ஆல்பெர் காம்யுவின் அம்மா

ஆல்பெர் காம்யு எழுதிய முதல் நாவல் அந்நியன். ( Albert Camus’s ‘The Stranger’)  வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பக வெளியீடாகத் தமிழில் வெளியாகியுள்ளது. இந்த நாவல் 1942-ல் எழுதப்பட்டது.

“இன்று அம்மா இறந்துவிட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம்; எனக்குத் தெரியாது” என்று ‘மெர்சோ’சொல்வதிலிருந்து நாவல் துவங்குகிறது.

என் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியைக் காணச் சென்றிருந்த போது அவர் இந்த நாவல் குறித்து வியந்து பேசிக் கொண்டிருந்தார். மெர்சோவைப் பற்றிய அவரது அவதானிப்பு மறக்கமுடியாதது.

கரிசலின் வெக்கை கொப்பளிக்கும் எனது கிராமத்திலிருந்தபடியே அந்த நாவலை நான் வாசித்தபோது சூரியனின் தகிப்பைப் பற்றிய வரிகளை மெய்யாக உணர்ந்தேன்.

இந்த நாவலில் வரும் மெர்சோ தாயின் மரணத்தை எளிதாக எடுத்துக் கொள்கிறான். உண்மையில் காம்யு தன் தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். நினைவு தெரிவதற்கு முன்பாகவே தந்தையை இழந்தவர் என்பதால் தாயின் அன்பு தான் அவரை வளர்த்தது. பிரெஞ்சு வம்சாவழியினைச் சேர்ந்தவர் என்ற போதும் அவரது தந்தை பிரான்சின் ஆதிக்கத்திலிருந்த அல்ஜீரியாவிற்குச் சென்று குடியேறியவர். அவரது அன்னை கடைசி வரை அங்கேயே தான் வசித்தார்.

காம்யுவையும் நாவலில் வரும் அம்மாவைப் பற்றிய பிம்பத்தையும் புரிந்து கொள்வதற்கு அவரது சொந்த வாழ்க்கையை அறிந்து கொள்வது அவசியம்

நேற்று Camus 2010 என்ற பிரெஞ்சுப் படத்தைப் பார்த்தேன் தொலைக்காட்சிக்காக Laurent Jaoui இயக்கியது. காம்யுவின் கடைசிப் பத்து ஆண்டுகளைப் படம் விவரிக்கிறது. இந்தப் படம் காம்யுவைப் புரிந்து கொள்வதற்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக உள்ளது

படத்தின் நான்கு முக்கியக் காட்சிகளைச் சொல்லியாக வேண்டும்

வறுமையின் காரணமாகப் பணம் கட்டி படிக்க வைக்க முடியாத குடும்பச் சூழலில் காம்யுவின் ஆசிரியர் ஜெர்மைன் அவருக்காக ஸ்காலர்ஷிப் கிடைக்க ஏற்பாடு செய்கிறார். காம்யுவை படிக்க அனுப்பி வைக்கும்படி வீட்டில் வந்து பேசுகிறார். அவரது பாட்டி படிக்க வைக்கப் பணமில்லை. அவன் வேலைக்குப் போகட்டும் என்கிறார். ஆசிரியர் பேசி சம்மதிக்க வைக்கிறார். தன்னால் ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யமுடியாது என்று பாட்டி உறுதியாகச் சொல்கிறார். ஆறு ஆண்டுகளும் உதவித் தொகை கிடைக்கும் என்று ஆசிரியர் உறுதி மொழி கொடுத்துப் படிக்க அனுமதி பெறுகிறார். இப்படிப் படித்து உருவானவர் தான் ஆல்பெர் காம்யு. இதனால் வாழ்நாள் முழுவதும் அவர் பணம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்திருந்தார். தனக்காக எதையும் செலவு செய்யக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்திருக்கிறார்.

அல்ஜீரியாவில் வசிக்கும் தாயைக் காணச் செல்லும் காம்யு தன்னோடு பாரீஸிற்கு வந்துவிடும்படி அம்மாவை அழைக்கிறார். அம்மா வரமறுத்து இரண்டு காரணங்களைச் சொல்கிறார்

ஒன்று நீ குடியிருக்கும் வீதி மிகவும் அமைதியாக இருக்கிறது. அது எனக்குப் பிடிக்கவில்லை. இரண்டாவது அங்கே அரேபியர்களைக் காண முடியாது.

இந்தப் பதில் அவர் எந்த அளவு அரேபியர்களுடன் நெருங்கிப் பழகி நட்பு கொண்டிருந்தார் என்பதன் அடையாளம். காம்யுவின் நினைவுகளிலும் இது போன்ற பந்தமே மேலோங்கியிருந்தது. அது போலவே நகரவாழ்க்கை எல்லோருக்கும் பிடித்தமானதில்லை என்பதும் வெளிப்படுகிறது.

தனது 44 வயது வயதில் காம்யு நோபல் பரிசு பெற்றபோது பத்திரிக்கையாளர்கள் அவரது அம்மாவைத் தேடிப் போய் இந்தச் சந்தோஷத்தை எப்படி உணருகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அம்மாவிற்கு அது என்ன பரிசு. எதற்காக வழங்கப்பட்டிருக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. அவர் கேமிராவைப் பார்த்து காம்யு சிறுவயதிலிருந்து நிறையப் படிக்கக் கூடியவன் என்கிறாள். உங்களுக்கு இந்தப் பரிசு மகிழ்ச்சி தருகிறதா எனக்கேட்டதற்கு அவனது ஆசிரியருக்கு மகிழ்ச்சி தரக்கூடும் என்கிறாள். அது உண்மை. காம்யுவை படிக்க வைக்க உதவியர் அவர் தானே

நோபல் பரிசினை பெற்றபிறகு தனது ஆசிரியர் ஜெர்மைனுக்கு உணர்ச்சிப்பூர்வமான நன்றிக்கடிதம் ஒன்றை காம்யு எழுதியிருக்கிறார். தந்தை இறந்த போது காம்யு வெறும் 11 மாத பையன். அவரது தாய் செவித்திறன் குறைந்தவர். பாட்டி தான் அவர்களை வளர்த்தார். வறுமையான சூழல். ஆனால் காம்யு பள்ளியில் நன்றாகப் படித்தார். பிரகாசித்தார், அவரது அன்பான ஆசிரியர் ஜெர்மைன், வழங்கிய ஊக்கத்திற்கு அளவேயில்லை. இந்த நன்றியை நினைவுபடுத்தும் விதமாகவே அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.

என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நோபல் பரிசு பெற்ற செய்தியைக் கேட்டபோது, என் அம்மாவிற்குப் பிறகு உங்களையே நினைத்துக் கொண்டேன். என்னைப் போன்ற ஒரு ஏழைச் சிறுவனுக்கு நீங்கள் அளித்த போதனையும் உதவிகளும் இல்லாமல் இது நடந்திருக்காது. என்றும் உங்களின் நன்றியுள்ள மாணவனாகவே இருப்பேன் என்று உணர்ச்சிப்பூர்வமாக அந்தக் கடிதத்தில் காம்யு எழுதியிருக்கிறார் காம்யுவின் ஆசிரியர் ஜெர்மைன்,போன்றவர்களே இந்த உலகின் ஒளியாக இருக்கிறார்கள்.

நோபல் பரிசு பெற்றபிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார் காம்யு அப்போது ஒருவன் நீங்கள் அல்ஜீரிய விடுதலைக்காக ஏன் குரல் கொடுப்பதில்லை என்று கோபமாகக் கேட்கிறான். தான் இரண்டு இனங்களும் இணைந்து வாழ வேண்டும் என விரும்புவதாகச் சொல்கிறார். அது நடக்காத விஷயம். நீங்கள் அல்ஜீரியா போராட்டக்குழுவிற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். அதன்விடுதலை இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்கிறான். ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தான் ஏற்பதில்லை. வெடிகுண்டு ஒரு போதும் தீர்வாக இருக்காது. அது தான் உங்கள் வழி என்றால் நான் அதை ஏற்கமாட்டேன். டிராமில் நீங்கள் குண்டு வைப்பதாக இருந்தால் நான் என் அம்மாவைக் காப்பாற்றவே முயல்வேன் என்கிறார்

அவரது அம்மா ஒரு குறியீடு. அல்ஜீரியாவில் தலைமுறைகளுக்கு முன்பே குடியேறி வசிக்கும் பிரெஞ்சு இனத்தின் அடையாளம். அம்மா அதிகம் பேசுவதில்லை. ஆனால் மௌனமாக எதையும் உணர வைக்கிறார். காம்யுவின் கடைசிப் பயணத்தில் கூட அவர் அம்மாவைத் தான் நினைவு கொள்கிறார். அம்மா ஏன் இத்தனை கொந்தளிப்புகளுக்கு இடையிலும் அல்ஜீரியாவில் வசிக்கிறார் என்றே கேள்வி முக்கியமானது.

நாவலில் வரும் மெர்சோ காம்யுவின் இன்னொரு வடிவம் என்றே சொல்ல வேண்டும்

காம்யுவின் புகைப்படங்களைக் காணும் போது அவர் ஸ்டைலாகச் சிகரெட் பிடித்தபடியே தான் போஸ் கொடுத்திருப்பார். அந்தச் சிகரெட் தான் அவரது வாழ்க்கையை அழித்தது . காசநோயற்ற போதும் செயின் ஸ்மோக்கராக அவர் பிடித்த சிகரெட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நுரையீரலை அழித்தன. சிகரெட்டை கைவிட்டால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலை உருவானது. அப்போதும் அவர் சிகரெட்டினை விடவில்லை. கார்விபத்தில் மரணமடைவதற்கு முன்பும் கூட அவர் புகைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

காம்யுவின் முதல் மனைவி ஒரு போதை அடிமை. அறிந்தே அவளைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்தத் திருமணம் நீடிக்கவில்லை. இரண்டாவது மனைவி பிரான்சின் ஒரு இசைக்கலைஞர். கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். காம்யுவிற்குப் பல்வேறு பெண்களுடன் இருந்த தொடர்பும் அவரது காதல் லீலைகளும் பிரான்சினை மனச்சிதைவிற்கு உள்ளாக்கியது. அவள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்று காப்பாற்றபட்டாள். மனநலச்சிகட்சை அளிக்கப்பட்டது. படம் அவரது திருமண வாழ்வின் குழப்பங்களை, பிரச்சனைகளை. பிரான்சின் கைவிடப்பட்டதை. அவளது மறுவாழ்வினை வலிமையாக வெளிப்படுத்துகிறது. பிரான்சின் வீட்டை விட்டு வெளியே போவதே கிடையாது. இரவில் உறங்குவதுமில்லை. நள்ளிரவில் எழுந்து இசை வாசிக்கிறாள். சரியாக வாசிக்க முடியாத போது கண்ணீர் விட்டு அழுகிறாள் காம்யு தனி அறையில் எழுதிக் கொண்டேயிருக்கிறார். அவரது உலகம் வேறு. நாடக இயக்குநராகச் செயல்பட்ட போது மரியா என்ற நடிகையைக் காதலித்தார். அவளுடன் பதினாறு ஆண்டுகள் நெருக்கமாக இருந்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த உறவு ஏற்படுத்திய கசப்பு தான் பிரான்சினை நோயுறச் செய்தது.

ஒரு காட்சியில் பிரான்சின் அம்மா, தங்கை இருவரும் காம்யுவிடம் எங்களுக்கு ஒரு தனி வீடு ஏற்பாடு செய்து கொடுத்துவிடுங்கள். அப்புறம் நீங்கள் உங்கள் விருப்பம் போல எந்தப் பெண்ணுடன் சுற்றுங்கள் என்கிறார்கள். காம்யு அவளைப் பிரிவதை விரும்பவில்லை. இந்தக் குழப்பங்கள். சிக்கல்களுக்குள் சிக்கி மனவேதனை அடைகிறார். அவரால் எழுத இயலவில்லை. ஆறு ஆண்டுகள் எதையும் எழுதாமல் இருந்தார்

நீண்ட கால நண்பராக இருந்த சார்த்தருடன் கருத்து வேறுபாடு. தன் படைப்புகளை விமர்சனம் செய்கிறவர்களுடன் சண்டையிடுவது என்று வீழ்ந்து கொண்டேயிருந்தார் காம்யு. ஆனால் பொதுமக்கள் அவரைக் கொண்டாடினார்கள். எங்கே சென்றாலும் அவரை அடையாளம் கண்டு கொண்டு வாழ்த்தினார்கள்.

படம் புத்தாண்டு கொண்டாட்டத்தினை இணைந்து மேற்கொள்ளக் காம்யுவைத் தேடி அவரது நண்பரும் பதிப்பாளருமான மைக்கேல் காலிமார்ட் தன் மனைவியோடு வருவதில் துவங்குகிறது. நண்பர்களுடன் புத்தாண்டினைக் கொண்டாடுகிறார். கடந்த கால நிகழ்வுகள் இடைவெட்டி வந்து போகின்றன

மெர்சோ’ அந்நியன் நாவலில் திருமணம் செய்து வாழுவது அல்லது திருமணம் செய்யாமல் பழகுவது இரண்டும் ஒன்றெனக் கருதுகிறான். இது காம்யுவின் சொந்த வாழ்வின் நிலைப்பாடே.

படத்தின் பிற்பகுதியில் தற்செயலாகச் சந்திக்கும் டேனிஷ் இளம்பெண் மீது காதல் கொள்ளும் காம்யு நள்ளிரவில் அவள் வீடு தேடிச் சென்று அவளுடன் படுக்கையைக் கழிக்கிறார். பெண்களுடன் அவருக்கு இருந்த நட்பும் காதலுமே அவரது குடும்ப வாழ்வின் முக்கியப் பிரச்சனையாக மாறியது.

அவரது புதிய நாவல் எதைப் பற்றியது என்று மைக்கேல் காலிமார்ட் கேட்கும் போது காம்யு வாயை திறப்பதில்லை. இரவு உணவிற்குப் பிறகு அவராகத் தான் காதலைப் பற்றி எழுத இருப்பதாகச் சொன்ன போது அவர் மனைவி கோபத்துடன் காதலை உணராத நீங்கள் எப்படி அதைப்பற்றி எழுத இயலும் என்று கேட்கிறாள். படம் முழுவதும் அவர்களின் உறவு விசித்திரமாக இருக்கிறது. விலகிப்போகவும் முடியாமல். ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறார் காம்யு

இலக்கிய உலகில் அவருக்கு உருவான எதிரிகள். மறுபுறம் அல்ஜீரியா பிரச்சனை குறித்த அவரது நிலைப்பாடு காரணமாக எழுந்த அரசியல் பிரச்சனைகள் என அவரது மனநிம்மதி முற்றிலும் அழிந்து போகிறது.

மேதையின் வாழ்க்கை எப்போதும் புதிரானது என்பதற்குக் காம்யு ஒரு உதாரணம்.

படத்தின் ஒரு காட்சியில் அவரும் சார்த்தரும் பேசிக் கொண்டு நடக்கிறார்கள். அதில் சார்த்தர் அவர் மீது வைக்கும் விமர்சனமும் அதை ஏற்றுக் கொள்ளாமல் காம்யு மறுப்பதும் அழகாக வெளிப்படுகிறது.

கார்விபத்தில் இறப்பதற்கு முன்பு காம்யுவின் மனைவியும் குழந்தைகளும் பாரிஸுக்கு ரயிலில் திரும்பி செல்ல திட்டமிட்டிருந்தனர், அவரும் மனைவி பிள்ளைகளுடன் ரயில் பயணம் மேற்கொள்ளவே முடிவு செய்தார். ரயிலில் ஏறிவிடுகிறார். ஆனால் அவரது மனைவி எங்களுக்காக நீங்கள் உடன் வர வேண்டாம். எங்களைத் தனியே வாழ விடுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையை நீங்கள் மேற்கொள்ளுங்கள். அது தான் இருவருக்கும் நல்லது என்று சொன்னாள். உடனே காம்யு ரயிலை விட்டு இறங்கிவிடுகிறார்.

பின்பு மைக்கேல் காலிமார்ட் குடும்பத்துடன் காரில் பாரீஸ் புறப்படுகிறார். பயண வழியில் அவரது முதல்நாவலைப் பற்றிப் பேச்சு வருகிறது. மிக வேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டினை இழந்து மரத்தில் மோதுகிறது. சம்பவ இடத்திலே காம்யு மரணமடைகிறார். அவரது நாவலில் பிரதிகள் சிதறிக்கிடக்கின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது நண்பர் ஐந்து நாட்களுக்குப் பிறகு மரமணடைகிறார். முதல் மனிதன் என்ற காம்யுவின் கடைசி நாவல் அவரது மரணத்தின் பின்பே வெளியிடப்பட்டது

ஒரு காட்சியில் காம்யு விலை உயர்ந்த புத்தாண்டு பரிசுகளைத் தன் பிள்ளைகளுக்கு நண்பர் காலிமார்ட் வழங்கியதைக் கண்டிக்கிறார். பணத்தின் மதிப்பு அவர்களுக்குத் தெரியாமல் போய்விடும் என்கிறார். படம் முழுவதும் பிள்ளைகளுடன் அவரது உறவு நெருக்கமாகவேயில்லை. இன்னொரு காட்சியில் இளம்பெண் ஒருத்தியுடன் நாடக ஒத்திகைக்குக் காம்யு வந்திருப்பதைக் கண்ட அவரது காதலியான நடிகை கோபம் கொள்கிறாள். ஆத்திரத்தில் கத்துகிறாள். அவளைச் சமாதானப்படுத்துகிறார் காம்யு. மனைவி காதலி என இருவரும் துரத்திவிடுகிறார்கள். தனியறையில் இருட்டில் தற்கொலை எண்ணத்துடன் இருப்பவரை மைக்கேல் காலிமார்ட் தான் காப்பாற்றுகிறார்.

அவர்கள் இருவரும் மழைநாள் ஒன்றில் ஒரே குடைக்குள் நடந்து சென்றபடியே உரையாடுவது மிக அழகான காட்சி. மைக்கேல் காலிமார்ட் காம்யுவை மிகவும் நேசித்தார். இன்னொரு காட்சியில் அவர் சிகரெட் பிடித்தால் உயிர்வாழ முடியாது என்று மைக்கேலின் மனைவி கண்டிக்கிறார். இதைப் பிடிக்காமல் காம்யு காரை விட்டு இறங்கி நடக்க ஆரம்பிக்கிறார். தன் இறுதி ஆண்டுகள் முழுவதும் மனக்கொந்தளிப்புடன் காம்யு காணப்பட்டதைப் படம் துல்லியமாகச் சித்தரித்துள்ளது

தனது பால்யகாலத்தின் நினைவுகளுக்கே காம்யு இறுதியில் சென்று சேருகிறார். அவரது கடைசி நாவல் அதைப்பற்றியதே. அவரது மரணச் செய்தியை அம்மாவிற்கு எப்படித் தெரிவிப்பது எனத் தயங்கி அவரது சகோதரி மூலம் தெரியப்படுத்துகிறார்கள். காம்யுவின் அம்மா கண்ணீரை அடக்கிக் கொண்டு அவனுக்கு வயது ஒன்று அதிகமில்லையே என்று சொல்கிறார். அவ்வளவு தான் மகனது மரணம் பற்றிச் சொன்ன வார்த்தைகள்.

அம்மாவின் மௌனத்தைத் தான் காம்யு தனது படைப்பின் ஆதாரமாகக் கொண்டிருக்கிறார். நாவலில் வரும் மெர்சோ அம்மாவின் மரணத்தைத் தனது பால்யத்தின் முற்றுப்புள்ளியாக நினைக்கிறான். அவன் விரும்பாத, ஒரு போதும் இழக்கக்கூடாது என்று நினைத்த உறவு துண்டிக்கப்படுகிறது. அந்தத் துயரம் தான் அவனை வெறுமைக்குள் தள்ளுகிறது.

இந்த நாவலில் வரும் மெர்சோவின் கொலையைக் கண்டித்து. அல்ஜீரியாவின் நிலைப்பாட்டினை விளக்கும் வகையில் புதிய நாவல் ஒன்று வெளியானது. மெர்சோவின் விசாரணை என்ற நாவலை காமெல் தாவுத் எழுதியிருக்கிறார். இதனையும் க்ரியா பதிப்பகம் தமிழில் வெளியிட்டுள்ளது. இந்த நாவல் அந்நியன் நாவல் அளவிற்கு என்னைக் கவரவில்லை.

நோபல் பரிசை ஏற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பிய காம்யுவிடம் அவர் மனைவி கண்ணீர் மல்க நான் உங்களை மிகவும் சிரமப்படுத்திவிட்டேன் மன்னியுங்கள் என்கிறார். அவர் நெகிழ்ந்து போகிறார். கடந்தகாலக் கசப்புகளை மறந்த அவர்கள் ஒன்று சேருகிறார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவர்களுக்குள் இருந்த மனவேறுபாடு கடைசிவரை மறையவேயில்லை.

காம்யு தன் அம்மாவையும் நீதியினையும் ஒரே புள்ளியில் வைக்கிறார். நீதியின் அடையாளமாகவே அம்மாவைக் காணுகிறார். அம்மா எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துப் பழகியவள். ஏழைகளுக்குள் எளிதாக உறவு ஏற்பட்டுவிடும் என்று அவரது அம்மா ஒரு காட்சியில் சொல்கிறாள். அல்ஜீரியாவில் காம்யு உரையாற்றும் போது அவரைக் கண்டித்து வெளியே மக்கள் ஆவேசமாகக் கூச்சலிடுகிறார்கள்.

அல்ஜீரியா நீண்டகாலமாகவே பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்திலிருந்தது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக 1945-ம் ஆண்டு மே 8-ந்தேதி அல்ஜீரிய மக்கள் வீதிகளில் இறங்கி போரட்டத்தைத் துவங்கினார்கள் இதில் ஏற்பட்ட கலவரத்தில் ஆறாயிரம் பேருக்கும் மேலாக இறந்து போனார்கள். . இந்தச் சம்பவம் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்சு அரசாங்கத்தின் மீது கடுமையான வெறுப்பை ஏற்படுத்தியது. அல்ஜீரிய விடுதலைக்கான அமைப்புகள் தீவிரமாகச் செயல்படத்துவங்கின. பிரெஞ்சு அரசாங்கத்தைத் துரத்தியடிக்க அவர்கள் துப்பாக்கி ஏந்தி போராடினார்கள்

இந்தச் சூழ்நிலையில் தான் காம்யு தனது முதல்மனிதன் நாவலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு அரசாங்கம் 1962ல் அல்ஜீரியா மக்களிடையே பொது வாக்கெடுப்பு நிகழ்த்தியது. இதில் 6 மில்லியன் மக்கள் அல்ஜீரியா விடுதலைக்காகத் தங்கள் வாக்குகளை அளித்தார்கள். அதன் காரணமாக அதிபர் டிக்காலே அல்ஜீரியாவுக்கு விடுதலை அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார். அப்படித் தான் அல்ஜீரியா விடுதலை பெற்றது

இந்த வரலாற்று உண்மைகளுடன் இணைத்து வாசிக்கும் போது தான் காம்யுவின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அவரது இலக்கியப் பங்களிப்பினை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்

காம்யு தனது இருபது வயதில் தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கத் துவங்கினார். ஆன்மாவை உலுக்கும் அனுபவமாக இருந்தது என்று அதைப்பற்றிக் குறிப்பிடுகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் The Possessed நாவலை காம்யு நாடகமாக்கி நிகழ்த்தியிருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காம்யுவின் மனைவி காற்றில் விரல்களை அசைத்து அசைத்து இசையை உருவாக்கிக் கொண்டிருப்பார். அவரது பதற்றம் குழப்பம் பயம் கவலைகள் எல்லாமும் ஒன்று சேர்ந்து வெளிப்படும் காட்சியது

மனைவி பிள்ளைகளைப் பிரிந்து காலி அறை ஒன்றினைத் தேடி தனது பெட்டியை இழுத்துக் கொண்டு வந்து மூச்சிரைக்க வெற்றிடத்தை வெறித்தபடியே காம்யு தனக்குத் தானே பேசிக் கொள்ளும் காட்சி ஒன்றிருக்கிறது. அந்தக் காட்சி அவரது ஒட்டு மொத்த வாழ்க்கையின் சாட்சியம் போலவே இருக்கிறது

**

0Shares
0