குறுங்கதை -12 இரண்டு பிரார்த்தனைகள்

புதிதாகத் திருமணமாகி கணவன் வீடு வந்த இளம்மனைவி சமையலறைக்குள் நுழைந்தாள். முதல்நாள் சமைக்கப்போகிறோம் என்ற பதைபதைப்பு அவளுக்குள்ளிருந்தது. அடுப்பின் முன்னால் வந்து நின்று இரண்டு பிரார்த்தனைகளைச் செய்தாள். ஒன்று நெருப்பிடம். மற்றொன்று உப்பிடம்

நெருப்பிடம் அவள் பிரார்த்தனை செய்தாள்.

“மிகாமலும் குறையாமலும் துணையிருந்து சமைப்பதில் உதவி செய். உன் கோபத்தை காய்கறிகளிடம் காட்டாதே. உன் கருணையால் உணவினை வேகச்செய். பதமாக்கு. ருசிக்கச் செய்.“

உப்பிடம் இது போல அவள் பிரார்த்தனை செய்தாள்.

“கூடாமலும் குறையாமலும் துணையிருந்து சமைப்பதில் உதவி செய். உன் கருணையால் உணவினை ருசிப்படுத்து“.

நெருப்பும் சரி, உப்பும் சரி அவள் பிரார்த்தனைக்குச் செவிகொடுக்கவேயில்லை. அவள் செய்த சமையல் மிக மோசம் எனக் கணவன் திட்டினான். மாமனார், மாமியாரும் திட்டினார்கள். அவள் கண்ணீர் வடித்தாள்

மறுநாளும் அதன் மறுநாளும் அவள் தன் பிரார்த்தனையைக் கைவிடவில்லை. ஆனால் அவள் சமையல் மிகமோசம் என்ற திட்டு விழுந்து கொண்டேயிருந்தது. சில மாதங்களின் பின்பு நெருப்பு அவள் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டது போல அவளுடன் ஸ்நேகமானது. அதன் பிறகு தோசை கருகவில்லை. பொரியல் தீய்ந்து போகவில்லை. ஆனால் உப்பு தன் பிடிவாதத்தை விடவேயில்லை

உப்பின் கருணை கிடைப்பது எளிதில்லை என அறிந்தவள் போல அவள் தினமும் அடுப்படிக்குள் வந்தவுடன் உப்பிடம் பிரார்த்தனை செய்தாள். அப்படியும் உப்பு அவள் கை வசமாகவில்லை. இரண்டு குழந்தைகளைப் பெற்று, வேலை நிமித்தம் வேறு ஊர் மாறி வாழ்க்கையின் சக்கரத்தில் சுழல ஆரம்பித்த போதும் உப்பு அவள் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளவேயில்லை

பின்னொரு நாள் அவள் கீரையைச் சமைக்கும் போது விரல்நுனியால் சிறிதளவு உப்பை எடுத்துப் போட்டாள். ருசி சரியாக இருந்தது. அதன் பிறகு அவள் செய்த சமையலில் ஒரு போதும் உப்பு கூடவும் இல்லை. குறையவும் இல்லை.

அவள் பிரார்த்தனையை உப்பு ஏற்றுக் கொண்டுவிட்டது.

19.2.20

0Shares
0