காலத்தின் ஜன்னல்

இலக்கியத்தை வாசிப்பவர்கள் சொற்களின் வழியே ஒரு பிம்பத்தை தாங்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள். அதில் காட்சிபடுத்துதல் தான் வாசகனின் வேலை. அதே நேரம் சினிமாவோ காட்சிகளை முன்வைக்கிறது. அதை தனது மனதிற்குள் சொற்களாக, நினைவுகளின் பகுதியாக மாற்றிக் கொள்வதை பார்வையாளர்கள் செய்கிறார்கள். இந்த எதிர்நிலையைப் புரிந்து கொண்டுதான் நான் படங்களை உருவாக்குகிறேன்.

இங்கே காட்சிகளின் வேலை மனதில் ஒளிந்துள்ள சில சொற்களை மீட்டு எடுப்பதாகும். இவை தினசரி நாம் பயன்படுத்தும் சொற்களில்லை. மாறாக  விசேசமானவை. அரிதான தருணங்களில் நாம் பயன்படுத்துபவை. ஆக நல்ல சினிமா நம் மனதில் புதையுண்டிருந்த நினைவுகளை, அடையாளம் காட்டுகிறது. மீட்டு எடுக்கிறது என்று சொல்லும் சமகால அர்ஜென்டினாவின் இயக்குனரான Carlos Sorín, இயக்கிய  La Ventana (The Window) என்ற படத்தைப் பார்த்தேன். கார்லோஸ் சோரின் சிறந்த ஒளிப்பதிவாளர்.  அவர் இயக்கிய படம் என்பதால் காட்சிபடுத்துதல் மிகசிறப்பாக அமைந்திருக்கிறது

ஒரு சிறுகதை அளவே படத்தின் திரைக்கதையிருக்கிறது. மிகக்குறைவான கதாபாத்திரங்கள். வடக்கு படகோனியாவின் பரந்த தனிமையானதொரு நிலவெளி. அதில் ஒரு பெரிய வீடு. அதன்  புறவெளியெங்கும் பசுமை. அது தான் படத்தின் கதைக்களம்.  படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் உருகுவே நாட்டின் பிரபல எழுத்தாளரான Antonio Larreta அவருக்கு சிறந்த நடிப்பிற்கான விருது கிடைத்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படம் சன்டேன் உள்ளிட்ட பல முக்கிய திரைப்பட விழாக்களில் விருது பெற்றிருக்கிறது.

புனைவிற்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியைக் குறைப்பதே நல்ல திரைப்படங்களில் பிரதான அம்சம். இப் படம் அந்த வகையில் வாழ்க்கைக்கு ரொம்பவும் நெருக்கமாகயிருக்கிறது.

எண்பது வயதான அன்டோனியோ நோய்மையுற்றுப் படுக்கையில் இருக்கிறார். பல வருசங்களுக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து அவரது மகன் வீடு தேடி வர இருக்கிறான். மகனை வரவேற்பதற்காக அன்டோனியோ தயார் ஆவது தான் படம். அவனது அறை தயாராவது. வீடு சுத்தம்செய்யப்படுவது, மகன் வரும்நாளில் தான் எப்படியிருக்க வேண்டும் என்ற அவரது கனவு என்று படம் விரிகிறது.

அன்டோனியோவின் படுக்கை அறையில் ஒரு பெரிய ஜன்னல் இருக்கிறது. அந்த ஜன்னல் வீட்டிலிருந்து வெளியே பார்க்க மட்டுமில்லை. அவரது மனதிற்குள் பார்ப்பதற்கும் அதுவே திறவுகோலாகயிருக்கிறது. படுக்கையில் கிடந்தபடியே தனது பால்யத்தின் நினைவுகளுக்குள் போவதும் வருதுவமாகயிருக்கிறார் அன்டோனியோ. அவரை வீட்டில் மிகுந்த விசுவாசமாக இரண்டு பணிப்பெண்கள் பராமரித்து வருகிறார்கள்.  அவர்களது அக்கறையும் அன்டோனியா மீதான அன்பும் சில காட்சிகளிலே முழுமையாகச் சொல்லிவிடப்படுகிறது.

அன்டோனியோவின் மகன் இப்போது புகழ்பெற்ற ப்யானோ இசைக்கலைஞன். அவன் வீடு திரும்புகிறான் என்பதால் அந்நாள் வரை வீட்டில் யாரும் பயன்படுத்தாமல் போட்டிருந்த பழைய ப்யானோவை பழுது நீக்குவதற்கு ஒரு ஆளை வரவழைக்கிறார்கள். அவர் அதைச் சரி செய்யும் போது அதனுள்ளே இரண்டு விளையாட்டுப் பொம்மைகள் கிடப்பதைக் கண்டு வெளியே எடுக்கிறார். அதன்வழியே சிறுவயதில் அன்டோனியாவின் மகன் இசையில் ஆர்வமற்றுப் போய் விளையாட்டில் கவனமாக இருந்தது சுட்டிக்காட்டப்படுகிறது.

அன்டோனியோ தன் மகன் வரும்நாளில் கொண்டாட வேண்டும் என்று பெரிய ஷாம்பெயின் பாட்டிலை பல வருசமாக பாதுகாத்து வைத்திருக்கிறார். அவரது வாழ்வின் ஒரே பற்றுகோலைப் போல மகனின் வருகை அமைந்திருக்கிறது

அன்டோனியோவிற்கு படத்தின் துவக்கத்தில் ஒரு கனவு வருகிறது. அது எப்போதோ தனது பால்யத்தில் ஒரு முறை வந்துள்ளதாகவும், அதில் வந்த ஒரு பெண்ணை ஏன் இன்று வரை தான் நினைவில் வைத்திருக்கிறேன். இத்தனை வருசமாக அவள் நினைவின் எந்த அடுக்கில் ஒளிந்திருந்தாள் என்றும் தன் மருத்துவரிடம் கேட்கிறார். 

அது தான் கனவிற்கும் நினைவிற்குமான ஊசலாட்டம் என்றபடியே அவர்கள் அதன்பிறகு போர்ஹெசைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். தனக்கு போர்ஹே கையெழுத்து போட்டு தந்த ஒரு புத்ததக்தை அன்டோனியோ டாக்டருக்குப் பரிசாகத் தருகிறார்.

அன்டோனியோ அடிக்கடி ஜன்னலைப் பார்த்தபடியே இருக்கிறார். அது ஒரு திறந்த கனவைப் போலிருக்கிறது. அதன் வழியே வெளியே பார்த்தால் முடிவில்லாத புல்வெளி. அதன் தொலைவில் சிறிய புதர் கூட்டம் போல மரங்கள். அதை அதிசயத்தோடு பார்த்தபடியே இருக்கிறார். அது அவருக்குள் எதையோ நினைவுபடுத்தியபடியே இருக்கிறது.

அவரது நலத்தை பாதுகாக்கும் பெண்கள் வீட்டை விட்டு அவர் வெளியே போக கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஆனால்  ஒரு நாள் அவர் யாரும் கவனிக்காத நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி அந்த புல்வெளியை நோக்கி நடந்துபோகிறார். உடல்நலக்குறைவால் நடக்க முடியவில்லை. அதையும் மீறி நடந்து போகிறார்.

அந்த புல்வெளி அவருக்கு மனநிம்மதி தருகிறது. வாழ்க்கை எவ்வளவு உயிர்துடிப்போடும் பசுமையாகவும் இருக்கிறது என்று ஆசை ஆசையாக செடிகளை. புற்களை தொட்டுப்பார்க்கிறார். முடிவில் அவர் வீடு திரும்பமுடியாமல் அங்கேயே மயங்கி விழுந்துவிடுகிறார். 

தற்செயலாக அங்கே சைக்கிளில் வந்த இரண்டு பெண்கள் அவரைக் காப்பாற்றுகிறார்கள். வீட்டிற்குத் தகவல் சொல்லி அனுப்பி கார் வருகிறது. அவர் மீட்கப்படுகிறார். படுக்கையில் கொண்டு போய் போடுகிறார்கள். அந்த ஜன்னல் மூடி திரையிடப்படுகிறது.

அடுத்த நாள் மகன் அப்பாவைக் காண வந்து சேர்கிறான். அவனோடு அவனது காதலியும் வந்திருக்கிறாள். பல வருசத்தின் பிறகு அப்பாவைக் காண்கிறான் மகன். அந்த நிமிசங்கள் படத்தில் அற்புதமாக படமாக்கபட்டிருக்கிறது. அவர்கள் ஒன்றாக ஷாம்பெயின் அருந்துகிறார்கள். மகனின் காதலி அங்கே செல்போன் டவர் கிடைக்கவில்லை என்று உடனே ஊருக்குக் கிளம்பச் சொல்கிறாள். அப்பா தனது கடந்தகாலத்தின் நினைவுகளில் முழ்கியபடியே மகனைப் பற்றி நினைத்து கொள்கிறான். அப்பாவிடம் அதிகம் பேசிக்  கொள்ளாமலே அவரது தனிமையை, அன்பை மகன் புரிந்து கொள்கிறான். அன்றிரவே அப்பா இறந்துவிடுகிறார்.  அத்துடன் படம் நிறைவு பெறுகிறது

கதையாக இது எளிமையான ஒன்றாகத் தோன்றுகிறது.ஆனால் காட்சிபடுத்துதலின் வழியே சின்னஞ்சிறு உணர்ச்சிகள் கூட மிகவும்  கவனமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  குறிப்பாக வீட்டில் வேலை செய்யும் பெண்களின் மனநிலைகள், ப்யானோவை சரி செய்பவருக்கும் அந்தபெண்ணிற்குமான உரையாடல், ப்யானோவை சரி செய்யும் நபர் அன்டோனியோவிற்கு  லேசைக் கட்டிவிடுவது. புற்களில் விழுந்துகிடக்கும் முதியவரை காப்பாற்றும்  பெண்கள் பதற்றத்துடன் வாசலில் நின்றபடியே புகைப்பிடிப்பது என்று ஒவ்வொரு காட்சியும் ஹைக்கூ கவிதையைப் போல கச்சிதமாக உருவாக்கபட்டிருக்கிறது.

இசை அதற்கு மிகுந்த துணை செய்கிறது.  காட்சிக்கோணங்கள் தான் படத்தின் தனித்துவம். ஆரம்பக் காட்சியில் அன்டோனியாவின் முகத்தில் உள்ள நரைத்த மயிரும் அவர் படுத்திருக்கும்கோணத்தில் இருந்து கனவு வெளிப்படும் விதமும், புல்வெளியில் கிடந்தபடியே அன்டோனியோ அந்த பெண்களை காணும் காட்சிக்கோணமும், அன்டோனியோ கூடவே கேமிரா நடந்து செல்வதும் என ஒளிப்பதிவு ஆச்சரியமளிக்கிறது.

படம் முழுவதும் காலம்  ஊர்ந்து சென்று கொண்டேயிருக்கிறது என்பதைக் குறிக்கும் கடிகார ஒசை உள்ளது. அது போலவே அன்டோனியாவின் கனவு துல்லியமற்று  பிம்பங்கள் பாதி தெளிவாகவும் மீதி கலங்கலாகவும் இருப்பது கனவிற்குள் நாமே நுழைந்துவிட்டதைப் போலவேயிருக்கிறது. வயதான அன்டோனியாவாக நடித்துள்ள லரோட்டா அந்த வேஷத்தினைச் சரியாக செய்திருக்கிறார். சிடுசிடுப்பு, வாழவேண்டும் ஆசை, கடந்த கால நினைவுகளின் ஊசலாட்டம். மீளமுடியாத தனிமை என்று அவரது அகஉணர்ச்சிகள் நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன

படத்தில் ஆர்ப்பாட்டமான எதுவும் கிடையாது. நேரடியான விவரிப்புகள். ஒரு நாவலை வாசிப்பதை போன்று கதை முன்பின்னாகச் சென்று கொண்டேயிருக்கிறது. நிறைய நேரங்களில் வர்ஜீனியா வுல்பின் சிறுகதையைப் படிப்பது போன்ற அனுபவமே எனக்கு ஏற்பட்டது.

கண்ணில் தெரியும் காட்சிகளை விடவும் நினைவு வலியது என்பதை ஒரு படத்தின் மூலம் தெளிவுபடுத்திக் காட்டியிருப்பதே இந்தப் படத்தின் முக்கிய பலமென்பேன்.

0Shares
0