புதிய சிறுகதை
அந்த நபர் ரயிலில் பாஸ்கரனுக்கு எதிராக அமர்ந்திருந்தார்.
இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியின் முதல்பகுதியது. மற்ற இரண்டு பயணிகள் வரவில்லை. ஒருவேளை விழுப்புரத்தில் ஏறுவார்களோ என்னவோ. அந்த நபர் ஆங்கில வார இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்..

அந்த நபருக்கு ஐம்பது வயதிற்குள் இருக்கக் கூடும்.. சிவப்பான, மெலிந்த உடல். பட்டையான கோல்ட் பிரேம் போட்ட கண்ணாடி. இடது புருவத்தில் ஒரேயொரு நரைமயிர் நீட்டிக் கொண்டு தெரிந்தது. சிகரெட் பிடிப்பவர் போலத் தோலுரித்த உதடுகள். ஆரஞ்சுவண்ண போலோ டீ ஷர்ட். வெளிர் சந்தன நிற பேண்ட். இரண்டு கையிலும் மோதிரம் அணிந்திருந்தார்.
பாஸ்கரன் தனது டிராவலிங் பேக்கை கிழே தள்ளி வைத்துவிட்டு உட்கார்ந்ததையோ, செல்போனை சார்ஜரில் போட்டதையோ அவர் கவனித்தது போலத் தெரியவில்லை.
ரயிலில் இப்போதெல்லாம் புத்தகம் படிப்பவர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. ரயில் புறப்படுவதற்கு முன்பாக மாத்திரை சாப்பிட்டுவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான். தண்ணீர் பாட்டில் கொண்டு வர மறந்து போயிருந்தான்
எதிரே இருப்பவர் வைத்துள்ள தண்ணீர் பாட்டில் கண்ணில் பட்டது.
“சார்.. மாத்திரை சாப்பிட கொஞ்சம் தண்ணி வேண்டும். எடுத்துகிடவா“ என்று கேட்டான்
எதிரேயிருந்தவர் வார இதழை விட்டுக் கண்ணை விலக்கி தலையாட்டினார். அவன் தனது பையின் சைடு ஜிப்பை திறந்து மாத்திரை அட்டையை எடுத்துக் கொண்டான்.
“தூக்கமாத்திரையா“ என எதிரே இருப்பவர் கேட்டார்
“ஆமாம். இதைப் போடாமல் என்னால் தூங்க முடியாது“ என்றான்
“நானும் அதே கேஸ் தான். ஆனால் எனக்குத் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தூங்கினால் அதிர்ஷ்டம்“
பாஸ்கர் தனது மாத்திரையை விழுங்கிவிட்டு அவரிடம் “நீங்கள் எங்கே போகிறீர்கள். மதுரைக்கா “என்று கேட்டான்
“இல்லை சிவகாசி“..
“காலை ஐந்து மணிக்கு போய்விடும். நான் அதைத் தாண்டி ராஜபாளையம் போகிறேன்“ என்றான் பாஸ்கர்
“சிவகாசி எனது அம்மாவின் ஊர். எப்போதோ சிறுவயதில் போயிருக்கிறேன். பல வருஷங்களுக்குப் பின்பு இப்போது போகிறேன்“ என்றார் அந்த நபர்
“இப்போது எங்கே இருக்கிறீர்கள்“
“கொரியாவில்“.
“என்ன வேலை“
“அதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. என்னுடைய வேலை வரம் கொடுப்பது“
அதைக்கேட்டவுடன் தன்னை அறியாமல் புன்னகைத்தபடி பாஸ்கர் கேட்டான்
“நீங்கள் என்ன முனிவரா“
“அது போன்ற ஆள் தான். ஆனால் என் கையில் கமண்டலமோ, பெரிய தாடி மீசையோ கிடையாது. என்னால் வரம் அளிக்க முடியும்“
அதை நம்ப முடியாதவன் போலப் பாஸ்கர் சொன்னான்
“என்னால் கூடத் தான் வரமளிக்க முடியும் ஆனால் பலிக்கணுமே“
“உங்கள் கையில் உள்ள மொபைலில் அருட்பெருஞ்சேகரன் என அடித்துப் பாருங்கள். என்னைப் பற்றிப் போட்டிருப்பார்கள். “.

பாஸ்கர் உடனே தனது செல்போனில் அருட்பெருஞ்சேகரன் என டைப் செய்தான். ஆங்கிலத்திலும் கொரியாவிலும் அவரைப் பற்றிய வீடியோக்கள். செய்திகள் வந்தன. அதில் ஒரு பெரிய தொழிலதிபர் தனக்குக் கிடைத்த வரம் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசிய காணொளி இருந்தது.
“நிஜம் தான். இவரிடம் வரம் வாங்கியதாகத் தான் சொல்கிறார். ஒரு சாதாரண ஆளால் எப்படி வரம் கொடுக்க முடியும்“. எனப் பாஸ்கர் யோசித்தான்.
“நிறைய வீடியோ இருக்கு.. நீங்க சாமியரா“
“இல்லை. சாமானியன். “
“வரம் கொடுக்கிறது எல்லாம் கதைனு நினைச்சிட்டு இருந்தேன் . நிஜமா இந்தக் காலத்தில் ஒருவரால் வரம் கொடுக்க முடியுமா“
“வரம் கிடைக்கும்னு நம்புறவங்க இருக்காங்களே. அது எதனால் “
“எப்படியாவது கஷ்டம் தீரணும்லே“
“வரம் கொடுக்கிறதுக்கு மனசும் நம்பிக்கையும் தான் வேணும். “
“எதை வரமா கேட்டாலும் உங்களாலே தர முடியுமா“
“முடியாது. எது உண்மையான தேவையோ அதை வரமாத் தர முடியும்“
“நீங்க வரம் கொடுத்தால் எப்படிப் பலிக்கும். உங்களுக்கு அவ்வளவு சக்தி இருக்கா “
“இருப்பதாக நான் நம்புகிறேன். என்கிட்ட வரம் கேட்பவரும் நம்புகிறார். இன்னைக்கும் சாபம் பலிக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்களே. பிறகு வரம் பலிக்கும் என்று மட்டும் ஏன் நம்ப மறுக்கிறார்கள்“ என்று கேட்டார்
“வரம் கொடுப்பது கடவுளின் வேலையில்லையா“
“நீங்கள் யாரையும் காதலித்தது இல்லையா. காதலித்திருந்தால் காதலியால் வரம் அளிக்க முடியும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்“ என்று சொல்லி சிரித்தார்
“நீங்கள் கொடுக்குற வரம் உடனடியாகப் பலிக்குமா“
“அதை என்னால் சொல்ல முடியாது. நம்பிக்கையற்ற நீங்களும் என்னிடம் வரம் கேட்க ஆசைப்படுகிறீர்கள் போலிருக்கிறதே“
“அப்படியில்லை. சும்மா தெரிந்து கொள்ளக் கேட்டேன்“
“வரம் கேட்பது தவறில்லை. எதைக் கேட்பது என்பது தான் குழப்பம். அதனால் தான் மனிதர்கள் முன்பு கடவுள் தரிசனமாகிறதில்லை. “
“இப்படி திடீர்னு ரயிலில் ஒருவர் வரம் வேண்டுமா என்று கேட்டால் என்ன பதில் சொல்வதுனு தெரியலை“ எனச் சிரித்தான் பாஸ்கர்
“இன்னும் நிறைய நேரமிருக்கிறது. உங்களுக்கு எப்போ கேட்க தோணுதோ அப்போ கேளுங்கள்“
“உங்களால் எப்படி வரம் தர முடியுது“
“நிச்சயம் நான் கடவுள் இல்லை. ஆனால் சொற்களை நம்புகிறவன். சொல்லின் சக்தியை அறிந்தவன். அதை விளக்கி சொல்ல முடியாது. “
“வரம் கொடுப்பதற்குக் கட்டணம் கேட்பீங்களா “ எனக்கேட்டான்
“உங்களிடம் கட்டணம் கேட்க மாட்டேன். உங்கள் மகள் கீர்த்தனாவிற்கும். மனைவி சௌமியாவிற்கும் நான் தரும் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்“
“அவங்களை உங்களுக்கு எப்படித் தெரியும். நீங்கள் யார். என்னோடு விளையாடுகிறீர்களா“ எனக் குழப்பத்துடன் கேட்டான் பாஸ்கரன்.
“தென்காசி கோர்ட்டில் நீங்கள் திங்கள்கிழமை சந்திக்கப் போகும் வழக்கின் எண்ணை கூட என்னால் சொல்ல முடியும். மருத்துவர் நாடி பார்ப்பது போல இதுவும் சாத்தியம் தான்“
“என்னால் நம்ப முடியவில்லை. “
“நம்ப வேண்டும் என அவசியமில்லை. பயணத்தில் அந்நியரை நம்பக் கூடாது என்று தானே பழக்கபடுத்தபட்டிருக்கிறோம்“
“நீங்கள் எத்தனை வருஷமாகக் கொரியாவில் வசிக்கிறீங்க“
“கடந்த ஆறு வருஷமா, அதற்கு முன்பு சவுத் ஆப்ரிக்காவில் இருந்தேன். அதற்கு முன்பு மாசிடோனியாவில். நிறையச் சுற்றிவிட்டேன்“
“எப்போதிலிருந்து வரம் கொடுக்கத் துவங்கினீங்க“
“பத்திரிக்கையாளர் போலக் கேட்கிறீர்கள். அவர்களுக்குச் சொல்லும் பொய்யை உங்களுக்கும் சொல்லவா“ எனச் சிரித்தார்.
தாம்பரத்தில் மூன்றாவது நபர் ஏறி அவர்கள் அருகில் அமர்ந்தார். அவர் தனது பெட்டியை வைத்தவுடன் “படுத்துக் கொள்ள வேண்டியது தானே“ எனக் கேட்டார்
“உங்கள் இஷ்டம்“ என்று சொன்னார் பாஸ்கரின் எதிரே இருந்தவர்
“நீங்கள் பேசிக் கொண்டிருப்பதற்குக் குறுக்கே வந்துவிட்டேனா“ எனக் கேட்டார் வந்த பயணி
“ஆமாம். இவர் என்னிடம் வரம் வேண்டும் என்று கேட்கிறார்“
அதை வேடிக்கையான பேச்சாக எடுத்துக் கொண்டு “யாரும் யாருக்கும் வரம் தரலாமே“ என்று சொல்லியபடி தனது படுக்கையை விரிக்க ஆரம்பித்தார் மூன்றாவது பயணி
“விளையாட்டுக்காகச் சொல்கிறார்“ என்றார் பாஸ்கர்
“ரயிலில் இப்படி விளையாடினால் தான் உண்டு. வீட்டில் முடியாதே“ என்றார் மூன்றாவது பயணி
அதைக்கேட்ட பாஸ்கர் ஆமோதிப்பது போலத் தலையசைத்துக் கொண்டான்
வரம் கொடுப்பதாகச் சொன்னவர் “எனக்கு குடும்பமே கிடையாது“ என்று சொல்லிச் சிரித்தார்
பாஸ்கர் எதிரே இருப்பவரை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் தனது படுக்கையை விரித்தான். வரம் கொடுப்பதாகச் சொன்னவர் தனது செல்போனில் யாருடனோ ஏதோ மொழியில் பேசிக் கொண்டிருந்தார். பாஸ்கர் படுத்துக் கொண்டான்
வரம் கொடுப்பதாகச் சொல்கிறாரே. பொய்யனாக இருப்பாரா. காசு பறிக்கப் போடும் பித்தலாட்டமா, இவரிடம் நாம் வரம் கேட்கலாமா. ஒரு வேளை கேட்டு நடந்துவிட்டால் நல்லது தானே. மனம் பல்வேறாகக் குழம்பிக் கொண்டிருந்தது. தூக்கமாத்திரை போட்டது கண்ணை அழுத்த ஆரம்பித்த்து. அவனை அறியாமல் உறங்கிப் போனான்.
விடிகாலை குளிரில் தூக்கம் கலைந்து எழுந்த போது எதிரே இருந்த ஆளைக் காணவில்லை. அதற்குள் சிவகாசி வந்துவிட்டதா என்ன. தனது செல்போனில் மணியைப் பார்த்தான். நான்கு தான் ஆகியிருந்தது. அந்த ஆள் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஒருவேளை வேறு ஊரில் இறங்கிவிட்டாரா எனத் தெரியவில்லை
சிவகாசியில் ரயில் நின்ற போது அவர் பிளாட்பாரத்தில் தென்படுகிறாரா எனக் கீழே இறங்கி நின்று பார்த்தான். ஆளைக் காணவில்லை
ராஜபாளையத்தில் இறங்கி தனது வீட்டிற்குப் போனபோது ரயில் பயணத்தில் சந்தித்தவரைப் பற்றிப் பாஸ்கர் யாரிடமும் சொல்லவில்லை.
அன்றிரவு மனைவி மற்றும் மகளிடம் சொன்னான்
இருவரும் ஒரே குரலில் “வரம் கேட்டிருக்க வேண்டியது தானே“ என்றார்கள்
“அவர் என்ன கடவுளா.. ரயில்ல என்னைப் போல டிக்கெட் எடுத்து வர்ற பயணி தானே. அந்த ஆள் வரம் கொடுத்தா எப்படி நடக்கும்“ எனக் கேட்டான் பாஸ்கர்
“நடந்தா நல்லது தானே. நல்ல சந்தர்ப்பத்தை வேஸ்ட் பண்ணீட்டிங்களே“ என்றாள் மனைவி
“அவரோட போன் நம்பர் வாங்குனீங்களா டாடி“ எனக்கேட்டாள் மகள்
“இல்லை“ எனத் தலையாட்டினான்
“நீங்க கேட்காட்டியும் அவரா வரம் கொடுத்து இருக்கலாம். இந்தக் காலத்துல வரம் கொடுக்க யாரு இருக்கா“ என ஆதங்கப்பட்டாள் மனைவி.
“அவர் கிட்ட என்ன வரம் கேட்குறதுனு தெரியலை“ என்றான் பாஸ்கர்
“உங்க சாமர்த்தியம் அவ்வளவு தான்“ எனச் சலித்துக் கொண்டாள் மனைவி
எவ்வளவோ கடனிருக்கிறது. மகள் கல்யாணம் பற்றிய கனவு இருக்கிறது. பெரிய கார், பங்களா வசதி என எத்தனையோ தேவைகள் இருக்கிறது. ஆனால ஏன் எதையும் கேட்க தோணவில்லை.
வரம் கேட்கிறவர்கள் பெருகி விட்ட இந்த உலகில் வரம் கொடுப்பவர்கள் ஏன் மறைந்து போனார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவரை என்றைக்காவது திரும்பப் பார்க்க நேர்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று தனது ஆசைகளில் ஒன்றை தேர்வு செய்து கொண்டான். ஆனால் அதைக் கேட்கலாமா வேண்டாமா என்பதில் அவனுக்குக் குழப்பமே மிஞ்சியிருந்தது.