ஆன்டன் செகாவ் பிறந்தநாள்.

இன்று ஆன்டன் செகாவின் பிறந்த நாள். 161 வது பிறந்த நாளிது. இந்த நாளில் அவரை மானசீகமாக வணங்குகிறேன்.

ரஷ்ய இலக்கியத்தின் மகத்தான படைப்பாளியான அவரது வாழ்க்கை வரலாற்றை செகாவ் வாழ்கிறார் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறேன். செகாவ் பற்றி விரிவான உரையும் நிகழ்த்தியிருக்கிறேன்.

செகாவின் பிறந்த நாளில் அவரது சிறுகதை தொகுப்பிலிருந்து ROTHSCHILD’S FIDDLE, THE BLACK MONK என்ற இரண்டு கதைகளை வாசித்தேன். இப்போது தான் எழுதி வெளியானது போல புத்துணர்வு. அலங்காரமில்லாத எளிமை. நேரடியாகக் கதைகளை சொல்லும் முறை. அழுத்தமான கதாபாத்திரங்கள். கச்சிதமான உணர்ச்சி வெளிப்பாடு.சிறுகதைகளின் பேரரசன் என்றே அவரைச் சொல்ல வேண்டும்.

நானூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைச் செகாவ் எழுதியிருக்கிறார். அதில் இருபது முப்பது கதைகள் தமிழில் வந்திருக்கின்றன. புதிதாக நிறைய மொழிபெயர்ப்புகளும் நடந்து வருகின்றன. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் செகாவ் அளவிற்கு மாறுபட்ட சிறுகதையை எழுதியவர்கள் குறைவே,

செகாவின் நாடகங்களை வாசித்தால் அதில் வரும் கதாபாத்திரங்கள் நாவலின் மனிதர்களைப் போலவே தோன்றுகிறார்கள். அவற்றைப் பெரிய நாவலாக எழுதியிருந்தால் இன்னும் கதை விஸ்வரூபம் கொண்டிருக்கக் கூடும்.

காதலைக் கொண்டாடியவர் செகாவ். சொந்த வாழ்விலும், படைப்பிலும் காதலே அவரது ஆதாரப்புள்ளி. காசநோய் முற்றிய நிலையில் சிகிட்சைக்காகப் பாடன்பாடனுக்குச் செல்ல திட்டமிட்ட செகாவ், மாஸ்கோ நகரை விட்டு நீங்கும் முன்பாகக் கடைசியாக ஒரு முறை மாஸ்கோ மிருககாட்சி சாலைக்குச் சென்றிருக்கிறார். அது அவருக்கு விருப்பமான இடம். இரவு முழுவதும் மாஸ்கோ வீதியில் சுற்றி அலைந்திருக்கிறார். நினைவுகளின் பாதையில் சென்ற பயணம் தானோ என்னவோ.

செகாவை நினைவு கொள்ளும் போதெல்லாம் அவரது நாய்கார சீமாட்டியும் நினைவில் வந்துவிடுகிறாள். எவ்வளவு அழகான சிறுகதை. The Lady with the Dog என்ற தலைப்பை விடவும் சீமாட்டி என்ற தமிழ் தலைப்பு தான் நெருக்கமாக இருக்கிறது.

டார்லிங் என்ற செகாவின் கதையை எப்படி மறக்கமுடியும். வேட்டைக்காரன் கதைகளில் அவனால் நேசிக்கப்படாத அவனது மனைவி தொலைவில் நின்று அவனை ஏக்கத்துடன் பார்க்கும் காட்சி மனதிலே நிற்கிறது. ஆறாவது வார்ட்டின் டாக்டர் நம் மனசாட்சியின் உருவம் போலவே இருக்கிறார்.

“இந்த பூமியில் மனிதனுக்குத் தேவை ஆறடி என்று சொல்வார்கள். இதை மறுத்து செகாவ் சொல்கிறார்

“சவத்திற்குத் தான் ஆறடி நிலம் வேண்டும், மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது“

உயிருள்ள மனிதனின் தேவையும் இறந்தவர்களின் தேவையும் ஒன்றில்லை, செகாவ்வின் இந்த வாசகம் வாழ்வின் மீதான அவரது பற்றுதலின் வெளிப்பாடு.

செகாவின் மீதான அன்பில் My Dear chekhov  என்ற குறும்படத்தின் கதையை எழுதியிருக்கிறேன். அதை என் மகன் ஹரிபிரசாத் மிக அழகான குறும்படமாக இயக்கியிருக்கிறான். 

இலக்கிய விழாக்கள் தோறும் திரையிட்டு கொண்டாட வேண்டிய குறும்படமிது. சென்ற ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவில்  இந்தக் குறும்படத்தைத் திரையிட்டார்கள். இணையத்தில் இந்த குறும்படம் காணக் கிடைக்கிறது.

செகாவ் பற்றிய எனது உரையை கேட்க விரும்புகிறவர்களுக்கான இணைப்பு

செகாவ் வாழ்கிறார் நூலை வாங்குவதற்கு

செகாவ் வாழ்கிறார்

விலை ரூ 150.00

https://www.desanthiri.com

0Shares
0