களை வெளியிட்டு, தமிழ் நூல் வாசிப்பு வளர்ச்சிக்கு வளம் சேர்த்தவர் இவர்.
தீரர் சத்தியமூர்த்தித் தம்பதியினருக்கு 1925, ஜூலையில் மகளாகப் பிறந்தார். தந்தை சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் பள்ளியில் படிக்கும்போதே லக்ஷ்மிக்கு சுதந்திர தாகம் வந்துவிட்டது. ஒருமுறை மகாத்மா காந்தி சமூகப் பணிக்கு நிதியுதவி கோரியபோது தம் கைவளையல்களைக் கழற்றிக் கொடுத்துவிட்டார். பின் அவை வெள்ளி என்பது தெரியவரவே, தந்தையிடம் சொல்லி, குடும்பச் சொத்தாக இருந்த தங்க வளையலைக் கொண்டுவந்து காந்திஜியிடம் அளித்தார். காந்திஜி மட்டுமல்லாமல், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத் எனப் பலரது அன்பையும், பாராட்டுதலையும் பெற்றவர் லக்ஷ்மி. இளவயதிலேயே தந்தையுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சத்தியமூர்த்தி மகளை ஒரு ஆணுக்குரிய போர்க்குணத்தோடு வளர்த்தார். வீணை வாசிக்கத் தெரிந்த லக்ஷ்மிக்குக் குதிரையேற்றமும் தெரியும். ஓவியம், இசையிலும் மிகுந்த நாட்டம். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் தந்தை ‘அருமைப் புதல்விக்கு’ என்று எழுதிய புத்தகங்களை அன்பளிப்பாகத் தருவார். அது இலக்கியத் தாகத்துக்கு வித்திட்டது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி எனப் பிறமொழி இலக்கியங்களைத் தேடித்தேடிப் படித்தார். இந்நிலையில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்ட சத்தியமூர்த்திக் கைது செய்யப்பட்டார். உடல் நலிவுற்றும் அவரை ஆங்கில அரசு விடுதலை செய்யவில்லை. வேலூர், மத்திய பிரதேசம் எனச் சிறை விட்டுச் சிறை மாற்றியது. மகளைப் பார்க்கவும் அனுமதியில்லை.
கேரளத்தைச் சேர்ந்தவரும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் படித்துத் தங்கப் பதக்கம் பெற்றவருமான கிருஷ்ணமூர்த்தியுடன் லக்ஷ்மிக்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. சிறையில் இருந்தபடியே, ஏப்ரல் 23, 1943 அன்று திருமணம் நிகழவேண்டும் என்று நாள் குறித்துக் கொடுத்தார் சத்தியமூர்த்தி. எக்காரணத்தைக் கொண்டும் அந்த நாளை மாற்றக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். அவர் குறிப்பிட்ட அந்த நாளிலேயே திருமணம் நிகழ்ந்தது. ஆனால் அதைப் பார்க்க சத்தியமூர்த்தி இல்லை. மகளின் திருமணத்திற்கு நாள் குறித்தவர், அதற்கு முன்னரே உடல் நலிவுற்றுக் காலமானார். ஆனால், தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றினார் லக்ஷ்மி. மணமானபின் கணவருடன் கேரளத்துக்குச் சென்றார். அங்கும் அவரது சமூகப் பணி தொடர்ந்தது. தமது இல்லத்திலேயே பெண்களுக்கான இலவச மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். தவிர, பெண்கள் நலன், கல்வி, சமூகம், குழந்தை வளர்ப்பு என்று பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டார். பின் தமிழகம் வந்தார்.
கிருஷ்ணமூர்த்தி. மலையாளம், ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழிகள் அறிந்தவர். சட்டம் பயின்றவர். எழுத்தாளரும் கூட. காமராஜருக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் மனைவியின் அரசியல், சமூகப் பணிகளை ஊக்குவிப்பவராக இருந்தார்.
லக்ஷ்மி, 1964 மற்றும் 1970 தேர்தல்களில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினரானார். ஆனால் காங்கிரஸ் தன் கொள்கைக்கு மாறாக நடந்து கொண்டதால் வெறுப்புக் கொண்ட இவர், மாற்றுக் கட்சியாக ஜனதா கட்சி தோற்றுவிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். தந்தை சத்தியமூர்த்தி எப்படி ஆங்கில அடக்குமுறைக்கு எதிராக இருந்து போராடினாரோ அவ்வாறே லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியும் நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது அதை எதிர்த்துப் போராடினார்.
1977ல் ஜனதா கட்சி சார்பில் சென்னை மயிலாப்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதன்பின் அரசியலிலிருந்து ஒதுங்கி, தீவிர சமூக, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். ‘சத்தியமூர்த்தி ஜனநாயக உரிமைகள் மையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் கருத்தரங்குகளை நடத்தி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்.
ஏற்கனவே கல்கி, சுதேசமித்திரன், ஹிந்து எனப் பிரபல இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதியவர் இவர். நூலும் எழுதியிருக்கிறார். இவரது ‘ஐந்தாவது சுதந்திரம்’ என்ற கட்டுரைத் தொகுப்பை அக்காலத்தில் புகழ்பெற்ற பதிப்புத்துறை முன்னோடி சக்தி. வை.கோவிந்தன் வெளியிட்டிருக்கிறார். இவரது கணவரும் மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்துக்குக் கே.எம். பணிக்கரின் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். இந்தப் பின்னணியோடு, 1964-65களில் இருவரும் ‘வாசகர் வட்டம்’ என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கினர்.
நல்ல எழுத்தாளர்களின் தரமான நூல்களை வெளியிட்டு வாசகர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பது இதன் நோக்கம். அதற்காகப் ‘புக்வெஞ்சர் பப்ளிகேஷன்ஸ்’ என்ற பதிப்பகத்தைத் துவக்கினர். சந்தாதாரர்களைச் சேர்த்து, வருடத்திற்கு 25 ரூபாய் கொடுப்பவர்களுக்குச் சலுகை விலையில் நூல்கள் வழங்கப்பட்டன.
வாசகர் வட்டத்தின் முதல் வெளியீடு ராஜாஜி எழுதிய ‘சோக்ரதர்: ஆத்ம சிந்தனைகள்’ என்னும் நூல். அது 1965ல் வெளியானது. ராஜாஜியே அதை வெளியிட்டார்.
தரமான தாள், நேர்த்தியான அச்சு, உயர்தரப் பைண்டிங், முகப்போவியம், வடிவமைப்பு என எல்லாவற்றிலும் வாசகர் வட்ட நூல்கள் தனித்து விளங்கின. முதல் நூலில் கலாசாகரம் ராஜகோபாலின் கோட்டோவியம் இடம்பெற்றது. அதையே வாசகர் வட்ட வெளியீடுகள் அனைத்திற்கும் பயன்படுத்தினார் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி. வாசகர் வட்ட நூல்களைத் தனித்து அடையாளங் காட்டின அவை. இலக்கிய வாசகர்களிடம், குறிப்பாக, இலங்கைத் தமிழரிடையே, அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து புது நூல்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் தொடராக வெளிவந்த நாவல்களை நூலாகப் பிரசுரிப்பதை அவர் தவிர்த்தார். சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளைத் தேடியெடுத்து வெளியிட்டார். தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, எம்.வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’, ஆ. மாதவனின் ‘புனலும் மணலும்’, நீல. பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’, லா.ச. ராமாமிர்தத்தின் ‘அபிதா’ போன்றவை வாசகர் வட்டத்திற்கென்றே எழுதப்பெற்றன. திறமை வாய்ந்த எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களது முதல் படைப்பு வெளியாகவும் உதவியாக இருந்தார். நரசய்யாவின் ‘கடலோடி’, சா. கந்தசாமியின் ‘சாயாவனம்’ போன்றவை அப்படி வெளியானவைதாம். அதிலும் ‘சாயாவனம்’ கந்தசாமியின் முதல் நாவலாகும். அதுபோலப் ‘புனலும் மணலும்’ மாதவனின் முதல் நாவல். ந. பிச்சமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுதியான ‘குயிலின் சுருதி’ வாசகர் வட்டம் மூலம் வெளியானதே! லா.ச.ராவின் ‘புத்ர’ நாவல், கிருத்திகாவின் ‘நேற்றிருந்தோம்’, நா. பார்த்தசாரதியின் ‘ஆத்மாவின் ராகங்கள்’, கி.ரா.வின் ‘கோபல்ல கிராமம்’, க.சுப்பிரமணியனின் ‘வேரும் விழுதும்’, ஆர். சண்முகச் சுந்தரத்தின் ‘மாயத்தாகம்’ போன்றவை வாசகர் வட்டம் மூலம் வெளியாகிப் புகழ் பெற்றவையே.
தன் இல்லத்தில் எழுத்தாளர்களை வரழைத்து வாசகர்-எழுத்தாளர் சந்திப்புக்களையும் நடத்தினார். ‘புக் கிளப்’ என்ற கருத்தைத் தமிழில் நனவாக்கிய முன்னோடி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்திதான். வை.மு. கோதைநாயகி, தன் பதிப்பகம் மூலம் தனது நூல்களை மட்டுமே வெளியிட்டார். ஆனால் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்திப் பிறரது நூல்களைத் தயாரித்து, வெளியிட்டு, விற்பனை செய்ததனால், தமிழின் முதல் பெண் பதிப்பாளராகக் கருதப்படுகிறார். ‘வாசகர் செய்தி’ என்ற செய்தி மடல் ஒன்றையும் நடத்தினார். ‘நூலகம்’ என்ற நூலகங்களுக்கான மாத இதழையும் வெளியிட்டார்.
இவற்றில்முக்கியமானதொரு நூல் ‘நடந்தாய்; வாழி, காவேரி’ என்னும் கட்டுரை நூலாகும். காவிரி ஆற்றின் கதையோடு சமூக வாழ்க்கையும் கலந்து சொல்லப்பட்ட அந்தப் படைப்பு தி. ஜானகிராமன், சிட்டி இருவரும் இணைந்து எழுதி 1971ல் வெளியானது. காவிரி தோன்றுமிடம் தொடங்கி அது கடலில் கலக்கும் இடம்வரை உள்ள இடங்களைப்பற்றி மிக விரிவாகச் சொல்கிறது அந்நூல். ஜானகிராமன், ஓவியர் கலாசாகரம் ராஜகோபால் ஆகியோர் நேரில் சென்று தங்கள் அனுபவங்களைத் தீட்ட, நூலானது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனியாகப் ‘பிளாக்’ செய்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. வரலாற்று ஆவணமாகத் திகழும் அந்நூலைத் தற்போது ‘காலச்சுவடு பதிப்பகம்’ மீண்டும் வெளியிட்டுள்ளது.
இலக்கியம் தவிர, தொழில்நுட்பம், விஞ்ஞானம், மானுடவியல், வரலாறு எனப் பல்துறை நூல்கள் வாசகர் வட்டம் மூலம் வெளியாகின. லெஸ்டர் ப்ரஷன் ஆங்கிலத்திலே எழுதிய அறிவியல் நூல் தமிழில் ‘அறிவின் அறுவடை’ என்று வெளியானது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ‘தமிழர் பண்பாடும் வரலாறும்’ சிட்டியின் மொழிபெயர்ப்பில் வெளியானது. டாக்டர் ராதாகிருஷ்ணனின் ‘வாழ்க்கை’, ‘இந்துமத நோக்கு’ போன்றவையும் முக்கியமானவையே. பி.ஜி.எல். சாமி எழுதிய ‘போதையின் பாதையில்’ நூல் மனிதர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதைப் பற்றிக் கூறுவது. ‘எட்வின் கண்ட பழங்குடிகள்’ மனித இன வரைவியல் நூலாகும். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். பி. கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’ (மலையாளம்); விசுவநாத சாஸ்திரியின் ‘அற்பஜீவி’ (தெலுங்கு); திரிவேணியின் ‘பூனைக்கண்’ (கன்னடம்); ஆலுவாலியாவின் ‘மண்ணும் இமயமலை’ (ஆங்கிலம்); மோஹன் ராகேஷின் ‘அரையும் குறையும்’ (ஹிந்தி); டாக்டர் இரா. நாகசாமியின் ‘யாவரும் கேளிர்’ போன்றவை குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்பு நூல்களாகும். ‘அக்கரை இலக்கியம்’ என்ற தலைப்பில் இலங்கை, மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். ‘விஞ்ஞானத்தின் புதிய எல்லைகள்’, ‘இன்றைய தமிழ் இலக்கியம்’ போன்ற கட்டுரை நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. சுஜாதா கணினித் துறை பற்றி எழுதிய ‘காசளவில் ஓர் உலகம்’ என்ற நூல்தான் வாசகர் வட்டம் வெளியிட்ட கடைசி நூல்.
வாசகர் வட்டம் வெளியிட்ட மொத்த நூல்கள் 45. நாளாவட்டத்தில் சந்தாதாரர்கள் குறைந்து கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பதிப்பு நிறுத்தப்பட்டது. பதிப்புத்துறையிலிருந்து விலகிய லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, சமூகப் பணிகளில் அக்கறை காட்டினார். சத்தியமூர்த்தி நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார். ஆங்கிலத்தில் சத்தியமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார். சத்தியமூர்த்தியின் கடிதங்களை இரு பெரும் தொகுப்புகளாகக் கொண்டு வந்தார். அக்கால அரசியல், சமூகம் பற்றி அறிந்து கொள்ள உதவும் மிகச்சிறந்த ஆவணங்களாகத் திகழும் அவை, பின்னர்ச் சாருகேசியின் மொழிபெயர்ப்பில் விகடன் பிரசுரமாகத் தமிழில் வெளியாகின.
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தித் தமது 83ம் வயதில் ஜூன் 12, 2009 அன்று சென்னையில் காலமானார். சில மாதங்களிலேயே மார்ச் 06, 2011 அன்று கணவர் கிருஷ்ணமூர்த்தியும் காலமானார். லக்ஷ்மி-கிருஷ்ணமூர்த்தித் தம்பதியருக்கு மூன்று மகன்கள். நாட்டு விடுதலைக்காகவும், இலக்கிய வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட சாதனையாளர்களில் மறக்கக்கூடாத முன்னோடி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி.
நன்றி
தென்றல் இதழ்