எழுத்தின் பிறப்பு

“தி கிங்ஸ் லெட்டர்ஸ்” என்ற கொரியத் திரைப்படத்தைப் பார்த்தேன். மிகவும் வித்தியாசமான வரலாற்று திரைப்படம். ஹங்குல் எனப்படும் இன்றுள்ள கொரிய மொழியின் அகரவரிசை எழுதும் முறை எவ்வாறு மன்னர் செஜோங்கால் உருவாக்கப்பட்டது என்பதை மிக அழகாகச் சித்தரித்துள்ளார்கள்.

சினிமாவாக எடுப்பதற்கு மிகக் கடினமான ஒரு விஷயத்தைக் கையில் எடுத்து எவ்வளவு நேர்த்தியாக, உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியிருக்கிறார்கள் என்பது வியக்கவைக்கிறது.

1443 ஆண்டுவரை கொரிய மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. சீன மொழியின் எழுத்து வடிவத்தைக் கொண்டே கொரிய மொழி பயன்படுத்தபட்டு வந்தது. அரசின் முக்கிய ஆவணங்கள். நூல்கள். ஆணைகள் யாவும் சீன மொழியிலே எழுதப்பட்டன. சீன மொழி அறிந்தவர்களே பெரும் அறிஞர்களாகக் கொண்டாடப்பட்டார்கள்.

கொரிய அரசு பௌத்த சமயத்திலிருந்து விலகி கன்பூசிய சிந்தனையில் வேரூன்றியது. ஜோசோன் வம்சத்தின் நான்காவது மன்னரான செஜோங் (1418–1450 ) காலத்தில், கன்பூசிய நெறிகளின் படியே ஆட்சி நடைபெற்றது. .கன்பூசிய சிந்தனைகளைப் பயிலுவதற்காகச் சிறப்புப் பள்ளிகள் நிறுவப்பட்டன, பௌத்த சமய சடங்குகள் முற்றிலும் கைவிடப்பட்டன. பௌத்த மடாலயங்களும் மூடப்பட்டன.

அரசு நிர்வாகிகளிடையே கன்பூசிய வழிகாட்டுதலே முதன்மை நம்பிக்கை முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது

தேசமெங்கும் பௌத்த சமய துறவிகள் ஒடுக்கப்பட்டார்கள். பௌத்த மடாலயங்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது. பௌத்த சமய நூல்கள் தீக்கிரையாக்கின.

இந்த நிலையில் திரிபீடகத்தின் மூலவடிவத்தைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டு பௌத்த துறவிகளின் குழு ஒன்று மன்னர் செஜோங்கின் அரண்மனைக்கு வருகிறார்கள்.

மரச்செதுக்கில் செய்யப்பட்ட திரிபீடக மூலவடிவத்தை அவர்களுக்கு அளிப்பதாகச் செஜோங்கின் தந்தை வாக்குறுதி தந்திருக்கிறார்.ஆகவே அதைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முறையிடுகிறார்கள்.

கன்பூசிய சிந்தனைகளைக் கொண்ட மந்திரிகளும் ஆலோசகர்களும் நமக்குத் திரிபீடகம் தேவையில்லை கொடுத்துவிடுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் மன்னர் செஜோங் அது தேசத்தின் பொக்கிஷம் அதைத் தர இயலாது என்று மறுக்கிறார்.

இந்த சர்ச்சை நீண்டுகொண்டு போகையில் மொழியியல் அறிஞரான பௌத்த துறவி ஷின்மி தலையிட்டுத் திரிபீடகம் உள்ளிட்ட பௌத்த மூலநூல்கள் அரசனுக்கோ, மடாலயத்திற்கோ சொந்தமானதில்லை. அவை பொதுமக்களுக்கு உரியவை. மக்களிடம் அனுமதி பெற்று வாருங்கள் என்று அவர்களைத் திரும்பி அனுப்புகிறான்

துறவி ஷின்மியின் நேர்மையான அணுகுமுறை மன்னருக்குப் பிடித்துப் போகிறது. அவர் துறவியிடம் நெடுங்காலமாக ஒரு ஆசையிருப்பதாகச் சொல்லி கொரிய மொழிக்கென ஒரு வரிவடிவத்தை உருவாக்க வேண்டும் என்கிறார்.

அது எளிய விஷயமில்லை என்று கூறும் ஷின்மி இந்தப் பணிக்குத் தான் உதவுவதாக இருந்தால் மன்னர் புத்தர் கோவில் ஒன்றைக் கட்டி தர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்.

இதற்கு மன்னர் சம்மதிக்கிறார். காரணம் அரசி பௌத்த சமயத்தில் நம்பிக்கை கொண்டவள்.

மன்னர் செஜோங் அறிவியலிலும் கணிதத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரும் ஒரு மொழியியல் அறிஞர். கொரிய எழுத்துகள் சீன வரிவடிவத்தில் எழுதப்படுவதால் அதைப் பாமர மக்கள் கற்க இயலவில்லை. ஒரு தேசத்தில் அனைவரும் எழுத்தறிவு பெறும் போது தான் அது பண்பாட்டில் சிறந்த நாடாகக் கருதப்படும். அந்நிய மொழியைக் கொண்டு அதிகாரம் செய்கிறவர்களால் ஒரு போதும் தேசம் வளர்ச்சியடையாது என்கிறார் செஜோங்

ஆகவே கொரிய மொழிக்காக ஒரு எழுத்து வடிவத்தை உருவாக்க வேண்டும் என்று முனைகிறார்

ஒரு மொழியின் எழுத்துவடிவங்களை உருவாக்குவது எவ்வளவு பெரிய சவால் என்பதை இப்படம் மிக அழகாக எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக நாவிலிருந்து எழும் ஒலிகளை எவ்வாறு நிர்ணயம் செய்வது. எழுத்தின் வடிவத்தை எப்படி உருவாக்குவது என்பது பற்றி நீண்ட வாதபிரதிவாதங்களில் ஈடுபடுகிறார்கள்

அப்போது திரிபீடகம் சமஸ்கிருத மொழியில் உள்ளது. திபெத்திய மொழியில் அதனை அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். என இந்திய மொழிகளின் இயல்பு பற்றி ஷின்மி மன்னர் செஜோங்கிற்கு விளக்குகிறார். அந்த ஒலிகளை ஒலித்துக்காட்டுங்கள் என மன்னர் கேட்கவே ஒரு இளந்துறவி அடிப்படை ஒலிகளை ஒலிக்கிறார், அவர் சமஸ்கிருதம் எனச் சொன்ன போதும் அந்த ஒலிகள் யாவும் தமிழ் மொழியின் ஒலிகளாகவே உள்ளன. குறிப்பாக ழகரம் ளகரம் லகரம் போன்ற ஒலிகளை உச்சரிக்கிறான். இந்த ஒலிகளைக் கொண்டு கொரிய மொழிக்கான எழுத்துக்களை உருவாக்குகிறார்கள்

இன்று வரை கொரிய மொழியில் நிறைய தமிழ் சொற்கள் காணப்படுவதற்கும் உச்சரிப்பில் கொரிய மொழிக்கும் தமிழுக்குமான நெருக்கமான தொடர்பை புரிந்து கொள்வதற்கும் இப்படம் சிறந்த வழிகாட்டி என்பேன்.

பௌத்த துறவிகள் சொற்களை வகைப்படுத்தும் விதமும், அரண்மனை வாழ்க்கை அவர்களுக்கு ஏற்படுத்தும்  அனுபவமும் மாமிசம் சாப்பிட வேண்டும் என ஆசை உருவாவதும் அழகான சிறு சித்திரங்களாக மனதில் பதிகின்றன

ஒரு காட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்துவடிவத்தை தனது பணிப்பெண்களுக்கு கற்பிக்கிறார் மகாராணி. அந்தப் பெண்கள் அனைவரும் மொழி கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் தனது குடும்பத்திற்கு கற்றுதர வேண்டும் என்றும் பணிக்கிறார். பெண்களின் வழியாகவே மொழி வேகமாக வளர்ச்சியடையும் என்கிறார். அது முற்றிலும் உண்மை

இன்னொரு காட்சியில் புத்தனைக் கன்பூசியஸ் சந்தித்து இருந்தால் என்னவாகியிருக்கும் என மன்னர் கேட்கிறார். சாத்தியமற்ற கால இடைவெளி இருந்த போதும் இந்த சந்திப்பு நிகழ்ந்தால் பெரும் மாற்றம் உருவாகியிருக்க கூடும் என்பதையே மன்னர் சுட்டிக்காட்டுகிறார்.

இடைவிடாத மொழியியல் ஆய்வுப்பணியில் மன்னரின் ஒரு கண்பாதிக்கபடுகிறது. இன்னொரு புறம் கன்பூசிய சிந்தனைகளுக்கு மாற்றாக மன்னர் பௌத்த சமய துறவிகளை உடன் வைத்துக் கொண்டு ஆலோசனை கேட்பது மந்திரிசபையில் பலத்த எதிர்ப்பை உருவாக்குகிறது

எழுத்துகளை உருவாக்குவதில் உதவி செய்யும் ஷின்மி ஒவ்வொரு முறை தனது மடாலயத்திற்குத் திரும்பும் போதும் தலைமை துறவியால் அவனது அகந்தை மற்றும் கோபத்திற்காகத் தண்டிக்கப்படுகிறான். அது ஒரு சடங்கு போலவே நடக்கிறது. அடக்கமாகவும் அமைதியாகவுமே பௌத்த துறவிகள் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் தலைமை துறவி உறுதியாக இருக்கிறார்

முதன்முறையாக மன்னரைச் சந்திக்கச் செல்லும் ஷின்மி மன்னரின் முன்னால் தலைவணங்குவதில்லை. அவன் ஏன் தன்னை வணங்கவில்லை என்று மன்னர் கேட்டதற்கு நாய்கள் ஒருபோதும் யாருக்கும் தலை வணங்குவதில்லை என்று பதில் சொல்கிறேன். படம் முழுவதும் ஷின்மியின் பேச்சும், செயல்களும் உறுதியான வெளிப்பாட்டு முறையும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக ஒரு காட்சியில் ஷின்மி மாமிசம் சாப்பிடுவதற்குச் சொல்லும் காரணமும் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து மன்னரிடம் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியும் அபாரம்

மன்னர் செஜோங் மிக நிதானமாக, ஆழ்ந்த கவனமும் ஈடுபாடும் கொண்ட மொழியியல் அறிஞராக நடந்து கொள்கிறார். பகலிரவாக அவர் ஆய்வுகள் செய்வதும் நாவிலிருந்து வேறுபட்ட ஒலி எவ்வாறு உருவாகிறது என்பதை அறிந்து கொள்ளப் பணிப்பெண்ணின் விரலை நாக்கில் வைத்துப் பரிசோதனை செய்து பார்ப்பதும் சிறப்பான காட்சிகள்.

தனது மனைவியின் தந்தை உள்ளிட்ட பலரையும் கொலை செய்து அரியணையில் அமர்ந்துள்ள போதும் மன்னர் செஜோங் மிகவும் அசாதாரணமான பரிவுணர்வு கொண்ட மனிதராகவே நடந்து கொள்கிறார். படத்தில் ஒரு போதும் அவர் உணர்ச்சிவசப்படுவதில்லை. தனது கோபத்தை கூட அவர் மெல்லிய குரலில் தான் வெளிப்படுத்துகிறார்.

புதிதாகக் கொரிய எழுத்துக்கள் உருவாக்கப்படக்கூடாது என்பதற்கு மந்திரி சபையும் ஆலோசகர்களும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிக்கிறார்கள். செஜோங்கின் மனைவிக்காக அரண்மனைக்குள் புத்தர் கோவில் கட்டப்படுவதையும் சமய சடங்கு நடைபெறுவதையும் வெளிப்படையாக எதிர்க்கிறார்கள். இந்தத் தேசம் உங்களுக்குச் சொந்தமானதில்லை. இதன் எதிர்காலத்தை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மன்னர் முன்பாகவே  தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்

அதன் உச்சம் எழுத்துவடிவம் அச்சிடப்பட்ட நூலை அவர்கள் கையால் கூட தொட மறுத்து விலகிப் போவது. அந்தக்காட்சியில் செஜோங் தனித்து விடப்பட்டவராக சோர்ந்து மனவருத்தமாக இருக்கிறார். தான் அணிந்திருப்பது மன்னர் வேடம் என்று வேதனையோடு சொல்கிறார்.

கல்வியறிவை ஊக்குவிப்பதன் மூலம் தேசத்தில் சமத்துவத்தை உருவாக்கிவிட முடியும் என செஜோங் முழுமையாக நம்புகிறார். இதற்காகவே, கொரிய மக்கள் அனைவரும்  கற்றுக்கொள்ள எளிதான புதிய எழுத்துக்களை உருவாக்குகிறார். அந்த எழுத்துமுறை ஹன்மின்ஜியோஞ்சியம் என அழைக்கப்படுகிறது. தற்போது அதை ஹங்குல் என்கிறார்கள்.

வெறும் கோடுகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்திப் புதிய எழுத்துவடிவத்தை செஜோங் உருவாக்குவதைக் காணும் போது,  தமிழ் எழுத்துக்கள் காலமாற்றத்தில் அடைந்துள்ள வளர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு புதிய மொழியை உருவாக்குவது எளிமையான விஷயமில்லை.அதிலும் பாமர மக்களும் கற்கும் வகையில் எழுத்துவடிவங்களை உருவாக்குவது பெரும் சவால். அப்பணியில் மன்னரும் அவரது குழுவினர்களும் மேற்கொள்ளும் முயற்சிகள்  மொழி வரலாற்றைப் புரிந்து கொள்ளப் பேருதவி செய்கின்றன.

செஜோங்கிற்கும் அவரது மனைவிக்குமான காதலும், மனைவியின் பொருட்டு அவர் மனமாற்றம் கொள்வதும் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது

செஜோங் போல மொழியின் மீது தீவிர பற்று கொண்ட ஒரு மன்னரைக் காண்பது அரிது, தேசத் துரோக குற்றச்சாட்டின் பேரில் தனது மனைவியின் குடும்பத்தினரைக் கொன்றது குறித்து படம் முழுவதும் செஜோங் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறார், மேலும் புதிய எழுத்துமுறை உருவாக்கப்படுவதன் முன்பு தனது பார்வையை இழந்து விடுவோமோ என்றும் கவலைப்படுகிறார். ஆனால் கடைசியில் அவரது மனவுறுதியே வெல்கிறது. செஜோங்காக நடித்துள்ள சாங் காங்-ஹோ மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்

இது இயக்குநர் ஜோ சுல்-ஹியூனின் முதல் படம். வரலாற்றில் பதிவு செய்யப்படாத புத்த துறவி ஷின்மியை படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக்கியிருப்பது இயக்குநரின் சரியான தேர்வு.

••

0Shares
0