கவிதையெனும் மாற்றுவழி.

செஸ்லாவ் மிலாஸ் (Czeslaw Milosz) தொகுத்த உலகக் கவிதைகளின் தொகுப்பான A Book of luminous Things மிகச்சிறந்த புத்தகம். சர்வதேசக் கவிதைகளில் மிகச்சிறப்பானவற்றை தேர்வு செய்து தொகுத்திருக்கிறார். மிலாஸ் நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவிஞர். இருபதாம் நூற்றாண்டின் நிகரற்ற கவியாக கருதப்படுகிறவர்

அவரது கவிதைத் தேர்வும் அதை வகைப்படுத்திய முறையும் இடம்பெற்றுள்ள கவிதைகளும் தனித்துவமானவை. இதுவரை தொகுக்கப்பட்டுள்ள சர்வதேச கவிதைத் தொகுப்புகளில் இது தனித்துக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்..

பொதுவாக சர்வதேசக் கவிதைகளின் தொகுப்புகளைத் தொகுக்கிறவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சில கவிஞர்களைத் தேர்வு செய்து அவர்களின் ஒன்றிரண்டு கவிதைகளை இடம்பெறச் செய்வார்கள். ஆனால் மிலாஸ் அப்படித் தொகுக்கவில்லை.

அவர் கவிதையின் ஆதாரமான விஷயங்களான காலம் வெளி இயற்கை பயணம் மனித உறவுச்சிக்கல் என பல்வேறு விஷயங்களை எடுத்துக் கொண்டு அதனை மையமாகக் கொண்ட கவிதைகளை தேர்வு செய்திருக்கிறார்.

பிரபல கவிஞரான டி.எஸ்.எலியட்டிற்கு கூட இந்த தொகுப்பில் இடமில்லை. அதை விமர்சகர்கள் எவரும் குறையாகவும் நினைக்கவில்லை. காரணம் தனது தொகுப்புமுறையை மிலாஸ் விரிவாக விளக்கி எழுதியிருப்பதே.

தனக்கு விருப்பமான பல கவிஞர்களை இந்தத் தொகுப்பில் சேர்க்கவில்லை. தொகுப்பின் தேர்வு முறையில் அவர்களுக்கு இடம் தர இயலவில்லை. ஆனால் அவர்களை விரும்பி வாசித்து மொழியாக்கம்  செய்திருக்கிறேன் என்று முன்னுரையில் மிலாஸ் கூறுகிறார். இது தான் தொகுப்பாசிரியரின் நேர்மை.

தோற்றம் என்ற முதற்பகுதியில் கடவுள் மனிதன் முன் தோன்றுவதில் துவங்கி தோற்றம் எவ்வாறு கவிதையின் மையப்பொருளாக உள்ளது என்பதை விளக்குகிறார்.

பைபிளில் ஆபிரகாம் முன்பு கடவுள் தோன்றிய இடத்தை மிலாஸ் சுட்டிக் காட்டுகிறார். இந்தப்புள்ளியை முதன்மைப்படுத்திய சில கவிதைகள் அந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது

ஒவ்வொரு கவிதையின் முன்பும் சிறிய குறிப்பு ஒன்றை மிலாஸ் எழுதியிருக்கிறார். அது அக்கவிதையினைப் புரிந்து கொள்வதற்கான சாவி. விளக்கவுரையோ, அறிமுகவுரையோ செய்யாமல் கவிதையின் முன்னால் ஒரு கண்ணாடியை காட்டுவது போன்ற செயலது.

ஜப்பானிய ஹைக்கூக்களில் இஸாவின் கவிதை ஒன்றை தேர்வு செய்திருக்கிறார்., அது பதினேழாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. சர்வதேசக் கவிதைகளைத் தொகுப்பவருக்கு எந்த அளவு பரந்த கவிதை வாசிப்பும் ஆழ்ந்த புரிதலும் இருக்கிறது என்பதற்கு மிலாஸ் தேர்வு செய்துள்ள கவிதைகளே சான்று.

இயற்கையை நாம் புரிந்து வைத்திருப்பதற்கும் நமது முன்னோர்கள் புரிந்து வைத்திருந்ததிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. நாம் இன்று இயற்கையை மனிதனுக்கு எதிராக முன்னிறுத்துவதில்லை.  இயற்கையின் பிரிக்கமுடியாத அங்கமாகவே மனிதன் கருதப்படுகிறான். ஒரு காலத்தில் இயற்கை மட்டுமே மனிதனின் நன்மை தீமையை தீர்மானிப்பதாக கருதப்பட்டது. இன்றைக்கு இயற்கையின் சமநிலை மனிதனால் எவ்வாறு சிதைக்கபடுகிறது. விலங்குகள் தாவரங்கள் உள்ளிட்டவற்றை மனிதன் தனது சுயலாபங்களுக்காக எவ்வாறு அழித்து ஒழிக்கிறான் என்ற புரிதல் உருவாகியிருக்கிறது. ஆகவே இயற்கையை பற்றிய நமது முன்னோர்களின் கவிதையும் நமது இயற்கையைப் பற்றிய கவிதையும் இரண்டு வேறுபட்ட கண்ணோட்டத்தில் உருவாகியுள்ளன

இயற்கை அறிதலை ஜென் கவிதைகள் ஆன்மீக வழிகாட்டுதலாக கருதுகின்றன. சூபியும் அரபிக் கவிதைகளும் இது போன்றே இயற்கையை அணுகுகின்றன. இயற்கையின் இயக்கத்தையும் அதன் விந்தையினையும் சீன ஜப்பானிய இந்தியக் கவிதைகள் பிரதிபலிக்கின்றன..

பிரெஞ்சு கவிதை ஒன்றையும் சீனக்கவிதை ஒன்றையும் அடுத்தடுத்து வாசிக்கையில் கவிதைகளின் மொழியை தாண்டி இருவேறு தேசங்களிலும் கவிஞர்களின் பார்வையும் புரிதலும் எவ்வாறு ஒன்று போலவே இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ரயில் பயணமும் அந்த பயணத்தின் ஊடாக கண்ணில் தெறித்து மறையும் காட்சிகளையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளை வாசிக்கையில் தேவதச்சனின் கவிதைகளில் வரும் ரயிலும் ரயில்நிலையம் சார்ந்த காட்சிகளும் மனதில் தோன்றி மறைந்தன, உலகெங்கும் கவிதையில் ரயில் ஒரு படிமமாக, உருவகமாக இடம்பெறுகிறது.

இது போலவே படகுப்பயணம் குறித்த கவிதைகளும் மலையை நோக்கிச் செல்லும் பயண அனுபவமும் சீன ஜப்பானியக் கவிதைகளில் எவ்வளவு அபூர்வமான அனுபவத்தை உருவாக்குகிறது என்பதை மிலாஸ் அழகாக எடுத்துக் காட்டுகிறார்.

பயணமே சீனக்கவிதைகளின் அடிப்படை. முக்கிய கவிஞர்கள் அனைவரும் தனது பயணஅனுபவத்திலிருந்து கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். அதிலும் நீர்வழிப்பயணத்தோடு மனிதனுக்குள்ள தொடர்பு மிகவும் தொன்மையானது. அதை சீனக்கவிதைகள் மிக அழகாக வெளிப்படுத்துகின்றன

இது போலவே கவிதைக்கும் ஒவியத்திற்குமான உறவை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளைத் தேர்வு செய்திருக்கிறார். இந்தக் கவிதைகளில் ஒவியமும் கவிதையும் ஒரே உலகை இருவேறு நிலைகளில் அடையாளப்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறார்.

வசந்தகாலத்தை முழுமையாக ஒருவரால் ஒவியமாக வரைந்துவிட முடிகிறது என்றால் மகத்தான கவிஞர்களால் அதே அனுபவம் சொற்களின் வழியாக உணர்த்தப்படவும் முடியும் என்று மிலாஸ் குறிப்பிடுகிறார். நிறங்கள் வார்த்தைகளின் சகோதரிகள் என்று ரோல்ப் ஜேக்கப்சன் கவிதை ஒன்றில் வரும் வரியே நினைவிற்கு வருகிறது.

இன்னொரு கவிதையில் இரவு தங்குவதற்காக இடம்தேடி வழிப்போக்கன் ஒருவன் ஏரிக்கரையோர மீனவனின் குடிசையில் தஞ்சம் புகுகிறான். மீனவன் வீட்டில் இல்லை. ஆகவே அனுமதிக்காக காத்திருக்கிறான். வெளியே மூங்கில் தோப்பின் பின்னால் நிலவு எழுதுகிறது. தென்றல் காற்று இனிமையாக வீசுகிறது. குறைவான சொற்களின் வழியே இந்தக் கவிதை ஒரு காட்சியை நமக்கு காட்டுகிறது. போக்கிடமின்றி காத்திருப்பவனின் மனதும் இயற்கையின் பேரழகும் ஒரு சேர வெளிப்படுகிறது.

இன்னொரு கவிதையில் இரண்டே வரிகள் வரலாற்றின் போக்கினை மிக அழகாக நமக்குக் காட்டுகின்றன

பேரரசு எழுந்தாலும்

மக்கள் துயரப்படுவார்கள்

பேரரசு வீழ்ந்தாலும்

மக்கள் துயரப்படுவார்கள்

அதிகாரத்தின் இரு நிலைகளிலும் பாதிக்கப்படுவது மக்களே.

இடங்களைப் பற்றிய பகுதியில் திசைகளும் ஊர்களும் வசிப்பிடமும் எவ்வாறு கவிதையில் அடையாளமாக, குறியீடாக மாறிப்போகின்றன என்பதற்கு சீன, ஜப்பானிய பிரெஞ்சு கவிதைகளை உதாரணமாக முன்வைக்கிறார்.

இது போலவே சினிமாவில் இடம் பெறும் ஒரு பிரேம் போல காலத்தின் ஒரு கணத்தை உறையச்செய்து கவிதை எவ்வாறு காலம் கடந்த அனுபவமாக மாற்றுகிறது என்பதற்கும் சில கவிதைகளை உதாரணங்களாகத் தருகிறார்.

இன்னொரு கவிதைப்பிரிவில் மனிதன் தனது சகமனிதனை அவதானிக்கிறார். சகமனிதன் மீது, பொறாமை கொள்கிறான், அன்பு செலுத்துகிறான், பகை கொள்கிறான் என மனிதர்கள் மீது மனிதர்கள் காட்டும் கவனத்தையும் ஈடுபாட்டினையும் முதன்மைப்படுத்திய கவிதைகளை தொகுத்திருக்கிறார். அதில் ஒரு சீனக்கவிதை இளம் மனைவியைப் பற்றியது

மூன்றாம் நாள் இளம்மனைவி  சமையலறைக்குள் சென்றாள்.

கைகளை கழுவிக் கொண்டாள், சூப் தயாரித்தாள்

இன்னும் மாமியாரின் விருப்பங்களை அறிந்து கொள்ளாதவள்

கணவனின் தங்கையிடம்  சுவைக்கும்படி சொன்னாள்

என அந்தக் கவிதை ஒரு சித்திரத்தை முன்வைக்கிறது. குடும்ப உறவில் இளம்மனைவி எதிர்கொள்ளும் சிக்கலை அழகாக வெளிப்படுத்தும் கவிதையிது.

அவள் இனி அடுத்தவரின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளவேண்டும். அவளது சுவை, விருப்பங்களை விடவும் வீட்டின் விருப்பங்களும் சுவையே முதன்மையானது. இந்தக் கவிதையில் வரும் இளம்மனைவியின் தோற்றமோ, குடும்ப பின்புலமோ எதுவுமோ விளக்கப்படவில்லை. ஆனால் இளம்மனைவி எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையை தனியே கவிதை சுட்டிக்காட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டுக் கவிதையிது. இத்தனை நூற்றாண்டுகள் கடந்த பின்பும் இந்தக் கவிதை சுட்டிக்காட்டும் பிரச்சனை மாறவேயில்லை. இன்று திருமணமாகி புது வாழ்க்கை நடத்த இருக்கும் இளம்பெண்ணிற்கும் இந்தக் கவிதை பொருத்தமானதே.

மிலாஸின் பரந்தபட்ட கவிதை வாசிப்பும் கவிதையின் மீதான தீராத ஈடுபாடுமே இந்தத் தொகுப்பினை சாத்தியப்படுத்தியிருக்கிறது. மிக முக்கியமான தொகைநூலிது.

Poetry is an embarrassing affair; it is born too near to the functions we call intimate.

Poetry cannot be separated from awareness of our body. It soars above it, immaterial and at the same time captive, and is a reason for our uneasiness, for it pretends to belong to a separate zone, of spirit.

I was ashamed of being a poet, as if, undressed, I would display in public my physical defects. I envied people who do not write poems and whom for that reason I ranged among the normal. And in this I was wrong: few of them deserve to be called that.

The poet Jean Valentine once said in an interview, ‘Of course all poetry is prayer. Who else would we be addressing?’ Part of me wants to agree with her, but I don’t know that it’s that simple. There does seem to be something essentially unsecular about poetry: both in traditional, oral cultures and in our own, people rely on poetry to convey truths about matters of life and death that are accessible in no other way. In contemporary America, poetry offers many people-including poets-the consolation they no longer find in traditional religion.

எனது  மிலாஸ் கவிதை பற்றி ஒரு குறிப்பினைப் பதிவு செய்திருக்கிறார். வாழ்வின் உண்மைகளைத் தெரிவிப்பதற்கு கவிதை ஒரு மாற்றுவழி என மிலாஸ் சொல்வது மிகவும் ஏற்புடையதே.

***

18/7/20

0Shares
0