ஹொகுசாயின் அலைகள்


எரிமலை சீற்றத்தின் காரணமாக ஐரோப்பா முழுவதும்ஸ்தம்பித்து போயுள்ளதை பற்றிய தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு ஒன்றில்ஹொகுசாயின் புகழ்பெற்ற ப்யூஜி எரிமலை ஒவியம் ஒன்று கண்ணில் பட்டு மறைந்து போனது. மனதில் செய்து மறந்து உடனே ஹொகுசாயின் (Katsushika Hokusai) புகழ்பெற்ற ஒவியங்களான ப்யூஜி எரிமலை பற்றிய 36 சித்திரங்கள் என்ற ஒவியத்தொகுப்பை காணவேண்டும் போலிருந்தது.என்னிடமிருந்த ஒவிய புத்தகங்களில் இருந்து அதை தேடி எடுத்து புரட்டினேன். வுட் பிளாக் பிரிண்ட் வகையை சேர்ந்த சித்திரங்கள் அவை. 1826ல் வரையபட்டவை. வெவ்வேறு காலநிலைகளில் வேறு வேறு இடங்களில் இருந்து தெரியும் ப்யூஜி எரிமலையின் சித்திரங்களாக அவை தீட்டப்பட்டிருந்தன.ப்யூஜி எரிமலை ஜப்பானிய கலைஞர்களுக்கு ஒரு அடையாளம்.  அது குறித்து கவிதைகளும் ஒவியங்களும் நிறைய உருவாக்கபட்டிருக்கின்றன.  இந்த ஒவியங்களில் ஒன்றாக மஹா அலை ஒன்றின் வீச்சின்  பின்புலத்தில் ப்யூஜி எரிமலை தென்படும்  ஒவியம் மிகச் சிறப்பானது.


The Great Wave off Kanagawa  எனப்படும் அந்த ஒவியத்தில்  காண்பது போல அலைகளை அத்தனை நுட்பமாகவும் உக்கிரமாகவும் வேறு எந்த கலைப்படைப்பிலும் நான் கண்டதேயில்லை. அந்த அலை ஒங்கி உயர்ந்து விரிந்து நிற்கிறது.அதன் வீச்சு மயில்தோகை விரித்திருப்பது போன்ற வசீகரமாக இருக்கிறது. தண்ணீரின் உக்கிரமும் அதில் சிக்கி தவிக்கும் படகும். அலையின் உயரமும் கம்பீரமும் பார்த்து கொண்டே இருக்க செய்கிறது. அந்த அலைகள் நம்மை மயக்குகின்றன. அதன் நீல நிறம் தனித்துவமானது. இயல்பில் காண்பதை விடவும் அடர்த்தியது. அது அலையின் உள்ளார்ந்த இயல்பை சொல்வது போல இருக்கிறது.அலைகளின் எழுச்சியின் முன்னால் தூரத்து எரிமலை சிறியதாகிவிடுகிறது. எரிமலையே ஒடுங்கிவிடும் போது படகில் உள்ள மனிதர்கள் என்னவாவர்கள். அவர்கள் அலையை கண்டு பின்வாங்கி நிற்கிறார்கள். இயற்கையின் முன்னால் மனித முயற்சிகள் அத்தனையும் சிறிய எத்தனிப்புகள் மட்டுமே என்று காட்டுகிறது ஒவியம்


இடமிருந்து வலமாக பார்க்கும் போது இந்த ஒவியம் தரும் அனுபவம் ஒருவிதமாகவும் வலமிருந்து இடம் கண்கள் நகரும் போது ஒவியம் தரும் அர்த்தம் வேறு விதமாகவும் உள்ளது. ஹொகுசாய் அலைகளை உக்கிரமாக தீட்டக்கூடியவர். வான்கோவின் ஒவியங்களில் காணப்படுவது போன்ற தீவிரமான மனவேகம் கொண்ட வண்ணவீச்சுகள் இவருடையது. அது சம்பிரதாயமான அலைகளின் ஒழங்கையும் அழகையும் கொண்டிருக்கவில்லை.
அதே நேரம்  அலையின் உன்மத்தம் என்று அவை பயங்கொள்ள செய்வதுமில்லை. மிகப்பெரிய அலை நம்மை வியக்கச் செய்கிறது. தண்ணீரின் விந்தை தான் அலையாக எழுகிறது என்பதை மனது உணர்கிறது.


ஹொகுசாய் பகல் இரவு மழை பனி காற்று என்று பல்வேறு சூழல்களில் எரிமலையின் தோற்றத்தை வரைந்திருக்கிறார். எரிமலை எப்போதும் நம்மை விழித்தபடியே பார்த்து கொண்டிருக்கும் இயற்கையின் கண்களை போல இருக்கின்றன.


ஹொகுசாய் எரிமலைகளை காதலிக்கிறார். அதன் மீதான அச்சம் மறைந்து அவை தொலைவில் நிற்கும் பறவை போல அழகாக இருக்கிறது. திரும்ப திரும்ப பார்க்கும் ஆசையை தூண்டுகிறது. முடிவின்மையின் அடையாளம் போல சில ஒவியங்களில் எரிமலை தென்படுகிறது. சில ஒவியங்களில் எரிமலையின் முன்பாக இயற்கையின் வனப்பு மிக சிறியது என்பது போல காட்டப்படுகிறது. இன்னொரு மலையில் இருந்து எரிமலையை காணும் ஒவியம் ஒன்றிருக்கிறது. அதில் தூரத்து எரிமலை பற்றிய பயமின்றி மக்கள்தங்களை மறந்து வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது காலத்தின் புறவடிவம் போலவே சித்தரிக்கபடுகிறது.எரிமலையை வெறும் சொற்களால் புரிந்து கொள்ள முடியாது. அதை ஜப்பானியர்கள் திரும்ப திரும்ப நினைவூட்டுகிறார்கள். எரிமலை வெறும் தோற்றம் அல்ல. அது இயற்கையின் தனித்துவம். கடவுளின் வசிப்பிடம். பெண்மையின் உருவம். புனிதமான அதை புரிந்து கொள்ள ஆழமாக அதை நேசிக்க வேண்டும் என்கிறார்கள். இன்னும் கூடுதலாக எரிமலை என்பதும் புத்தரின் வடிவமே என்றும் கூறுகிறார்கள். அங்கே பௌத்த ஆலயங்கள் உள்ளன. அதற்கு புனித பயணம் போவது முக்கிய கடமையாக கருதப்படுகிறது. 1872 வரை அந்த மலையேறுவதற்கு பெண்கள் அனுமதிக்கபடவேயில்லை. பனிபடர்ந்த ப்யூஜிமலையின் அழகை ஜென் கவிதைகள் பாடுகின்றன.  அதை தேசிய சின்னமாக ஜப்பானிய மக்கள் கருதுகிறார்கள்


தனது வாழ்க்கை முழுவதும் ஹொகுசாய் ப்யூஜி எரிமலையின் அழகில் தோய்ந்து கிடந்திருக்கிறார். வசீகரமான பெண்ணை போல அது அவரை எப்போதும் அழைத்தபடியே இருக்கிறது. அவர் எரிமலையை தனது ஒவியங்களில் சாந்தமானதாகவே எப்போதும் சித்தரிக்கிறார். அவரது ஒவியங்கள் தொலைநோக்கி போல செயல்படுகின்றன. அவை நமக்கு காட்டும் அருகாமை வியப்பானது. ஒரு போதும் இயல்பில் நாம் கண்டறிய முடியாதது.


ஹொகுசாயின் எரிமலை தன்னை தானே ரசித்து கொள்ளும் பதின்வயது பெண்ணை போலவே இருக்கிறது. ஜப்பானிய கலாச்சாரத்திலும் மதத்திலும் எரிமலை முக்கிய அடையாளமாக இருக்கிறது. அதை பல்வேறு விதங்களில் புரிந்து கொள்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். ஒவிய கலைஞராக ஹொகுசாயை வசீகரிப்பது அது எங்கிருந்த போதும் கண்ணில் மறையாமல் தெரிந்து கொண்டேயிருக்கிறது. அது நமது மனசாட்சியின் விழிப்புணர்வு போலிருக்கிறது. என்றும் உயிர்வாழ்தலின் அடையாளம் என்றே குறிப்பிடுகிறார்.


ஐப்பானின் எடோ பகுதியில் ( இன்றைய டோக்கியோ ) உள்ள கண்ணாடி செய்யும் கலைஞரின் மகனான 1760ல் பிறந்தவர் ஹொகுசாய். மரபான கலைகுடும்பம் அவருடையது. அலங்காரமான கண்ணாடிகள் செய்வதில் அப்பா புகழ்பெற்றிருந்தார். ஆகவே ஆறுவயதிலே ஒவியம் வரைவதில் ஹொகுசாய் விருப்பம் கொண்டிருந்தார். அப்பாவே அவரது முதல் ஆசிரியர்.


தேர்ந்த பயிற்சிபெற்ற அவர் பனிரெண்டாவது வயதில் வாடகை நூலகம் ஒன்றில் சில காலம் பணிபுரிய அனுப்பட்டிருக்கிறார். அங்கே நிறைய கதைகளை வாசித்த ஹொகுசாய் கதைகளுக்கான செதுக்கு சித்திர உருவங்கள் வரைவதில் ஆர்வம் கொண்டார்.


வுட் பிளாக் எனப்படும் மரசெதுக்கு ஒவியங்கள் மட்டுமே அன்று புத்தங்களில் பயன்படுத்தபட்டு வந்தன. ஆகவே ஹொகுசாய் மரச்செதுக்கு ஒவியங்களை உருவாக்குவதில் தீவிரமாக பயிற்சி பெற துவங்கினார். அதன் பிறகு நாடக நடிகர்கள் கணிகைகள் என்று வெவ்வேறு ஒவியங்களை தொடர்ச்சியாக தீட்ட துவங்கி புகழ்பெற துவங்கினார்.


தனது கலையின் மீது தீராத வேட்கை கொண்ட ஹொகுசாய் அதில் தொடர்ந்து சோதனைகள் செய்தபடியே வந்தார். இதற்காக அன்று ஐரோப்பாவில் புகழ்பெற்றிருந்த ஒவியங்களை சேகரித்து அதே போன்ற நுட்பங்களை தனது மரபுகலையின் வழியே சாத்தியப்படுத்த முயற்சித்தார். சுகப்பெண்டிர். மற்றும் நடனக்கலைஞர்கள் அன்றாட காட்சிகள் என்று வகைவகையாக ஒவியங்கள் வரைந்த ஹொகுசாய் அதிலிருந்து விலகி இயற்கையின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார்.


மலைகள், மரஞ்செடி கொடிகள், ஆகாசம், பறவைகள், மீன்கள், நிலா இரவுகள், பனி பெய்வது. மழை கால காட்சிகள் என்று அவரது ஒவியங்கள் இயற்கையின் மீதான லயப்பில் உருவாக துவங்கின. ஒரு போதும் தன்னால் இயற்கையின் மர்மத்தை உடைத்து தெரிந்து கொள்ள முடியவேயில்லை. இயற்கையைப் போல தன்னால் செய்ய முடிந்திருக்கிறதேயன்றி இயற்கையின் உயிர்தன்மை தனது ஒவியங்களில் சாத்தியமாகவில்லை என்று வருந்தியிருக்கிறார்.


ஐப்பானின் தினசரிவாழ்க்கையை பெரும் ஆவணகாட்சிகள் போன்று தொடர்ச்சியாக வரைந்து தள்ளியிருக்கிறார். கோடுகள் இவரிடம் உயிர் பெற்று நடனமாட துவங்குகின்றன. தனது ஒவியத்திறன் பற்றி ஹொகுசாய் இப்படி தான் குறிப்பிடுகிறார்.


ஆறுவயதில் ஒவியங்களை அப்படியே நகலெடுக்க துவங்கிய நான் தொடர்ச்சியாக ஒவியங்களை வரைந்தபடியே இருந்தேன். நல்ல ஒவியர் என்று புகழும் பெற்றேன். ஆனால் என் மனது அதில் ஒன்றில் கூட திருப்தியடையவில்லை. இன்று எழுபத்தி மூன்றாவது வயதில் திரும்பி பார்க்கும் போது நான் எதையும் சாதிக்கவில்லை என்று மனது கூச்சப்படுகிறது. குற்றவுணர்ச்சி கொள்கிறது.


இப்போது தான் இயற்கையின் சூட்சுமம் புரிய ஆரம்பித்திருக்கிறது.இலைகளை வரைந்தால் அதில் பசுமையின் ஈரம் உருவாகிறது. காகிதத்தில் மீன்கள் துள்ளுகின்றன. பறவைகளின் சிறகடிப்பு இப்போது தான் ஒவியத்தில் கேட்க துவங்கியிருக்கிறது. இன்னமும் என்னால் இயற்கையை முழுமையாக புரிந்து கொள்ள இயலவில்லை. ஒரு வேளை எனக்கு எண்பது வயதாகும் போது நான் ஒவியம் வரைவதில் சற்று தேர்ச்சி கொண்டிருக்க கூடும்.


கூடுதலாக ஒரு பத்துவருசம் கிடைத்தால் ஒன்றிரண்டு நல்ல ஒவியங்களை வரைந்துவிட முடியும். எனது நூறாவது வயதில் ஒரளவு இயற்கையின் துல்லியத்தோடு ஒவியம் வரைய துவங்கியிருப்பேன். நூற்றிபத்து வயதாகும் போது நான் காகிதத்தில் ஒரு புள்ளி வைத்தால் அது நகர்ந்து செல்லும். கோடு போட்டால் அது நெளிந்து போக துவங்கும். அவ்வளவு உயிர்தன்மையை கைக்கொண்டு விடுவேன். ஆனால் அதை சாத்தியப்படுத்த இன்னமும நான் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உயிரோடு இருக்க வேண்டும். தொடர்ச்சியாக ஒவியம் வரைய வேண்டும்  அது கடவுளின் கருணையில் தான் இருக்கிறது என்று ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.


இதன் காரணமாகவே என்னவோ கடைசி காலத்தில்  தனது ஒவியங்களில் அவர் தனது பெயரை விலக்க துவங்கினார். ஒவியத்தின் மீது பைத்தியமான ஒரு கிழவன் என்றே தனது கையெழுத்து இட்டிருக்கிறார். ஹொகுசாயின் புகழ்பெற்ற பல ஒவியங்கள் அவரது முதுமைகாலத்தில் வரையப்பட்டதே. அவரது ஸ்டுடியோ தீக்கிரையானதால் பல முக்கிய ஒவியங்கள் அழிந்து போய்விட்டன. சில அவரது சீடர்களால் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு இன்று காட்சிக்கு கிடைக்கின்றன.


ஒரு ஒவியத்தில் தண்ணீரின் உள்ளே நீந்தும் மீனை ஹொகுசாய் வரைந்திருக்கிறார். அந்த மீனின் உடல் நம் கண்முன்னே அசைகிறது. தண்ணீரை கிழித்து கொண்டு முன்செல்ல துடிக்கும் அதன் வேகம் ஒவியத்தில் காணமுடிகிறது. குறிப்பாக மீனின் உடல் கொள்ளும் நளினம். அதில் காணப்படும் வர்ணங்கள் உயிர் இயக்கமாக உள்ளது.


ஜப்பானிய ஒவிய மரபில் ukiyo-e என்று ஒரு வகையிருக்கிறது. அதை  images of the floating world என்று அழைக்கிறார்கள். இந்த ஒவியவகைமையில் தினசரி வாழ்க்கையை விவரிக்கும் ஒவியங்கள் இயற்கையை அதன் நீங்காத ஒரு பகுதியாக துல்லியத்துடன் சித்தரிக்க கூடியவை. அதற்கான ஒழுங்கும் விதிகளும் உள்ளன. அதில் ஒவ்வொரு ஒவியரும் தனக்கென ஒரு பாணியை கொண்டிருக்கிறார். இதில் தேர்ச்சி பெற்ற கலைஞராக வளரத்துவங்கிய ஹொகுசாய் கலகமனநிலை கொண்டே எப்போதுமிருந்தார்.அவருக்கு வாழ்விலும் கலையிலும் கட்டுபாடுகள், ஒழுங்குகள் வரம்புகள் எதிலும் நம்பிக்கையில்லை.அதை தாண்டி தனது ஆன்மாவின் உந்துதலில் செயல்படவே விரும்பினார். அதற்கு தடையாக உள்ளவற்றின் மீது கோபம் கொண்டார். அவரை அடங்க மறுப்பவர். ஆத்திரக்காரர். மனபிறழ்வு கொண்டவர் என்று ஏதேதோ அடையாளம் சூட்டினார்கள். ஆனால் அத்தனையும் மீறி தனது இயல்பில் அவர் எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.


அவரை பற்றி நிறைய கதைகள் ஜப்பானிய கலைமரபில் உலவுகின்றன. தனது சககலைஞர்களுடன் அவர் ஒரு முறை ஒவியம் வரைய சென்றிருந்தார். ஆற்றில் மிதந்து வரும் இலையை வரைவதற்கு தான் வேலை. அவர்கள் ஆற்றையும் இலையின் நுட்பத்தையும் வரைந்து கொண்டிருந்த போது ஹொகுசாய் நீரின் வளைவுகளை ஒரே கோட்டில் வரைந்துவிட்டு மற்றபடி கோழிகால்களை கொண்டு ஒவியத்தின் மீது தடம் பதிந்து விளையாடிக் கொண்டிருந்தார் என்கிறார்கள். சாமுராய்களை மற்ற ஒவியர்கள் வரைந்து கொண்ட நாட்களில் எளிய விவசாயிகள், உழைப்பாளிகளை வரைந்தவர் ஹொகுசாய். அதனால்  அவர் வாழும் காலத்தில் இந்த ஒவியங்கள் அதிகம் பாராட்டை பெறவில்லை. அதை பற்றி அவர் அதிக கவலைப்படவுமில்லை.


புகழ்பெற்ற ஒவியரான டாவின்சியோடு ஒப்பிடக்கூடிய ஒரே ஆளுமை  ஹொகுசாய் மட்டுமே. அந்த அளவு ஒவியத்தின் தனித்த கலைமேதமை அவரிடமிருந்தது. பற்றி எரியக்கூடிய கோடுகளின் வேகம் ஹொகுசாயின் எல்லா ஒவியங்களிலும் காணப்படுகிறது. கோடுகள்  மற்றும் நிறங்களை பயன்படுத்துவதிலும் வான்கோ இவரிடமிருந்து பாதிப்பு கொண்டிருக்க கூடும் என்றுமே தோன்றுகிறது.


தூரிகை வேகம், கோடுகளின் நளினம் மற்றும் மூர்க்கம், இயற்கையில் உள்ளார்ந்த தன்மையை வரையும் சூட்சுமம். நிறங்களின் அடர்ந்த பயன்பாடு. மந்திரவாதிபோல காட்சிகளை உருமாற்றி காட்டும் விந்தை யாவும் ஒன்று சேர்ந்ததே ஹொகுசாயின் ஒவியங்கள். அவர் ஒவியங்களில் கோடுகளால் உருவான பறவைகள் நிஜமாக இருக்கின்றன. நாய்குட்டிகள் மிருதுவாகவும், குழைவுடனும் காணப்படுகின்றன. சேவல்கள் திமிர்ந்த கொண்டைகளுடன் வசீகரமாக நிமிர்ந்து பார்க்கின்றன. குதிரைகளின் பிடரி மயிர் சிலர்க்கிறது.  கொக்குள் தியானிகளை போல உறைந்து நிற்கின்றன. உடைகளின் நெளிவும் சுருக்கமும் அச்சு அசலாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இயற்கை நம் மீது அப்பிக் கொள்கிறது. நம் உடலில் ஈரக்களிமண் படிவதை போல பிசுபிசுப்போடு நெருக்கமாக படிகிறது.


ஹொகுசாய் என்றால் வடக்கு கூடம் என்றே பொருள்.நீலமும் பச்சையும் கருஞ்சிவப்பும் அவருக்கு பிடித்தமான வண்ணங்கள். அவர் வரைந்த எல்லா ஒவியங்களிலும் ஒரு ஒழுங்கை மீறும் எத்தனம் பீறிடுகிறது.  அது அழகியல் காரணங்களுக்காக உருவாக்கபட்டதை மறுக்கும் வேகம் மற்றும் எதிர்நிலையாகும். கலைஞர்கள் தங்கள் கண்வழியாக காணும் உலகையே வரைகிறார்கள். கண்முன்னே தெரியும் உலகை அல்ல ஆகவே இயற்கையை நகலெடுப்பதற்கு ஒவியன் அவசியமில்லை என்று ஹொகுசாய் குறிப்பிடுகிறார்.


முகபாவங்களை வரைவதில் ஹொகுசாய் தனித்து ஒரு பாணி கொண்டிருக்கிறார். அந்த முகங்கள் தனது அக உணர்ச்சியின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன. புருவங்களும் தலைமயிரும் கோடுகளின் வழியே துடிப்பேறுகின்றன. தலைமயிரை வரையும் கோடுகள் தனிவேகம் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அந்த உடல்களில் சற்றும் மூர்க்கம் இல்லை. தோய்ந்த நளினமே காணப்படுகிறது.


தனது வாழ்நாளில் முப்பதாயிரம் ஒவியங்களும் மேல் வரைந்த ஹொகுசாய் வறுமையும் தனிமையும் புறக்கணிப்புமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது காலத்தில் அவரை யாரும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. பின்னாளில் இவர் வரைந்த ப்யூஜி எரிமலையின் சித்திரங்களை அரசாங்கமே அச்சிட்டு பயணிகளுக்காக விநியோகம் செய்தது. அதனால் ஜப்பான் முழுவதும் ஹொகுசாயின் ஒவியங்கள் கவனம் பெற துவங்கின.


Hokusai Manga எனப்படும் நாலாயிரம் சித்திரங்கள் அடங்கிய தொகுப்பே இன்றுள்ள மாங்கா காமிக்ஸ் முயற்சிகளுக்கு ஆதார புத்தகம்.தனது வாழ்நாளிற்குள் 90க்கும் அதிகமான வீடுகளில் வசித்த ஹொகுசாய் தன்னை ஒருபோதும் ஒவியக்கலைஞர் என்று சொல்லிக் கொண்டதில்லை. தான் ஒரு எளிய உழைப்பாளி என்றே அறிமுகப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்


தான் வரைந்த ஒவியங்களில் தன்னால் மறக்கவே முடியாதது ஏழு வயதில் தன் வீட்டின் முன்னால் உள்ள தரையில் ஒரு குச்சியால் தான் வரைந்த ப்யூஜி எரிமலையின் சித்திரம். அதை வரைந்து முடித்த போதுமனது அடைந்த சந்தோஷத்திற்கு நிகராக எதுவுமேயில்லை. அப்படி பால்யத்தில் மண்ணில் வரைந்த ஒவியம் தான் தன்னை ப்யூஜி பற்றிய முப்பத்தியாறு ஒவியங்கள் வரைய தூண்டுதலாக இருந்தது என்று நினைவு கூறுகிறார். என் இறப்பின் பிறகு ஒரு பூச்சியாகி கோடையின் முடிவில்லாத இரவுகளுக்குள் நான் பறந்து கொண்டிருப்பேன் என்று ஹொகுசாய் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். கோடையின் இரவில் மட்டுமில்லை. தனது ஒவியங்களின் வழியே அவர் எப்போதுமே வசீகரமான ஒளியுடன் பிரபஞ்சத்தின் முடிவில்லாத வெளியில் சிறகடித்து கொண்டுதானிருக்கிறார்.
**
 

0Shares
0