தொடர்ந்த பயணம் காரணமாக இணையத்தில் எழுத நேரமில்லை,
இன்று காலை கனடாவில் இருந்து அமெரிக்கா சென்றேன், அற்புதமான
சாலை வழி பயணம்,
மிட்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரின் அருகில் உள்ள டிராய்யில் திருமூர்த்தியோடு தங்கியிருக்கிறேன்,
மூன்று நாட்களின் பின்பு இங்கிருந்து லாங்சிங் பயணம் செய்து ஆவணப்பட இயக்குனரும் எனது நண்பருமான சொர்ணவேல் வீட்டிற்கு போக உள்ளேன்,
இன்று மாலை அமெரிக்காவின் மிகப்பழமையான ஒக் மரம் ஒன்றினை பார்வையிட சென்றேன், ராய்செஸ்டர் மலைச் சாலையோரம் உள்ள மரமது, விரிந்து பரவி தனியாக உள்ளது முழுமரமும் காய்ந்து இறுகிப்போயிருந்தது,
இவ்வளவு முதுமை அடைந்த மரத்தினை கண்டதேயில்லை, பார்க்க பார்க்க ஆனந்தமாக இருந்தது
அதன் அடியில் போய் நின்ற போது மரம் எவ்வளவு ஆயிரம் மனிதர்களை கண்டிருக்கும் எத்தனை சம்பவங்களின் சாட்சியாக இருந்திருக்கும், எவ்வளவு காற்றும் மழையும் வெயிலும் கடந்து போயிருக்கும் என்ற யோசனை வந்தது,
ப்ரியமான முதியவரின் கைகளை பற்றிக் கொள்வதைப் போல ஆசையாக மரத்தை தொட்டுக் கொண்டிருந்தேன் நெகிழ்வாக இருந்தது, அந்த மரத்தடிக்கு நான் வருவேன் என்று நினைத்து கூட பார்த்தவனில்லை, மனம் சொல்லமுடியாத களிப்பில் பொங்கியது
அடுத்த பத்து நாட்கள் அமெரிக்காவில் இருக்க திட்டமிட்டு உள்ளேன்,
கனடாவில் சுற்றி அலைந்து அடைந்த அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாதது,
குறிப்பாக பிகாசோவின் ஒவியங்கள் 150 கொண்ட அரிய ஒவியக்கண்காட்சியைப் பார்வையிட்டது, நயாகராவில் கழித்த இரவு, சிம்கோ ஏரிப்பயணம், ஒஜாயா என்ற தொல்குடிமக்கள்ஊரை பார்வையிட்டது, ஜார்ஜியா தீவு பயணம்,ஸ்ட்ராட்போர்டில் ஷேக்ஸ்பியர் நாடகம் பார்த்தது, அரோரா பகுதி வனபள்ளதாக்கினுள் இறங்கி பயணம் செய்தது, ஒன்டாரியோ ம்யுசியம், லாப்ட் லாக், ஒம்னிமாக்ஸ் அரங்கு, என நாள் ஒரு திசையில் மேற்கொண்ட பயணம் அலாதியானது
அமெரிக்க பயணத்திலும் இது போன்ற அனுபவம் தொடரக்கூடும்
••