அந்திமழை 100


அந்திமழையின் நூறாவது இதழ் வெளியாகியுள்ளது. என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்திமழை துவங்கப்பட்ட நாளிலிருந்து அதை அறிவேன்.

கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற நண்பர்கள் பத்திரிக்கையுலகின் மீது ஆர்வம் கொண்டு சிற்றிதழாகத் துவங்கி பின்பு இணைய இதழ், அச்சிதழ், பதிப்பகம் என்று வளர்ந்திருக்கிறார்கள்

நல்ல நண்பர்கள் ஒன்று சேர்ந்து செய்யும் முயற்சிகள் எப்போதும் வெற்றிபெறும் என்பதற்கு அந்திமழையின் நண்பர்களே சாட்சி.

இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், பண்பாடு என அந்திமழையின் பரந்த பார்வையும் பங்களிப்பும் முக்கியமானது.

எனது கதைகள். கட்டுரைகள், நேர்காணல்கள் தொடர்ந்து அந்திமழையில் வெளிவந்துள்ளன.

அந்திமழையில் வெளியான எனது சிறுகதை அல்லது கட்டுரை குறித்து எங்கெங்கிருந்தோ பாராட்டு மின்னஞ்சல்கள் வருவதை அறிவேன்.

அந்திமழைக்கெனத் தனியே வாசகர் உலகமிருக்கிறது. அவர்கள் தொடர்ந்து வாசித்து அதன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கிறார்கள்.

என் கல்லூரி நாட்களில் The Illustrated Weekly விரும்பி படித்து வந்தேன். அதன் வடிவமைப்பு மிகச்சிறப்பானது. குறிப்பாகப் புகைப்படங்களை அவர்கள் மிக அழகாக வெளியிடுவார்கள். சிறந்த கதைகள் கட்டுரைகள் கவிதைகள் என்று அதன் தேர்வு அத்தனை சிறப்பாக இருக்கும். சமகால விஷயங்கள் எல்லாவற்றையும் பேசிய இதழது. அந்தப் பாதையில் தான் அந்திமழை பயணிப்பதாகத் தோன்றுகிறது.

அந்திமழை இதழ் மிக அழகாக வடிவமைப்புச் செய்யப்படுகிறது. வடிவமைப்பாளர்களுக்கு எனது பாராட்டுகள்.

பொருளாதாரக் கஷ்டங்களை ஏற்றுக் கொண்டு அந்திமழை இதழைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் இளங்கோவன். அசோகன். கெளதமன் மற்றும் நண்பர்களுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

0Shares
0