இருளுக்கும் ஒளிக்கும் இடையில்

ஜெஸ்ஸி ஐசன்பெர்க்கின் புதிய படமான ” A Real Pain” இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்கள் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தை விவரிக்கிறது. அத்துடன் வாழ்க்கையைப் பற்றிய இரண்டு பார்வைகளையும் முன் வைக்கிறது. எது உண்மையான வலி என்பதை விசாரணை செய்கிறது.  இயல்பான நகைச்சுவையும் தேர்ந்த நடிப்பும் கொண்ட இந்தப் படம் யூதப்படுகொலை பற்றிய இந்த தலைமுறையின் புரிதலை அழகாக வெளிப்படுத்துகிறது.

டேவிட் மற்றும் பென்ஜி இருவரும் தனது பாட்டி வாழ்ந்த பூர்வீக வீட்டைக் காணுவதற்காகப் போலந்தில் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்கள். அது ஒரு நினைவுச் சுற்றுலா. ஹிட்லரின் வதை முகாமில் படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் நினைவிடங்களைக் காணும் பயணம். இரண்டு யூதர்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணம் அவர்களின் குடும்ப வரலாற்றையும் கடந்தகாலத் துயர்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பதையும் பேசுகிறது.

நெருங்கிய உறவினர்களான டேவிட் மற்றும் பென்ஜி இப்போது பிரிந்து வாழ்கிறார்கள். பாட்டியின் கடைசி ஆசையே அவர்களை ஒன்றுசேர்க்கிறது. தங்கள் குடும்பத்தின் துயர வரலாற்றையும், சொந்த கலாச்சார வேர்களையும் தேடி அவர்கள் போலந்தில் மேற்கொள்ளும் பயணம் இருவருக்குமான உறவை ஆழமாக்குகிறது. பென்ஜி எவ்வளவு அற்புதமான மனிதன் என்பதை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது.

விமான நிலையத்திலே பென்ஜி வேறுபட்டவன். சுதந்திர மனப்பாங்கு கொண்டவன் என்பது புரிந்துவிடுகிறது. அவன் விமான நிலையப் பரிசோதனை அதிகாரிகளிடம் நடந்து கொள்ளும் விதம் நல்ல உதாரணம். அவனுக்கு நேர் எதிராகப் படபடப்பும் அவசரமும் கொண்டவன் டேவிட். தனக்குத் தானே பேசிக் கொள்கிறவன்.  வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கிறவன். ஆனால் தனக்குள் தீராத தனிமை கொண்டவன்.

பயணத்தின் ஊடாக டேவிட்டின் அகம் திறந்து கொள்கிறது. அவன் இந்நாள் வரை மறைத்து வைத்த வலிகள் வெளிப்படுகின்றன. அவற்றைப் பென்ஜி சரியாகப் புரிந்து கொள்கிறான். ஆற்றுப்படுத்துகிறான்.

எதையும் விளையாட்டாக எடுத்துக்  கொள்ளும் பென்ஜி யூத நினைவிடத்தில் சட்டென மாறிவிடுகிறான். இறந்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என வழிகாட்டி ஜேம்ஸ்க்கு கற்றுத் தருகிறான். கடந்தகாலத்தின் துயரம் என்பது வெறும் செய்தியில்லை. அது ஆறாத வடு என்பதை உணர்த்துகிறான்.

இது போல யூதப்படுகொலை நடந்த முகாம்களை, நினைவிடங்களைக் காணுவது என்பது இன்று ஒரு இன்பச்சுற்றுலா. வணிகம். அதுவும் வசதியான யூதர்கள் மேற்கொள்ளும் பயணம். இது போன்ற விசேச சுற்றுலாக்களை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதைப் படத்தில் கேலியாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

வழிகாட்டியாக வரும் இளைஞனுக்கு யூதப்படுகொலையும் அது சார்ந்த இடங்களும் அவன் படித்துத் தெரிந்து வைத்திருந்த தகவல்களே. அவற்றை மிகையான குரலில் அவன் வெளிப்படுத்தும் போது பென்ஜி கோபம் கொள்கிறான். எங்கே அவனது வழிகாட்டுதல் தேவையற்றது என்பதைப் புரிய வைக்கிறான். அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல் அபாரமானது.

பயணத்தின் ஊடே பாட்டியின் வீட்டினைத் தேடி கண்டுபிடிக்கிறார்கள். அது பூட்டிக்கிடக்கிறது. அதில் யாரோ குடியிருக்கிறார்கள். தாங்கள் வந்து சென்றதன் நினைவாக அந்த வீட்டின் வாசலில் ஒரு கல்லை வைக்கிறார்கள். கல் என்பது நினைவின் உறைந்த வடிவமாகிறது. பக்கத்து வீட்டில் வசிப்பவர் அவர்களின் இச் செயலுக்காகக் கோவித்துக் கொள்கிறார். அவரது மகன் அதனைப் புரிந்து கொள்கிறான். டேவிட் மற்றும் பென்ஜி கல்லை மலராக மாற்றிய அந்தக் காட்சி என் மனதில் தங்கிவிட்டது.

பென்ஜியும் டேவிட்டும் மேற்கொள்ளும் ரயில் பயணம் அழகானது. முதல்வகுப்புப் பெட்டியில் பயணிக்கும் போது ஏற்படும் குற்ற உணர்வும், தாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தைத் தவறவிட்டு மேற்கொள்ளும் பயணமும் சிறப்பானது. யூத வரலாற்றில் ரயில் என்பது ஒரு அடையாளச் சின்னம். யூதர்களைக் கூட்டம் கூட்டமாக ரயிலில் ஏற்றிக் கொண்டு போய் முகாமில் அடைத்து வன்கொலை செய்தார்கள் என்பது வரலாறு.

கடந்த காலத்தின் வலியை நாம் சுமந்து கொண்டேயிருக்க வேண்டுமா. அல்லது அதை மறந்துவிடலாமா. இன்றைய வாழ்க்கையில் நாம் பிறரது வலியை சுமக்கத் தயாராக இருக்கிறோமா. என்ற கேள்விகளைப் படம் எழுப்புகிறது.

போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தின் முன்பாக டேவிட் பதட்டமான மற்றும் பயபக்தியான மனநிலையைப் பேணுகையில், பென்ஜி சிலைகளுக்கு இடையில் நின்று வேடிக்கையான செல்ஃபிக்குப் போஸ் கொடுக்கிறான். வரலாற்றின் வீரம் இன்றும் வெறும் காட்சிப் பொருளே.

எந்தவொரு புதிய இடத்திலும் நண்பர்களை உருவாக்கும் முதல் நபர் பென்ஜியே ஆனால் படத்தின் முடிவில் அவன் தனது தனிமைக்கே திரும்புகிறான். அது ஊர் திரும்பும் டேவிட்டை வேதனைப்படுத்துகிறது.  பயணத்தின் முடிவில் டேவிட் வீடு திரும்புவது அழகான காட்சி. பயணம் அவனைப் புதிய மனிதனாக்கியிருக்கிறது.

ஒரு காட்சியில் வதைமுகாமின் சுவரில் படிந்துள்ள விஷ வாயுவால் ஏற்பட்ட கறையைக் காண்கிறோம், . முகாமில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் செருப்புகள் நிரப்பட்ட பெட்டகத்தைக் காணுகிறோம். யூதப்படுகொலையின் துயரை அந்தக் காட்சித்துண்டுகள் முழுமையாக உணர்த்திவிடுகிறது.

பென்ஜியைப் போல வாழ்க்கையை இவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும், அடுத்தவருடன் பழகவும் உதவி செய்யவும் முடியும் என்பதை டேவிட் நன்றாக உணர்ந்து கொள்கிறான். மனதில் இருந்த நீண்ட கால வலியிருந்து விடைபெறுகிறான்.

இந்தப் பயணத்தில் வரும் ஒவ்வொருவரும் ஒரு வகை வலியின் அடையாளமே.

பென்ஜியால் அடுத்தவரின் துயரை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் மகிழ்ச்சிப்படுத்த முடிகிறது. அவன் தனது நிகழ்காலத்தை மகிழ்ச்சியின் நற்கணங்களாக மாற்றுகிறான். ஆனால் அவனுக்காக யாருமில்லை. குடும்பமில்லை. தனித்துச் செல்லும் பறவையைப் போலவே விடைபெறுகிறான். அது தான் உண்மையான வலி போலும்.

••

0Shares
0