பேரெழில் பனிமலை

மலையேற்றம் பற்றிய திரைப்படங்களைக் காண்பது எனக்குப் பிடிக்கும். உயிரைப் பொருட்படுத்தாமல் பனியில் வீரர்கள் மலையேறுவதைக் காணும் போது நாம் அறிந்துள்ள மலையும் அவர்கள் அறிந்துள்ள மலையும் வேறு என்பது நன்றாகப் புரியும்.

Cliffhanger என்ற படத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பாகப் பார்த்திருக்கிறேன். சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மலையேற்ற வீரராக நடித்திருப்பார். பரபரப்பான ஹாலிவுட் திரைப்படம்.

The Climbers என்ற 2019ல் வெளியான சீனப்படமும் எவரெஸ்ட் மலையேறும் சீன ராணுவக் குழுவின் முயற்சிகளையே விவரிக்கிறது.

இந்த இரண்டு படங்களின் கலவையான கதை கொண்ட சீனப்படமே Wings Over Everest.

2019ன் இறுதியில் வெளியான இப்படம். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளது

நேபாளத்தில் மலையேற்றம் என்பது ஒரு வணிகம். ஏராளமான மலையேற்றக் குழுக்கள்,நிறுவனங்கள், பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டுப் பயணிகளுக்கு இமயமலைப் பயணத்திற்கு உதவி செய்வது இவர்களின் வேலை. இதனால் மிகப்பெரிய வருவாய் கிடைக்கிறது. பனிமலையேற்றத்திற்கான விசேச உடைகள். காலணிகள். சாடிலைட் போன். சிலிண்டர், மலையேற்ற உபகரணங்கள் மிகவும் விலை அதிகமானவை. அதிலும் குளிரில் இருந்து காத்துக் கொள்வதற்கான விசேச தெர்மல் உடைகளுக்காக லட்சக்கணக்கில் செலவிட வேண்டியது வரும். பனிமலையில் சுமைகளைத் தூக்கி வருவதற்கான ஆட்கள், வழிகாட்டிகள், முகாமில் இருந்தபடியே வேண்டிய தகவல் தொடர்பினை தரும் ஆட்கள் என அது ஒரு தனிவுலகம்.

எவரெஸ்ட் சிகரத்திலுள்ள Death Zone பகுதியில் முக்கியமான ஆவணங்களைக் கொண்டு சென்ற ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிறது. எதிரிகளிடம் சிக்கிவிடாமல் இந்த ஆவணங்களை மீட்பதற்காக, இந்திய உளவுத்துறையில் பணியாற்றும் இரண்டு நபர்கள் நேபாளத்திலுள்ள டீம் விங்ஸ் என்ற மலையேற்றக் குழுவை உதவிக்கு அழைக்கிறார்கள். இதற்காகப் பெருந்தொகையை ஊதியமாகத் தருகிறார்கள்.

கடல் மட்டத்திலிருந்து 30,000 அடி உயரத்தில் உறைபனி மூடிய எவரெஸ்டின் Death Zone பகுதிக்குச் செல்ல இந்தக் குழுவுக்கு 72 மணிநேரம் மட்டுமே உள்ளது, இந்த இடத்திற்கு மீட்பு விமானங்களால் செல்லமுடியாது, அத்தோடு அனுபவமுள்ள மலையேற்ற வீரர்கள் பலரும் கூட Death Zone பகுதியில் இறந்து போயிருக்கிறார்கள். ஆகவே இது மிகப்பெரிய சவாலாகத் தோன்றுகிறது.

டீம் விங்ஸ் குழுவில் புதிதாக இணைந்து கொள்ளும் இளம்பெண் சியோடைஸி பனிமலையில் காணாமல் போன தனது காதலனைத் தேடுவதற்காக மீட்பு பயணத்திற்கு ஒத்துக் கொள்கிறாள். நோவா டான்பி என்பவர் இந்த மலையேற்றக் குழுவின் தலைவர். இவர்கள் விபத்துக்குள்ளாக விமானத்தைத் தேடி எவரெஸ்டின் வடக்கு முகத்தை நோக்கி பனியில் பயணிக்கிறார்கள். செவ்வொளி வீசும் இமயத்தோற்றம் மிக வசீகரமாகவுள்ளது.

பிரம்மாண்டமான பனி மலையின் ஊடே ஒற்றை ஆளாகச் சியோடைஸி நடந்து வரும் காட்சி மறக்கமுடியாதது.

படத்தின் ஒரு காட்சியில் சியோடைஸி இமயமலையின் உச்சியிலிருந்தபடியே ஆகாசத்தைக் காணுகிறாள். பேராறு போல விரிந்தோடும் இரவு. ஆற்றில் துள்ளும் மீன்களைப் போல வானெங்கும் நட்சத்திரக் கூட்டம் . பரவசமூட்டும் காட்சியது. யாருமற்ற பனிமலையில் ஒற்றை ஆளாக மின்னும் நட்சத்திரங்களைக் காணுவது எத்தனை அபூர்வமான அனுபவம். அந்த நட்சத்திரங்கள் சட்டென ஒன்று சேர்ந்து ஒரு அன்னம் போல உருக் கொள்கின்றன. அவள் நட்சத்திரங்களுடன் பேசுகிறாள். பூமியிலிருந்து நட்சத்திரங்களைக் காணும் அனுபவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது இமயமலையின் உச்சியிலிருந்து நட்சத்திரங்களைக் காணுவது. அந்தக் காட்சி மனதை வெகுவாகக் கவர்ந்தது.

இன்னொரு காட்சியில் அவளுக்காக நட்சத்திரங்களை நகர்வை, திசையை அறியும் கருவியை நோவா பரிசாக அளிக்கிறார். ஒரு இரவு அந்தக் கருவியைக் கையில் வைத்தபடியே அவள் ஆகாசத்தை ஏறிடுகிறாள். நட்சத்திரங்களின் ஒழுங்கை, அரூப நகர்வை வியந்து ரசிக்கிறாள்.

பேராசை கொண்ட இருவர் பிடியில் மாட்டிக் கொண்ட டீம் விங்ஸ் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதைச் சுற்றியே படம் நகர்கிறது. பனிமலையின் ஊடாகப் படமாக்கப்பட்ட விதம் மிக நன்றாகவுள்ளது. பனிப்பாறைகளில் ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறுவதும், பனிச்சரிவின் ஊடாக நோவா சண்டையிட்டபடியே தப்பிச் செல்வதும் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.

ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான சினிமாக்களுக்குப் போட்டியாகச் சீனா இது போன்ற பிரம்மாண்ட பொழுது போக்குத் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. சீனா-ஜப்பான் இணை தயாரிப்பான இப்படம் நேபாளம், சீனா மற்றும் கனடாவில் படமாக்கப்பட்டுள்ளது

படத்தின் இயக்குநர் யூ ஃபீ ஒரு மலையேற்ற வீரர் என்பதால் எவரெஸ்ட் பயணம் பற்றிய விஷயங்களை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

வழக்கமான பொழுதுபோக்குப் படம் தான் என்றாலும் மலையேற்ற வீரர்களின் உலகைச் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்கள் என்பதற்காகப் பார்க்கலாம்.

0Shares
0