திடீரென ஒரு நாளில் அந்த நகரிலிருந்த சுவர்க்கடிகாரங்கள் யாவும் தன் ஒலியைத் தானே மாற்றிக் கொண்டுவிட்டன.
டிங் டிங் என அதன் ஒலிக்கும் ஓசை நீண்டகாலமாகவே ஒரே போலிருந்தது தான் காரணமா, இல்லை ஓசை எழுப்பாத கடிகாரங்கள் வந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இப்படி மாறியதா எனத் தெரியவில்லை.
ஆனால் சுவர்க்கடிகாரத்திலிருந்து க்கூ க்கூ என விசித்திரமாகப் பறவையின் ஒலி போலச் சப்தம் வர ஆரம்பித்தது.
அரண்மனை அலங்கார கடிகாரம் ஒன்று இப்படிச் சபதமிடுவதாக மக்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாச் சுவர்க்கடிகாரங்களும் எப்படிப் புதுக்குரல் கொண்டன எனப் புரியவில்லை.
வீட்டிற்குள் பறவை வந்துவிட்டதோ எனத் திடுக்கிட்ட சிலர் சுற்றிலும் தேட ஆரம்பித்தார்கள். தாலுகா அலுவலகச் சுவர்க் கடிகாரத்திலிருந்து க்கூ க்கூ எனச் சப்தம் எழுப்பிய போது நீதிமறுக்கபட்டவனின் அழுகை போலிருப்பதாகப் பலரும் உணர்ந்தார்கள். பள்ளிக்கூடத்தின் சுவர்க்கடிகாரம் மாறி ஒலிப்பதைக் கண்ட தலைமை ஆசிரியர் அது அன்பிற்கு ஏங்கும் மாணவியின் குரலினை நினைவுபடுத்துவதாகக் கருதினார்.
இப்படியாக, உலர் சலவை நிலையம்,, பத்திரப்பதிவு அலுவலகம், வாடகை நூலகம், காலணி பாதுகாக்குமிடம், விபூதிக்கடை, அச்சகம், டெய்லர்கடை, என இன்னும் பழைய சுவர்க் கடிகாரங்கள் உள்ள இடங்களில் இந்தப் புதிய ஒலி குழப்பத்தை உருவாக்கியது.
சுவர்க்கடிகாரங்களைத் தொடர்ந்து கைக்கடிகாரங்களும், அலாரம் கடிகாரங்களும் கூடத் தன் டிக் டிக் ஒலியைத் தானே மாற்றிக் கொண்டன.
இதனால் குழப்பம் உச்சத்திற்குப் போனது.
எல்லாக் கடிகாரங்களுக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதாக ஒருவன் திட்டினான். கடிகாரத்தின் ஒலி மாறியவுடன் அது இப்போது காலத்தைக் குறிப்பதாகவில்லை என்று ஒருவன் சலித்துக் கொண்டான்.
ஒரு இல்லத்தரசி வீட்டுக் கடிகாரத்தின் புதிய ஒலி தன்னை ஆசுவாசப்படுத்துகிறது. முன்பெல்லாம் அது தன்னைச் சவுக்கால் அடித்து விரட்டுவது போலிருக்கும் என்றாள்.
புதிய ஒலியால் கடிகாரம் ஒரு பறவையாக மாறிவிட்டதெனக் குழந்தைகள் குதூகலம் கொண்டார்கள்.
ஆனால் ஆண்கள் ஒருவருக்கும் இந்தப் புதிய ஒலி பிடிக்கவேயில்லை. கடிகாரத்தின் பழைய ஓசையை போலில்லை என்று புலம்பிக் கொண்டார்கள். வளர்ந்துவிட்ட மகன் போலத் தன்னிஷ்டமாக நடந்து கொள்கிறது எனக் கோபம் கொண்டார்கள். கடிகார ஓசையைக் கேட்கையில் கைகளில் பறவை அமர்ந்திருப்பது போலிருக்கிறது என எரிச்சல் அடைந்தார்கள்.
சுவர்க் கடிகாரங்களோ எப்போதும் போல மணிக்கொரு முறை சப்தமிட்டன. மாற்றமும் வளர்ச்சியும் மனிதர்களுக்கு மட்டுமேயானது என்பதை அறியாமல்.
••
23.2.20
