இந்த நகரமே அருவிக்காக காத்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே குற்றாலத்திலிருக்கிறேன்.
அடர்ந்து மணக்கும் பகல் வெளிச்சம்.. அருவி வழியும் பாறையில் சப்தமில்லாமல் வழிந்து போகிறது வெயில். பொங்கி சீறும் அருவியை காண்பது போலவே அருவி இல்லாத வெறுமையை கடந்து செல்லும் கண்கள் ஏக்கத்துடன் பார்த்து போகின்றன.
அருவி உருவாக்கிய ஊர் என்பது எவ்வளவு பெரிய விசித்திரம். நகரின் வீதிகள், வீடுகள் சாலைகள் மரங்கள் மலை உள்ளிட்ட அத்தனையும் அருவியோட்டத்தால் உருக் கொண்டவை. இந்த நகரின் நினைவில் அருவியோசை தீராமல் படிந்திருக்கிறது. ஒரு ஆண்டில் எத்தனை விதவிதமான மனிதர்கள் வந்து போகிறார்கள். அருவி எவரிடமும் பேதம் காட்டுவதில்லை. அருவியின் முன்னால் யாவரது வயதும் கரைந்து போய்விடுகிறது
அருவியின் பெருச்சப்தம் கேட்டு வளர்ந்த விருட்சங்கள் இன்று மௌனமாக காத்திருக்கின்றன. சீசன் இல்லாத காலம் என்றார்கள்.
பகலிரவாக தண்ணீர் வழிந்தோடியபடி இருக்கும் அருவிக்கரை சாலையில் ஆட்களே இல்லை. அடைத்து சாத்தபட்ட கடைகள். காலியான வீடுகள். படுதா தொங்கும் பழக்கடைகள். வெறித்த பாறைகள். காலி செய்யப்பட்டுவிட்ட நகரம் ஒன்றின் மிச்சம் போலவே இருக்கிறது. ஒரேயொரு குரங்கு கடந்த கால நினைவுகளின் மிச்சம் போல சாலையை வெறித்தபடியே பார்த்து கொண்டிருக்கிறது. அதன் இயல்பு மீறிய நிதானம் கவலை கொள்ள வைக்கிறது
குரங்கின் நினைவில் பெருகியோடும் அருவியும் எண்ணிக்கையற்ற உணவுபண்டங்களும் ஒளிரக்கூடும். எங்கிருந்தோ ஒரு பறவை குரல் தருகிறது. அந்த குரல் ஏக்கமானதாகவே இருக்கிறது. இவ்வளவு உலர்ந்த தரையை வேறு எங்கும் நான் கண்டதில்லை.
உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. விடுதிகளின் காலி அறைகள் உறைந்து ஒன்று போலிருக்கின்றன. விளையாட்டு பூங்காங்களில் எவருமேயில்லை. பெரிய நிலக்காட்சி ஒவியம் ஒன்றின் உள்ளே புகுந்துவிட்டது போல தனிமையை சந்திக்கிறேன். கடந்து செல்லும் வாகனங்களின் சப்தம் மட்டுமே இது நிஜம் என்று நம்ப வைக்கிறது. அதுவும் இல்லாமல் போயிருந்தால் கனவில் கண்டு கொண்டிருக்கிறேன் என்றே நினைத்திருப்பேன். வளைந்த சாலைகள் தனிமையை முணுமுணுக்கிறது.
ஒரேயொரு குருவி மட்டும்வெயிலை பார்த்து கத்திக் கொண்டிருக்கிறது.
மேஜிக் செய்பவனின் விரல்கள் அசைந்து பொருட்கள் ஆகாசத்திலிருந்து முளைப்பது போல அருவி இந்த நகரை மீண்டும் உயிர்துடிப்போடு இயங்க வைக்கும். நீண்ட உறக்கம் கலைத்து அதை செயல் கொள்ள வைக்கும். யார் யார் கனவிலோ புகுந்து தன்னை தேடி வரும்படி அழைக்கும்.
சாலையோரம் உள்ள மரம் ஒன்றில் பலாக்காய்கள் காய்த்து தொங்குகின்றன. பழுத்து உதிர்ந்த இலைகளை காற்று புரட்டுகிறது. வானில் மழை மேகங்கள் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கின்றன.மழைக்காக காத்திருக்கிறது நகரம்.
முன்னெப்போதோ ஒரு காலத்தில் இந்த ஊர் அடர்ந்த காடாக இருந்திருக்க கூடும். இங்கே யானைகள் நடந்தலைந்திருக்கும். வனவேடர்கள் கண்ணி வைத்து காத்திருந்திருப்பார்கள். காட்டுபூனையும் மிலாவும் முயல்களும் மானும் வாழ்ந்து மகிழ்ந்த இடமாக இருக்கும். இன்று அதன் அடையாளங்கே இல்லை
அறைக்கு திரும்பி கணிப்பொறியில் இருந்த குற்றால குறவஞ்சி பாடல்களை தேடி எடுத்து வாசிக்க துவங்கினேன்.
செங்கையில் வண்டு கலின்கலினென்று செயஞ்செயம்
என்றாட இடை சங்கதெமன்று சிலம்பு புலம்பொடு தண்டை
குழைந்தாட மலர் பைங்கொடி நங்கை வசந்த வசுந்தரிபந்து பயின்றாளே
என்ற பாடலை வாசிக்க வாசிக்க நாவில் தேன் தடவியது போன்ற ருசி மிகுகிறது.
குற்றாலக்குறவஞ்சியை யாராது இசை அமைத்து பாடி தேர்ந்த குறுந்தகடாக வெளியிடலாம். அவ்வளவு அற்புதமான இசைத்தன்மையும் சிருங்காரமும் உள்ளது. படிக்க படிக்க தித்திக்கிறது.
குற்றாலம் எத்தனை வியப்பான நகரம் என்று கண்ணில் படும் ஒவ்வொரு காட்சியும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது
நானும் அருவிக்காக காத்திருக்கிறேன்.