தங்கதுரைக்கு அப்படி ஒரு பழக்கம் எப்படி உருவானது என்று தெரியவில்லை. ஆனால் அவர் வீட்டில் நின்றபடியே உறங்கும் பழக்கம் கொண்டிருந்தார்.
ஒரு மனிதரால் எப்படி நின்றபடி உறங்க முடியும் என வியப்பாக இருக்கும். ஆனால் தங்கதுரை நின்றபடியே தான் உறங்கினார். ஆழ்ந்த தூக்கத்தில் கிழே விழுந்துவிடுவார் என்று தங்கதுரையின் மனைவி பயந்திருக்கிறாள். ஆனால் ஒரு நாள் கூட உறக்கத்தில் தடுமாறி விழவில்லை.
தங்கதுரை ஏன் நின்றபடி உறங்குகிறார் என அவரிடம் பலரும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதில் சொன்னதில்லை. ஆமாம் என்பது போல தலையசைக்க மட்டுமே செய்வார்.
நின்றபடியே உறங்குவதாக இருந்தாலும் அதற்கென ஒரு இடத்தை தங்கதுரை தேர்வு செய்திருந்தார். அது ஹாலின் வடக்கு மூலை. இரண்டு பிரம்பு நாற்காலிகளை இடவலமாக போட்டுக் கொண்டு நடுவில் நின்றபடியே தான் உறங்குவார். சுவரைப் பார்த்தபடியே முகமிருக்கும். சுவரிடம் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருப்பவர் போலிருக்கும் அவரது தோற்றம்.
இந்த விசித்திரப் பழக்கம் காரணமாகவே தங்கதுரை வெளியூருக்குப் போவதேயில்லை. உறவினர் வீட்டில் ஒரு நாள் தங்கியதில்லை.
“சிறுவயதில் தங்கதுரை இப்படி நின்றபடியே உறங்கியதில்லை. அப்போது நாங்கள் சேலத்தில் குடியிருந்தோம். தங்கதுரையின் அப்பா டிரைவராக வேலை பார்த்தார். சிறிய குடிசை வீட்டில் எட்டுப்பேர் வசித்து வந்தோம். கால்களை நீட்டிப்படுக்க இடமிருக்காது. தலையணை பாய் கிடையாது. பழைய துணியை விரித்துச் சுருண்டு கிடப்போம். மழை வந்துவிட்டால் வீடு ஒழுக ஆரம்பித்துவிடும். உறங்க இடமிருக்காது. நள்ளிரவில் நனைந்தபடியே அருகிலுள்ள பள்ளிக்கூடத்திற்கு போய் உறங்குவோம். அப்போது இரவெல்லாம் தங்கதுரை உறங்காமலே இருந்திருக்கிறான். நல்ல உறக்கம் என்பது ஒரு கொடுப்பினை. அது அவனுக்கு கிடைக்கவேயில்லை. ஏதோவொரு நெருக்கடி அவனை இப்படி விசித்திர பழக்கம் கொள்ள வைத்திருக்கிறது“. என ஆதங்கமாகச் சொன்னாள் தங்கதுரையின் அம்மா.
“திருமணமான புதிதில் கட்டிலில் தான் உறங்கினார். அரைமணி நேரத்திற்கு மேல் தூங்க மாட்டார். எழுந்து உட்கார்ந்து கொள்வார். இருட்டைப் பார்த்தபடியே இருப்பார். திடீரென ஒரு நாள் அவர் சுவரோரமாக நின்றபடியே உறங்குவதை கண்ட போது அதிர்ச்சியாக இருந்தது. ஏன் அப்படி உறங்குகிறீர்கள் என்று சண்டை கூட போட்டிருக்கிறேன் ஆனால் அவர் பதில் சொல்லவேயில்லை“ என்றாள் தங்கதுரையின் மனைவி
தங்கதுரை தனது உறங்கும் பழக்கம் பற்றி மற்றவர்கள் விசித்திரமாக நினைப்பதை கண்டுகொள்ளவேயில்லை.
ஒருமுறை அவரது மகள் கட்டாயப்படுத்திக் கேட்டபோது “யானை நின்றபடியே தானே தூங்குகிறது“ என்றார்.
“அது ஒரு விலங்கு“ என்றாள் மகள்.
“நானும் ஒரு விலங்கு தான்“ என்றபடியே, “கிளார்க் வேலைக்குச் செல்லும் விலங்கு, வாழ்க்கை என்னை மனிதனாக நினைக்க விடவில்லை“ என்று சொல்லித் தலைகவிழ்ந்து கொண்டார்.
மகளுக்குத் தந்தையின் உறக்கம் மட்டுமில்லை பேச்சும் புரியவேயில்லை.
****