ஆங்கில எழுத்தாளர் ஜுலியன் பார்ன்ஸ் A Life with Books என்ற தனது கட்டுரை ஒன்றில் முதன்முதலாகத் தான் ஒரு புத்தகக் கடைக்குச் சென்ற அனுபவத்தை எழுதியிருக்கிறார்.
பார்ன்ஸின் தாய், தந்தை இருவரும் ஆசிரியர்கள். ஆகவே அவர்கள் வாங்கிச் சேகரித்த புத்தகங்கள் அவரது வீட்டிலே சிறிய நூலகமாக இருந்தது. அம்மா வழி தாத்தா பாட்டியும் ஆசிரியர்கள் என்பதால் அவர்கள் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களும் நிறைய இருந்தன.
தொலைக்காட்சி அறிமுகம் ஆகாத காலம் என்பதால் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது. அத்தோடு பெற்றோர்கள் ஆசிரியராக இருந்த காரணத்தால் பாடம் தவிர்த்த வேறு புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார்கள்.
பெற்றோர்களின் நூலகத்திலிருந்த புத்தகங்களில் தன் வயதில் படிப்பதற்கென என எதுவுமில்லை என அவருக்குத் தோன்றியது. வரலாற்றுப் புத்தகங்களைத் தேடிப் படித்தேன். ஆனால் அது கடினமாக இருந்தது என்கிறார் பார்ன்ஸ்.
பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகக் கூப்பன் பரிசாகத் தருவார்கள். அதை வைத்துப் புத்தகக் கடையில் பெற்றோர்கள் தான் புத்தகங்களை தேர்வு செய்யவேண்டும். அப்படி நிறைய புத்தகங்களை பரிசாகப் பெற்றிருக்கிறார்
தனது 17வது வயதில் இப்படி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுத் தானே கடைக்கு சென்று யுலிசிஸ் நாவலைத் தேர்வு செய்து பரிசாகப் பெற்றதை முக்கியமான திருப்பு முனை என்கிறார் பார்ன்ஸ்
பெற்றோர்கள் தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றதை விடவும் நூலகத்திற்கு அதிக முறை அழைத்துப் போயிருக்கிறார்கள் என்கிறார் ஜுலியன் பார்ன்ஸ். அது தான் அவரை ஒரு எழுத்தாளராக உருவாக்கியது.
ஜுலியன் பார்ன்ஸை வாசிக்கையில் முதன்முறையாக நான் எப்போது புத்தகக் கடைக்குச் சென்றேன். என்ன புத்தகம் வாங்கினேன் என்ற கேள்வி எனக்குள் உருவானது.
பள்ளி நாட்களில் வீட்டில் தரும் பாக்கெட் மணியைச் சேர்த்து வைத்து புத்தகம் வாங்குவது வழக்கம். மல்லாங்கிணர் கிராமத்திலோ, விருதுநகரிலோ புத்தகக் கடைகள் அப்போது கிடையாது. ஆகவே மதுரைக்குச் செல்ல வேண்டும்
ஆகவே புத்தகம் வாங்குவதற்கென பயணம் செய்வது எனது பள்ளி நாட்களிலே துவங்கியது.
காமிக்ஸ் புத்தகங்கள் சிவகாசியில் அச்சிடுவார்கள் என்பதால் நேரடியாக சிவகாசிக்கே சென்று காமிக்ஸ் வாங்கி வருவேன். மதுரையில் உள்ள பழைய புத்தக கடைகளே எனது உலகம். நான் படித்த மிகச்சிறந்த புத்தகங்களை அங்கே தான் வாங்கினேன்.
அது போலவே சர்வோதயா இலக்கியப் பண்ணை என்ற ரீகல் தியேட்டர் அருகிலுள்ள புத்தகக் கடை. மற்றும் மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போகும் வழியிலுள்ள என்சிபிஎச். இந்தக் கடைகளில் நீண்ட நேரம் செலவிட்டு கையிலுள்ள பணத்திற்கு எதை வாங்க முடியும் என யோசித்துக் கொண்டிருப்பேன். பணமில்லை என்ற காரணத்தாலே நிறைய புத்தகங்களை வாங்க முடியாமல் போயிருக்கிறது.
அவற்றை நூலகத்தில் தேடுவேன். அங்கே புதிய புத்தகங்கள் கிடைக்காது. வாடகை நூலகத்தில் கட்டணம் செலுத்திப் படிப்பது மட்டுமே வழி. ஆனால் உறுப்பினர் இல்லை என்பதால் அங்கேயும் புத்தகம் தர மாட்டார்கள். நண்பர்களின் வழியே புத்தகத்தை ஒரு நாள் தவணையில் எடுத்து அன்றைக்குள் படித்து முடிப்பேன்.
ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஜுலியன் பார்ன்ஸ் அழகான பதில் ஒன்றைத் தருகிறார்.
வீடு. பெற்றோர். சொந்தஊர் என இருந்த தனது வாழ்க்கைக்கு வெளியே வேறு உலகம் இருப்பதையும், அதன் விசித்திரங்களையும் புத்தகங்கள் தான் அறிமுகம் செய்தன. புத்தகம் படிக்க ஆரம்பித்த பின்பு தான் சகமனிதர்களின் மனதும் இயல்பும் செயல்களும் புரிய ஆரம்பித்தன. தன்னையும் உலகையும் அறிந்து கொள்வதற்கான சாளரமாகவே புத்தகங்கள் இருக்கின்றன என்கிறார். பார்ன்ஸ்
அவர் சொல்வது முற்றிலும் நிஜம். அதை எனது அனுபவத்தில் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். வெறும் தகவல்களாக இருந்த வரலாற்றைப் புனைவில் வாசித்த போது தான் உயிரோட்டமாக கண்முன்னே விரியத் துவங்கியது.
கவிதையின் வழியாகவே கண்முன்னேயிருந்த சூரியனும் நிலவும் மலர்களும் விருட்சங்களும் வசீகரமாகின. எளிய மனிதர்களின் வாழ்க்கையை வியக்க வைத்தது ரஷ்ய இலக்கியங்களே.
புத்தகங்களைப் படிப்பதைப் போலவே அவற்றைச் சொந்தமாக்கிக் கொள்வதில் உள்ள விருப்பம் சொல்லிப் புரிய வைக்கமுடியாதது. சேர்த்த புத்தகங்களை எங்கே வைப்பது என்பது தான் பிரச்சனை. புத்தகங்கள் சூழ வாழுவது மகத்தானது என்பேன்.
இப்போதும் எவரது வீட்டிற்குப் போனாலும் புத்தகச் சேமிப்பு எங்கேயுள்ளது என்று தான் கண்கள் தேடுகின்றன. அரிய புத்தகம் ஏதாவது கண்ணில் பட்டால் படிக்க மனது பரபரப்பாகிவிடுகிறது. என்ன தான் கிண்டில் மூலம் ஈபுக் படித்தாலும் நேரடியாக அச்சுப்புத்தகம் தரும் நெருக்கத்தை வேறு எதுவும் தரமுடியாது.
வாங்கிய புத்தகங்களில் சிலர் கையெழுத்துடன் எந்த ஊரில் வாங்கியது என்றும் போட்டுக் கொள்வார்கள். சிலர் சீல் செய்து வைத்திருப்பார்கள் அதை முகப்பில் குத்தி பதிவு செய்து கொள்வார்கள்.
எனது நண்பர் ஒருவர் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் தான் தனது பெயரை எழுதிக் கொள்வார். இன்னொரு நண்பர் புத்தகம் படித்து முடித்தவுடன் எப்போது படித்தோம் என கடைசிப்பக்கத்தில் தேதியை குறிப்பிடுவார்.
பிடித்தவரிகளில் சிலர் பென்சிலால் அடிக்குறிப்பு போடுவார்கள். சிலரோ சிவப்பு மசி பேனாவில்.
நான் புத்தகங்களை வாசிக்கும் போது தோன்றும் எண்ணங்களை அந்த பக்கத்திலுள்ள வெற்றிடத்தில் நுணுக்கி நுணுக்கி எழுதி வைப்பேன். ஆகவே எனது புத்தகம் எதையும் யாருக்கும் இரவல் தர முடியாது.
கல்லூரி நாட்களில் நானும் கோணங்கியும் ஊர் ஊராகப் புத்தக வேட்டைக்குக் கிளம்புவோம். எந்த ஊரில் எந்த பழைய புத்தகக் கடையில், பழைய நூலகத்தில் அரிய புத்தகங்கள் கிடைக்கும் என்று விசாரித்து செல்வோம். இதற்காகவே பெங்களூர், திருவனந்தபுரம், நெய்வேலி, தஞ்சை, கோவை, மைசூர், கொச்சி பாண்டிச்சேரி, சென்னை எனச் சுற்றியிருக்கிறோம். நான் தனியே மும்பை டெல்லி கல்கத்தா வரை சென்று கூட புத்தகம் வாங்கி திரும்பியிருக்கிறேன்.
ஒருமுறை கூட்டுறவு வங்கி ஒன்றில் பணியாற்றும் நண்பரைக் காணப்போயிருந்தோம். அவர் தங்கள் வங்கியில் ஒரு மர அலமாரி முழுவதும் புத்தகம் இருப்பதாகவும். அதை யாரும் முப்பது வருஷமாகத் தொடவேயில்லை என்றார்.
தூசி படிந்து போன அந்த அலமாரியைத் திறந்து உள்ளே பார்த்தால் கரப்பான்பூச்சிகளும் உலர்ந்த எலிப்புழுக்கைகளும் இருந்தன. அலமாரியில் இருந்த புத்தகங்களை தரையில் எடுத்துப் போட்டு உருப்படியான புத்தகம் எவை எனப் பிரித்தோம். ஆச்சரியம் அதில் டால்ஸ்டாயின் போரும் வாழ்வும், ஹெமிங்வேயின் போரே நீ போ, இர்வின் ஸ்டோனின் அழிவற்ற காதல், எட்கர் ஆலன் போவின் இதயக்குரல், உள்ளிட்ட நல்ல மொழிபெயர்ப்பு நாவல்கள் கிடைத்தன.
பழைய புத்தகங்களை எடைக்குப் போட்டதாக கணக்கு எழுதி அதற்குரிய 45 ரூபாய் கட்டச்சொல்லி வேண்டிய புத்தகங்களை எங்களைக் கொண்டு போகச் சொன்னார்கள்.
அரிய புத்தகம் கிடைத்தவுடன் நாங்கள் பிரிந்து விடுவோம். நான் ஒரு வழியிலும் கோணங்கி ஒரு வழியிலும் வீடு நோக்கி பயணம் மேற்கொள்வோம். ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது கூட புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். கோணங்கி வீட்டில் அரிய புத்தகங்களை ரகசிய அலமாரி ஒன்றில் ஒளித்து வைத்திருப்பார். வெளியே உள்ள அலமாரியில் வேண்டாத புத்தகங்கள் தான் அதிகமிருக்கும். அலிபாபா குகை போல கோணங்கி ஒருவரால் மட்டுமே அவரது நூலகத்தைத் திறக்க முடியும்.
பழைய புத்தகங்கள் வெறும் பிரதிகளில்லை. அவை காலத்தின் சாட்சியம். யாரோ ஒருவரின் அழியாநினைவைக் கொண்டிருக்கின்றன. அன்பின் வெளிப்பாட்டினை நினைவுபடுத்துகின்றன. எத்தனை கை மாறி ஒரு புத்தகம் நம்மிடம் வந்திருக்கிறது எனத் தெரியாது.
சில புத்தகங்களைப் படிக்கும் போது இதை ஏன் இருபது வயதில் படித்திருக்கவில்லை என ஆதங்கமாக இருக்கும்.
இதை ஏன் படித்தோம் என ஒரு புத்தகம் நினைக்கவைத்தால் அது தான் மிகப் பெரிய ஏமாற்றம்.
எனது நண்பர் பழைய புத்தகங்கள் வாங்கி வந்தால் அதைப் பைண்டிங் கொடுத்து அழகாக உருமாற்றி தனது நூலகத்தில் அடுக்கி வைத்துவிடுவார். அவரது நூலகத்தை பார்க்க அத்தனை அழகாக இருக்கும். புத்தகங்களின் முதுகிலே அதன் பெயர் எழுதப்பட்டிருக்கும். படிப்பதற்கென தனி நாற்காலி, மேஜை வைத்திருப்பார். இரவு விளக்கு கூட அழகாக இருக்கும். அவரது ஒரே பலவீனம். படித்த புத்தகம் பற்றி ஒருவரிடமும் ஒரு வார்த்தை பகிர்ந்து கொள்ள மாட்டார். பின்பு எதற்காகப் படிக்கிறார் என்று கோவித்துக் கொள்வேன். அவர் பதில் தரவே மாட்டார்.
இணையதளம் வந்தபிறகு புத்தகக் கடைக்குப் போய் புத்தகம் தேடுவதோ, காத்திருந்து புத்தகம் வாங்குவதோ அடியோடு மாறிப்போனது.
இணையத்தில் நினைத்த நேரம் நினைத்த புத்தகம் வாங்க முடியும். ஒரே தேவை பணம் மட்டுமே.
ஞாயிற்றுக்கிழமைகளில் நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க் புத்தகக் கடைக்கு சென்று அரை நாளைச் செலவு செய்து விருப்பமான புத்தகத்தை வாங்கி வந்து அதை இரவோடு இரவாகப் படித்த நாட்கள் மனதில் இனிமையாக மிஞ்சியிருக்கின்றன.
புத்தகம் படிப்பது வாழ்க்கையிலிருந்து தப்பித்துப் போவதில்லை மாறாக வாழ்க்கையை ஆழ்ந்து புரிந்து கொள்வது என்கிறார் ஜுலியன் பார்ன்ஸ். அவரது புத்தகச் சேகரிப்பு அனுபவம், வாசிப்பை நேசிக்கும் அனைவரின் வாக்குமூலம் போலவேயிருக்கிறது.
•••